கொரட்டூர் கொலை வழக்கு

அகதா க்றிஸ்டி என்ற மகத்தான மர்மக் கதாசிரியர் இவ்வளவு காலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படாதிருந்த காரணத்தை சமீபத்தில் ஊகித்தேன். காப்பிரைட் போக, நமது மொழிபெயர்ப்பாளர்கள் கைவைத்து சுட்டுக்கொண்டதுதான் காரணமாக இருக்கும். சிட்னி ஷெல்டனைவிட அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது கடினம். முயன்ற பலர் அவருடைய மொழிநடை, நகைச்சுவை, பொதுவாகத் தூக்கலாகத் தெரியும் பிரிட்டிஷ் தன்மை, மற்றும் இன்ன பிற மொழிபெயர்க்கவியலாத்தன்மைகள், எல்லாவற்றையும் உணர்ந்து கைவிட்டிருப்பார்கள்.

ஆனால் இதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் கவலை. குத்துமதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் காணப்படாது. இப்போது எழுத்துக்களில் எது இருந்தாலும் அச்சிட்டுப் பின்பக்கம் ஒரு விலையைப் போட்டுவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது போல. உதாரணமாக, கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் என்பவரின் மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் வெளியீட்டில் அகதா க்றிஸ்டியின் The Hollow என்ற நாவல். முதல் பத்தியைப் படித்தின்புறுக –

வார இறுதியின் ஓய்வினையும் பொழுதுபோக்கினையும் நெருங்கிப் புலர்ந்துக் கொண்டிருந்த அந்த வெள்ளிக் கிழமைக் காலையில், கமிஷனர் ஹென்றியின் பரந்து விரிந்த பங்களாவான ‘ஹாலோ’வில் அனைவரும் இன்னும் கொட்டும் பனியின் குளிர் தாக்கத்தால் படுக்கையில் சுருண்டே கிடக்க, தன் நீல விழிகளைப் பட்டென திறந்து, தனக்கே உரிய உடனடி சுறுசுறுப்புடன் மெத்தையிலிருந்துத் துள்ளி எழுந்தார், லூசி ஆங்கட்டேல். நெளிந்து, சோம்பி, குளிரால் வெடவெடத்து, இன்னும் கொஞ்சம் படுத்திருப்போமா என்று படுக்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து – என, எந்த மந்த நடவடிக்கையும் இல்லாமல், தன் பிரத்யேக முத்திரைச் சக்தியோடு கிளம்பினார் லூசி. முக்கியமான ஒரு விஷயம் குறித்து உடனடியாக ஆலோசனை செய்து உரையாட, எழுந்த குழந்தையின் துள்ளல் போன்ற யாராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரு வேகம் லூசிக்குள் புரண்டது. ஆலோசனைக்கு, நேற்று இரவு ஹாலோ வந்திறங்கியிருந்த இவரின் ஒன்று விட்டு சகோதரி மிக்டே-வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். படுக்கையிலிருந்து இறங்கிய லூசி, இந்த வயதிலும் இன்னும் பளபளப்புடன் மிளிரும் தன் இருதோள்களையும் அசட்டை கலந்து பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டு, மிக்டே அறை நோக்கிப் பாய்ந்தார். தன்னுடைய இயல்பான வழக்கப்படி, மிக்டேவுக்கும் தனக்குமான சம்பாஷணையைத் தனது வளமிக்கக் கற்பனைத் திறனால் தன்னுள்ளேயே நிகழ்த்தி, அதற்கு மிக்டே தரும் பதில்களையும் ஊகித்துக் கொண்டு, சம்பாஷணையின் போது எப்படியெல்லாம் கொடிகட்டித் திகழலாம் எனும் திட்டமிடலூடே, மிக்டே அறை வாயிலை அடைந்தார்.

ஒரு பத்தியில் தனிநபராக ஒரு மொழிப் புரட்சியே நடத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். தெளிவு, தர்க்க ரீதியாக வாக்கிய அமைப்பு, தகுந்த நிறுத்தக்குறிகள், சொலவடைகள் என்று எதையும் மிச்சம் வைக்காமல் கொந்தித் தள்ளியிருக்கிறார் இவர். மூல வடிவமோ எளிமையின் மறுவடிவம். மொழிபெயர்ப்பாளர்தான் வேண்டாத விஷயங்களைச் சேர்த்து செறிவூட்டியிருக்கிறார். Midge என்ற பெயர் மிக்டே என்றே புத்தகம் முழுவதும் வருகிறது. “…!” நிறைய உண்டு. அகதா க்றிஸ்டி ரசிகன் என்ற முறையில் பாதி நாள் கொலைவெறியில் அலைந்துகொண்டிருந்தேன்.

நாவலின் தலைப்பு ‘மன்மதக் கொலை’! கண்ணதாசன் பதிப்பகம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி நேரடியாக அச்சகத்திற்கு அனுப்பிவிடும் போலிருக்கிறது.

அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது அசாத்திய காரியமல்ல. ஆனால் செய்பவருக்குத் தொழில் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி எழுதினால் எந்த மர்மமும் அவிழ வாய்ப்பில்லை.

“தனது ஆழ்ந்த நிம்மதியான ஒரு மனோஹரக் காலைத் தூக்கத்திலிருந்து , அதிருப்தியாய் விழித்துக் கொண்டார் மிக்டே.”

இப்படியே 424 பக்கம். விலை ரூ. 100. இ.ப.: முன்னுரை

வெண்கலக் கடையில் யானை

க்ளாசிக் கதைகளை இன்றைய பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப எப்படியெல்லாம் மாற்றியெழுதுகிறார்கள்/பகடி செய்கிறார்கள்!

ஜேன் ஆஸ்டனின் Pride and Prejudiceஇன் நாசூக்கான உலகத்தில் zombieகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார் ஒரு எழுத்தாளர். Pride and Prejudice and Zombiesஐக் கண்டிப்பாக வாங்கிப் படிக்கப்போகிறேன்!

புது உலகு படைப்பதில் எனது பங்கு

1. தமிழின் இரண்டாவது க்யூபிச நாவலான எனது ‘திசை காட்டிப் பறவை‘யில் 17ஆம், 18ஆம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

2. தவிர்க்கவியலாத காரணங்களால் இவ்வலைப்பதிவில் இனி பின்னூட்டங்கள் வடிகட்டப்படும்.

குமாரின் கதை

கி.பி. 2010-இல் வெளிவரப் போகும் எனது நாவலின் முதல் அத்தியாயத்தை இங்கு தருகிறேன். ‘விளக்கில் தொங்கும் வெளிச்சம்’ என்ற தற்காலிகத் தலைப்பைக் கொண்ட இந்நாவலை Faber & Faber பதிப்பிக்கும். இந்த நாவல் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏதாவது ஒரு முன்னணி பிலிம் மேக்கரால் திரைப்படமாகவும் வரும். சாகித்திய அகாதமி விருது கமிட்டி, please excuse.

* * *

அத்தியாயம் 1 – குமாரின் கதை

முன்னொரு காலத்தில் சென்னையில் சேல்ஸ் பிரிவில் குமார் என்பவன் வேலை பார்த்து வந்தான். குமார் தன் பெயருக்கேற்ப தங்கமானவனாக இருந்தான். இந்தக் கதை ஆரம்பித்தபோது குமாருக்கு 31 வயது. நடுவில் இரண்டு வருடம் நான் கதை எழுதுவதை நிறுத்தியிருந்தேன். கடன் தொல்லை. தங்கைகள் திருமணம். அப்பா, அம்மா பிக்கல் பிடுங்கல். கதை எழுதும் ஆர்வமே போய்விட்டது. முதல் தங்கையை ஒரு முன்வழுக்கைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்ததில் மனப்பாரம் தீர்ந்தது. அந்த சந்தோஷத்தில் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

எனக்கே தெரியாமல் குமாருக்கு 33 வயதாகிவிட்டிருந்தது. குமார் நாலு பேர் மதிக்கும்படியான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாலும் அவன் தன் பார்வையில்லாத தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கவும் தன் விதவைத் தாயை மேற்கொண்டு படிக்க வைக்கவும் அந்தச் சம்பளம் போதவில்லை.

இந்த சமயத்தில்தான் தெய்வாதீனமாக அவனுக்குத் தன் அப்பாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனது அப்பாவுக்கு குமாரின் தங்கமான குணம் பிடித்துப் போனது. அப்போது முதலாம் உலகப் போர் நடந்து முடிந்திருந்தது. ஹிட்லர் மெல்ல மெல்லப் பெரிய ஆளாகிக்கொண்டிருந்தான். கிழக்கு ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவிக்கொண்டிருந்தது. ஹிட்லர் தனது கட்சிக்காரர்களுடன் கொலோனில் பேரணி போகும் அதே நேரம் நான் அண்ணா சாலையில் தற்செயலாக சந்தித்த என் அலுவலக சகா சுப்பிரமணியத்திடம் ஒரு மரியாதைக்காக “சட்டை புதுசா?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

1920 வாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தது. அதனால் லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் அப்போது இந்தியாவில்தான் இருந்தார்கள். குமாரின் அப்பாவும் அவர்களில் ஒருவர். நல்ல செல்வந்தர், ஆனால் பாகிஸ்தானியர். அவருக்குப் பிடித்த ஒரே இந்து என்றால் அது குமார்தான்.

* * *

அதோடு எக்ஸ்டிராக்டு முடிந்தது. மொத்தம் 16 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன். எம்.எஸ். வேர்டில் 11 பக்கம் வருகிறது. நாவல் என்று சொல்லுமளவுக்கு நீளமாக எழுத வராவிட்டால் குறுநாவல் என்று டிக்ளேர் செய்துவிடுவேன்.