ஃபயர்வால் ஒழிக

க்யூபிக்கிள் கலாச்சாரத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் க்யூபிக்கிள்வாசிகளுக்கு இணைய வசதியை முடக்கிவைப்பது. பல நிறுவனங்கள் அலுவலகத்தில் சில வலையகங்களைத் தடுக்கின்றன. குறிப்பாக மின்னஞ்சல் சேவை வழங்கும் வலையகங்களையும் வலைப்பதிவுகளையும்.

சில வலையகங்களை நேரடியாகவும் சிலவற்றை வார்த்தைகளை வைத்தும் (எ.கா.: சைட் முகவரியில் *blog*, download, cricket போன்ற சொற்கள் வந்தால்) தடுக்கிறார்கள். ஆனால் நிரல் தேடித் திருடுவதற்குப் பயன்படுவதாலோ என்னவோ கூகிளை விட்டுவைக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் செய்தி வலையகங்களை அலவ் பண்ணுகின்றன.

அலுவலகத்தில் cricinfo, youtube, metacafe, meebo என்று மானாவாரியாகப் பயன்படுத்திக் குவிக்கும் முதிர்ச்சியற்ற கிராக்கிகள் தணிக்கை செய்வதை ஊக்குவிக்கிறார்கள். அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நல்லவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் அலுவலகத்தின் உலோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருக்கும் அலுவலகக் கோப்புகளை எடுத்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வலைப்பதிவுகளையும் செய்தியோடை வசதியுள்ள வலையகங்களையும் அலுவலகத்தில் பார்க்க இரண்டு எளிய வழிகள்:

பார்க்க விரும்பும் வலைப்பதிவின் பெயரை கூகிளில் போட்டுத் தேடலாம். முடிவுகள் பக்கத்தில் வரும் அந்த வலைப்பதிவின் முகவரியை நேரடியாக க்ளிக் செய்தால் நிறுவன அகழி (ஃபயர்வால்தான்) தடுக்கும். Cached என்ற இணைப்பைப் பார்த்தால் அந்த வலைப்பதிவை அல்லது வலையகத்தைப் பார்க்கலாம். இதில் எப்போதுமே புதிய பக்கங்களைப் பார்க்க முடியாது.

அதை விட நல்ல உத்தி, வேண்டியதை மின்னஞ்சலில் வரவழைப்பது. நாம் பார்க்க விரும்பும் வலையகத்திற்கு RSS வசதி இருந்தால் அதை மின்னஞ்சலில் பெற மிகச் சுலபமான ஒரு வழி rssfwd. கூகிள் காஷில் எடுத்த பக்கத்தில் RSS/Atom முகவரியை நகலெடுத்துக்கொண்டு, rssfwd-இல் கொடுத்து நமது மின்னஞ்சல் முகவரியையும் தந்துவிட்டால் முடிந்தது வேலை. அப்புறம் Alt+Tab திருவிழாதான்.

(மின்னஞ்சல் முகவரி என்றால் கம்பெனியார் நம்மபெயர்.அப்பாபெயர்@நிறுவனம்.காம் என்கிற ரீதியில் ஒதுக்கித் தரும் ‘ஆபீஸ் ஐ.டி.’ சில கம்பெனிகள் ஆபீஸ் ஐ.டி.க்கு பணிசாரா மின்னஞ்சல் வருவதை விரும்புவதில்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் மின்னஞ்சலைப் பயன்படுத்த, ஜிமெயிலின் RSS-ஐ கூகிள் ரீடரில் சேர்த்துப் பார்க்கலாம். கூகிள் ரீடரை அவ்வளவாக யாரும் தடை செய்வதில்லை. Disclaimer: இதை நான் முயற்சி செய்து பார்த்ததில்லை.)

லைவ் ரைட்டர் டெஸ்ட் பதிவு

வலைப்பூத்தலுக்கான (blogging) மென்பொருட்களில் w.bloggar, Zoundry Blog Writer, Performancing, Qumana மற்றும் பிறவற்றைக் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் எதுவும் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு எனக்குத் திருப்தியளித்ததில்லை. மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் விண்டோஸையும் ஆபீஸையும் வேறு வழியில்லாமல் பயன்படுத்தும் பலரில் ஒருவன் நான். அதனால் வேறு எந்த மைக்ரோசாஃப்ட் தயாரிப்பையும் பயன்படுத்தியதில்லை.

padam 1 பிக் பிரதர் முழுக்க முழுக்க வலைப்பதிதலுக்காகவே உருவாக்கிய ஒரு மென்பொருளில் என்ன இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விண்டோஸ் லைவ் ரைட்டரை நிறுவினேன். இதை நிறுவிப் பயன்படுத்தத் தொடங்கிய சிறிது நேரத்தில் இதன் எளிமையும் தோற்றமும் என்னைக் கவர்ந்தன (படம் 1). எனது அனுபவம் குறித்து மேலும் சில வரிகள் பின்வருமாறு…

லைவ் ரைட்டர் கோப்பின் சைஸ் 3.58 எம்.பி.தான். புள்ளிவலை சட்டகப்பணி (.NET Framework) உமது கணினியில் இல்லையென்றால் 23 எம்.பி. கோப்பை இறக்கிக்கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லாமல் இன்ஸ்டால் ஆகிவிடுகிறது.

பிறகு லைவ் ரைட்டர் சுருக்குவழி மேல் இரட்டைச் சொடுக்கிட்டால் (double click) என் ஃபயர்வால் உடனே அபாய அறிவிப்பு செய்கிறது. வழக்கமான மைக்ரோசாஃப்ட் உளவு வேலைதான். லைவ் ரைட்டர் என்னைக் கேட்காமல் மைக்ரோசாஃப்ட்டின் சர்வர் ஒன்றுடன் இணைக்கப் பார்த்தது. அதைத் தடுத்த பின் லைவ் ரைட்டர் சட்டென்று தொடங்குகிறது.

எம்.எஸ். ஆபீஸ் 2003ஐ உரித்து வைத்தாற்போன்ற தோற்றம். வேர்ட்பேடின் எளிமை. மிகச் சுலபமாக வலைப்பதிவுக் கணக்கு விவரங்களைப் பதிய முடிகிறது. நம் வலைப்பதிவில் என்ன தீம் பயன்படுத்துகிறோமோ அதன் லேஅவுட்டை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இதன் பதிவெழுதும் திரை (எழுதி, compose screen…). அதாவது நம் வலைப்பதிவில் நேரடியாக எழுதும் ஃபீலிங்கைக் கொண்டுவருகிறார்களாம் (படம் 2).

வேர்ட்பிரஸிலும் பிளாகரிலும் எழுதியின் அகலம் கச்சிதமாக இருக்கும். லைவ் ரைட்டரின் எழுதி அதை விட அகலமாக இருப்பது திரையரங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்து 70 MM படம் பார்ப்பது போல் அசௌகரியமாக இருக்கிறது. ஆனால் பெரிய தலைவலி என்று சொல்ல முடியாது. போல்டு, இட்டாலிக்ஸ், படம் செருகுதல், குறிச்சொல் சேர்த்தல் என்று வேண்டியதெல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன.

பதிவை எழுதும்போதே அதன் வரைவை நம் வலைப்பதிவில் சேமித்துக்கொள்ளலாம். HTML பார்த்து மாற்றலாம். முன்னோட்டம் பார்க்கும் வசதி அட்டகாசம். பதிவைப் போட்டதும் நம் வலைப்பதிவில் அது எப்படித் தெரியுமோ அப்படிக் காட்டுகிறது (படம் 3). படத்தை ஒட்டியதும் படத்தின் சைஸ், எஃபெக்டுகள் போன்ற வசதிகள் வலப்பக்கம் தெரிகின்றன. சும்மா சில நகாசுகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஒரு வலைப்பதிவுக்கு இது போதும். தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் Xanga-வில் வலைப்பதிவு வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கருவிப் பட்டையின் வலப்பக்கம் வேர்ட்பிரஸ் குறிச்சொற்களின் (Categories) தொங்கு பட்டியலைப் பார்க்கலாம் (படம் 4). எழுதும் பகுதிக்குக் கீழே, ஸ்டேட்டஸ் பாருக்கு மேலே, பதிவின் விவரங்கள், பின்தொடர் சுட்டி ஆகிய விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

Tools > Preferences என்ற மெனுப் பாதையில் போனால் ping சர்வர்களில் தமிழ் பிங் சர்வர்களை சேர்க்கலாம் (எனக்குத் தேன்கூடு வேலை செய்கிறது).

இது பீட்டா பதிப்பு. ஒரே விஷயத்திற்கு அங்கங்கே பட்டன்கள் இருக்கின்றன. உதாரணமாக, பின்தொடர் சுட்டி கொடுக்க இரண்டு இடங்களில் க்ளிக் செய்யலாம் - எழுதும் பகுதிக்குக் கீழே, பிறகு கருவிப் பட்டையில் கடைசி பட்டன் மேலே. பிறகு முன்னோட்டத்தைப் பார்க்க View மெனுவில் போயும் க்ளிக் செய்யலாம், கருவிப் பட்டைக்கு மேலுள்ள சாதா பட்டையில் ஒரு பட்டனையும் தட்டலாம்.

பதிவைத் தட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு வார்த்தை கட்டம் கட்டமாக வருகிறது. Format > Font என்ற பாதையில் போய் லதா எழுத்துருவுக்கு மாற்றினால் சரியாகிவிடுகிறது. முதல் பதிப்பில் இந்தக் கோளாறைச் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். அதே போல இந்த மென்பொருள் அனேகமாக junk code நிறைய சேர்க்கும் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் பார்க்க வேண்டும். மற்றபடி லைவ் ரைட்டர் நல்ல வலைப்பதிவு மென்பொருள் . சொடுக்குக!

பி.கு.: இந்தப் பதிவு என் வலைப்பதிவில் சரியாக ஏறாவிட்டால் பரிந்துரையை வாபஸ் வாங்கிக்கொள்வேன். வரிகள் கண்ட இடத்தில் உடைகின்றன. வேர்ட்பிரஸ் எழுதியிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.

அப்டேட்: ஃபயர்வாலை வைத்துத் தடுத்தால் பதிவு நம் வலைப்பதிவில் ஏறாது.

மதிகெட்ட மார்க்கெட்டிங்

தமிழ் பேசுபவர்களின் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் போதாது. கொஞ்சம் அறிவு, குறைந்தபட்ச மொழிசார் விழிப்புணர்வு, மார்க்கெட் என்பது மனிதர்களின் தொகுதி என்ற அறிவு - இதெல்லாம் தேவை.

தங்களிடம் இதில் எதுவும் இல்லை என்பதை மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களே நிரூபித்திருக்கின்றன. ‘தமிழ் மேட்ரிமோனி’ போன்ற துக்கடா நிறுவனங்களைக் கேட்கவா வேண்டும்? இது ஜிமெயிலில் தெரியும் செய்தியோடையின் திரைப்பதிவு (முழுசாகப் பார்க்க க்ளிக் செய்யுங்கள்) -

tmatrimony.jpg

தமிழ் என்ற சொல்லில் புள்ளி வைப்பதும் அதில் புள்ளி காணாமல் போவதைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கடினமா என்ன? Grooms For திருமணமாம்! இந்த நிறுவனத்தின் ‘பெற்ற’ நிறுவனமான பாரத் மேட்ரிமனியைத் தொடங்கியவர் தமிழ்நாட்டுக்காரர். வெட்கக்கேடு.

இதைத் தூக்கி சாப்பிடுவது ஒரு ஷோப்பிங் விளம்பரம்…

onlinay.jpg

அதாவது ஆன்லைன் ஷாப்பிங் கம்மி விலையில். இந்த கோர விபத்து எப்படி நடந்தது? ஒலிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி online என்று அடித்திருக்கிறார்கள். முரசு அஞ்சலின் ஒலிபெயர்ப்புத் தட்டச்சு முறையைப் பயன்படுத்தினால் இப்படி வராது. அஞ்சலைப் பயன்படுத்தியிருந்தால் oNlinE என்று அடித்திருக்க வேண்டும். இந்த வேலையைச் செய்தவர்கள் அந்த அளவிற்குக் கூறுகெட்டவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

இது இந்தியிலிருந்து ஒலிபெயர்க்கும் மென்பொருளை வைத்துச் செய்யப்பட்ட காரியம் என்று ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது முற்றிலும் சரியாகத்தான் இருக்க வேண்டும். துப்பு: ‘விலையில்’ என்பது ‘விளாயில்’ ஆகியிருக்கிறது. இந்திக்காரர்களுக்கு ‘ஐ’ பிடிப்பதில்லை. லைன் -> லாஇன், ஃபைல் -> ஃபாஇல் என்கிற ரீதியில்தான் இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியில் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்திக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்தியிலிருந்து தமிழுக்கு ஒலிபெயர்க்கும் யோசனை மடத்தனம், பொறுப்பின்மை, அலட்சியம், இந்தி மைய சிந்தனை மூன்றின் கலவையாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன் இந்தப் பதிவில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: இந்தித் திணிப்பு பல வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

‘ஆட்டு மாடு’ அல்லது ‘மாட்டு ஆடு’

கால்நடை விலங்குகளைக் குறிப்பிடத் தமிழில் ‘ஆடு மாடு’ என்றொரு வழக்கு இருப்பதை நாமறிவோம். Art Rage என்ற அற்புத மென்பொருளைப் பயன்படுத்தி நான் வரைந்த இந்த விலங்கை ‘ஆடு மாடு’ என்றே குறிப்பிடலாம். ஏனென்றால் இது இரண்டைப் போலவும் இருக்கிறது.

“அப்படியென்றால் அதை ஆட்டு மாடு என்றல்லவா குறிப்பிட வேண்டும்?” என்று இலக்கண ஆர்வலர்கள் கருத்துதிர்க்கலாம். However, that’s beside the point.

bullgoat

« Previous PageNext Page »