திடீர் நினைவுகள்

(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.)

திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் ‘இதயம் போகுதே’ பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. ‘புதிய வார்ப்புக’ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், வெயிலில் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க பாடல் தொடங்குவது போல் ஒரு காட்சி மனதில் இருக்கிறது.  உடனே தொடங்கியது நோஸ்டால்ஜிய இணையத் தேடல். அந்தப் படம் வந்த ஆண்டு 1979 என்று தெரிந்தது. சரியாக இன்ன வயதில் இன்ன அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று ‘தேதிப்படுத்த’ முடிவது புல்லரிப்பாக இருந்தது. பாட்டின் வீடியோ (பொட்டல் நிலம் இல்லை). இளவயது காதல் பிரிவு/முறிவுகளின்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் மனதில் எழும்.

உடனே பின்விளைவாக வேறு சில நினைவுகள் கிளம்பின. குடும்பப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை இல்லாதிருந்த ஒரு உறவினரைத் தற்செயலாக திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் ‘கழுகு’ (1981) படம் பார்க்கப் போயிருந்தபோது எதிர்கொண்டு ஓரிரு வார்த்தை பேசியது ஒரு நினைவு. ‘கழுகுவில்’ நன்றாக நினைவிருப்பது அதில் வரும் பேருந்தும் ரஜினிகாந்தின் நண்பர் கொலையாவதும். பிறகு எதற்கோ ஒரு எலுமிச்சம்பழமும் நினைவில் நின்றிருக்கிறது. விக்கிபீடியாவில் கதையைப் படித்தபோதுதான் அது துர்சடங்குகள் நிறைந்த கிரிமினல் சாமியார் கொலைப் படம் என்று தெரிந்தது. எலுமிச்சம்பழத்திற்கு இப்போது நியாயங்கற்பிக்க முடிகிறது. (‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’க்குப் பிறகு தமிழில் வந்த ரோட் மூவி இதுதானோ?) ஒரிஜினலில் கூட பஸ் ஓடியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் காரணமே இல்லாமல் பீதியைக் கிளப்பிய ஒரு படம் ‘தூரத்து இடி முழக்கம்’. 1981இல் வந்த விஜயகாந்த் படம். இணையத்தில் தகவல்கள் போதாது. அந்த வயதில் எதனாலோ சில காட்சிகள் அமானுஷ்யமானவையாகத் தோன்றி பயந்திருக்கிறேன். நான் பார்த்தது தொலைக்காட்சியில். எனவே 1982 வாக்கில் பார்த்திருக்கக்கூடும். இசை சலீல் சௌதுரி. ‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே‘ பாட்டை இப்போது கேட்டால் ஒரு லாங்ஷாட் காட்சி திகிலூட்டியதும் படம் முடிந்து மாலை இருளில் பாட்டி வீட்டு வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்ததும் நினைவில் வந்து முட்டுகின்றன.

குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு முதல் வேலை கிடைத்த சமயம் வரை நினைவில் தங்கிய திரைப்படப் பாடல்கள், படங்கள், தொடர்பான நினைவுகள் என்று எழுதிக்கொண்டே போகலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் எங்கள் குடும்ப மரத்திலேயே இல்லை. எனவே எனக்கும் சிறுவயது என ஒன்று இருந்தது என்பதற்கு ஆதாரமாக மிகச் சில புகைப்படங்களும் நிறைய இளையராஜா பாட்டுக்களும்தான் இருக்கின்றன.

முப்பதாண்டுக் காலத்தில் இளையராஜா பாடல்களை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல நூறு முறை கேட்டுவிட்டதாலோ என்னவோ தற்போது இளையராஜா இசையில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு சம்பவத்தை, இடத்தை, முகத்தை, குரலை, எண்ணவோட்டத்தை நினைவிற்குக் கொண்டுவந்துவிடும் பாடல்கள் ஏராளம்.

கூகுளில் ஒரு ரவுண்டு காலப் பயணம் போய்விட்டு வந்தால் என் இயல்பிற்குத் தொடர்பே இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்படுவதுதான் இந்த வெட்டி ஆராய்ச்சியின் மிச்சம்.

ஈவினிங் நேரத்திலே!

அக்டோபர் 1, 1950 குமுதம் இதழில் ‘காங்கேயன்’ எழுதிய ‘ஈவினிங் நேரத்திலே!’ என்ற பாடல் டவுன் பிலோ. மொபைற்காமிராவில் படம் பிடித்துப் போட்டதால் சுமாராகத்தான் இருக்கும். அந்தக் காலத்திலேயே ஆங்கிலம் கலந்து எழுத என்ன தைரியம்!

அரைகுறைத் தமிழர்கள்

கீழ்க்கண்டவை கடந்த சில நாட்களில் தட்ஸ்தமிழ்.காமில் வந்த தலைப்புச் செய்திகள். இவை அனைத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமை கண்ணில் படுகிறதா?

  • வாசிம் அக்ரம் மனைவி திடீர் சுகவீனம் – சென்னையில் இறக்கப்பட்ட விமானம்
  • போதையில் இருந்த ஏர் இந்தியா விமானி!
  • நயன்-பிரபுதேவா.. இடையே புகுந்த ஆயிஷா!
  • முக்காடு போட்டு வந்த புவனேஸ்வரி
  • ஹிஸ்பானோவை வாங்கிய டாடா
  • பெங்களூரில் கண் கலங்கிய வைகோ
  • சரணாலய பகுதியில் ஆய்வை துவக்கிய கேரளா!
  • உயிருடன் உள்ளவருக்கு அஞ்சலி செலுத்திய ப.சி!
  • இல.கணேசனிடம் நலம் விசாரித்த ஸ்டாலின்

சில செய்திகள் வேறு காரணங்களுக்காகக் கடுப்பேற்றினாலும் நான் சொல்ல வருவது மொழி விஷயம். இது என்ன அபத்தமான நடை? இந்தத் தலைப்புச் செய்திகள் எல்லாம் முடிவடையாத வாக்கியங்கள். ஒன்றிரண்டு தடவை என்றால் வெரைட்டிக்காக விட்டுவிடலாம். ஆனால் இப்படி வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்துவது அச்சுப் பத்திரிகைகளில் கூட ஒரு புதிய பழக்கமாகியிருக்கிறது. படிக்கும்போது பயங்கர ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது.

மேப் போட்றவரு

சில செய்திக் கட்டுரைகளைப் படித்தால் அவற்றின் சோகத்தை மீறி சிரிப்பு வருகிறது. கல்பாக்கம் கடற்கரையில் ஒரு ருஷ்யப் பொறியியலாளரும் அவரது மகளும் தாக்கப்பட்டது பற்றி ஐ.பி.என்.-லைவில் ஒரு IANS கட்டுரை வந்திருக்கிறது.

பொறியியலாளர் தாக்கப்பட்டதையும் அவரது மகள் மானபங்கப்படுத்தப்பட்டதையும் சொல்லிவிட்டு, காவல் துறை விசாரணை செய்துவருகிறது என்பதோடு முடித்துக்கொள்ளாமல் இப்படி நாலு பாரா:

According to officials of the power project, there are over 100 Russian engineers working at the Kudankulam nuclear power project.

The Nuclear Power Corporation of India Ltd (NPCIL) is working on the 2×1000 MW project with Russian technical assistance.

The first unit is expected to be commissioned early next year.

As per the deal between India and Russia, two more reactors of similar or even slightly higher capacity will come up at Kudankulam.

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிக்கிறார்கள். அந்த நாலு பாராவைத் தனி செய்தியாகப் போடுவதற்கு மேட்டர் போதாதோ என்னவோ. போதாமைக்கு சைடில் தமிழ்நாடு வரைபடம் வேறு. புனே, சட்டீஸ்கர் கட்டுரைக்கெல்லாம் மேப்பைப் போடக் காணோம்.

எழுத்துக் கலைஞர்

ஆலன் மூர், நீல் கெய்மன் போன்ற காமிக்ஸ் ஓவியர்களுடன் இணைந்து பணியாற்றிய பெரிய எழுத்துக் கலைஞரான* Todd Klein தனது வலைப்பதிவில் எழுத்துக் கலையின் நுட்பங்களைப் படங்களுடன் எழுதுகிறார். பல நல்ல நாவல்களையும் காமிக்ஸ் புத்தகங்களையும் சுருக்கமாக, அழகாக அறிமுகப்படுத்துகிறார்.

அவரது வலைப்பதிவு இங்கே. டாடின் வலையகத்தில் கூடப் பார்க்கவும் படிக்கவும் நிறைய இருக்கிறது. அவர் நல்ல ஓவியர் கூட.

*lettering artist – பலூன்களுக்குள் உரையாடல்களை எழுதுபவர், அட்டை, விளம்பரங்கள் போன்றவற்றுக்கு லோகோக்களை வடிவமைப்பவர்…