கசாப்பு

1.

சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல.

பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால் இருப்பதை வைத்துக்கொண்டு அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும்போது கூட நம்மாட்களின் அபரிமித எழுத்தறிவு கைகொடுப்பதில்லை.

2.

அதே போலப் பொதுவாக  ‘முகம்மதுவும்’ என்று எழுதுகிறார்கள். உகரத்தில் முடியும் சொல்லுக்குக் கூடுதலாக இன்னொரு எதற்கு என்று யோசிப்பதில்லை. சொல்லிப் பார்த்தாலே உச்சரிப்பு நெருடலாகத் தெரியும்.

3.

ஆங்கிலத்தின் nt (garment, Clinton, point) ஒலி கூடத் தமிழில் பத்திரிகைகள், புத்தகங்கள், இணையம் என்று எல்லா ஊடகங்களிலும் படாதபாடு படுகிறது. வண்டு, கிண்டல், மண்டை போன்ற சொற்களின் ண்ட் ஒலியோடு பாயிண்ட், கிளிண்டன், பேண்ட் (pant, band, இரண்டிற்கும் அதேதான்) என்று எழுதுகிறார்கள். கிளின்டன், பாயின்ட், பேன்ட் என்று எழுதுவதற்கு மொழி அறிஞராக இருக்க வேண்டியதில்லையே.

4.

பலர் அவரின், இவரின் என்று எழுதுவதும் எனக்கு எப்போதும் உறுத்தலாக இருக்கும். அவரது, இவரது அல்லது அவருடைய, இவருடைய என்று எழுதித்தான் எனக்குப் பழக்கம். தமிழ்நாட்டின், கட்டிடத்தின், புத்தகத்தின் என்று அஃறிணையுடன் ‘இன்’ சேர்த்து எழுதப்படுவது உறுத்தவில்லை. இலக்கணப்படி இது சரியா என்று எனக்குத் தெரியாது, ஆனால் நடை ரீதியாக இது தவறு என்றுதான் நினைக்கிறேன்.

6 thoughts on “கசாப்பு

 1. 1. கசாபு, கசாபுக்கு.. என்று எழுதுவது சரி.

  2. இணையத்தில் தான் இந்தத் தவறைக் கூடுதலாக காண்கிறேன். மாற்றுவின், கீற்றுவின்.. என்று எழுதுகிறார்கள்.

  3. என்னுடைய நீண்ட நாள் வருத்தம். antonyயை அந்தோணி என்று எழுதாவிட்டாலும் பரவாயில்லை. அண்டோனி என்றால்.. !

  4. இதை நினைத்துப் பார்த்தது இல்லை. சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

  இன்னும் சில நெருடல்கள்:

  * andஐ மற்றும் என எழுதுவது.
  * அதிக அளவு செயப்பாட்டு வினை.
  * அதுவோ அல்லது இதுவோ. (அல்லது வராது)

 2. ஆமாம், and ஆங்கிலத்தில் வாக்கியங்களை இணைக்கவும் பயன்படுகிறது. தமிழில் சிலர் அதை மொழிபெயர்க்கும்போது அப்படியே பயன்படுத்துகிறார்கள். சிலர் andஐ ‘மேலும்’ என்று கூட மொழிபெயர்க்கிறார்கள் (எ.கா.: அன்பு மேலும் அறிவு)!

  அதே போல ‘அதுவோ அல்லது இதுவோ’. ‘சரியா அல்லது தவறா?’ என்று எழுதுவது தவறுதான். அதே சமயத்தில் இரண்டு நீண்ட கேள்விகளுக்கு இடையே ‘அல்லது’ போடுவதை readabilityக்காக மன்னித்துவிடலாம் என்று தோன்றுகிறது. உதா.: ‘அடுத்த ஆண்டு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கப்போகிறீர்களா அல்லது கல்விக் கடன் வாங்கி மகளை வெளிநாட்டுக்கு அனுப்பப்போகிறீர்களா?’

  இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்லை.

 3. //டுத்த ஆண்டு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கப்போகிறீர்களா அல்லது கல்விக் கடன் வாங்கி மகளை வெளிநாட்டுக்கு அனுப்பப்போகிறீர்களா?’//

  இது தவறில்லைன்னு நினைக்கிறேன். “படத்துக்கு போலாமா இல்லை கடற்கரைக்குப் போலாமா” என்று பேச்சு வழக்கில் கேட்கிறோம் தானே? (“அது வாங்கினாலும் சரி, இது வாங்கினாலும் சரி” என்பதும் பேச்சு வழக்கில் உண்டு)

  அதுவோ இதுவோ என்பது தெரிவுகள் தருவது. அதுவா இதுவா என்பது கேள்வி அல்லவா? அப்புறம், அதுவா இதுவா என்ற சொற்களுக்கு இடையே வேறு சொற்கள் வருவதால் ‘அல்லது’ வருவது இயல்பாகத் தெரிகிறது.

 4. ஆமாம், ‘அதுவா இதுவா’ என்பதில் இருப்பது கேள்வி. ‘அதுவோ இதுவோ’ என்பதில் ‘அல்லது’ வந்தால் கண்டிப்பாகத் தவறுதான். எனக்குத் தெரிந்த ஒரு இலக்கண விரும்பி பேசும்போது கூட சரியாகப் பேசியாக வேண்டும் என்பார்.

 5. பேச்சில் இலக்கணப் பிழை விடுறமா என்ன? எனக்கு சட்டுன்னு எதுவும் நினைவுக்கு வரல. ஏதாச்சும் எடுத்துக்காட்டு இருந்தா சொல்லுங்க.

  அடிக்கடி உறுத்தும் இன்னொரு பிழை: nk, nc வரும் இடங்களில் ங்க் போடுவது. இங்க், ரேங்க், பிங்க், சிங்க் போன்றவற்றை ingk, rangk, syngc என்று தான் ஒலிக்க முடியும். இன்க், இன்க்கு போன்றவை ஓரளவு நெருக்கமான ஒலிப்பு தரலாம்.

 6. Incஐக் கூட இன்க் என்றுதான் எழுத முடியும், இல்லையா? பேச்சில் பார்த்தால் உதாரணமாக டீக்கடையில் ‘ஒரு டீ ஒண்ணு குடுங்க,’ ‘வி.ஆர்.எஸ். குடுத்துட்டாரு’ (வி.ஆர்.எஸ். வாங்கிட்டாரு என்பதற்கு பதிலாக) போன்றவை.

Comments are closed.