திடீர் நினைவுகள்

(எச்சரிக்கை: இது பியூர்லி பர்சனல் இடுகை. எழுதியே ஆக வேண்டியிருந்தது.)

திடீரென்று தொடர்பே இல்லாமல் இளையராஜாவின் ‘இதயம் போகுதே’ பாடல் நினைவுக்கு வந்தது. அந்தப் பாடலை நான் முதன்முதலில் கேட்டபோது பயங்கர சோகமானேன். அப்போது எனக்கு எட்டு வயதுகூட நிரம்பவில்லை. அருமையான, ஆனால் ரொம்ப சோகமான பாட்டு அது. ‘புதிய வார்ப்புக’ளில் கதாநாயகர் பாக்யராஜ் காதலி ரதி அக்னிஹோத்ரியை விட்டுப் பேருந்தில் போகும்போது அசரீரியாக வரும் அந்தப் பாடல். பேருந்து புழுதியைக் கிளப்பிக்கொண்டு போகும், ரதி பொட்டலில், வெயிலில் நின்று வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்க பாடல் தொடங்குவது போல் ஒரு காட்சி மனதில் இருக்கிறது.  உடனே தொடங்கியது நோஸ்டால்ஜிய இணையத் தேடல். அந்தப் படம் வந்த ஆண்டு 1979 என்று தெரிந்தது. சரியாக இன்ன வயதில் இன்ன அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று ‘தேதிப்படுத்த’ முடிவது புல்லரிப்பாக இருந்தது. பாட்டின் வீடியோ (பொட்டல் நிலம் இல்லை). இளவயது காதல் பிரிவு/முறிவுகளின்போதெல்லாம் இந்தப் பாட்டுதான் மனதில் எழும்.

உடனே பின்விளைவாக வேறு சில நினைவுகள் கிளம்பின. குடும்பப் பிரச்சினை காரணமாக பேச்சுவார்த்தை இல்லாதிருந்த ஒரு உறவினரைத் தற்செயலாக திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் ‘கழுகு’ (1981) படம் பார்க்கப் போயிருந்தபோது எதிர்கொண்டு ஓரிரு வார்த்தை பேசியது ஒரு நினைவு. ‘கழுகுவில்’ நன்றாக நினைவிருப்பது அதில் வரும் பேருந்தும் ரஜினிகாந்தின் நண்பர் கொலையாவதும். பிறகு எதற்கோ ஒரு எலுமிச்சம்பழமும் நினைவில் நின்றிருக்கிறது. விக்கிபீடியாவில் கதையைப் படித்தபோதுதான் அது துர்சடங்குகள் நிறைந்த கிரிமினல் சாமியார் கொலைப் படம் என்று தெரிந்தது. எலுமிச்சம்பழத்திற்கு இப்போது நியாயங்கற்பிக்க முடிகிறது. (‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி’க்குப் பிறகு தமிழில் வந்த ரோட் மூவி இதுதானோ?) ஒரிஜினலில் கூட பஸ் ஓடியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் காரணமே இல்லாமல் பீதியைக் கிளப்பிய ஒரு படம் ‘தூரத்து இடி முழக்கம்’. 1981இல் வந்த விஜயகாந்த் படம். இணையத்தில் தகவல்கள் போதாது. அந்த வயதில் எதனாலோ சில காட்சிகள் அமானுஷ்யமானவையாகத் தோன்றி பயந்திருக்கிறேன். நான் பார்த்தது தொலைக்காட்சியில். எனவே 1982 வாக்கில் பார்த்திருக்கக்கூடும். இசை சலீல் சௌதுரி. ‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே‘ பாட்டை இப்போது கேட்டால் ஒரு லாங்ஷாட் காட்சி திகிலூட்டியதும் படம் முடிந்து மாலை இருளில் பாட்டி வீட்டு வாசல் படிக்கட்டில் வந்து உட்கார்ந்ததும் நினைவில் வந்து முட்டுகின்றன.

குழந்தைப் பருவத்திலிருந்து எனக்கு முதல் வேலை கிடைத்த சமயம் வரை நினைவில் தங்கிய திரைப்படப் பாடல்கள், படங்கள், தொடர்பான நினைவுகள் என்று எழுதிக்கொண்டே போகலாம். புகைப்படம் எடுத்துக்கொள்ளும் கலாச்சாரம் எங்கள் குடும்ப மரத்திலேயே இல்லை. எனவே எனக்கும் சிறுவயது என ஒன்று இருந்தது என்பதற்கு ஆதாரமாக மிகச் சில புகைப்படங்களும் நிறைய இளையராஜா பாட்டுக்களும்தான் இருக்கின்றன.

முப்பதாண்டுக் காலத்தில் இளையராஜா பாடல்களை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல நூறு முறை கேட்டுவிட்டதாலோ என்னவோ தற்போது இளையராஜா இசையில் சுத்தமாக ஆர்வம் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு சம்பவத்தை, இடத்தை, முகத்தை, குரலை, எண்ணவோட்டத்தை நினைவிற்குக் கொண்டுவந்துவிடும் பாடல்கள் ஏராளம்.

கூகுளில் ஒரு ரவுண்டு காலப் பயணம் போய்விட்டு வந்தால் என் இயல்பிற்குத் தொடர்பே இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்படுவதுதான் இந்த வெட்டி ஆராய்ச்சியின் மிச்சம்.

7 thoughts on “திடீர் நினைவுகள்

 1. //ஏதாவது ஒரு சம்பவத்தை, இடத்தை, முகத்தை, குரலை, எண்ணவோட்டத்தை நினைவிற்குக் கொண்டுவந்துவிடும் பாடல்கள் ஏராளம்.//

  ஹைய்ய் எனக்கும் இப்படி ஒரு பழக்கம் வழக்கமாக இருந்திருக்கிறது யாரோ உறவினர் திருமணத்திற்கு நீண்ட தூர பயணம் சென்றபோது கேட்ட பாடல் & அப்பா ஞாயிறு விடுமுறையில் கேட்ட கடலோர கவிதையின் ஒரு பாடல் இன்றும் அந்த பாடலை எதோச்சையாக கேக்க நேரிடும்போது நானும் ஏதோ ஒரு ஞாயிற்று கிழமையின் மதிய பொழுதினில் இருப்பதை போன்ற எண்ணத்தினை கொண்டு வந்துவிடுகிறது! :)

  டாங்குசு ஃபார் ஷேரிங் :))

 2. இந்த சினிமா பாட்டுகள்னாலே இப்புடித்தான். :-)

 3. //அதே காலகட்டத்தில் காரணமே இல்லாமல் பீதியைக் கிளப்பிய ஒரு படம் ‘தூரத்து இடி முழக்கம்’. 1981இல் வந்த விஜயகாந்த் படம். இணையத்தில் தகவல்கள் போதாது. அந்த வயதில் எதனாலோ சில காட்சிகள் அமானுஷ்யமானவையாகத் தோன்றி பயந்திருக்கிறேன்.//

  தூர்தர்ஷனில் நானும் அந்த படத்தை பார்த்திருக்கிறேன் – சிறிய வயதில். அந்த படத்தின் வில்லன் ஒரு மந்திரவாதி. கையில் விலா எலும்பு போன்ற ஒரு பெரிய எலும்பு துண்டை மந்திரக்கோலாக கொண்டிருப்பான். மிகவும் கொடூரமானவனாக அவனை சித்தரித்திருப்பார்கள் . இப்போது அந்த படத்தை காணக்கிடைப்பதில்லை.

  முழுக்க முழுக்க பிளாஷ் பேக்கில் சொல்லப்பட்ட கதை அது.

 4. அப்போ நான் பயந்தது நியாயம்தான். :-) காரணம் மறந்துபோய் அந்த பயம் மட்டும் தங்கியிருக்கிறது.

 5. //காதல் பிரிவு/முறிவுகளின்போதெல்லாம்//
  பன்மை அவதானத்துக்குரியது

  //முப்பதாண்டுக் காலத்தில் இளையராஜா பாடல்களை வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல நூறு முறை கேட்டுவிட்டதாலோ என்னவோ தற்போது இளையராஜா இசையில் சுத்தமாக ஆர்வம் இல்லை..//
  இதுதான் காரணம் என்று நம்பும் முயற்சியில் பலரும் ஈடுபடுவதாகத் தெரிகிறது :-)

  உறவினருடன் நிகழ்ந்த அசௌகரிய உரையாடல், கழுகு பட நினைவுடன் சேர்ந்து பிணைக்கப்பட்டிருந்தது ரசிக்கத்தக்க quirk of the mechanics of memory.

  ‘உறவினரும் ரஜினிகாந்தும்’ என்று தலைப்பிட்டு, ‘என்னவோ இருப்பது’ போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் சிறுகதையை நீங்கள் எழுதி சிற்றிதழ் எதற்காவது அனுப்பாதது, உங்கள் நல்ல மனதைக் காட்டுகிறது.

 6. //கூகுளில் ஒரு ரவுண்டு காலப் பயணம் போய்விட்டு வந்தால் என் இயல்பிற்குத் தொடர்பே இல்லாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் உணர்வு ஏற்படுவதுதான்//

  அதே அதே சபாபதே!

 7. @dagalti: சீர்சாதான் சொல்றேன். ஒரு சமயத்துல மொசார்ட்டோட பிரபலமான சிம்பனிகளைத் திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டிருந்தேன். சமீபத்துல திருப்பியும் மொசார்ட் கேக்கலாம்னு பாத்தா சுவாரஸ்யமே இல்ல. அது மாதிரிதான் இது.

  நான்தான் பினாமதேயனாச்சே. சிற்றிதழ்ல அப்படியொரு கதை எழுதலன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? :-)

Comments are closed.