மூன்று விஷயங்கள்
1
அவுட்லுக்கின் புதிய இதழில் வட இந்தியாவைத் தென்னிந்தியா ஓவர்டேக் செய்துவருவது பற்றி ஒரு சிறப்புப் பகுதி போட்டிருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் நிறைய பிரதிகள் விற்றிருக்கும்). வட இந்தியர்கள் (ஊடகங்களையும் சேர்த்து) தென்னிந்தியர்களைப் பழம் பஞ்சாங்கங்களாக நினைப்பதையும் சித்தரிப்பதையும் சதானந்த் மேனன் தன் கட்டுரையில் லேசாகத் தொட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இந்த மாதிரி ஸ்டீரியோடைப்பிங் வேலையைச் செய்யும் இதழியலாளர்களில் அவுட்லுக் விதிவிலக்கல்ல.
ஆனந்த விகடன் சென்னைவாழ் நடுத்தர வர்க்கத்தினரை மனதில் கொண்டு பத்திரிகை நடத்தி கிராமத்து ஸ்பெஷல் (“கிராமத்துக்குப் போலாமா?”) வெளியிட்ட கதை மாதிரிதான் இதுவும். வழக்கமான ஆங்கிலப் பத்திரிகை பாணியில் தனித்தனி பாக்ஸ் ஐட்டங்களை ஒட்டித் தயாரித்த ‘ஸ்டோரி’களைத் தந்திருக்கும் அவுட்லுக், தான் அடிப்படையில் தென்னிந்திய விரோத மனோபாவத்தைக் கொண்ட பத்திரிகைதான் என்பதை நிரூபித்து வருகிறது.
இந்தியில் சகஜமாகப் புழங்கும் வார்த்தைகள் தென்னிந்தியர்களுக்குப் புரிந்தாக வேண்டும்; புரியாவிட்டால் கற்றுக்கொள்ளட்டும் என்று நினைக்கும் போக்கு வட இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு உண்டு. தெற்கை ‘விதந்தோதி’யிருக்கும் அவுட்லுக், தனது மற்ற கட்டுரைகளில் அதே அலட்சிய மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.
பைரோன் சிங் ஷெகாவத் பற்றிய கட்டுரையில் ‘ஹவேலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கட்டுரையாசிரியர் நீலப் மிஷ்ரா. அதன் பொருள் எனக்குத் தெரியாது. வசிப்பிடம் என்று அரைகுறையாகத் தெரியும். ஆனால் வாசகருக்கு எதுவும் எளிதில் புரிய வேண்டும் என்பது இதழியலில் மிக அடிப்படையான ஒரு விதி. ஆனால் நாமெல்லாம் அவர்களுக்குக் கணக்கில்லை. இந்தி தெரியாதவன்/ள் ஏன் ஆங்கிலப் பத்திரிகை படிக்க வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருக்கலாம்.
வட, மேற்கு இந்திய அரசியல்வாதிகள் இந்தியில் பேசும் விஷயங்களை அடைப்புக் குறியில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் போடாமல் அப்படியே ஒலிபெயர்த்துப் போடுகின்றன. கூசாமல். எல்லாப் பத்திரிகைகளும் எல்லா சமயங்களிலும் இந்தக் காரியத்தைச் செய்வதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அதைச் செய்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு முடிவே இல்லை போலிருக்கிறது.
அப்புறம் இன்னொரு விஷயம்: கோவில் கோபுரம்தான் தமிழ்நாட்டின் அடையாளமா? இந்த சிறப்புப் பகுதிக்கான லோகோவாக கோபுரத்தைப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்காரர்கள் என்று விபூதிப் பட்டையும் குடுமியுமாக ஒரு ஆண் முகத்தைப் போடுவதற்கும் இதற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை.
2
கட்டாந்தரை மீனவர்கள் பட்டையைக் கிளப்பும் தமிழ் மொழிபெயர்ப்பு உலகில் தரமான மொழிபெயர்ப்பைப் பார்க்க முடிகிற ஓர் இடம்… லயன் காமிக்ஸ்! இந்த மாதம் பெரிய சைஸில் 386 பக்கங்களுடன் 100 ரூபாய் விலையில் வந்திருக்கும் கௌபாய் ஸ்பெஷலே இதற்கோர் ஆதாரம்.
‘தலைக்கு ஒரு விலை’ என்ற லக்கி லூக் வண்ணப் படக்கதையும் அதற்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் ‘பனிக் கடல் படலம்’ என்ற டெக்ஸ் வில்லர் கதையும் அட்டகாசமான மொழிபெயர்ப்புகள் (இரண்டையும் ஒரே நபர் மொழிபெயர்த்திருப்பது போல் தெரிகிறது). ‘தலைக்கு ஒரு விலை’ அதிரடியான நகைச்சுவைக் கதை. அதன் வெற்றிக்குக் காரணம், ஆங்கிலத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு நல்ல சொல்லறிவையும் அசாதாரணமான நகைச்சுவை உணர்வையும் கொண்டு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.
தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேச்சின் வேடிக்கையான அம்சங்களை முழு வீச்சுடன் பயன்படுத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். இதை உதாரணம் காட்டி விளக்குவதை விட படித்தால்தான் புரியும்.
டெக்ஸ் வில்லர் கதையில் கூட நடையில் சில பிரச்சினைகளைச் சொல்லலாம். லக்கி லூக் மொழிபெயர்ப்பில் வெளிப்படுவது ஜீனியஸ் என்று சொன்னால் தப்பில்லை. சினிமா பாரடைசோ, லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றெல்லாம் ஜல்லியடிப்பவர்கள் வெகுஜன இலக்கியத்திலிருந்து இது போன்ற சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(பி.கு.: லயன் காமிக்ஸ் விரைவில் ‘ஏஜண்ட் XIII‘ என்ற கதையைக் கொண்டுவரப் போகிறது. 18 பகுதிகளை ஒரே புத்தகத்தில் போடப் போகிறார்கள். 800 பக்கங்கள், விலை ரூ. 200. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும்தான் பிரதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)
3
இலக்கிய உலகப் பெரியவர்கள் – தங்களைப் பெரியவர்களாக நினைத்துக்கொள்ளும் இளம் எழுத்தாளர்களைச் சொல்லவில்லை; வயதில் பெரியவர்களைச் சொல்கிறேன் – எல்லோரும் இப்போது புதியதோர் பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் Hi5, Orkut, Minglebox, Tagged போன்ற டேட்டிங் மற்றும் பிரெண்ட்ஷிப் வலையகங்களில் உறுப்பினர்களாகிறார்கள். தங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் சரமாரியாக மின்னஞ்சல் அழைப்புகளை ஏவுகிறார்கள். சான்றோர், பண்புளோர் என்றெல்லாம் மதிக்கப்படுபவர்கள் இப்படி இறங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.
மொழி அதிர்ச்சிகள்
மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் “மொழி அதிர்ச்சி” என்ற சிறுகதை 300 வார்த்தைகள்தான் இருக்கும். பெரிய மாஸ்டர்பீஸ் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட வலைப்பதிவில் வரும் அனுபவப் பகிர்வின் தரம்தான் இருக்கும். ஆனால் அது இப்போதும் சிலருக்கு நினைவிருக்கக் காரணம், மொழி விஷயத்தில் மாந்தர் காட்டும் துணிகரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அன்றாடம் எதிர்கொள்வதுதான்.
கதையின் சுருக்கம்: கதைசொல்லி ஓர் உள சிகிச்சையாளன். ஆலோசனைக்கு வரும் ஒருவர் தனது உறவினரின் தீவிர மனப் பிரச்சினையை விரிவாக விளக்குகிறார். ரிலாக்சேஷன் என்ற வார்த்தையை தாராளமாகத் தூவிப் பயன்படுத்துகிறார். ‘திடீர்னு ரிலாக்செசன் ஆயி…’ – இப்படி ஒவ்வொரு முறை ஒவ்வொரு அர்த்தத்தில் பயன்படுத்துவதாக ஞாபகம்.
கதைசொல்லி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ‘நீங்க அடிக்கடி ஒரு வார்த்தைய பயன்படுத்துறீங்க. நான் அத வேற மாதிரி உச்சரிப்புல வேற அர்த்தத்துலதான் கேட்டிருக்கேன்’ என்பது போல கண்டனத் தொனியில் கேட்கிறான். வந்தவர் அதற்கு ‘இங்கிலீஷ்ல இதுக்கெல்லாம் என்னங்க பெரிய அர்த்தம் இருக்கப் போவுது’ என்கிறார். கதைசொல்லி அதிர்ந்து போகிறான். கதை முடிகிறது. இது ‘முன்றில்’ என்ற பத்திரிகையில் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தது என்று நினைக்கிறேன்.
*
என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு ‘சிக்சர் சித்து’ போல ஆங்கில ஈடுபாடு அதிகம். அவன் இங்கிலீஷில் ஏதாவது படித்துக்கொண்டிருந்தாலே எங்களுக்கெல்லாம் உதறும். அவன் படித்ததில் படு மந்தமான ஒரு நகைச்சுவை இருந்தால் ரொம்ப ‘இம்ப்ரெஸ்’ ஆகி எங்களுக்கெல்லாம் காட்டி இம்சிப்பான்.
அவ்வப்போது ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தை அவனுக்குக் காதலி ஆகிவிடும். உதாரணமாக, flamboyance என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டான். அதற்குப் பிறகு ஒரு மாதம் எதற்கெடுத்தாலும் ஃப்ளாம்பாயன்ஸ்தான் (“அந்த மூவில ஒரு ஃப்ளாம்பாயன்ஸ் இருக்குடா…”). சரியான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோமா என்ற கவலையெல்லாம் அவனுக்கு இல்லை. அதெல்லாம் எங்களுக்குத்தான். இப்போது “‘sup dood?” என்று திரிந்துகொண்டிருக்கிறான். ஒரு மொழிபெயர்ப்பாளனாகும் தகுதி அவனுக்கு இருக்கிறது.
*
தமிழ் மீடியப் படிப்பை முடித்துவிட்டு ஆங்கிலத்திலும் மெதுவாகப் படிக்க ஆரம்பித்தபோது ஆங்கிலத்தில் சின்னச் சின்ன, படு சாதாரணமான அம்சங்கள் கூட என்னைப் புல்லரிக்க வைத்தன. கல்லூரி நூலகப் புத்தகம் ஒன்றில் beleaguered என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டு, அது league என்பதிலிருந்து வந்தது என்று புரிந்துகொண்டு அசந்து போய், பக்கத்தின் ஓரத்தில் “beautifully coined word!” என்று எழுதியதை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
*
ஆங்கிலத்தில் பிழையில்லாமல் ஒரு வரி கூட எழுத முடியாத, ஒரு வாக்கியம் கூடப் பேச முடியாத ஆட்கள் கார்ப்பரேட் ஏணியில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் கதை, கவிதை எழுதும்போது வயிற்றெரிச்சலாக இருக்கிறது.
*
மொழி அதிர்ச்சிகளுக்கு முடிவில்லை. ஆகவே இப்பதிவு தொடரும்.
பொறுப்பில்லாத எழுத்து
ஒரு விமர்சகர் மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைப் பற்றி எழுதும்போது எவ்வளவு பொறுப்பாக எழுத வேண்டும். ஒரு மூத்த கலை விமர்சகரே தன் எழுத்தில் தகவல் பிழைகளை அடுக்கியிருக்கிறார்.
கலை பற்றி ‘வான்கா’ உட்படப் பல புத்தகங்களை எழுதியிருக்கும் தேனுகாவின் சமீபத்திய புத்தகம் பியத் மோந்திரியான் என்ற ஓவியரைப் பற்றியது. புத்தகத்தின் தலைப்பும் அதுவே (வெளியீடு சந்தியா பதிப்பகம், விலை ரூ. 100).
பிழைகளில்தான் தொடங்குகிறது இந்தப் புத்தகம். தாதா என்ற சமூக, கலை, பண்பாட்டு இயக்கத்தைப் பற்றி தேனுகா எழுதுகிறார்…
பிரான்சில் தோன்றிய டாடாயிஸ்டுகள் (Dadaists) இவ்வாறு கலையை அழிப்பதற்கென்றே உருவெடுத்திருப்பதாகத் தங்களைப் பிரகடனம் செய்து கொண்டனர். ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்திய இவர்கள், ஒவ்வொரு ஓவியத்தின் மீதும் சுத்தியல் கொண்டு உடைத்து நொறுக்கும்படி பார்வையாளர்களை வேண்டினர். ஒரு தினசரியிலிருந்து சில வரிகளைப் படித்துக்காட்டி நாங்கள் இப்போது கவிதைப் படித்ததாகக் கூறினர். ஓவியக் கண்காட்சியைக் காணவந்தோரை பொதுக் கழிவறை ஒன்றின் வழியாக வரவேற்றனர் இவர்கள். இவ்வாறெல்லாம் கலையை மிக மூர்க்கமாக அழிக்கத் திட்டமிட்ட டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை. டாடாயிஸம் அதன் உதய காலங்களிலேயே சிசு மரணமிட்டது.
கதையெல்லாம் சொல்லி தேனுகா அழிவு கொள்ளை தீமை கழகம் ரேஞ்சுக்கு உயர்த்தியிருக்கும் ‘டாடாயிஸ்டு’களின் இயக்கம்
அவர் சொல்வது போல் கலையை அழிப்பதற்காக உருவான பயங்கரவாத கேங் அல்ல.
முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமைக்கப்பட்ட தாதா என்ற இந்த இயக்கம் போர் எதிர்ப்பு, கலையிலும் இலக்கியத்திலும் இருந்து வந்த மரபுகளை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சமூக அமைப்பில் முழுவதும் நம்பிக்கை இழந்துவிட்டிருந்த இளம் படைப்பாளிகளின் அமைப்பு அது. அவர்களில் சிலருக்கு – உதாரணமாக ஓவியர் ஜார்ஜ் கிராஸ் – இடதுசாரி சார்பு இருந்தது.
தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் பயன்படுத்திய உத்திகளில் முக்கியமான ஒன்று, மக்களைப் பதற வைப்பது. அந்தக் காலத்து மனிதர்களுக்கு அவர்களுடைய ஸ்டைல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கலையை அழிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிய தீவிரவாத கும்பல் ஒன்று குழந்தைத்தனமாக ஒரு டைப்ரைட்டருக்கும் தையல் மெஷினுக்கும் பந்தயம் நடத்தினால் எப்படி இருக்கும்? (இது நடந்தது!)
இன்னொன்று, தாதா இயக்கம் உருவானது பிரான்சில் அல்ல, ஸ்விட்சர்லாந்தில்.
“டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை” என்று ஒரு மூத்த கலை விமர்சகர் கிறுக்கியிருப்பதுதான் வயிற்றெரிச்சல்.
மார்செல் த்யுஷாம், ஜார்ஜ் கிராஸ், மேக்ஸ் எர்ன்ஸ்ட், மேன் ரே, ஹான்ஸ் ஆர்ப் என்று போன நூற்றாண்டில் கலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்கள் ‘தாதாயிஸ்டுகள்’தான். தாதாவின் வாரிசாக வந்த சர்ரியலிச இயக்கம், ‘தானாக எழுதும்’ உத்தி (automatic writing) போன்ற ஐடியாக்களை தாதாவிடமிருந்துதான் எடுத்துக்கொண்டது. தாதா அல்பாயுசில் போனது மட்டும்தான் அவர் சொல்வதில் நிஜம்.
தேனுகா விக்கிபீடியாவைக் கொஞ்சம் பழக்கப்படுத்திக்கொண்டால் நன்றாயிருக்கும். அதே போல ‘மரணமிட்டது’ என்றெல்லாம் பாசாங்கான, அபத்தமான தமிழில் எழுதுவதை நிறுத்தினால் புண்ணியமாய்ப் போகும்.
பின்னிணைப்பு: எனது ‘பிறழ்வு‘ பதிவில் இரண்டு தாதா கலைஞர்களின் படைப்புகள்: ரெடிமேட் கலை, பேராசையின் முகங்கள்.
பி.கு.: புத்தகத்தை நான் மேற்கொண்டு படிக்கவில்லை.
ஏ.சி. ரூம் இதழியல் – 2
இது ஒரு belated பதிவு. ஆனால் better late than never.
குறுகிய உயர்சாதி, உயர்வகுப்பு ஆங்கில இதழியலில் தானும் ஓர் அங்கம் என்பதை அவுட்லுக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
இரண்டு வாரங்களுக்கு முன், பிப்ரவரி 05 தேதியிட்ட இதழில் புகைபிடிக்கும் பழக்கம் பற்றிய தனது கவர் ஸ்டோரியில் விளம்பரத் துறை நிபுணர் அலிக் பதம்சி புகைபிடிப்பவர்களை ‘pariah’ என்று குறிப்பிட்டதை அவுட்லுக் அப்படியே வெளியிட்டது. அதைப் பேட்டி கொடுத்த ஒருவருடைய quote-ஆக மட்டுமில்லாமல் ஒரு பெட்டிக் கட்டுரையில் மீண்டும் பயன்படுத்தவும் செய்தது.
சுப்பிரமணிய சுவாமி உளறி மாட்டிக்கொண்ட விவகாரம் அவுட்லுக் போன்ற ஒரு பெரிய பத்திரிகைக்குத் தெரியாமலா இருக்கும்? ஆனால் இவர்களைப் போன்ற பத்திரிகையாளர்களைப் பொறுத்த வரை அறியாமை என்ற பிரச்சினை இல்லை. Pariah என்ற சொல்லை மேலோட்டமான ஒரு உவமையாகப் பயன்படுத்தினால் யார் கேட்கப் போகிறார்கள் என்ற திமிர்தான் அது.
இதைக் கண்டித்துப் பலர் அவுட்லுக்கிற்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். கடிதங்களில் ஒன்றிரண்டையாவது அவுட்லுக் வெளியிட்டிருக்கிறதா என்று இந்த இதழை வாங்கிப் பார்த்தேன். இரண்டு வரிக் கடிதங்கள் இரண்டும் அவற்றுக்குக் கீழே சுருக்கமான ஒரு டெம்ப்ளேட் ‘வருந்துகிறோ’மும் போட்டிருக்கிறார்கள்.
ஒரு விதத்தில் பார்த்தால் அவுட்லுக் சாதிப் பிரச்சினை ஒன்றில் சுரணைகெட்டத்தனமாக நடந்துகொண்டதில் ஆச்சரியம் இல்லை. இதைப் பற்றிய எனது முந்தைய பதிவு ஒன்று: ஏ.சி. ரூம் இதழியல்.
இணைப்புகள்:
அவுட்லுக்கின் கவர் ஸ்டோரி
பெட்டிக் கட்டுரை
குறிப்பு: மேற்கண்ட இணைப்புகளைப் பார்க்கப் பயனர் பெயரும் கடவுச் சொல்லும் தேவை. அவை முறையே பின்வருமாறு:
butterchicken
limesoda
நன்றி: BugMeNot
இலக்கண பாசிசம்
ருஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் கையில் ஆவணங்கள் ஏதேனும் கிடைத்தால் அவர் அவற்றில் சித்தாந்த சங்கதிகள் மட்டுமின்றி நடையையும் இலக்கணத்தையும் திருத்திவிட்டுத்தான் அனுப்புவாராம். நான் படித்து புரிந்த வரை ரசிக்கும் மொழியியல் வலைப்பதிவான Language Log-இல் தெரிந்துகொண்ட தகவல் இது.

