ஃபயர்வால் ஒழிக
க்யூபிக்கிள் கலாச்சாரத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் க்யூபிக்கிள்வாசிகளுக்கு இணைய வசதியை முடக்கிவைப்பது. பல நிறுவனங்கள் அலுவலகத்தில் சில வலையகங்களைத் தடுக்கின்றன. குறிப்பாக மின்னஞ்சல் சேவை வழங்கும் வலையகங்களையும் வலைப்பதிவுகளையும்.
சில வலையகங்களை நேரடியாகவும் சிலவற்றை வார்த்தைகளை வைத்தும் (எ.கா.: சைட் முகவரியில் *blog*, download, cricket போன்ற சொற்கள் வந்தால்) தடுக்கிறார்கள். ஆனால் நிரல் தேடித் திருடுவதற்குப் பயன்படுவதாலோ என்னவோ கூகிளை விட்டுவைக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் செய்தி வலையகங்களை அலவ் பண்ணுகின்றன.
அலுவலகத்தில் cricinfo, youtube, metacafe, meebo என்று மானாவாரியாகப் பயன்படுத்திக் குவிக்கும் முதிர்ச்சியற்ற கிராக்கிகள் தணிக்கை செய்வதை ஊக்குவிக்கிறார்கள். அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நல்லவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் அலுவலகத்தின் உலோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருக்கும் அலுவலகக் கோப்புகளை எடுத்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
வலைப்பதிவுகளையும் செய்தியோடை வசதியுள்ள வலையகங்களையும் அலுவலகத்தில் பார்க்க இரண்டு எளிய வழிகள்:
பார்க்க விரும்பும் வலைப்பதிவின் பெயரை கூகிளில் போட்டுத் தேடலாம். முடிவுகள் பக்கத்தில் வரும் அந்த வலைப்பதிவின் முகவரியை நேரடியாக க்ளிக் செய்தால் நிறுவன அகழி (ஃபயர்வால்தான்) தடுக்கும். Cached என்ற இணைப்பைப் பார்த்தால் அந்த வலைப்பதிவை அல்லது வலையகத்தைப் பார்க்கலாம். இதில் எப்போதுமே புதிய பக்கங்களைப் பார்க்க முடியாது.
அதை விட நல்ல உத்தி, வேண்டியதை மின்னஞ்சலில் வரவழைப்பது. நாம் பார்க்க விரும்பும் வலையகத்திற்கு RSS வசதி இருந்தால் அதை மின்னஞ்சலில் பெற மிகச் சுலபமான ஒரு வழி rssfwd. கூகிள் காஷில் எடுத்த பக்கத்தில் RSS/Atom முகவரியை நகலெடுத்துக்கொண்டு, rssfwd-இல் கொடுத்து நமது மின்னஞ்சல் முகவரியையும் தந்துவிட்டால் முடிந்தது வேலை. அப்புறம் Alt+Tab திருவிழாதான்.
(மின்னஞ்சல் முகவரி என்றால் கம்பெனியார் நம்மபெயர்.அப்பாபெயர்@நிறுவனம்.காம் என்கிற ரீதியில் ஒதுக்கித் தரும் ‘ஆபீஸ் ஐ.டி.’ சில கம்பெனிகள் ஆபீஸ் ஐ.டி.க்கு பணிசாரா மின்னஞ்சல் வருவதை விரும்புவதில்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் மின்னஞ்சலைப் பயன்படுத்த, ஜிமெயிலின் RSS-ஐ கூகிள் ரீடரில் சேர்த்துப் பார்க்கலாம். கூகிள் ரீடரை அவ்வளவாக யாரும் தடை செய்வதில்லை. Disclaimer: இதை நான் முயற்சி செய்து பார்த்ததில்லை.)
திருட்டு மொழிபெயர்ப்பு…
700 பக்கங்களுக்கு மேல் கனக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை மொழிபெயர்க்க எவ்வளவு காலம் ஆகும்? நேர்மையாக உழைத்தால் ஒரு வருடம் ஆகலாம்.
லேட்டஸ்ட் ஹாரி பாட்டர் தலகாணியை மொழிபெயர்க்க ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூன்றே நாட்கள்தான் தேவைப்பட்டிருக்கின்றன. புத்தகம் வெளிவந்த நான்காவது நாள் ஸ்பானிஷ் மொழியில் PDF வடிவில் வந்துவிட்டன.
இந்த மொழிபெயர்ப்பை ஒரு குழுவாகச் செய்திருக்கிறார்கள் என்றாலும் மூன்று நாட்கள் என்றால் நம்ப முடியவில்லை (குழுவில் எத்தனை பேரோ). மொழிபெயர்ப்பின் தரம், பலர் செய்வதால் ஏற்படும் ஒழுங்குப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் தெரியவில்லை.
நிற்க. பார் புகழும் தமிழ்ச் சூழலைப் பொருத்த வரை புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்படச் சில வாரங்கள் ஆகும். காசு கொடுத்து வாங்குவதற்கு மனசு வர அல்லது இரவல்/திருட்டுக் கொடுக்கும் ஆளைக் கண்டுபிடிக்கச் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும். அதற்குப் பின் மொழிபெயர்ப்பில் (குழுவாக) இறங்கினால் சில மாதங்கள் ஓடும். கடைசியில் அந்தக் கலாச்சாரம் பற்றிய குறைந்தபட்சப் புரிதல் கூட இல்லாமல் ஒரு மொழிபெயர்ப்பு ஒப்பேற்றப்பட்டிருக்கும். ஆனால் நம்மூர்க் குழந்தைகள் இது வரை அதிர்ஷ்டசாலிகள்தான்.
மதிகெட்ட மார்க்கெட்டிங்
தமிழ் பேசுபவர்களின் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் போதாது. கொஞ்சம் அறிவு, குறைந்தபட்ச மொழிசார் விழிப்புணர்வு, மார்க்கெட் என்பது மனிதர்களின் தொகுதி என்ற அறிவு - இதெல்லாம் தேவை.
தங்களிடம் இதில் எதுவும் இல்லை என்பதை மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களே நிரூபித்திருக்கின்றன. ‘தமிழ் மேட்ரிமோனி’ போன்ற துக்கடா நிறுவனங்களைக் கேட்கவா வேண்டும்? இது ஜிமெயிலில் தெரியும் செய்தியோடையின் திரைப்பதிவு (முழுசாகப் பார்க்க க்ளிக் செய்யுங்கள்) -
தமிழ் என்ற சொல்லில் புள்ளி வைப்பதும் அதில் புள்ளி காணாமல் போவதைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கடினமா என்ன? Grooms For திருமணமாம்! இந்த நிறுவனத்தின் ‘பெற்ற’ நிறுவனமான பாரத் மேட்ரிமனியைத் தொடங்கியவர் தமிழ்நாட்டுக்காரர். வெட்கக்கேடு.
இதைத் தூக்கி சாப்பிடுவது ஒரு ஷோப்பிங் விளம்பரம்…
அதாவது ஆன்லைன் ஷாப்பிங் கம்மி விலையில். இந்த கோர விபத்து எப்படி நடந்தது? ஒலிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி online என்று அடித்திருக்கிறார்கள். முரசு அஞ்சலின் ஒலிபெயர்ப்புத் தட்டச்சு முறையைப் பயன்படுத்தினால் இப்படி வராது. அஞ்சலைப் பயன்படுத்தியிருந்தால் oNlinE என்று அடித்திருக்க வேண்டும். இந்த வேலையைச் செய்தவர்கள் அந்த அளவிற்குக் கூறுகெட்டவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.
இது இந்தியிலிருந்து ஒலிபெயர்க்கும் மென்பொருளை வைத்துச் செய்யப்பட்ட காரியம் என்று ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது முற்றிலும் சரியாகத்தான் இருக்க வேண்டும். துப்பு: ‘விலையில்’ என்பது ‘விளாயில்’ ஆகியிருக்கிறது. இந்திக்காரர்களுக்கு ‘ஐ’ பிடிப்பதில்லை. லைன் -> லாஇன், ஃபைல் -> ஃபாஇல் என்கிற ரீதியில்தான் இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியில் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்திக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்தியிலிருந்து தமிழுக்கு ஒலிபெயர்க்கும் யோசனை மடத்தனம், பொறுப்பின்மை, அலட்சியம், இந்தி மைய சிந்தனை மூன்றின் கலவையாக இருக்கும்.
சில நாட்களுக்கு முன் இந்தப் பதிவில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: இந்தித் திணிப்பு பல வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
மூன்று விஷயங்கள்
1
அவுட்லுக்கின் புதிய இதழில் வட இந்தியாவைத் தென்னிந்தியா ஓவர்டேக் செய்துவருவது பற்றி ஒரு சிறப்புப் பகுதி போட்டிருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் நிறைய பிரதிகள் விற்றிருக்கும்). வட இந்தியர்கள் (ஊடகங்களையும் சேர்த்து) தென்னிந்தியர்களைப் பழம் பஞ்சாங்கங்களாக நினைப்பதையும் சித்தரிப்பதையும் சதானந்த் மேனன் தன் கட்டுரையில் லேசாகத் தொட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இந்த மாதிரி ஸ்டீரியோடைப்பிங் வேலையைச் செய்யும் இதழியலாளர்களில் அவுட்லுக் விதிவிலக்கல்ல.
ஆனந்த விகடன் சென்னைவாழ் நடுத்தர வர்க்கத்தினரை மனதில் கொண்டு பத்திரிகை நடத்தி கிராமத்து ஸ்பெஷல் (”கிராமத்துக்குப் போலாமா?”) வெளியிட்ட கதை மாதிரிதான் இதுவும். வழக்கமான ஆங்கிலப் பத்திரிகை பாணியில் தனித்தனி பாக்ஸ் ஐட்டங்களை ஒட்டித் தயாரித்த ‘ஸ்டோரி’களைத் தந்திருக்கும் அவுட்லுக், தான் அடிப்படையில் தென்னிந்திய விரோத மனோபாவத்தைக் கொண்ட பத்திரிகைதான் என்பதை நிரூபித்து வருகிறது.
இந்தியில் சகஜமாகப் புழங்கும் வார்த்தைகள் தென்னிந்தியர்களுக்குப் புரிந்தாக வேண்டும்; புரியாவிட்டால் கற்றுக்கொள்ளட்டும் என்று நினைக்கும் போக்கு வட இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு உண்டு. தெற்கை ‘விதந்தோதி’யிருக்கும் அவுட்லுக், தனது மற்ற கட்டுரைகளில் அதே அலட்சிய மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.
பைரோன் சிங் ஷெகாவத் பற்றிய கட்டுரையில் ‘ஹவேலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கட்டுரையாசிரியர் நீலப் மிஷ்ரா. அதன் பொருள் எனக்குத் தெரியாது. வசிப்பிடம் என்று அரைகுறையாகத் தெரியும். ஆனால் வாசகருக்கு எதுவும் எளிதில் புரிய வேண்டும் என்பது இதழியலில் மிக அடிப்படையான ஒரு விதி. ஆனால் நாமெல்லாம் அவர்களுக்குக் கணக்கில்லை. இந்தி தெரியாதவன்/ள் ஏன் ஆங்கிலப் பத்திரிகை படிக்க வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருக்கலாம்.
வட, மேற்கு இந்திய அரசியல்வாதிகள் இந்தியில் பேசும் விஷயங்களை அடைப்புக் குறியில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் போடாமல் அப்படியே ஒலிபெயர்த்துப் போடுகின்றன. கூசாமல். எல்லாப் பத்திரிகைகளும் எல்லா சமயங்களிலும் இந்தக் காரியத்தைச் செய்வதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அதைச் செய்கிறார்கள். இந்தித் திணிப்பு முடிவே இல்லை போலிருக்கிறது.
அப்புறம் இன்னொரு விஷயம்: கோவில் கோபுரம்தான் தமிழ்நாட்டின் அடையாளமா? இந்த சிறப்புப் பகுதிக்கான லோகோவாக கோபுரத்தைப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்காரர்கள் என்று விபூதிப் பட்டையும் குடுமியுமாக ஒரு ஆண் முகத்தைப் போடுவதற்கும் இதற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை.
2
கட்டாந்தரை மீனவர்கள் பட்டையைக் கிளப்பும் தமிழ் மொழிபெயர்ப்பு உலகில் தரமான மொழிபெயர்ப்பைப் பார்க்க முடிகிற ஓர் இடம்… லயன் காமிக்ஸ்! இந்த மாதம் பெரிய சைஸில் 386 பக்கங்களுடன் 100 ரூபாய் விலையில் வந்திருக்கும் கௌபாய் ஸ்பெஷலே இதற்கோர் ஆதாரம்.
‘தலைக்கு ஒரு விலை’ என்ற லக்கி லூக் வண்ணப் படக்கதையும் அதற்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் ‘பனிக் கடல் படலம்’ என்ற டெக்ஸ் வில்லர் கதையும் அட்டகாசமான மொழிபெயர்ப்புகள் (இரண்டையும் ஒரே நபர் மொழிபெயர்த்திருப்பது போல் தெரிகிறது). ‘தலைக்கு ஒரு விலை’ அதிரடியான நகைச்சுவைக் கதை. அதன் வெற்றிக்குக் காரணம், ஆங்கிலத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு நல்ல சொல்லறிவையும் அசாதாரணமான நகைச்சுவை உணர்வையும் கொண்டு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.
தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேச்சின் வேடிக்கையான அம்சங்களை முழு வீச்சுடன் பயன்படுத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். இதை உதாரணம் காட்டி விளக்குவதை விட படித்தால்தான் புரியும்.
டெக்ஸ் வில்லர் கதையில் கூட நடையில் சில பிரச்சினைகளைச் சொல்லலாம். லக்கி லூக் மொழிபெயர்ப்பில் வெளிப்படுவது ஜீனியஸ் என்று சொன்னால் தப்பில்லை. சினிமா பாரடைசோ, லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றெல்லாம் ஜல்லியடிப்பவர்கள் வெகுஜன இலக்கியத்திலிருந்து இது போன்ற சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
(பி.கு.: லயன் காமிக்ஸ் விரைவில் ‘ஏஜண்ட் XIII‘ என்ற கதையைக் கொண்டுவரப் போகிறது. 18 பகுதிகளை ஒரே புத்தகத்தில் போடப் போகிறார்கள். 800 பக்கங்கள், விலை ரூ. 200. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும்தான் பிரதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)
3
இலக்கிய உலகப் பெரியவர்கள் - தங்களைப் பெரியவர்களாக நினைத்துக்கொள்ளும் இளம் எழுத்தாளர்களைச் சொல்லவில்லை; வயதில் பெரியவர்களைச் சொல்கிறேன் - எல்லோரும் இப்போது புதியதோர் பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் Hi5, Orkut, Minglebox, Tagged போன்ற டேட்டிங் மற்றும் பிரெண்ட்ஷிப் வலையகங்களில் உறுப்பினர்களாகிறார்கள். தங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் சரமாரியாக மின்னஞ்சல் அழைப்புகளை ஏவுகிறார்கள். சான்றோர், பண்புளோர் என்றெல்லாம் மதிக்கப்படுபவர்கள் இப்படி இறங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.