திடீர் நினைவுகள்

(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.)

திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் ‘இதயம் போகுதே’ பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. ‘புதிய வார்ப்புக’ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், வெயிலில் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க பாடல் தொடங்குவது போல் ஒரு காட்சி மனதில் இருக்கிறது.  உடனே தொடங்கியது நோஸ்டால்ஜிய இணையத் தேடல். அந்தப் படம் வந்த ஆண்டு 1979 என்று தெரிந்தது. சரியாக இன்ன வயதில் இன்ன அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று ‘தேதிப்படுத்த’ முடிவது புல்லரிப்பாக இருந்தது. பாட்டின் வீடியோ (பொட்டல் நிலம் இல்லை). இளவயது காதல் பிரிவு/முறிவுகளின்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் மனதில் எழும்.

உடனே பின்விளைவாக வேறு சில நினைவுகள் கிளம்பின. குடும்பப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை இல்லாதிருந்த ஒரு உறவினரைத் தற்செயலாக திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் ‘கழுகு’ (1981) படம் பார்க்கப் போயிருந்தபோது எதிர்கொண்டு ஓரிரு வார்த்தை பேசியது ஒரு நினைவு. ‘கழுகுவில்’ நன்றாக நினைவிருப்பது அதில் வரும் பேருந்தும் ரஜினிகாந்தின் நண்பர் கொலையாவதும். பிறகு எதற்கோ ஒரு எலுமிச்சம்பழமும் நினைவில் நின்றிருக்கிறது. விக்கிபீடியாவில் கதையைப் படித்தபோதுதான் அது துர்சடங்குகள் நிறைந்த கிரிமினல் சாமியார் கொலைப் படம் என்று தெரிந்தது. எலுமிச்சம்பழத்திற்கு இப்போது நியாயங்கற்பிக்க முடிகிறது. (‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’க்குப் பிறகு தமிழில் வந்த ரோட் மூவி இதுதானோ?) ஒரிஜினலில் கூட பஸ் ஓடியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் காரணமே இல்லாமல் பீதியைக் கிளப்பிய ஒரு படம் ‘தூரத்து இடி முழக்கம்’. 1981இல் வந்த விஜயகாந்த் படம். இணையத்தில் தகவல்கள் போதாது. அந்த வயதில் எதனாலோ சில காட்சிகள் அமானுஷ்யமானவையாகத் தோன்றி பயந்திருக்கிறேன். நான் பார்த்தது தொலைக்காட்சியில். எனவே 1982 வாக்கில் பார்த்திருக்கக்கூடும். இசை சலீல் சௌதுரி. ‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே‘ பாட்டை இப்போது கேட்டால் ஒரு லாங்ஷாட் காட்சி திகிலூட்டியதும் படம் முடிந்து மாலை இருளில் பாட்டி வீட்டு வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்ததும் நினைவில் வந்து முட்டுகின்றன.

குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு முதல் வேலை கிடைத்த சமயம் வரை நினைவில் தங்கிய திரைப்படப் பாடல்கள், படங்கள், தொடர்பான நினைவுகள் என்று எழுதிக்கொண்டே போகலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் எங்கள் குடும்ப மரத்திலேயே இல்லை. எனவே எனக்கும் சிறுவயது என ஒன்று இருந்தது என்பதற்கு ஆதாரமாக மிகச் சில புகைப்படங்களும் நிறைய இளையராஜா பாட்டுக்களும்தான் இருக்கின்றன.

முப்பதாண்டுக் காலத்தில் இளையராஜா பாடல்களை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல நூறு முறை கேட்டுவிட்டதாலோ என்னவோ தற்போது இளையராஜா இசையில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு சம்பவத்தை, இடத்தை, முகத்தை, குரலை, எண்ணவோட்டத்தை நினைவிற்குக் கொண்டுவந்துவிடும் பாடல்கள் ஏராளம்.

கூகுளில் ஒரு ரவுண்டு காலப் பயணம் போய்விட்டு வந்தால் என் இயல்பிற்குத் தொடர்பே இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்படுவதுதான் இந்த வெட்டி ஆராய்ச்சியின் மிச்சம்.

மலர்க் காட்சி

ராயப்பேட்டை (சென்னை) YMCA மைதானத்தில் மே 10 அன்று முடியும் மலர்க் கண்காட்சியில் நான்கு பூச்செடிகள் வாங்கினேன். தினமும் காலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதும் பொதுவாகப் ‘பராமரிப்பதும்’ கடைந்தெடுத்த சென்னைவாசியான எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. இன்று காலையில் எடுத்த சில புகைப்படங்கள்…


இதில் காமெடி என்னவென்றால் முதல் இரண்டு படங்களில் இருக்கும் பூவின் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும் (Dianthus). ரோஜா மாதிரி இருப்பது ரோஜா வகைதான். என்ன பூக்கள் என்று எப்படித்தான் கண்டுபிடிக்கப்போகிறேனோ.

திருட்டு – 2

எனக்கு நிஜமாகவே புரியாத ஒரு விஷயம் –

எங்கோ போகும் வழியில்
திடீரென எதிர்ப்படும் உன்னை
எதிர்பாராமல் திகைக்கிறேன்
ஆறாம் வாய்ப்பாடு மறந்தவனாய்.

இந்த நாலு வரியை சொந்தமாக எழுதத் துப்பு இருக்காதா? இதைக் கூடவா காப்பியடிப்பார்கள்? இதை ஒருவர் தன் வலைப்பதிவில் தன் பெயரில் போட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்பான முந்தைய பதிவு

PHP கண்ணாமூச்சி

எனது இன்னொரு வலைப்பதிவில் தலைப்புப் படத்தை க்ளிக் செய்தால் முகப்புப் பக்கம் திறக்கும்படி செய்ய நாய்ப் பாடு பட்டேன். சாதாரணமாக இது சாதாரண விசயம்தான். ஆனால் Cup of Coffee வார்ப்புருவை வடிவமைத்த புண்ணியவாளர்கள் தேவையில்லாமல் சிக்கலாக்கியிருந்தார்கள்.

தீர்வு தேடி கூகிளில் பல மணி நேரம் காலியானது. பிறகு திடீரென்று உறைக்க, header.phpஐ முழுவதுமாகப் பார்த்தேன். header.phpஇல் ஹெடர் படத்தைத் தனியாக <div id=”logo”> என்று ஒளித்துவைத்திருக்கிறார்கள். style.css கோப்பிலும் அதை #logo என்றுதான் ஒதுக்கிவைத்திருக்கிறார்கள்.

எனக்கோ பிஹெச்பியும் தெரியாது, ஒரு மானாவும் தெரியாது. ஹெடர் கோப்பை நகலெடுத்து நோட்பேடில் போட்டு சேமித்த பின் இங்கே கிடைத்த வரிகளை ஒட்டி மாற்றிப் பார்த்தேன்.

<div id=”logo”>
<h1><a href=”<?php echo get_option(‘home’); ?>/”><?php bloginfo(‘name’); ?></a></h1>
<h2><?php bloginfo(‘description’); ?></h2>
</div>

என்பதை இப்படி மாற்றினேன்:

<div id=”logo” onclick=”window.location.href='<?php bloginfo(‘url’); ?>'” style=”cursor: pointer;”>
<h2><?php bloginfo(‘description’); ?></h2>
</div>

பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. என் அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக விளங்கவே இந்தப் பகிர்வு.