ஈவினிங் நேரத்திலே!

அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் ‘காங்கேயன்’ எழுதிய ‘ஈவினிங் நேரத்திலே!’ என்ற பாடல் டவுன் பிலோ. மொபைற்காமிராவில் படம் பிடித்துப் போட்டதால் சுமாராகத்தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்!

மலர்க் காட்சி

ராயப்பேட்டை (சென்னை) YMCA மைதானத்தில் மே 10 அன்று முடியும் மலர்க் கண்காட்சியில் நான்கு பூச்செடிகள் வாங்கினேன். தினமும் காலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் பொதுவாகப் ‘பராமரிப்பதும்’ கடைந்தெடுத்த சென்னைவாசியான எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இன்று காலையில் எடுத்த சில புகைப்படங்கள்…


இதில் காமெடி என்னவென்றால் முதல் இரண்டு படங்களில் இருக்கும் பூவின் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும் (Dianthus). ரோஜா மாதிரி இருப்பது ரோஜா வகைதான். என்ன பூக்கள் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கப்போகிறேனோ.

சுட்டி டி.வி.யானது…

1.

கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்!

சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் போன்ற டப்பிங் தொடர்கள் சுமாரான மொழிபெயர்ப்பையும் பண்பாட்டு அன்னியத்தன்மையையும் தாண்டிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கின்றன.

குழந்தைகள் பள்ளியிலும் மற்றவர்களுடன் பழகுவதிலும் கற்றுக்கொள்வது போக சன் டி.வி.யையும் விஜய் டி.வி.யையும் பார்த்தா தமிழ் கற்றுக்கொள்ளப்போகிறார்கள்? எப்போதும் டி.வி. ஓடிக்கொண்டிருக்கும் வீடுகளில் டப்பிங் தமிழ்தான் குழந்தைகளுக்கு செந்தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக 4 போன்ற ரெண்டுங்கெட்டான் வயதில் இருப்பவர்களுக்கு. 6-7 வயது என்றால் கூடப் புத்தகம் படிக்கவைக்கலாம், படித்துக் காட்டலாம்.

2.

கலைக் கண்ணோடு பார்க்கும்போது சுட்டி டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளில் சிறந்தது நான் பார்த்த வரை ‘குளோரியாவின் வீடு’ என்ற தொடர்தான். இந்தக் கதையில் வரும் மனித உருவங்கள், கட்டிடங்கள், நிலப்பரப்புகள், பொருட்கள் முதலானவை அற்புதமான கற்பனையுடன் வரையப்பட்டிருக்கின்றன.


Image courtesy: DasErste/Check Eins

2000ஆம் ஆண்டில் வந்த Gloria’s House என்ற ஆங்கிலத் தொடரின் டப்பிங் இது. படங்களை வரைந்தவர் லீ ஷெப்பர்ட் (Lee Sheppard) என்ற இளம் ஆஸ்திரேலிய கார்ட்டூனிஸ்ட், அனிமேஷன் கலைஞர்.

டப்பிங் கூட அட்டகாசம். நல்ல, வித்தியாசமான நகைச்சுவை. குரல் கொடுத்தவர்கள் நிச்சயம் சம்பளத்திற்கு அதிகமாக வேலை செய்திருக்கிறார்கள். தொடரின் திரைப்பதிவுகள் சிலவற்றையும் விவரங்களையும் இந்த ஜெர்மன் டி.வி. சைட்டில் பார்க்கலாம்.

3.

இந்த டப்பிங் தொடர்களில் மொழி தொடர்பான விஷயங்களை விட்டால் ரொம்பக் கடுப்பான விஷயம் கற்பனைப் பஞ்சம்.

எதற்கெடுத்தாலும் தமிழ் சினிமாப் பாடல்களையும் பின்னணி இசையையுமே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எரிச்சலாக இருக்கிறது. டப்பிங் மற்றும் சொந்த நிகழ்ச்சிகளின் டைட்டில் இசைக்கும் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களுக்கும் சுட்டி டி.வி. திரைப்படப் பாடல்களை மிக அதிகமாகப் பயன்படுத்துகிறது. ஸ்பைடர் மேன் தொடரின் டைட்டிலுக்கு மூலத்தில் பின்னணி இசை/பாடல் போடாமலா விட்டிருப்பார்கள்? ‘பந்தலேரோ’, ‘டோராவின் பயணங்கள்’ போன்ற தொடர்களுக்குச் செய்தது போல் பாட்டையும் டப்பிங் செய்வதுதானே (ஆனால் பந்தலேரோ பாட்டு படுமோசம்)?

இதற்கு காரணம்:

1. சுட்டி டி.வி.காரர்களிடம் சரக்கு இல்லாமை.
2. சினிமாவையும் அரசியலையும் (கிரிக்கெட்டையும்) விட்டால் ஒரு மண்ணும் தெரியாமை, நம் பத்திரிகைகள் போல.

4.

கதாபாத்திரங்களின் பெயர்கள் நம் சூழலுக்குப் பொருந்தாமல்/உச்சரிக்கக் கடினமாக இருப்பதால் பிரபு, மணி, புஜ்ஜி என்றெல்லாம் ஒரேயடியாக உள்ளூர்ப்படுத்தும் அபத்தம் சப்பை மேட்டர் என்றாலும் உறுத்தத்தான் செய்கிறது. Beat, Notta, Molly, Wazza போன்ற பெயர்கள் வேலைக்கு ஆகாது என்பதற்காக மேற்கத்தியக் கதாபாத்திரங்களுக்கு உள்ளூர்ப் பெயர் வைப்பதும் கற்பனைப் பஞ்சம்தானே. அதற்கு பதிலாக Nottaவை மேரி என்றும் Wazzaவை ரிச்சர்ட் என்றும் மாற்றிக்கொள்ளலாமே.

5.

‘சூப்பர் 5’ என்ற பெயரில் ஒரிஜினல் (கவுண்டமணியின் பொய்க்கு செந்தில் சிரித்துக்கொள்வது போல் சிரித்துக்கொள்க) தொடர் ஒன்று வருகிறது. பின்னிவிட்டார்கள். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எலலாம் பயங்கரம். குழந்தைகளை சாப்பிட வைக்க சில தாய்மார்கள் ‘சூப்பர் 5 போடுவேன்’ என்று சொல்லி மிரட்டிப் பணியவைப்பதாகக் கேள்வி.

நானும் சிறு வயதில் நான்கு மூலைகளிலும் நால்வேறு வண்ணங்கள் பூசப்பட்ட திரையைக் கொண்ட டயனோரா டி.வி.யில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். அப்போது எங்கே குழந்தைகளுக்கு தனி சானல். பேபி ஷாலினியும் ‘ஒரு விரல்’ கிருஷ்ணாராவும் நடித்த ‘அம்லு’ என்று ஒரு தொடரையும் ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘ஏக் தோ தீன் சார்’ என்று ஒரு இந்தித் தொடரையும் பார்த்திருக்கிறேன். அம்லு ETஐப் பார்த்து அடித்தது. ‘ஏக் தோ தீன் சார்’ ஹார்டி பாய்ஸ், பேமஸ் பைவ் வகையறாக்களைப் பார்த்து அடித்தது. பின்னதின் பழைய ஃபார்முலாவை எடுத்துக்கொண்டு அபத்தமான மாயாஜால அம்சங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மரணக் கடியே ‘சூப்பர் 5’. பாவம் நடித்த குழந்தைகள்.

6.

‘லக்கி லூக்’ தொடர் குழந்தைகளிடையே எவ்வளவு வரவேற்பு பெற்றிருக்கிறது என்று தெரியவில்லை. டோரா, பென்10 போன்ற சில கதாபாத்திரங்கள் பிரபலமாகிவிட்டதால் அவற்றின் படம் போட்ட கைக்குட்டை, ஸ்டிக்கர், புத்தகப் பை, மதிய உணவு டப்பா போன்றவை அமோகமாக விற்பனையாகின்றன. லக்கி லூக்கிற்கு அந்த அந்தஸ்து கிடைக்குமா? ஆனால் லக்கி லூக் எப்போது குழந்தைகளுக்கான கதையாக இருந்திருக்கிறது.

ஊரான் வீட்டு நெய்…

இலவச மின்னூல்கள் தரும் வலையகமான manybooks.netஐ மேய்ந்துகொண்டிருந்தபோது பழைய புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பார்க்க நேர்ந்தது. மீன்பிடிப்பது, சமையல், வரலாறு, மதம், துப்பறியும் கதைகள், பயண நூல்கள் என்று பல வகைப் புத்தகங்கள். ஆனால் அவற்றில் என்னைக் கவர்ந்தது அட்டை வடிவமைப்பு.

நான் பார்த்த 200 சொச்சம் பக்கங்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான ஆண்டுகளில் வந்திருந்த அந்தப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பில் தெரிந்த புதுமைகளையும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

புத்தக வடிவமைப்பு என்பது கடந்த 30-40 ஆண்டுகளாக இருந்துவரும் விஷயம் என்று நானாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகங்களை வடிவமைத்தவர்கள் பக்கா தொழில்முறை நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரே காலகட்டத்தில் வந்த புத்தகங்களில் கூட அட்டை வடிவமைப்பில் தெரியும் range பிரமிப்பூட்டுகிறது. காம்பொசிஷன் பற்றிய அறிவும்தான்.

Continue reading

உரத்த சிந்தனை: the மொழிபெயர்ப்பு

ட்விட்டரில் பாஸ்டன் பாலா ‘the’வை எப்படி மொழிபெயர்ப்பது என்று ஒரு கேள்வி போட்டிருந்தார். Theவை மொழிபெயர்ப்பதில் சிரமம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட விதமாக அதை மொழிபெயர்ப்பது ஏன் என்று விளக்கத் தொடங்கினால் ‘கேராக’ இருக்கிறது. எனவே இந்தப் பதிவைப் பாதி விளக்கமும் பாதி ரோசனையும் பாதி மறைமுகக் கேள்விகளுமாகத் தருகிறேன்.

article என்கிற விஷயம் தமிழில் இல்லை. A, an, the ஆகியவை தம்மை அடுத்து வரும் சொற்களில் சேர்க்கும் பொருள், எண்ணிக்கை போன்ற விஷயங்கள் தமிழில் -ஐ, -கள் போன்ற பின்னொட்டுகள் அல்லது சில சமயங்களில் அவற்றின் இன்மையால், சுட்டுச் சொற்கள் மூலம் புரியவைக்கப்படுகின்றன. இந்த விநோதமான ஸ்டேட்மென்ட் பின்வரும் உதாரணங்களைப் பார்த்தால் தெளிவாகும் என்று நம்புகிறேன்.

Theவை இப்படியெல்லாம் மொழிபெயர்க்கலாம்:

1. ஐ: இரண்டாம் வேற்றுமை உருபைப் பயன்படுத்தலாம்

There was a knock on the door. He switched on the light and peered out the window.

மொ.பெ.: யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் விளக்கைப் போட்டு ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்.

(கதவு, விளக்கு, ஜன்னல் ஆகிய மூன்றுமே வாசகர் முன்னனுமானம் செய்யக்கூடிய விஷயங்கள்தான். விளக்கைப் போடுவது என்ற சாதாரண காரியத்தை செய்வதற்கு பதில் மேஜை டிராயரிலிருந்து துப்பாக்கி எடுத்தால் ‘ஒரு துப்பாக்கியை’ எடுத்ததாக எழுத வேண்டியிருக்கலாம்)

Continue reading