பிரெக்ட்டின் கவிதைகள் சில

ஜெர்மானியக் கவிஞரும் நாடகாசிரியருமான பெர்ட்டோல்ட் பிரெக்ட்டின் கவிதைகளை திடீரென்று படிக்கத் தோன்றி இணையத்தில் தேடினேன். என் அதிர்ஷ்டம், நிறைய கவிதைகள் இருந்தன. அவர் நூற்றுக்கணக்கில் கவிதைகள் எழுதியிருந்தாலும் கிடைப்பது கொஞ்சம்தான். உதாரணத்திற்கு ஒரு கவிதை:

Radio Poem

You little box, held to me escaping
So that your valves should not break
Carried from house to house to ship from sail to train,
So that my enemies might go on talking to me,
Near my bed, to my pain
The last thing at night, the first thing in the morning,
Of their victories and of my cares,
Promise me not to go silent all of a sudden.

ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் பெயர் போடவில்லை.

இணைப்பு (துள்ளும் சாளரங்களுக்கு மன்னிப்பீர்):

29 கவிதைகள் (சிலது ஜெர்மனில்; இந்த சைட்டில் இன்னும் பல சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள்)

இவற்றைச் சிறுபத்திரிகைகளுக்காக மொழிபெயர்க்க விரும்புபவர்கள் சாக்கிரதையாகவும் சந்தோசமாகவும் இருந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முடிந்து தொடங்கும் கவிதை

பயணம் முடிந்த பின்னும்
தொடர்ந்து நடக்கும் கால்களை
பின்தொடர்கின்றன கண்கள்

முடிந்துவிட்டது பயணம்
தொடர்ந்து நடக்கும் கால்கள்
பின்தொடரும் கண்கள்

பின்தொடர்கின்றன கண்கள்
தொடர்ந்து நடக்கும் கால்களை
பயணம் முடிந்த பின்னும்

பயணம் முடிந்துவிட்டது
கால்கள் நடக்கும் தொடர்ந்து
கண்கள் பின்தொடரும்

புதுக்கவிதையின் வீச்சும் வலிமையும்

இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாகிவிட்டாலும் சில சமயங்களில் என் வலைப்பதிவுகள பற்றி கூகிளில் ஈகோ ட்ரிப் அடித்து மனசைத் தேற்றிக்கொள்வதுண்டு. இன்று மதியம் அப்படியான ஒரு ட்ரிப் அடித்தபோது என் பழைய பதிவு ஒன்றிலிருந்த சில ‘காதல் கவிதை’ களை இன்னொரு வலைப்பதிவில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

ஒரு வாலிபர் நான் தமாசாக எழுதியதை சமீபத்தில் எடுத்துத் தன் வலைப்பதிவில் போட்டுக்கொண்டுள்ளார். எழுத்துத் திருட்டில் ஈடுபட விரும்புபவர்கள் அதன் நுட்பங்களை முன்பே அதில் ஊறித் திளைத்துப் பல புத்தகங்களை எழுதியிருக்கும் ஜாம்பவான்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். படிக்கிற மேட்டரின் தன்மையைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.

நகலெடுத்துப் போட்டவர் இந்த இரண்டையும் செய்யாமல் ஈயடிச்சான் காப்பி செய்திருக்கிறார். அதில் ஒரு கவிதையில் அடிக்குறிப்புகளுக்காக சூப்பர்ஸ்க்ரிப்ட்டில் எண்களைக் கொடுத்திருப்பேன். நான்கு குட்டிக் கவிதைகளை சுட்டிருக்கும் இந்தக் கவிஞர் அந்த எண்களையும் சேர்த்து நகலெடுத்துப் போட்டிருக்கிறார்!

இந்த நபர் தபூ சங்கர் பிரியர் போல் தெரிகிறது. காதல் கவிதைகளைக் கிண்டல் செய்து எழுதியதை நிஜ காதல் கவிதைகள் என்று நினைத்துக்கொண்டு அவற்றை சுட்டிருப்பது ஆனந்த விகடன் பாஷையில் சொன்னால் காமெடி கலாட்டா. இந்த மாதிரி கவிதைகளை எழுதுபவர்களுக்குக் கவிதை பற்றிய புரிதலும் கற்பனைத் திறனும் எந்த லட்சணத்தில் இருக்கும் என்று நிரூபித்திருக்கிறார்.

இணையத்தில் இருப்பதைத் திருடி இணையத்திலேயே போட்டால் மாட்டிக்கொள்வோம் என்பது ஒரு சாப்ட்வேர் இன்ஜினியருக்குத் தெரிய வேண்டாமா?

சைடில் ஒரு சிந்தனை: plagiarism என்பது எழுத்துக் கொள்ளை. இதற்கும் plague எனப்படும் கொள்ளை நோய்க்கும் ஏதாவது லிங்க் இருக்குமா?

கவிதை உத்தி நெ. 1

பிதற்றலான உரைநடையைக் கவிதையாக்க நம் கவிஞர்கள் கையாளும் ஒரு உத்தியைப் பற்றிப் பயனுள்ள தகவல் ஒன்று இன்று வந்த டெக்கான் க்ரானிக்கிளின் இலவச இணைப்பில் கிடைத்தது.

வாக்கிய/வாசக அமைப்பை உல்டா ஆக்கும் உத்தியைத்தான் சொல்கிறேன். என்னையே மேற்கோள் காட்டிக்கொண்டால் –

எதையும் முதலிலேயே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் இருக்காது. அதனால்தான் சில கவிஞர்கள் கவிதையின் முதல் சொல்லையோ சொற்றொடரையோ அடுத்த சில வரிகளுக்கு ஒளித்து வைத்துக்கொண்டு கடைசி வரியாக ரிலீஸ் பண்ணுகிறார்கள்.

இதற்கு anastrophe என்று பெயராம் (தமிழ் இலக்கணத்திலும் இதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும்). விளக்கம்:

Inversion of the normal syntactic order of words. For example: “To market went she.”

அப்படியாயின் நம் கவிஞர்களில் பலர் poets அல்லர், anastrophists.

குறிப்புகள்:

» அனாஸ்ட்ரஃபிக்கு சில உதாரணங்கள் என் மூன்று காதல் கவிதைகளில்.

» கவிதையில் வாக்கிய அமைப்பை மாற்றுவது தவறு என்று நான் சொல்லவில்லை. அதுதான் கவிதை நடை என்றும் கவித்துவம் என்றும் நம்பிக்கொண்டு அதை மட்டுமே வைத்துக் கவிதை எழுதுவதே தமிழ் அனாஸ்ட்ராஃபி.

சுய நேர்மை

பாடாவதி வங்கி ஒன்றில் வைத்திருக்கும் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஏ.டி.எம். போனேன் நேற்று.

எனக்கு முன்பு ஒருவர் உள்ளே போய் கார்டைப் போட்டுப் போட்டு விளையாடிக்கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்போது சிம்புட் பறவை என்று வர்ணிக்கத் தக்க தும்பி சைஸ் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி வந்தது. அதன் தொந்தரவிலிருந்து தப்பிப்பதெங்ஙனம் என்று யோசித்தவாறு நான் நின்றிருக்கையில் அந்த மனிதர் ஒரு வித நிம்மதியுடன் வெளியே வந்தார்.

நான் உள்ளே போய்க் கொஞ்ச நேரம் கழித்துத்தான் கவனித்தேன். பூச்சியும் உள்ளே வந்துவிட்டிருந்தது. வேலை முடிந்து வெளியே போன பின் திரும்பிப் பார்த்தால் பூச்சி இன்னும் ஏ.டி.எம். பூத்திலேயே இருந்தது.

நான் மட்டும் சமூகப் பொறுப்போ சக மனிதர்களின்பால் இரக்கமோ இல்லாமலிருந்தால் இந்த அனுபவத்தைக் கவிதையாக்கியிருப்பேன்.