நகர்வலம்

The Sentinel Building by Pete Scully

நகர்ப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள், ஃப்ளிக்கர் புகைப்படக் குழுக்கள் உண்டு. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ஐடியாவை சில கலைஞர்கள் அமர்க்களமாகச் செயல்படுத்திவருகிறார்கள்.

Urban Sketchers என்ற இவர்களது வலைப்பதிவில் உலகெங்குமிருந்து ஏராளமான ஓவியர்கள் தமது நகரங்களைச் சித்தரிக்கிறார்கள். முதலில் 2007இல் ஃப்ளிக்கர் குழுவாக வடிவம் பெற்ற இந்த ஐடியா, 2008 நவம்பரில் வலையகமாகியிருக்கிறது.

பல விதமான ஓவிய பாணிகளையும் ஊடகங்களையும் இங்கே பார்க்க முடிகிறது. எளிமையானவை முதல் மிக நுணுக்கமானவை வரை நூற்றுக்கணக்கான படைப்புகளை லீவுபோட்டு நாட்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம். பல நாடுகளின் பண்பாடுகள் இங்கே காணக்கிடைப்பதால் ஓவிய பாணிகள் மட்டுமின்றி காட்சிகளும் பல விதமாக இருக்கின்றன.

பெருமூச்சு வருகிறது. இந்தியாவிலிருந்து மூன்று பேர் வரைகிறார்கள். நம்மூரில் (ஃப்ளிக்கர்) புகைப்படக் கலைஞர்களின் எண்ணிக்கையில் ஓவியர்கள் ஒரு சதவீதம் இருந்தால் கூட இங்கே இந்த அளவிற்குக் கலைப் பஞ்சம் இருக்காது.

அர்பன் ஸ்கெட்ச்சர்கள் வலைப்பதிவை வேர்ட்பிரஸில் வைத்துக்கொள்ளாமல் பிளாகரில் வைத்திருப்பதுதான் கவலையளிக்கிறது. யாராவது புத்தி சொன்னால் நல்லது.

ஆண்களுக்கு ரப்பர் கருவி

நாள் ஒரு நூல் வலையகத்திலிருந்து பி.டி.எஃப். கோப்புகளை சரமாரியாக டவுன்லோட் செய்து மேய்ந்துகொண்டிருந்தபோது 1937 அக்டோபர் ‘பிரசண்ட விகட’னில் கண்ணில் பட்டது இந்த முத்து. படிப்பதற்க்குக் கடினமா யிருப்பின் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்.

அப்போது ஆணுறையை ரப்பர் என்றிருக்கிறார்கள். இப்போது ரப்பர் என்றால் டில்டோ. ஒரு கனெக்சன் இருக்கத்தான் செய்கிறது. ‘பெண்களிடமிருந்து நோய்களை வாங்கிக் கொள்ளாமல் தடுப்பதற்கு’ – பயங்கரம்!

செந்தில்கள்

என்னைப் போலவே பல செந்தில் நண்பர்களைக் கொண்ட என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, “செந்தில்களின் நம்பர்களை நான் மொபைல்-லில் பதிவு செய்வதில்லை. அவர்களுக்கென தனியாக நோட்டு போட்டு குறிப்புகளோடு எழுதி வைக்கிறேன்” என்றார்.

என்றெழுதுகிறார் புதிய வலைப்பதிவர் ஆரண்யன். எனக்கே மூன்று செந்தில்களைத் தெரியும். அதில் ஒருவர் பெயர் நினைவில்லை. ஓவர் டு நாளைக்கு மழை பெய்யும் (வலைப்பதிவுக்கு நல்ல பெயர்!).

இங்லிஸ்

பல மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்படும்/நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் வேடிக்கையான விளம்பர வாசகங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை Engrish Funny என்ற சைட்டில் போடுகிறார்கள். சரியான காமெடி! மேலே இருக்கும் படத்தில் spring என்ற வார்த்தை வருவதால் அது அனேகமாக ஐக்கூவாகத்தான் இருக்கும்.