ஃபயர்வால் ஒழிக
க்யூபிக்கிள் கலாச்சாரத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் க்யூபிக்கிள்வாசிகளுக்கு இணைய வசதியை முடக்கிவைப்பது. பல நிறுவனங்கள் அலுவலகத்தில் சில வலையகங்களைத் தடுக்கின்றன. குறிப்பாக மின்னஞ்சல் சேவை வழங்கும் வலையகங்களையும் வலைப்பதிவுகளையும்.
சில வலையகங்களை நேரடியாகவும் சிலவற்றை வார்த்தைகளை வைத்தும் (எ.கா.: சைட் முகவரியில் *blog*, download, cricket போன்ற சொற்கள் வந்தால்) தடுக்கிறார்கள். ஆனால் நிரல் தேடித் திருடுவதற்குப் பயன்படுவதாலோ என்னவோ கூகிளை விட்டுவைக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் செய்தி வலையகங்களை அலவ் பண்ணுகின்றன.
அலுவலகத்தில் cricinfo, youtube, metacafe, meebo என்று மானாவாரியாகப் பயன்படுத்திக் குவிக்கும் முதிர்ச்சியற்ற கிராக்கிகள் தணிக்கை செய்வதை ஊக்குவிக்கிறார்கள். அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நல்லவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் அலுவலகத்தின் உலோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருக்கும் அலுவலகக் கோப்புகளை எடுத்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வலைப்பதிவுகளையும் செய்தியோடை வசதியுள்ள வலையகங்களையும் அலுவலகத்தில் பார்க்க இரண்டு எளிய வழிகள்:
பார்க்க விரும்பும் வலைப்பதிவின் பெயரை கூகிளில் போட்டுத் தேடலாம். முடிவுகள் பக்கத்தில் வரும் அந்த வலைப்பதிவின் முகவரியை நேரடியாக க்ளிக் செய்தால் நிறுவன அகழி (ஃபயர்வால்தான்) தடுக்கும். Cached என்ற இணைப்பைப் பார்த்தால் அந்த வலைப்பதிவை அல்லது வலையகத்தைப் பார்க்கலாம். இதில் எப்போதுமே புதிய பக்கங்களைப் பார்க்க முடியாது.
அதை விட நல்ல உத்தி, வேண்டியதை மின்னஞ்சலில் வரவழைப்பது. நாம் பார்க்க விரும்பும் வலையகத்திற்கு RSS வசதி இருந்தால் அதை மின்னஞ்சலில் பெற மிகச் சுலபமான ஒரு வழி rssfwd. கூகிள் காஷில் எடுத்த பக்கத்தில் RSS/Atom முகவரியை நகலெடுத்துக்கொண்டு, rssfwd-இல் கொடுத்து நமது மின்னஞ்சல் முகவரியையும் தந்துவிட்டால் முடிந்தது வேலை. அப்புறம் Alt+Tab திருவிழாதான்.
(மின்னஞ்சல் முகவரி என்றால் கம்பெனியார் நம்மபெயர்.அப்பாபெயர்@நிறுவனம்.காம் என்கிற ரீதியில் ஒதுக்கித் தரும் ‘ஆபீஸ் ஐ.டி.’ சில கம்பெனிகள் ஆபீஸ் ஐ.டி.க்கு பணிசாரா மின்னஞ்சல் வருவதை விரும்புவதில்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் மின்னஞ்சலைப் பயன்படுத்த, ஜிமெயிலின் RSS-ஐ கூகிள் ரீடரில் சேர்த்துப் பார்க்கலாம். கூகிள் ரீடரை அவ்வளவாக யாரும் தடை செய்வதில்லை. Disclaimer: இதை நான் முயற்சி செய்து பார்த்ததில்லை.)
லைவ் ரைட்டர் டெஸ்ட் பதிவு
வலைப்பூத்தலுக்கான (blogging) மென்பொருட்களில் w.bloggar, Zoundry Blog Writer, Performancing, Qumana மற்றும் பிறவற்றைக் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் எதுவும் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு எனக்குத் திருப்தியளித்ததில்லை. மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் விண்டோஸையும் ஆபீஸையும் வேறு வழியில்லாமல் பயன்படுத்தும் பலரில் ஒருவன் நான். அதனால் வேறு எந்த மைக்ரோசாஃப்ட் தயாரிப்பையும் பயன்படுத்தியதில்லை.
பிக் பிரதர் முழுக்க முழுக்க வலைப்பதிதலுக்காகவே உருவாக்கிய ஒரு மென்பொருளில் என்ன இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விண்டோஸ் லைவ் ரைட்டரை நிறுவினேன். இதை நிறுவிப் பயன்படுத்தத் தொடங்கிய சிறிது நேரத்தில் இதன் எளிமையும் தோற்றமும் என்னைக் கவர்ந்தன (படம் 1). எனது அனுபவம் குறித்து மேலும் சில வரிகள் பின்வருமாறு…
லைவ் ரைட்டர் கோப்பின் சைஸ் 3.58 எம்.பி.தான். புள்ளிவலை சட்டகப்பணி (.NET Framework) உமது கணினியில் இல்லையென்றால் 23 எம்.பி. கோப்பை இறக்கிக்கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லாமல் இன்ஸ்டால் ஆகிவிடுகிறது.
பிறகு லைவ் ரைட்டர் சுருக்குவழி மேல் இரட்டைச் சொடுக்கிட்டால் (double click) என் ஃபயர்வால் உடனே அபாய அறிவிப்பு செய்கிறது. வழக்கமான மைக்ரோசாஃப்ட் உளவு வேலைதான். லைவ் ரைட்டர் என்னைக் கேட்காமல் மைக்ரோசாஃப்ட்டின் சர்வர் ஒன்றுடன் இணைக்கப் பார்த்தது. அதைத் தடுத்த பின் லைவ் ரைட்டர் சட்டென்று தொடங்குகிறது.
எம்.எஸ். ஆபீஸ் 2003ஐ உரித்து வைத்தாற்போன்ற தோற்றம். வேர்ட்பேடின் எளிமை. மிகச் சுலபமாக வலைப்பதிவுக் கணக்கு விவரங்களைப் பதிய முடிகிறது. நம் வலைப்பதிவில் என்ன தீம் பயன்படுத்துகிறோமோ அதன் லேஅவுட்டை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இதன் பதிவெழுதும் திரை (எழுதி, compose screen…). அதாவது நம் வலைப்பதிவில் நேரடியாக எழுதும் ஃபீலிங்கைக் கொண்டுவருகிறார்களாம் (படம் 2).
வேர்ட்பிரஸிலும் பிளாகரிலும் எழுதியின் அகலம் கச்சிதமாக இருக்கும். லைவ் ரைட்டரின் எழுதி அதை விட அகலமாக இருப்பது திரையரங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்து 70 MM படம் பார்ப்பது போல் அசௌகரியமாக இருக்கிறது. ஆனால் பெரிய தலைவலி என்று சொல்ல முடியாது. போல்டு, இட்டாலிக்ஸ், படம் செருகுதல், குறிச்சொல் சேர்த்தல் என்று வேண்டியதெல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன.
பதிவை எழுதும்போதே அதன் வரைவை நம் வலைப்பதிவில் சேமித்துக்கொள்ளலாம். HTML பார்த்து மாற்றலாம். முன்னோட்டம் பார்க்கும் வசதி அட்டகாசம். பதிவைப் போட்டதும் நம் வலைப்பதிவில் அது எப்படித் தெரியுமோ அப்படிக் காட்டுகிறது (படம் 3). படத்தை ஒட்டியதும் படத்தின் சைஸ், எஃபெக்டுகள் போன்ற வசதிகள் வலப்பக்கம் தெரிகின்றன. சும்மா சில நகாசுகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஒரு வலைப்பதிவுக்கு இது போதும். தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் Xanga-வில் வலைப்பதிவு வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
கருவிப் பட்டையின் வலப்பக்கம் வேர்ட்பிரஸ் குறிச்சொற்களின் (Categories) தொங்கு பட்டியலைப் பார்க்கலாம் (படம் 4). எழுதும் பகுதிக்குக் கீழே, ஸ்டேட்டஸ் பாருக்கு மேலே, பதிவின் விவரங்கள், பின்தொடர் சுட்டி ஆகிய விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
Tools > Preferences என்ற மெனுப் பாதையில் போனால் ping சர்வர்களில் தமிழ் பிங் சர்வர்களை சேர்க்கலாம் (எனக்குத் தேன்கூடு வேலை செய்கிறது).
இது பீட்டா பதிப்பு. ஒரே விஷயத்திற்கு அங்கங்கே பட்டன்கள் இருக்கின்றன. உதாரணமாக, பின்தொடர் சுட்டி கொடுக்க இரண்டு இடங்களில் க்ளிக் செய்யலாம் – எழுதும் பகுதிக்குக் கீழே, பிறகு கருவிப் பட்டையில் கடைசி பட்டன் மேலே. பிறகு முன்னோட்டத்தைப் பார்க்க View மெனுவில் போயும் க்ளிக் செய்யலாம், கருவிப் பட்டைக்கு மேலுள்ள சாதா பட்டையில் ஒரு பட்டனையும் தட்டலாம்.
பதிவைத் தட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு வார்த்தை கட்டம் கட்டமாக வருகிறது. Format > Font என்ற பாதையில் போய் லதா எழுத்துருவுக்கு மாற்றினால் சரியாகிவிடுகிறது. முதல் பதிப்பில் இந்தக் கோளாறைச் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். அதே போல இந்த மென்பொருள் அனேகமாக junk code நிறைய சேர்க்கும் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் பார்க்க வேண்டும். மற்றபடி லைவ் ரைட்டர் நல்ல வலைப்பதிவு மென்பொருள் . சொடுக்குக!
பி.கு.: இந்தப் பதிவு என் வலைப்பதிவில் சரியாக ஏறாவிட்டால் பரிந்துரையை வாபஸ் வாங்கிக்கொள்வேன். வரிகள் கண்ட இடத்தில் உடைகின்றன. வேர்ட்பிரஸ் எழுதியிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.
அப்டேட்: ஃபயர்வாலை வைத்துத் தடுத்தால் பதிவு நம் வலைப்பதிவில் ஏறாது.
பெயர்வீச்சு (டீலக்ஸ் பதிப்பு)
இடாலோ கால்வினோ (Italo Calvino)
ரோலான் பார்த் (Roland Barthes)
டொனால்டு பார்த்தெல்மே (Donald Barthelme)
உம்பர்ட்டோ ஈக்கோ (Umberto Eco)
மிலன் குந்தேரா (Milan Kundera)
ரிச்சர்ட் ரைட் (Richard Wright)
காஃப்கா (Kafka)
ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre)
சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson)
ஜேம்ஸ் பாஸ்வெல் (James Boswell)
வில்லியம் ஜேம்ஸ் (William James)
ஹென்றி ஜேம்ஸ் (Henry James)
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தாஸ்தாயேவ்ஸ்கி (Dostoevsky)
புஷ்கின் (Pushkin)
சோல்ஜனிட்சின் (Solzhenitsyn)
லெர்மோன்டோவ் (Lermontov)
எமிலி டிக்கின்சன் (Emily Dickinson)
ஜான் பெர்ஜர் (John Berger)
ரால்ஃப் எல்லிசன் (Ralph Ellison)
எலீ வீசல் (Elie Wiesel)
ஆல்பர்ட் காம்யு (Albert Camus)
லூயிஸ் கேரல் (Lewis Carroll)
டெகார்ட்டே (Déscartes)
இம்மானுவல் கான்ட் (Immanuel Kant)
ஹெகல் (Hegel)
வி.எஸ். நைபால் (V.S. Naipaul)
விக்ரம் சேட் (Vikram Seth)
ஜூலியா க்றிஸ்தேவா (Julia Kristeva)
குந்தர் கிராஸ் (Guenter Grass)
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
சோஃபாக்ளிஸ் (Sophocles)
லியோனிட் ஆண்ட்ரியேவ் (Leonid Andreyev)
காயத்ரி ஸ்பிவாக் (Gayatri Spivak)
எரிக் ஆம்ப்ளர் (Eric Ambler)
ஜூடித் பட்லர் (Judith Butler)
அருந்ததி ராய் (Arundati Roy)
அனிதா தேசாய் (Anita Desai)
மார்க் டல்லி (Mark Tully)
ப்ரூஸ்ட் (Proust)
ஓரான் பாமுக் (Orhan Pamuk)
அமிதவ் கோஷ் (Amitav Ghosh)
ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins)
ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)
சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud)
ழாக் லக்கான் (Jacques Lacan)
ழாக் டெரிடா (Jacques Derrida)
ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce)
பாப்சி சித்வா (Bapsi Sidhwa)
டாக்டர் ஸாய்ஸ் (Dr. Seuss)
சால்வடார் டாலி (Salvador Dali)
வில்லியம் டால்ரிம்பிள் (William Dalrymple)
ழாக் ப்ரெவர் (Jacques Prévert)
லெவி ஸ்ட்ராஸ் (Lévi-Strauss)
மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault)
சல்மான் ருஷ்டி (Salman Rushdie)
ராமச்சந்திர குஹா (Ramachandra Guha)
சசூர் (Saussure)
அல்தூஸர் (Althousser)
கிரஹாம் கிரீன் (Graham Greene)
ஆந்தனி பர்ஜஸ் (Anthony Burgess)
ஷேக்ஸ்பியர் (-)
சார்லஸ் போதலேர் (Charles Baudelaire)
பாப்லோ நெருடா (Pablo Neruda)
பௌலோ கொய்லோ (Paulo Coelho)
பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon)
ஜான் மில்டன் (John Milton)
கிறிஸ்டபர் மார்லோ (Christopher Marlowe)
வில்லியம் வைச்சர்லி (William Wycherley)
சில்வியா ப்ளாத் (Sylvia Plath)
… இப்போதைக்கு இவ்வளவுதான்.
அபத்த மொழி
கல்லூரி நாட்களில், Waiting for Godot என்ற (அபத்த) நாடகத்தை எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளரான சாமுவல் பெக்கட்டின் நாடகங்களை விட நாவல்களும் சிறுகதைகளும் என்னை அதிகம் கவர்ந்தன. காரணம் அவரது மொழிநடை. லேசில் புரியாது. கவிதை போல் இருக்கும். இசைக்குரிய ஒரு ரிதம் இருக்கும். உரக்கப் படித்தால் சத்தம் நன்றாக இருக்கும். இந்த அம்சங்களும் அவரது முதன்மைப் பாத்திரத்தை impersonal-ஆக ஆக்கிவிடுகின்றன. மொத்தத்தில் மொழியைக் கையாள்வதில் அவருக்கு இருந்த அபரிமிதத் திறமையும் நகைச்சுவையும் இந்தப் படைப்புகளில் வெளிப்படுகின்றன.
அவரது Fizzles என்ற உரைநடைத் துண்டுகளில் எட்டாவது துண்டின் தொடக்க வரிகள் இவை:
For to end yet again skull alone in a dark place pent bowed on a board to begin. Long thus to begin till the place fades followed by the board long after. For to end yet again skull alone in the dark void no neck no face just the box last place of all in the dark the void. Place of remains where once used to gleam in the dark on and off used to glimmer a remain. Remains of the days of the light of day never light so faint as theirs so pale. Thus then the skull makes to glimmer again in lieu of going out.
முழுசாகப் படித்ததில்லை. ஆனால் சுமார் பத்து வருடங்களுக்கு முன் இந்தப் புத்தகத்தை சும்மா மேய்ந்ததில் “For to end yet again skull alone in a dark place” என்ற வார்த்தைகள் மட்டும் எனக்கு மறக்கவே இல்லை. பெக்கட்டின் உரைநடைப் படைப்புகளில் Molloy என்ற அற்புதமான நாவலையும் The End என்ற நல்ல சிறுகதையையும் மட்டும் படித்திருக்கிறேன்.
பெக்கட் Ulysses என்ற பயங்கரமான புத்தகத்தை எழுதிய ஜேம்ஸ் ஜாய்ஸுக்கு மாணவர் போல் இருந்தார். யுலிசிஸ், ஃபினெகன்ஸ் வேக் போன்ற நாவல்களில் ஜாய்ஸ் கையாண்ட நடையின் தாக்கத்தாலோ என்னவோ, பெக்கட்டும் ‘வெய்ட்டிங் ஃபார் கொடோ’ போன்ற நாடகங்களில் சில சமயம் நான்சென்ஸ் மாதிரியும் சில இடங்களில் லத்தீன் மாதிரியும் தெரியும் சொற்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தினார். ‘யுலிசிஸ்’ பெருநாவலிலிருந்து ஓர் உதாரணம்:
They came down the steps from Leahy’s terrace prudently, Frauenzimmer: and down the shelving shore flabbily, their splayed feet sinking in the silted sand. Like me, like Algy, coming down to our mighty mother. Number one swung lourdily her midwife’s bag, the other’s gamp poked in the beach. From the liberties, out for the day. Mrs Florence MacCabe, relict of the late Patk MacCabe, deeply lamented, of Bride Street. One of her sisterhood lugged me squealing into life. Creation from nothing. What has she in the bag? A misbirth with a trailing navelcord, hushed in ruddy wool. The cords of all link back, strandentwining cable of all flesh. That is why mystic monks. Will you be as gods? Gaze in your omphalos. Hello! Kinch here. Put me on to Edenville. Aleph, alpha: nought, nought, one.
இருவரின் மொழிநடையிலும் ஒற்றுமையைப் பார்க்கலாம் (ஜாய்ஸ் எழுதிய எதையும் நான் படித்ததில்லை).
பெக்கட்டைத் திரும்பிப் பார்த்து ரொம்ப காலமாகிவிட்டது. அவரை நினைவுபடுத்தியது எனக்கு வந்த சில குப்பை மின்னஞ்சல்களின் தானியங்கி ‘மொழிநடை’. பெக்கட்டும் அவரைப் போன்றவர்களும் எழுதியதை இன்றைய spam அனுப்புநர்கள் மென்பொருள் உதவியுடன் அனாயாசமாக உருவாக்குகிறார்கள். இரண்டு பேரின் நடையையும் கலக்கி உருவாக்கியது போல் ஒரு நடை … (ஃபார்மேட்டிங் நான் கஷ்டப்பட்டு செய்தது)
Upset market lose becomes mentian complient hes. Taxes doesnt complexity judged swap existing ibmsuse forth. Happy fedora amd commercial closer production patch? Glass nigel technical strategist! Heck quotpoeple tabsquot nonsense poeple aka linforcer rick? Philosophy towards as return carriages paragraphs commas colons? Damage cumulative hotfixes recover! Rethinking cagily tycoon herald tribune orlando ayala foreign. Usersquot deadline delivering, barber gone stumped therefore. Futur hightech reacting hrhrhr, jay rosen heavy, few! Little niche learned quotis, usersquot deadline delivering. Coded wcs perform suggests hurts internet pushing. Tips inbox scripts, bc main log create newscreate! Wtf export importable zonequot? Committing, text looks slogan unskilled copywriter.
இரண்டும் ஒன்று என்று சொல்ல வரவில்லை. குப்பை அஞ்சல் போன்ற ஒரு விஷயம் சாமுவல் பெக்கட்டையும் ஜேம்ஸ் ஜாய்ஸையும் நினைவூட்டும் பியூட்டியைத்தான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
குப்பை போடுபவர்களிடம் காணப்படும் இன்னொரு சுவாரஸ்யமான ட்ரெண்ட், இலவசமாகக் கிடைக்கும் பழைய ஆங்கில இலக்கியப் படைப்புகளில் கொஞ்சம் உருவியெடுத்துக் குப்பைக்கு முலாம் பூசுவது. ஜேன் ஆஸ்டனின் Pride and Prejudice, Emma ஆகிய புகழ்பெற்ற நாவல்களிலிருந்து சில பத்திகள் என் ஜிமெயிலின் ஸ்பாம் ஃபோல்டரில் கிடந்தன. முதலில் கன்னாபின்னாவென்று வெட்டியெடுத்த வரிகள். கீழே விளம்பரம். அதற்குக் கீழே மீண்டும் கண்டபடி கத்தரித்து அள்ளிப்போட்ட துண்டுகள். எலிசபெத் பென்னட்டோ மிஸ்டர் நைட்லியோ ஒரு வாக்கியத்தையும் முழுசாகப் பேச முடியாது. குப்பைக்காரர்கள் ஜேன் ஆஸ்டனின் உரைநடையை சாமுவல் பெக்கட்டின் உரைநடையைப் போல் மாற்றிய வேடிக்கை…
“Nor, if you were, could I ever bear to part with you, my Harriet. You Emma spared no exertions to maintain this happier flow of ideas, and h Soon afterwards Mr. Elton quitted them, and she could not but do him t “Pray, Mr. Knightley,” said Emma, who had been smiling to herself thro No, upon no account in the world, Mr. Weston; I am much obliged to yo “Never, madam,” cried he, affronted in his turn: “never, I assure you.
நிற்க. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தமிழ் ஸ்பாம் அவசியமான ஒரு தீமை என்று தோன்றுகிறது. பழைய இலக்கியங்களை சாஃப்ட்வேரை வைத்துக் குதற வேண்டிய அவசியம் இல்லை. இன்று சிறுபத்திரிகைகளில் வரும் கதைகளையும் பின்நவீனத்துவ மோஸ்தர் கவிதைகளையும் அப்படியே எடுத்துப் போடலாம். எங்கோ ஆரம்பித்து இங்கே வந்து முடிய வேண்டும் என்று இருக்கிறது இந்தப் பதிவு.
அமெரிக்காவைப் பார்!
அந்தக் காலத்து எழுத்தாளர் சோம.லெ. இலக்குமணச் செட்டியாரின் ‘அமெரிக்காவைப் பார்!’ என்ற புத்தகம் (வெளியீடு: இன்ப நிலையம், சென்னை-4, பிப்ரவரி 1950) பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. சுவாரஸ்யமான நடையும் கருப்பு-வெள்ளைப் படங்களும் நிறைந்த புத்தகம் இது. சும்மா மேய்ந்தபோது தென்பட்ட ஒரு பகுதி பின்வருமாறு:
பெண்கள்
ஒரு நாட்டில் மக்கள் வாழும் வகையை யறிவதற்குக் குடும்பங்களைப் பற்றிய விவரங்களையும், குடும்பத்தின் சிறந்த உறுப்பினராகிய பெண்களின் நிலையையும் ஆராய்ந்தறிவது இன்றியமையாதது.
இந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாறுதல் இருபாலருக்கும் இடையேயுள்ள உறவைப் பற்றியதே. இப்போது அமெரிக்க ஆடவரும் பெண்டிரும் ஒருவரோடொருவர் எளிதாகவும் மனவேறுபாடின்றியும் பழகி வருகின்றனர். பஸ் அல்லது ரயிலில், முன் பின் அறியாத ஒரு பெண்ணும் ஓர் ஆணும் அடுத்தடுத்து இருந்து பிரயாணம் செய்ய நேரும்போது, அவர்கள் இருவரும் இனிமையாய்ப் பேசிக்கொள்வது இயல்பு; ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளால் மேலும் உறவு கொண்டாட ஒருவர் விரும்புவதாக மற்றவர் கருதுவதில்லை.
உடல் வலிமை
அமெரிக்க ஆடவரைப் போலவே பெண்டிரும் கலங்காத நாட்டுப்பற்றும், அசைக்க முடியாத ஆண்மையும் அருளும், பொது நன்மைக்குப் பாடுபட வேண்டுமென்ற உறுதிப்பாடான உள்ளமும், அதற்குரிய உடல் வலிமையும் உடையவர்களா யிருக்கின்றனர். ஆடவரைப் போலப் பெண்டிரும் விளையாட்டுக்களில் மிக்க விருப்பமுடையவர்கள். இருபாலரும் தமது முக்கிய அலுவல்களில் விளையாட்டையும் ஒன்றாகக் கருதுகின்றனர். எல்லா விதமான விளையாட்டுகளிலும் பெண்களும் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்கள் மோட்டார் கார்களை ஓட்டுகின்றனர்; அமெரிக்காவில் ஆடவர் மோட்டார் கார்கள் ஓட்டும்போதுதான் பெரும்பாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றனவாம்! ஆகாய விமானம் ஓட்டும் வல்லமையுள்ள ஏழாயிரம் அமெரிக்கப் பெண்டிர் இருப்பதும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. விளையாட்டுக்கு அடுத்த படியாக, அமெரிக்கப் பெண்கள் தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வமுடையவரா யிருக்கின்றனர்.
சராசரியில் அமெரிக்க ஆடவர் 64 வயதளவும் பெண்டிர் 69 வயதளவும் வாழ்கின்றனர்; ஆடவர் 5 அடி 9 அங்குல உயரமும் பெண்டிர் 5 அடி 4 அங்குல உயரமும் இருக்கின்றனர்; ஆடவர் 159 பவுண்டு நிறையும் பெண்டிர் 132 பவுண்டு நிறையும் உள்ளவர்கள்.
மணம்
அமெரிக்காவில், மணம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்ற வழக்கமிலை. இதனால், ஆடவரிலும் சரி, பெண்களிலும் சரி, வயது வந்தும் மணமாகாதவர் பல்லாயிரவர் உளர். தத்தம் உரிமைகளை மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுக்கவும், குடும்பப் பொறுப்பை ஏற்கவும் இவர்கள் விரும்பாததே இந்நிலைக்குக் காரணம்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும், குடும்பப் பொறுப்பேற்கக் கணவனைத் தேடும் வழக்கம் அமெரிக்காவில் கிடையாது. இடையே, சில காலம் ஏதாவதொரு வேலையில் பெண்களும் அமருவது முறையாகிவிட்டது. சராசரி 23 வயதில் ஒரு பெண், 25 வயதுள்ள ஓர் இளைஞனைத் திருமணம் செய்துகொள்ளுதலே இங்குள்ள வழக்கம்.
அமெரிக்காவில் காதல் முறையில் மணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு விருப்பமுள்ள ஆண்மகனோடு பல மாதங்கள் – சிலர் பல ஆண்டுகள் – வரை எல்லாத் துறைகளிலும் கூடிப்பழகி, ஒருவர் மற்றவரின் பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு, குற்றங்குறை ஆகியவற்றைத் தெரிந்து சம்மதித்துத்தான் திருமணம் முடித்துக் கொள்ளுகின்றனர். எனவே, மனம் ஒத்தாலன்றிச் செல்வம் அல்லது பதவிக்காகத் திருமணங்கள் அமெரிக்காவில் நடைபெறுவதில்லை. சாதிமத வேறுபாடுகளால் திருமணங்கள் தடைப்படுவதில்லை. காதலித்துத் தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண், தன் தாய் தந்தையருக்குத் தெரிவித்தால்தான், அவர்கள் (அன்பளிப்புக்களுடன்) மண வைபவத்துக்கு வருவது வழக்கம்.
மனம் ஒன்றுபடாவிடில், விவாக ரத்து (Divorce) செய்துகொள்ள இருதிறத்தாருக்கும் உரிமையுண்டு. விவாகரத்து செய்து கொள்ளுபவர்கள் எட்டுப்பேரில் ஒருவர்தான். இவ்வாறு பிரியும்போது, அவர்களில் யாராவது ஒருவர் குழந்தைகளைத் தம்முடன் அழைத்துச் செல்லுவர். குழந்தைகளைத் தாயார் அழைத்துச் செல்லவேண்டுமென்றும், குழந்தைகளைப் பேணும் செலவுக்காக ஒரு தொகையைத் தந்தை சில ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தார் கட்டளை யிடுவதுமுண்டு.
கணவன் இறந்துவிடின் மனைவி மறுமணம் செய்து கொள்ளுவாள். பெரும்பாலும் கணவனை இழந்த பெண்களிடம் பெருஞ் செல்வம் சிக்குவதால், அவர்கள்மீது மற்றப் பெண்கள் பொறாமைப்படுவதும் உண்டு.

