இங்லிஸ்
பல மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்படும்/நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் வேடிக்கையான விளம்பர வாசகங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை Engrish Funny என்ற சைட்டில் போடுகிறார்கள். சரியான காமெடி! மேலே இருக்கும் படத்தில் spring என்ற வார்த்தை வருவதால் அது அனேகமாக ஐக்கூவாகத்தான் இருக்கும்.
புதுக்கவிதையின் வீச்சும் வலிமையும்
இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டாலும் சில சமயங்களில் என் வலைப்பதிவுகள பற்றி கூகிளில் ஈகோ ட்ரிப் அடித்து மனசைத் தேற்றிக்கொள்வதுண்டு. இன்று மதியம் அப்படியான ஒரு ட்ரிப் அடித்தபோது என் பழைய பதிவு ஒன்றிலிருந்த சில ‘காதல் கவிதை’ களை இன்னொரு வலைப்பதிவில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.
ஒரு வாலிபர் நான் தமாசாக எழுதியதை சமீபத்தில் எடுத்துத் தன் வலைப்பதிவில் போட்டுக்கொண்டுள்ளார். எழுத்துத் திருட்டில் ஈடுபட விரும்புபவர்கள் அதன் நுட்பங்களை முன்பே அதில் ஊறித் திளைத்துப் பல புத்தகங்களை எழுதியிருக்கும் ஜாம்பவான்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். படிக்கிற மேட்டரின் தன்மையைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.
நகலெடுத்துப் போட்டவர் இந்த இரண்டையும் செய்யாமல் ஈயடிச்சான் காப்பி செய்திருக்கிறார். அதில் ஒரு கவிதையில் அடிக்குறிப்புகளுக்காக சூப்பர்ஸ்க்ரிப்ட்டில் எண்களைக் கொடுத்திருப்பேன். நான்கு குட்டிக் கவிதைகளை சுட்டிருக்கும் இந்தக் கவிஞர் அந்த எண்களையும் சேர்த்து நகலெடுத்துப் போட்டிருக்கிறார்!
இந்த நபர் தபூ சங்கர் பிரியர் போல் தெரிகிறது. காதல் கவிதைகளைக் கிண்டல் செய்து எழுதியதை நிஜ காதல் கவிதைகள் என்று நினைத்துக்கொண்டு அவற்றை சுட்டிருப்பது ஆனந்த விகடன் பாஷையில் சொன்னால் காமெடி கலாட்டா. இந்த மாதிரி கவிதைகளை எழுதுபவர்களுக்குக் கவிதை பற்றிய புரிதலும் கற்பனைத் திறனும் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று நிரூபித்திருக்கிறார்.
இணையத்தில் இருப்பதைத் திருடி இணையத்திலேயே போட்டால் மாட்டிக்கொள்வோம் என்பது ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்குத் தெரிய வேண்டாமா?
சைடில் ஒரு சிந்தனை: plagiarism என்பது எழுத்துக் கொள்ளை. இதற்கும் plague எனப்படும் கொள்ளை நோய்க்கும் ஏதாவது லிங்க் இருக்குமா?
யாஹூ தரும் மொழி அனுபவம்
ஒரு வலையகத்திற்குப் பெயர் தேடுவது ஒரு புதிய மொழி அனுபவமாக இருக்க முடியும். இது இன்று யாஹூ டொமெய்ன் பதிவுச் சேவைப் பக்கத்தில் தெரிந்துகொண்ட விஷயம்.
Net4domains.com-இல் பெயர் தேடினால் பெயர் இருக்கிறதா இல்லையா என்ற தகவல் மட்டும்தான் கிடைக்கும். யாஹூவில் பெயர் இல்லை என்றால் விட மாட்டார்கள். தேடிய பெயரில் இருக்கும் சொற்களின் அகராதி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இணைச் சொற்களை எடுத்துப் புதிய எழுத்துகளை உருவாக்கிக் காட்டுகிறார்கள். இதன் புண்ணியத்தில் பல வேடிக்கையான காம்பினேஷன்கள் உற்பத்தியாகின்றன. எ.கா. (நீலக் கட்டம் நான் போட்டது):

Techdirt என்ற ஒற்றை வார்த்தையிலிருந்து tech-ஐப் பிரித்துப் புரிந்துகொண்டு, technology, hightech என்றெல்லாம் அதற்கு மாற்று, இணைச் சொற்களைத் தேடி எடுக்க யாஹுவின் நிரலுக்குத் தெரிகிறது. ஆனால் இந்த அகராதிப் பயன்பாடு, dirt என்ற சொல்லுக்கு வரும்போது சூப்பர் காமெடி ஆகிவிடுகிறது (HighTechRareEarth என்ற ‘சொல்லாக்க’த்தில் தானியங்கு மொழிபெயர்ப்பு வாடை அடிக்கவில்லை?).
யாஹூ திணைப் பெயர் பதிவுச் சேவையின் அகராதியில் கெடட வார்த்தைகளுக்கும் இடமுண்டு. Fuckwit என்று தேடினால் fuck -இன் பல பொருட்களை எடுத்தாள்கிறது. அதன் பட்டியலைப் படிக்கும்போது வாய்விட்டு சிரித்துவிட்டேன். மென்பொருளுக்கு சொற்களின் தொனியைப் புரியவைக்கும் மாபெரும் tagging பணியில் யாரும் இறங்குவதில்லை என்பதற்கு இந்தப் பட்டியல் அட்டகாசமான உதாரணம் (FuckwitOnline-ஆம், என்னவோ Microsoft Office Online மாதிரி!). முழுப் பட்டியலையும் இங்கே படித்து ரசிக்கலாம். படம் கீழ்க்கண்டாற்போல -

ஃபயர்வால் ஒழிக
க்யூபிக்கிள் கலாச்சாரத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் க்யூபிக்கிள்வாசிகளுக்கு இணைய வசதியை முடக்கிவைப்பது. பல நிறுவனங்கள் அலுவலகத்தில் சில வலையகங்களைத் தடுக்கின்றன. குறிப்பாக மின்னஞ்சல் சேவை வழங்கும் வலையகங்களையும் வலைப்பதிவுகளையும்.
சில வலையகங்களை நேரடியாகவும் சிலவற்றை வார்த்தைகளை வைத்தும் (எ.கா.: சைட் முகவரியில் *blog*, download, cricket போன்ற சொற்கள் வந்தால்) தடுக்கிறார்கள். ஆனால் நிரல் தேடித் திருடுவதற்குப் பயன்படுவதாலோ என்னவோ கூகிளை விட்டுவைக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் செய்தி வலையகங்களை அலவ் பண்ணுகின்றன.
அலுவலகத்தில் cricinfo, youtube, metacafe, meebo என்று மானாவாரியாகப் பயன்படுத்திக் குவிக்கும் முதிர்ச்சியற்ற கிராக்கிகள் தணிக்கை செய்வதை ஊக்குவிக்கிறார்கள். அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நல்லவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் அலுவலகத்தின் உலோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருக்கும் அலுவலகக் கோப்புகளை எடுத்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வலைப்பதிவுகளையும் செய்தியோடை வசதியுள்ள வலையகங்களையும் அலுவலகத்தில் பார்க்க இரண்டு எளிய வழிகள்:
பார்க்க விரும்பும் வலைப்பதிவின் பெயரை கூகிளில் போட்டுத் தேடலாம். முடிவுகள் பக்கத்தில் வரும் அந்த வலைப்பதிவின் முகவரியை நேரடியாக க்ளிக் செய்தால் நிறுவன அகழி (ஃபயர்வால்தான்) தடுக்கும். Cached என்ற இணைப்பைப் பார்த்தால் அந்த வலைப்பதிவை அல்லது வலையகத்தைப் பார்க்கலாம். இதில் எப்போதுமே புதிய பக்கங்களைப் பார்க்க முடியாது.
அதை விட நல்ல உத்தி, வேண்டியதை மின்னஞ்சலில் வரவழைப்பது. நாம் பார்க்க விரும்பும் வலையகத்திற்கு RSS வசதி இருந்தால் அதை மின்னஞ்சலில் பெற மிகச் சுலபமான ஒரு வழி rssfwd. கூகிள் காஷில் எடுத்த பக்கத்தில் RSS/Atom முகவரியை நகலெடுத்துக்கொண்டு, rssfwd-இல் கொடுத்து நமது மின்னஞ்சல் முகவரியையும் தந்துவிட்டால் முடிந்தது வேலை. அப்புறம் Alt+Tab திருவிழாதான்.
(மின்னஞ்சல் முகவரி என்றால் கம்பெனியார் நம்மபெயர்.அப்பாபெயர்@நிறுவனம்.காம் என்கிற ரீதியில் ஒதுக்கித் தரும் ‘ஆபீஸ் ஐ.டி.’ சில கம்பெனிகள் ஆபீஸ் ஐ.டி.க்கு பணிசாரா மின்னஞ்சல் வருவதை விரும்புவதில்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் மின்னஞ்சலைப் பயன்படுத்த, ஜிமெயிலின் RSS-ஐ கூகிள் ரீடரில் சேர்த்துப் பார்க்கலாம். கூகிள் ரீடரை அவ்வளவாக யாரும் தடை செய்வதில்லை. Disclaimer: இதை நான் முயற்சி செய்து பார்த்ததில்லை.)
கூகிளின் ஆளில்லாத் தமிழ்ச் சேவை
தேடுவதற்கான புலத்தில் ஒரு எழுத்தைத் தட்டினால் அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களைக் காட்டி உதவும் Google Suggest வசதி தமிழிலும் கிடைப்பது சந்தோசமே. ஆனால் அது குரங்கின் கைப் பூமாலையாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நினைத்தும் விட்டேன். கண்ணை மூடிக்கொண்டு க்ளிக் செய்க. தமிழ் தெரியாத ஆட்கள் பண்ணும் கூத்தை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.


