கிறுக்கர்கள் கவனத்திற்கு
நான் இணையத்தில் நுழைந்த காலத்திலே badart.com என்று ஒரு வலையகம் இருந்தது. மெனக்கெட்டு மோசமாக வரையப்பட்ட ஓவியங்களைக் காட்டுவதற்கே அதை நடத்தினார்கள். அது இல்லாத குறையை ஓரளவு தீர்த்துவைக்கிறது Doodlers Anonymous. போதாக்குறைக்கு இவர்கள் ஒரு Flickr குழு வேறு வைத்திருக்கிறார்கள். அடியேனும் அதிலுள்ளேன். நல்ல கிறுக்கராக இருந்தால் ஒரு கை பாருங்கள்.
நகர்வலம்
நகர்ப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள், ஃப்ளிக்கர் புகைப்படக் குழுக்கள் உண்டு. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ஐடியாவை சில கலைஞர்கள் அமர்க்களமாகச் செயல்படுத்திவருகிறார்கள்.
Urban Sketchers என்ற இவர்களது வலைப்பதிவில் உலகெங்குமிருந்து ஏராளமான ஓவியர்கள் தமது நகரங்களைச் சித்தரிக்கிறார்கள். முதலில் 2007இல் ஃப்ளிக்கர் குழுவாக வடிவம் பெற்ற இந்த ஐடியா, 2008 நவம்பரில் வலையகமாகியிருக்கிறது.
பல விதமான ஓவிய பாணிகளையும் ஊடகங்களையும் இங்கே பார்க்க முடிகிறது. எளிமையானவை முதல் மிக நுணுக்கமானவை வரை நூற்றுக்கணக்கான படைப்புகளை லீவுபோட்டு நாட்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம். பல நாடுகளின் பண்பாடுகள் இங்கே காணக்கிடைப்பதால் ஓவிய பாணிகள் மட்டுமின்றி காட்சிகளும் பல விதமாக இருக்கின்றன.
பெருமூச்சு வருகிறது. இந்தியாவிலிருந்து மூன்று பேர் வரைகிறார்கள். நம்மூரில் (ஃப்ளிக்கர்) புகைப்படக் கலைஞர்களின் எண்ணிக்கையில் ஓவியர்கள் ஒரு சதவீதம் இருந்தால் கூட இங்கே இந்த அளவிற்குக் கலைப் பஞ்சம் இருக்காது.
அர்பன் ஸ்கெட்ச்சர்கள் வலைப்பதிவை வேர்ட்பிரஸில் வைத்துக்கொள்ளாமல் பிளாகரில் வைத்திருப்பதுதான் கவலையளிக்கிறது. யாராவது புத்தி சொன்னால் நல்லது.
வேடிக்கைத் திரட்டி
புதிதாக முளைத்திருக்கும் சில திரட்டிக்காரர்கள் காசிலேயே குறியாக இருக்கிறார்கள். வலைப்பதிவுகளைத் திரட்ட வலைப்பதிவர்களிடம் அனுமதி பெறுவதில் அவர்களுக்கு ஆர்வமில்லை.
tamil.sg என்ற திரட்டியில் என்ன வேடிக்கை என்றால், ஃபயர்ஃபாக்ஸில் tami.sgக்குச் சென்றால் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்தச் சொல்கிறது. tamil.sg/thiratti என்ற பக்கத்தில் இருக்கும் திரட்டியில் ரைட்க்ளிக் செய்வதைத் தடுத்திருக்கிறார்கள். இந்தப் பக்கத்தில் விளம்பரங்களும் போட்டிருக்கிறார்கள்.
அதாவது நாம் எழுதுவதை அவர்கள் பக்கத்தில் போட்டுக்கொள்ள நம்மைக் கேட்கத் தேவையில்லையாம், ஆனால் அதன் மூலம் அவர்களுக்குக் காசு மட்டும் வர வேண்டுமாம். என் வலைப்பதிவை இவ்வினோதத் திரட்டியிலிருந்து நீக்கச் சொல்லி அந்த வலையகத்தின் ‘தொடர்பு’ பக்கத்தின் மூலம் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.
இது மேட்டர் சைட் இல்லை
வலைப்பதிவு எழுதும்போது ‘கெட்ட வார்த்தை’களைப் பயன்படுத்துவதில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் கூகிளிலும் குருஜி.காமிலும் உடலுறுப்புகளின் பெயரைத் தேடி தினமும் இந்த வலைப்பதிவுக்கு வருகிறார்கள். இந்த கேஸ்களைத் தவிர்க்க உடலுறுப்பு சார்ந்த கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
2012இல் இணையம்
http://www.collegehumor.com/article:1770659. பெனாத்தல் சுரேஷ் தமிழ்மணத்தைக் கிண்டல் பகடி செய்து போட்ட ஒரு ஸ்க்ரீன்ஷாட் நினைவுக்கு வருகிறது.


