மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Phenomenal Woman = வியப்புக்குரிய பெண் (இங்கிருந்து. “ride of my breasts” என்பதை “மார்பகங்களின் ஓட்டம்” என்றும் “wondered”ஐ “அதிசயித்தார்கள்” என்றும் மொழிபெயர்த்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். மார்பகங்கள் ஓடுமா?) மூலம்: Phenomenal Woman. கவிதையை மொழிபெயர்ப்பதில் பலருக்கு உள்ள நம்பிக்கை வியப்பூட்டுகிறது, வேதனையளிக்கிறது.

உரத்த சிந்தனை: the மொழிபெயர்ப்பு

ட்விட்டரில் பாஸ்டன் பாலா ‘the’வை எப்படி மொழிபெயர்ப்பது என்று ஒரு கேள்வி போட்டிருந்தார். Theவை மொழிபெயர்ப்பதில் சிரமம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட விதமாக அதை மொழிபெயர்ப்பது ஏன் என்று விளக்கத் தொடங்கினால் ‘கேராக’ இருக்கிறது. எனவே இந்தப் பதிவைப் பாதி விளக்கமும் பாதி ரோசனையும் பாதி மறைமுகக் கேள்விகளுமாகத் தருகிறேன்.

article என்கிற விஷயம் தமிழில் இல்லை. A, an, the ஆகியவை தம்மை அடுத்து வரும் சொற்களில் சேர்க்கும் பொருள், எண்ணிக்கை போன்ற விஷயங்கள் தமிழில் -ஐ, -கள் போன்ற பின்னொட்டுகள் அல்லது சில சமயங்களில் அவற்றின் இன்மையால், சுட்டுச் சொற்கள் மூலம் புரியவைக்கப்படுகின்றன. இந்த விநோதமான ஸ்டேட்மென்ட் பின்வரும் உதாரணங்களைப் பார்த்தால் தெளிவாகும் என்று நம்புகிறேன்.

Theவை இப்படியெல்லாம் மொழிபெயர்க்கலாம்:

1. ஐ: இரண்டாம் வேற்றுமை உருபைப் பயன்படுத்தலாம்

There was a knock on the door. He switched on the light and peered out the window.

மொ.பெ.: யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் விளக்கைப் போட்டு ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்.

(கதவு, விளக்கு, ஜன்னல் ஆகிய மூன்றுமே வாசகர் முன்னனுமானம் செய்யக்கூடிய விஷயங்கள்தான். விளக்கைப் போடுவது என்ற சாதாரண காரியத்தை செய்வதற்கு பதில் மேஜை டிராயரிலிருந்து துப்பாக்கி எடுத்தால் ‘ஒரு துப்பாக்கியை’ எடுத்ததாக எழுத வேண்டியிருக்கலாம்)

Continue reading

மொழிபெயர்ப்பு ஆஃப் த டே

Siblingஐ உடன்பிறப்பு என்று மொழிபெயர்க்கிறோம். Spouseஐ எப்படி மொழிபெயர்ப்பீர்கள் என்று முன்பொரு முறை கேட்டதற்கு ஒரு நண்பர் சொன்னார் நக்கலாக: உடன்படுப்பு.

(நாகரிகமானவர்கள் ‘வாழ்க்கைத் துணை’ என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.)

இங்லிஸ்

பல மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றப்படும்/நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்படும் வேடிக்கையான விளம்பர வாசகங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை Engrish Funny என்ற சைட்டில் போடுகிறார்கள். சரியான காமெடி! மேலே இருக்கும் படத்தில் spring என்ற வார்த்தை வருவதால் அது அனேகமாக ஐக்கூவாகத்தான் இருக்கும்.