கொரட்டூர் கொலை வழக்கு

அகதா க்றிஸ்டி என்ற மகத்தான மர்மக் கதாசிரியர் இவ்வளவு காலமாகத் தமிழில் மொழிபெயர்க்கப்படாதிருந்த காரணத்தை சமீபத்தில் ஊகித்தேன். காப்பிரைட் போக, நமது மொழிபெயர்ப்பாளர்கள் கைவைத்து சுட்டுக்கொண்டதுதான் காரணமாக இருக்கும். சிட்னி ஷெல்டனைவிட அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது கடினம். முயன்ற பலர் அவருடைய மொழிநடை, நகைச்சுவை, பொதுவாகத் தூக்கலாகத் தெரியும் பிரிட்டிஷ் தன்மை, மற்றும் இன்ன பிற மொழிபெயர்க்கவியலாத்தன்மைகள், எல்லாவற்றையும் உணர்ந்து கைவிட்டிருப்பார்கள்.

ஆனால் இதெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள் கவலை. குத்துமதிப்பாளர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் காணப்படாது. இப்போது எழுத்துக்களில் எது இருந்தாலும் அச்சிட்டுப் பின்பக்கம் ஒரு விலையைப் போட்டுவிடலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது போல. உதாரணமாக, கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் என்பவரின் மொழிபெயர்ப்பில் கண்ணதாசன் வெளியீட்டில் அகதா க்றிஸ்டியின் The Hollow என்ற நாவல். முதல் பத்தியைப் படித்தின்புறுக -

வார இறுதியின் ஓய்வினையும் பொழுதுபோக்கினையும் நெருங்கிப் புலர்ந்துக் கொண்டிருந்த அந்த வெள்ளிக் கிழமைக் காலையில், கமிஷனர் ஹென்றியின் பரந்து விரிந்த பங்களாவான ‘ஹாலோ’வில் அனைவரும் இன்னும் கொட்டும் பனியின் குளிர் தாக்கத்தால் படுக்கையில் சுருண்டே கிடக்க, தன் நீல விழிகளைப் பட்டென திறந்து, தனக்கே உரிய உடனடி சுறுசுறுப்புடன் மெத்தையிலிருந்துத் துள்ளி எழுந்தார், லூசி ஆங்கட்டேல். நெளிந்து, சோம்பி, குளிரால் வெடவெடத்து, இன்னும் கொஞ்சம் படுத்திருப்போமா என்று படுக்கையைத் திரும்பித் திரும்பிப் பார்த்து – என, எந்த மந்த நடவடிக்கையும் இல்லாமல், தன் பிரத்யேக முத்திரைச் சக்தியோடு கிளம்பினார் லூசி. முக்கியமான ஒரு விஷயம் குறித்து உடனடியாக ஆலோசனை செய்து உரையாட, எழுந்த குழந்தையின் துள்ளல் போன்ற யாராலும் ஈடுகொடுக்க முடியாத ஒரு வேகம் லூசிக்குள் புரண்டது. ஆலோசனைக்கு, நேற்று இரவு ஹாலோ வந்திறங்கியிருந்த இவரின் ஒன்று விட்டு சகோதரி மிக்டே-வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். படுக்கையிலிருந்து இறங்கிய லூசி, இந்த வயதிலும் இன்னும் பளபளப்புடன் மிளிரும் தன் இருதோள்களையும் அசட்டை கலந்து பெருமிதமாய்ப் பார்த்துக் கொண்டு, மிக்டே அறை நோக்கிப் பாய்ந்தார். தன்னுடைய இயல்பான வழக்கப்படி, மிக்டேவுக்கும் தனக்குமான சம்பாஷணையைத் தனது வளமிக்கக் கற்பனைத் திறனால் தன்னுள்ளேயே நிகழ்த்தி, அதற்கு மிக்டே தரும் பதில்களையும் ஊகித்துக் கொண்டு, சம்பாஷணையின் போது எப்படியெல்லாம் கொடிகட்டித் திகழலாம் எனும் திட்டமிடலூடே, மிக்டே அறை வாயிலை அடைந்தார்.

ஒரு பத்தியில் தனிநபராக ஒரு மொழிப் புரட்சியே நடத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். தெளிவு, தர்க்க ரீதியாக வாக்கிய அமைப்பு, தகுந்த நிறுத்தக்குறிகள், சொலவடைகள் என்று எதையும் மிச்சம் வைக்காமல் கொந்தித் தள்ளியிருக்கிறார் இவர். மூல வடிவமோ எளிமையின் மறுவடிவம். மொழிபெயர்ப்பாளர்தான் வேண்டாத விஷயங்களைச் சேர்த்து செறிவூட்டியிருக்கிறார். Midge என்ற பெயர் மிக்டே என்றே புத்தகம் முழுவதும் வருகிறது. “…!” நிறைய உண்டு. அகதா க்றிஸ்டி ரசிகன் என்ற முறையில் பாதி நாள் கொலைவெறியில் அலைந்துகொண்டிருந்தேன்.

நாவலின் தலைப்பு ‘மன்மதக் கொலை’! கண்ணதாசன் பதிப்பகம் கண்ணை மூடிக்கொண்டு வாங்கி நேரடியாக அச்சகத்திற்கு அனுப்பிவிடும் போலிருக்கிறது.

அகதா க்றிஸ்டியை மொழிபெயர்ப்பது அசாத்திய காரியமல்ல. ஆனால் செய்பவருக்குத் தொழில் தெரிந்திருக்க வேண்டுமல்லவா? இந்த மாதிரி எழுதினால் எந்த மர்மமும் அவிழ வாய்ப்பில்லை.

“தனது ஆழ்ந்த நிம்மதியான ஒரு மனோஹரக் காலைத் தூக்கத்திலிருந்து , அதிருப்தியாய் விழித்துக் கொண்டார் மிக்டே.”

இப்படியே 424 பக்கம். விலை ரூ. 100. இ.ப.: முன்னுரை

Comments

7 Responses to “கொரட்டூர் கொலை வழக்கு”

  1. விஜய் on June 25th, 2010 5:00 pm

    கொடுமை.

  2. King Viswa on June 25th, 2010 5:26 pm

    இந்த மேட்டர் ஒரிஜினல் ஆங்கில பப்ளிஷருக்கு தெரிந்தால் ஏதேனும் மான நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடருவாரோ என்ற எண்ணம் மேலெழுகிறது.

    இருந்தாலும் அந்த பேரா ரொம்பதான் ஓவர்.

  3. King Viswa on June 25th, 2010 5:30 pm

    Stats:

    தமிழில் இருக்கும் பத்தியில் மொத்தம் ஆறு முற்றுப்புள்ளிகள் உள்ளன.

    ஆங்கிலத்தில் இருக்கும் பத்தியில் மொத்தம் நான்கு முற்றுப்புள்ளிகள் உள்ளன.

  4. என். சொக்கன் on June 25th, 2010 5:39 pm

    கொடுமை :( வேற என்ன சொல்றது?

  5. சாத்தான் on June 25th, 2010 10:55 pm

    கிங் விஸ்வா: ஆங்கிலத்தில் பதிப்பித்தவர்கள் தமிழில் பதிப்பிப்பவர்களின் சைஸைப் பார்த்து நம்பிவிட்டார்கள் போல!

  6. King Viswa on June 26th, 2010 11:29 am

    ஐயா,

    இந்த வாக்கியம் //முதல் பத்தியைப் படித்தின்புறுக//

    இப்படி இருந்தால் சரியாக இருந்திருக்கும் // முதல் பத்தியைப் படித்து துன்புறுக//

  7. jana on July 9th, 2011 3:43 pm

    சிரித்தேன்! ரசித்தேன்!!

Got something to say?