கசாப்பு

1.

சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல.

பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்போது கூட நம்மாட்களின் அபரிமித எழுத்தறிவு கைகொடுப்பதில்லை.

2.

அதே போலப் பொதுவாக  ‘முகம்மதுவும்’ என்று எழுதுகிறார்கள். உகரத்தில் முடியும் சொல்லுக்குக் கூடுதலாக இன்னொரு எதற்கு என்று யோசிப்பதில்லை. சொல்லிப் பார்த்தாலே உச்சரிப்பு நெருடலாகத் தெரியும்.

3.

ஆங்கிலத்தின் nt (garment, Clinton, point) ஒலி கூடத் தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள், இணையம் என்று எல்லா ஊடகங்களிலும் படாதபாடு படுகிறது. வண்டு, கிண்டல், மண்டை போன்ற சொற்களின் ண்ட் ஒலியோடு பாயிண்ட், கிளிண்டன், பேண்ட் (pant, band, இரண்டிற்கும் அதேதான்) என்று எழுதுகிறார்கள். கிளின்டன், பாயின்ட், பேன்ட் என்று எழுதுவதற்கு மொழி அறிஞராக இருக்க வேண்டியதில்லையே.

4.

பலர் அவரின், இவரின் என்று எழுதுவதும் எனக்கு எப்போதும் உறுத்தலாக இருக்கும். அவரது, இவரது அல்லது அவருடைய, இவருடைய என்று எழுதித்தான் எனக்குப் பழக்கம். தமிழ்நாட்டின், கட்டிடத்தின், புத்தகத்தின் என்று அஃறிணையுடன் ‘இன்’ சேர்த்து எழுதப்படுவது உறுத்தவில்லை. இலக்கணப்படி இது சரியா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நடை ரீதியாக இது தவறு என்றுதான் நினைக்கிறேன்.

ருஷ்ய சிறுவர் இலக்கியம்

‘பயங்கரவாதி டாக்டர் செவன்’ சில ருஷ்ய சிறுவர் நூல்களைப் பற்றி அழகான ஓவியங்களுடன் எழுதியிருக்கிறார். தவற விடாதீர்கள்!

தமிழில் ரஃபிக் ராஜா, கிங் விஸ்வா, பயங்கரவாதி டாக்டர் செவன், சிவ், புலா சுலாகி, கனவுகளின் காதலன் முதலான சில வலைப்பதிவர்கள் நிறைய தகவல்களோடும் படங்களோடும் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். இவர்களது அறிவும் ஈடுபாடும் பிரமிப்பூட்டுகின்றன.

இடுகைகளின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் முழுமையாகப் படித்து கமென்ட் போடும் வாசகர்களிடம் தமிழில் காமிக்ஸ் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட சோகத்தைப் பார்க்க முடிகிறது.

இந்த வலைப்பதிவர்கள் பதிப்புத் துறையில் கணிசமான நிதியுடன் இறங்கினால், அதுவும் பெரிய பதிப்பகங்கள் எவற்றுக்கும் சோரம் போகாமல் தாங்களே பதிப்பித்தால் தமிழ் காமிக்ஸ் புத்துயிர் பெறும்.

தமிழ் வலைப்பதிவுலகில் எந்த அரசியலும் இல்லாமல் ரசனைப் பகிர்வும் அறிவுப் பகிர்வும் சிறப்பாக நடக்கும் community இவர்கள்தான் என்று நினைக்கிறேன். இவர்களில் பலரது வலைப்பதிவுகளை இங்கே பார்க்கலாம். இந்த வலைப்பதிவர்களுக்கு ஒரு சல்யூட்.

திருட்டு – 2

எனக்கு நிஜமாகவே புரியாத ஒரு விஷயம் –

எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.

இந்த நாலு வரியை சொந்தமாக எழுதத் துப்பு இருக்காதா? இதைக் கூடவா காப்பியடிப்பார்கள்? இதை ஒருவர் தன் வலைப்பதிவில் தன் பெயரில் போட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்பான முந்தைய பதிவு

கிறுக்கர்கள் கவனத்திற்கு

நான் இணையத்தில் நுழைந்த காலத்திலே badart.com என்று ஒரு வலையகம் இருந்தது. மெனக்கெட்டு மோசமாக வரையப்பட்ட ஓவியங்களைக் காட்டுவதற்கே அதை நடத்தினார்கள். அது இல்லாத குறையை ஓரளவு தீர்த்துவைக்கிறது Doodlers Anonymous. போதாக்குறைக்கு இவர்கள் ஒரு Flickr குழு வேறு வைத்திருக்கிறார்கள். அடியேனும் அதிலுள்ளேன். நல்ல கிறுக்கராக இருந்தால் ஒரு கை பாருங்கள்.