காதலுக்கு அவமரியாதை
(ஐலவ்யூ வைரஸ் ஆறாம் ஆண்டு நிறைவுக் கவிதை)
ஃபிலிப்பைன்ஸ் நாட்டு கணிப்பொறியியல் மாணவர் ஒருவர் எழுதிய ‘ஐலவ்யூ’ வைரஸால் உலகெங்கும் நிறுவனங்களுக்குப் பல கோடி டாலர் நஷ்டம். – செய்தி
காதல் கடிதம் எழுதிய தென்கிழக்காசியனே!
(உன் திருப்பெயர் என் தமிழ் வாயில் நுழைய மறுக்கிறது)
உன்னால் உலகப் பொருளாதாரம்
பெருந்தொகை இழந்து தவிக்கிறது.
நீ உன் தலையைச் சொறிந்த கையால் கீபோர்டைத் தட்டியதில்
இங்கே டிஜிட்டல் டேட்டாக்கள் ரீசைக்கிள் ஆகிவிட்டன.
பிலிப்பைன்சு நண்பா, நீ கணினியை மட்டுமா கெடுத்தாய்?
அம்பிகாபதியும் அமராவதியும் கண்ணீரிட்டு வளர்த்த காதலை
ரோமியோவும் ஜூலியட்டும் முத்தமிட்டு வளர்த்த காதலை
சுரேஷும் சுசீலாவும் சுண்டலிட்டு வளர்த்த காதலை
அல்லவா கெடுத்துவிட்டாய்?
விபிஸ்க்ரிப்ட் மொழி தெரிந்த
உன் மரத்துப் போன மண்டைக்கு
காதல் மொழி தெரியாதா சப்பைமூக்கு நண்பா?
காதல் கடிதத்தில் முத்தங்களை அனுப்புவதுண்டு
சில சத்தங்களை அனுப்புவதுண்டு
நீயோ கிருமியை அனுப்பி
சித்தங்களை சிதறடித்துவிட்டாய்.
காதலின் source code தெரியாதவனே
உன் மனசாட்சியை சற்றே ரைட்க்ளிக் செய்து properties-ஐப் பார்
நீயும் ஒரு நாள்
தேவதாஸின் தாடியைத் தடவிப் பார்த்தவன் போல்
பேசும் நாள் வரும்.
அப்போதும் தெரியும் உனக்கு
காதலின் configuration.
டைமண்டு கவிதை 2
இதுவும் அதே காலகட்டத்தில் எழுதிய வைரமுத்துப் பகடி. செய்தித் தாளில் வெளிவரும் எந்தக் கெட்ட நிகழ்வையும் பற்றிக் கவிதை எழுதிவிடுவார்கள். ஊடகம் அமுக்கி வைக்கும் பல அவலங்களை எழுத மாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பு பற்றி வைரமுத்தார் இந்தியா டுடேயில் அருளிய ஒரு கவிதையின் ரீமேக் இங்கே.
அயோத்தி ராமன் முறைக்கிறான்
மனைவியின் அடி உதை
முடிந்திட வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மச்சினி கோபம்
துடைக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மாமியார் கொழுப்பை
அடக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மகனை ஸ்கூலில்
சேர்க்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
ட்யூஷன் டீச்சரை
மடக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மெட்ரோ வாட்டர்
பிடிக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?
மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்!
படமெடுக்கும் பாம்பு
கலைப் படமா எடுக்கும்?
வெடிக்கும் மதப் போர்
தீயிடை வைக்கோல் போர்.
சுதந்திர இந்தியா
இன்பத்தின் அந்தியா?
மதமென்னும் வேதாளம்
பண்பாட்டின் பாதாளம்.
எப்படிக் குறைதீர்ப்பீர்
இந்தியத் தலைவர்காள்?
மாட்டீர்கள் தலைவர்காள்
மாட்டீர்கள்!
கூவத்தை நோக்கி
நடைபோடும் எருமை
அதைத் தூர்வாறவா போகிறது?
அந்தக் கூவத்தில்தானே
நீங்கள்
லட்சியப் படகுகளை விடுகிறீர்கள்.
நீங்கள் அள்ளிப் பூசிக்கொள்ளவே
செய்வீர்கள்
இங்கே சீமை சென்ட்டு
கிடைக்கும் வரை.
நீங்கள் மிளகாய் அரைக்கவே
செய்வீர்கள்
இங்கே வழுக்கையர் கூட்டம்
குனியும் வரை.
இங்கே வறுமைக் கோட்டின்
கீழ் நான்கு கோடி மக்கள்
என்ற நாடாளுமன்றமே!
அட்சக் கோட்டின்
கீழ் எண்பது கோடி!
அதை ஏன் அறிவிக்கவில்லை?
மதம் ஒரு பேமானி
மதம் ஒரு சோமாறி
சோமாறியோடு என்ன பாட்டில் யுத்தம்?
எப்போது அந்தக் கட்டிடத்தின் மீதும்
பண்பாட்டின் மீதும்
ஆசிட் பல்பு விழுந்ததோ
அன்று முதல்
கூவ நதி
கசப்பாக ஓடுகிறது!
அன்று மண்ணுருண்டை
அடித்துவிட்டு கூனியை முறைத்த பின்பு
ராமன் இப்போதுதான் இரண்டாம் முறையாக
முறைக்கிறான்.
மாண்புமிகு மதவாதிகளே!
சிறு கேள்வி கேட்கிறேன்
செவி தருவீரா?
அஞ்சாதீர்கள் தலைவர்களே,
திருப்பிக் கொடுத்துவிடுவேன்.
மனிதர்களிடம் வாங்கிய காற்றை
மரங்கள் திருப்பிக் கொடுக்கவில்லையா?
மீனவர்களிடம் வாங்கிய உப்பை
கடல் திருப்பிக் கொடுக்கவில்லையா?
அயோத்தி ராமன் அவதாரமெனில்
அவன் பிறப்புமற்றவன் இறப்புமற்றவன்.
ராமனின் பிறப்புச் சான்றிதழ்
உம்மிடமுண்டா?
இறப்புச் சான்றிதழாவது உம்மிடம்
உண்டா?
பிறக்காதவனுக்கு ஏன்
பிறந்த நாள் கொண்டாடுகிறீர்?
இறக்காதவனுக்கு ஏன்
கருமாதி செய்கிறீர்?
டைமண்டு கவிதை 1
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கவியரசு வைரமுத்துவை யாரோ இலக்கியவாதி பிரபல பத்திரிகை ஒன்றில் தாக்கியிருந்தார். யார் என்று நினைவில்லை. ஆனால் கவியரசு எழுதுவது கவிதை இல்லை என்று அவர் சொல்லியிருந்தார்.
சும்மா இருப்பாரா டைமண்டு? “என் பிரிய எதிரிகளே!” என்ற தலைப்பில் ஒன்று எழுதினார். அதற்காகவே காத்திருந்த பத்திரிகை ஒன்று அதை வெளியிட்டது. அதைப் பகடி செய்து நான் எழுதியது கீழே. பகடியைப் பார்த்து ஒரிஜினலை ஊகித்துக்கொள்ளலாம்!
அடைத்தாலும் தப்புவேன்!
என் வறிய எதிரிகளே!
மழைக்கால வெயிலில் உங்களை
நினைத்தால்
உடல் கொஞ்சம் விறைக்கிறது.
உங்கள் முகவரியை
நீங்கள் ஏன் என்
நிமிராத வாலில்
எழுதிவிட்டுப் போகிறீர்கள்?
எருக்கம் பூவையும்
மல்லிகைப் பூவையும்
எப்படி உங்களால்
ஒரே நாறில்
ஒரே நேரத்தில்
கோர்க்க முடிகிறது?
இப்போதெல்லாம்
உங்கள் பேனா
எழுத்துக்களையும் எண்களையும் தவிர
வேறெதையும்
எழுதுவதில்லையே!
நீங்கள் தூவிய
பூக்கள் என் காலைத் தடுக்கியது.
நீங்கள்
தட்டிக் கொடுத்தபோது
என் சட்டையில் தையல் விட்டது.
வறிய எதிரிகளே!
பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?
என்ன செய்வீர்கள் என்னை?
பணமும் புகழும் சோறும்
இல்லாத தேசத்திற்கா
என்னை நாடு கடத்திவிட முடியும்?
பூண்டி நீர்த் தேக்கத்தில்
எனக்கான நீரைக்
களவாடிவிடவா முடியும்?
தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான பீடிகளை
அமுக்கிவிடவா முடியும்?
எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!
என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.
என் வறிய எதிரிகளே!
நீங்கள் என் மேல் எறிந்த
தீப்பந்தங்களைக்
கொண்டு நான் முதுகு
சொறிந்துகொள்கிறேன்.
என் மீது வீசும் காகித
அம்புகளால் நான் காது
குடைந்துகொள்கிறேன்.
என் மானம் அறிவு தொட முடியாத
தூரத்தில் இருக்கிறது.
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் சாகாமல் இருக்கிறேன்.
என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.
என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.
என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.
என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!
என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.
பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.
சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
சின்ன வீட்டில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.
குரூரமான நகைச்சுவை
தயவு செய்து மென்மையான இதயம் கொண்டோர் மேற்கொண்டு படிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தயவு செய்யாமல் மென்மையான இதயம் கொண்டோருக்கும் இந்த வேண்டுகோள் பொருந்தும்.
* * *
வழக்கமான வலையுலாத்தலில் கண்ணில் பட்டது இந்த limerick ‘அகராதி’. எளிமையான சிந்தனைகளை சந்தத்துடன் நறுக்கென்று எழுதும் இந்தப் பழம்பெரும் கலை அழியாமல் இருப்பது சந்தோசமான விசயம். சைட்டிலிருந்து ஒரு எ.கா.:
An antipornography nut
Sees commercials as televised smut.
He’s complaining today
About feminine spray
And those diaper ads showing a butt. (Chris Doyle)
லிமரிக் என்றதும் எனக்கு முழுசாக நினைவுக்கு வருவது என் கல்லூரி நாட்களில் நான் பாடித் திரிந்த ஒரு லிமரிக்:
Here lies the amorous Fanny Hicks
The scabbard of ten thousand pricks
If you want to do her honor
Pull out your cock and piss upon her.
இதில் நகைச்சுவை அதிகம் இல்லையென்றாலும் எப்படியோ மனதில் தங்கிவிட்டது. அதே போல Harry Graham என்பார் எழுதிய Ruthless Rhymes-ஐயும் கண்டுபிடித்தேன். வகுப்பறையில் நண்பர்களுடன் படித்து அடக்க முடியாமல் சிரித்த லிமரிக்குகள் இவை. சாம்பிள்:
Auntie, did you feel no pain
Falling from that apple tree?
Will you do it, please, again?
‘Cos my friend here did’nt see.
- – -
Father heard his children scream,
So he threw them in the stream,
Saying, as he drowned the third,
“Children should be seen, not heard!”
OEDILF-ல் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகி நகைச்சுவைக் கவிதைகள் எழுதலாம். அது வலையில் பிரசுரிக்கப்படும் தகுதியை சைட்டின் ஆசிரியர் குழு தீர்மானிக்கும். இங்கே நல்ல கவிதைகள் நிறைய இருப்பது வியப்பளிக்கிறது (முன்பே கொடுத்த லிங்க்தான், இருந்தாலும் சுட்டுச் சொற்கள் லிங்க் இல்லாமல் வரக் கூடாதாமே).
அப்டேட்: தமிழில் செய்யுள் வடிவமும் (காளமேகம் ஸ்டைல்) ஹைக்கூவும் லிமரிக்கிற்கு நன்றாக ஒத்துழைக்கும். என் முந்தைய மூன்று காதல் கவிதைகளும் கிட்டத்தட்ட free verse லிமரிக் முயற்சிகள்தாம்.
மூன்று காதல் கவிதைகள்
அந்தோன் சேகவ் (நம்ம ஆன்டன் செக்கோவ் அல்லது செக்காவ்தான்) எழுதிய ‘மூன்று ஆண்டுக’ளையும் துர்கேனிவ் (டர்ஜெனிவ்) படைத்த ‘மூன்று காதல் கதைக’ளையும் வளர் இளம் பருவத்தில் படித்துக் கற்பனையில் ருஷ்யப் பனியில் நனைந்தவன் நான்.
இரண்டு படைப்புகளுக்கும் எனது ட்ரிப்யூட்டாக இம்மூன்று காதற்கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன். சிலதுக்கு தபூ சங்கர்தான் இன்ஸ்பிரேசன் எனினும் அவர்தம் பெயரை இவை களங்கப்படுத்தா (இவற்றில் நாலை on the fly-ஆக வேர்ட்பிரஸில் இயற்றினேன்).
1
திருமணம் ஆனபிறகு
உனக்கு என் ஞாபகம் வருமா
எனக் கேட்கிறாய்.
நான் உன்னையே
திருமணம் செய்துகொண்டுவிட்டால்?
2
அழகான பெண்களைப் பார்க்கும்போது
உன் ஞாபகம் வருகிறது.
உன்னைப் பார்க்கும்போது
அழகான பெண்களின் ஞாபகம் வருகிறது.
3
வாழ்க்கையில்
ஒரு புத்தகமாவது
எழுதிவிடவேண்டும்
உன்னைப் பற்றி.
* * *
மூன்று கவிதைகள் என்று சொன்னதாக ஞாபகம்…
1
தொலைவினால்
ஆனது
நம் பிரிவு.
2
நான்
இல்லாமல்
வாழக் கற்றுக்கொள்.
3
நேற்று நீ என்னுதட்டில் பதித்த காயம்
கண்ணாடியில் தனைக் கண்டு சிவக்கிறது.
* * *
நான் சொன்ன மூன்று கவிதைகள் இதோ:
1
என்னென்னவோ
சொல்கிறதுன்1 பார்வை.
அட வேண்டாமடி2,
வாயைத் திற
கேட்கிறேன் உன் குரலையாவது3.
2
எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.
3
நான் மட்டும் இல்லையென்றால்
எதைப் பற்றிக் கவிதை எழுதுவாய் என்கிறாய்.
யாரைப் பற்றி என்று கேள்.
* * *
இவ்வளவு ரொமான்ஸாக எழுதிவிட்டு கம்பெனியாக ஒரு ரொமான்டிக் படத்தைப் போடாமல் இருந்தால் எப்படி? நாளைக்கு ஒரு தொகுப்பு கொண்டுவந்தால் கருப்பு-வெள்ளையில் போடலாம்.

உதவிக் குறிப்புகள்:
1. ‘கிறது’வுக்கு அடுத்தாற்போல் ‘உன்’ வந்தால் பரம விசேஷம். ‘கிறதுன்’ என்று இணைத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம் பாருங்கள்!
2. காதல் கவிதைகளில் ‘அடி’ எனப்படும் பெண்பாற் பின்னொட்டு வந்தாலும் ஊர்பட்ட விசேஷம்தான்.
3. எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள்* கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள். சில சமயங்களில் இதன் எஃபெக்டுக்குத் தன்னிகரில்லை. தொல்காப்பியத்தை எழுதிய நாஸ்ட்ரடமஸ் நம் காலகட்டத்தை இப்படி முன்கூறியிருக்கிறார்: “முதற்சொல்லினைக் கடையிற்சேர்த்துக் கவிதையாக்குங்காலமாம் ஒன்றுமிருபதூஉம்.” (21-ஐ one and twenty என எழுதுவது மேற்கத்திய வழக்கமாகும். அவர் சொல்வது இருபத்தோராம் நூற்றாண்டை.)
* கவிஞர்கள் என்பது பெண் கவிஞர்களையும் குறிக்கும். அவர்களும் மனுச பாசையில்தான் எழுதுவதால்.
3a. மேற்சொன்ன உத்தியை முழுக் கவிதைக்கும் செயல்படுத்தி எழுதப்பட்ட எனது வேறொரு கவிதை:
பூகம்பம்
‘என்ன கறை சட்டையில்?’ என்றார்.
‘வந்ததல்லவா மதியம் லேசாக நில நடுக்கம்,
கொஞ்சம் சட்டையில் சிந்திவிட்டது
அந்த அதிர்ச்சியில் கையில் இருந்த டீ’ என்றேன்.
இப்போதும் வைத்திருக்கிறேன் அந்தச் சட்டையை
தோய்க்காமலே.
4. காதல் கவிதைகள் நிகழ்காலத்தில் (present tense) இருக்க வேண்டும்.
5. நபர் 1, நபர் இரண்டை விளித்துப் பேசுவதாக இருக்க வேண்டும். Tense இல்லாமல் எழுதுவது என்றால் கட்டளைத் தொனியில் (imperative) அமைந்திருக்க வேண்டும். இந்தச் சூழலில் ‘அடி’ உத்தியைக் கையாளலாம்.
6. மேலும் பல விதிமுறைகளை இப்பதிவில் அடிக்குறிப்பில்லாத கவிதைகளைப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம்.
7. பயிற்சிக்கு: “என்பதால்தானோ என்னவோ”வைப் பயன்படுத்தி ஐந்து வரிக்கு மிகாமல் ஒரு கவிதை எழுதுக.

