கசாப்பு
1.
சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல.
பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்போது கூட நம்மாட்களின் அபரிமித எழுத்தறிவு கைகொடுப்பதில்லை.
2.
அதே போலப் பொதுவாக ‘முகம்மதுவும்’ என்று எழுதுகிறார்கள். உகரத்தில் முடியும் சொல்லுக்குக் கூடுதலாக இன்னொரு உ எதற்கு என்று யோசிப்பதில்லை. சொல்லிப் பார்த்தாலே உச்சரிப்பு நெருடலாகத் தெரியும்.
3.
ஆங்கிலத்தின் nt (garment, Clinton, point) ஒலி கூடத் தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள், இணையம் என்று எல்லா ஊடகங்களிலும் படாதபாடு படுகிறது. வண்டு, கிண்டல், மண்டை போன்ற சொற்களின் ண்ட் ஒலியோடு பாயிண்ட், கிளிண்டன், பேண்ட் (pant, band, இரண்டிற்கும் அதேதான்) என்று எழுதுகிறார்கள். கிளின்டன், பாயின்ட், பேன்ட் என்று எழுதுவதற்கு மொழி அறிஞராக இருக்க வேண்டியதில்லையே.
4.
பலர் அவரின், இவரின் என்று எழுதுவதும் எனக்கு எப்போதும் உறுத்தலாக இருக்கும். அவரது, இவரது அல்லது அவருடைய, இவருடைய என்று எழுதித்தான் எனக்குப் பழக்கம். தமிழ்நாட்டின், கட்டிடத்தின், புத்தகத்தின் என்று அஃறிணையுடன் ‘இன்’ சேர்த்து எழுதப்படுவது உறுத்தவில்லை. இலக்கணப்படி இது சரியா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நடை ரீதியாக இது தவறு என்றுதான் நினைக்கிறேன்.
ருஷ்ய சிறுவர் இலக்கியம்
‘பயங்கரவாதி டாக்டர் செவன்’ சில ருஷ்ய சிறுவர் நூல்களைப் பற்றி அழகான ஓவியங்களுடன் எழுதியிருக்கிறார். தவற விடாதீர்கள்!
தமிழில் ரஃபிக் ராஜா, கிங் விஸ்வா, பயங்கரவாதி டாக்டர் செவன், சிவ், புலா சுலாகி, கனவுகளின் காதலன் முதலான சில வலைப்பதிவர்கள் நிறைய தகவல்களோடும் படங்களோடும் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இவர்களது அறிவும் ஈடுபாடும் பிரமிப்பூட்டுகின்றன.
இடுகைகளின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் முழுமையாகப் படித்து கமென்ட் போடும் வாசகர்களிடம் தமிழில் காமிக்ஸ் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட சோகத்தைப் பார்க்க முடிகிறது.
இந்த வலைப்பதிவர்கள் பதிப்புத் துறையில் கணிசமான நிதியுடன் இறங்கினால், அதுவும் பெரிய பதிப்பகங்கள் எவற்றுக்கும் சோரம் போகாமல் தாங்களே பதிப்பித்தால் தமிழ் காமிக்ஸ் புத்துயிர் பெறும்.
தமிழ் வலைப்பதிவுலகில் எந்த அரசியலும் இல்லாமல் ரசனைப் பகிர்வும் அறிவுப் பகிர்வும் சிறப்பாக நடக்கும் community இவர்கள்தான் என்று நினைக்கிறேன். இவர்களில் பலரது வலைப்பதிவுகளை இங்கே பார்க்கலாம். இந்த வலைப்பதிவர்களுக்கு ஒரு சல்யூட்.
முதல்ல காசை எடு
என்னுடைய இன்னொரு வலைப்பதிவில் போடும் வின்டேஜ் படங்களை ஃப்ளிக்கரில் இருக்கும் பல்வேறு குழுக்களில் ஏற்றிக்கொண்டிருந்தேன். தமிழ்ப் பத்திரிகைகள், புத்தகங்களில் வந்த சித்திரங்கள் அந்தக் குழுக்களில் இருந்த வெளிநாட்டார் பலரையும் கவர்கின்றன. நாட் எனி மோர். கூகிளின் இலவச மதிய உணவு மாடலைப் பார்த்து யாஹூ எப்போது கற்றுக்கொள்ளப்போகிறது?
மலர்க் காட்சி
ராயப்பேட்டை (சென்னை) YMCA மைதானத்தில் மே 10 அன்று முடியும் மலர்க் கண்காட்சியில் நான்கு பூச்செடிகள் வாங்கினேன். தினமும் காலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் பொதுவாகப் ‘பராமரிப்பதும்’ கடைந்தெடுத்த சென்னைவாசியான எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இன்று காலையில் எடுத்த சில புகைப்படங்கள்…

இதில் காமெடி என்னவென்றால் முதல் இரண்டு படங்களில் இருக்கும் பூவின் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும் (Dianthus). ரோஜா மாதிரி இருப்பது ரோஜா வகைதான். என்ன பூக்கள் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கப்போகிறேனோ.
புத்தக இயந்திரம்!
நாம் கேட்கும் புத்தகத்தை ஐந்து நிமிடங்களில் அச்சடித்துத் தரும் புத்தக இயந்திரம் ஒன்று லண்டனில் வந்திருக்கிறது! புண்ணியம் கட்டிக்கொண்டிருப்பது புத்தகச் சேவை நிறுவனமான பிளாக்வெல் நிறுவனம். நிமிடத்துக்கு 100 பக்கங்கள் அச்சடிக்கிறது.
பார்ப்பதற்கு ஜெராக்ஸ் இயந்திரம் போல் இருப்பதாக சொல்லப்படும் இந்த ‘எஸ்பிரசோ புத்தக இயந்திர’த்திற்கு உள்ளேயே அச்சிடுதல், பைண்டிங் எல்லாம் நடந்து முடிந்து புத்தகம் சூடாக வருகிறதாம். Hot off the (Es)press(0) என்று தமாசாக சொல்லிக்கொள்ளலாம்.
சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இப்படிக் கிடைக்கிறதாம். இன்னும் சில மாதங்களுக்குள் 10 லட்சம் புத்தகங்களைக் கிடைக்கச்செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின் பதிப்புத் துறையில் அடுத்த பெரிய புரட்சி இதுதான் என்கிறார்கள். சிறு புத்தகக் கடைகள் லட்சக்கணக்கான புத்தகங்களை வைத்துக்கொண்டு விற்கவும் வழி.
இதில் விசேடம் என்னவென்றால் அச்சில் இல்லாத, மிகப் பழைய புத்தகங்களைக் கூட அச்சிட்டுக்கொள்ளலாம். விலை பற்றி நிச்சயமாகத் தெரியவில்லை. இந்த ‘எஸ்பிரசோ புத்தக இயந்திர’த்தின் பயன்பாட்டைப் பார்த்து விலையை நிர்ணயிப்பார்கள் என்றும் கடைசியில் வழக்கமான புத்தக விலைக்கு வந்துவிடும் என்றும் கார்டியன் செய்திக் கட்டுரை சொல்கிறது. விலையிலும் புரட்சி வந்தால் நன்றாக இருக்கும்.
இங்கே நாங்களெல்லாம் இருக்கிறோமே, கண்ணில் படவில்லையா?











