சுட்டி டி.வி.யானது…

1.

கடும் மழலையில் பேசும் என் 4 வயது மகன் சிரமத்தை மீறிச் சொல்லும் சொற்கள் சில: விளையாட்டுப் பூங்கா, சுரங்கப் பாதை, மலை வீடு, உயரமான மலை, குழந்தைகள். வழக்கமான இனிமையிலிருந்து மாறுபட்ட இனிமையாக இருக்கிறது இந்தப் பேச்சு. நான்கு வயதுக் குழந்தையைக் கூட இப்படிப் பேசவைக்கும் சுட்டி டி.வி.க்குப் பெற்றோர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்!

சுட்டி டி.வி.யின் சொந்த சரக்கு தேறாது என்றாலும் டோராவின் பயணங்கள் (குறிப்பாக), ஸ்பைடர்மேன், குளோரியாவின் வீடு, ஹீமேன், கிரேஸி ஜெஸ்ஸி, செட்ரிக் போன்ற டப்பிங் தொடர்கள் சுமாரான மொழிபெயர்ப்பையும் பண்பாட்டு அன்னியத்தன்மையையும் தாண்டிக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கின்றன.

குழந்தைகள் பள்ளியிலும் மற்றவர்களுடன் பழகுவதிலும் கற்றுக்கொள்வது போக சன் டி.வி.யையும் விஜய் டி.வி.யையும் பார்த்தா தமிழ் கற்றுக்கொள்ளப்போகிறார்கள்? எப்போதும் டி.வி. ஓடிக்கொண்டிருக்கும் வீடுகளில் டப்பிங் தமிழ்தான் குழந்தைகளுக்கு செந்தமிழைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக 4 போன்ற ரெண்டுங்கெட்டான் வயதில் இருப்பவர்களுக்கு. 6-7 வயது என்றால் கூடப் புத்தகம் படிக்கவைக்கலாம், படித்துக் காட்டலாம்.

2.

கலைக் கண்ணோடு பார்க்கும்போது சுட்டி டி.வி.யில் வரும் நிகழ்ச்சிகளில் சிறந்தது நான் பார்த்த வரை ‘குளோரியாவின் வீடு’ என்ற தொடர்தான். இந்தக் கதையில் வரும் மனித உருவங்கள், கட்டிடங்கள், நிலப்பரப்புகள், பொருட்கள் முதலானவை அற்புதமான கற்பனையுடன் வரையப்பட்டிருக்கின்றன.


Image courtesy: DasErste/Check Eins

2000ஆம் ஆண்டில் வந்த Gloria’s House என்ற ஆங்கிலத் தொடரின் டப்பிங் இது. படங்களை வரைந்தவர் லீ ஷெப்பர்ட் (Lee Sheppard) என்ற இளம் ஆஸ்திரேலிய கார்ட்டூனிஸ்ட், அனிமேஷன் கலைஞர்.

டப்பிங் கூட அட்டகாசம். நல்ல, வித்தியாசமான நகைச்சுவை. குரல் கொடுத்தவர்கள் நிச்சயம் சம்பளத்திற்கு அதிகமாக வேலை செய்திருக்கிறார்கள். தொடரின் திரைப்பதிவுகள் சிலவற்றையும் விவரங்களையும் இந்த ஜெர்மன் டி.வி. சைட்டில் பார்க்கலாம்.

3.

இந்த டப்பிங் தொடர்களில் மொழி தொடர்பான விஷயங்களை விட்டால் ரொம்பக் கடுப்பான விஷயம் கற்பனைப் பஞ்சம்.

எதற்கெடுத்தாலும் தமிழ் சினிமாப் பாடல்களையும் பின்னணி இசையையுமே பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தால் எரிச்சலாக இருக்கிறது. டப்பிங் மற்றும் சொந்த நிகழ்ச்சிகளின் டைட்டில் இசைக்கும் நிகழ்ச்சிகளுக்கான விளம்பரங்களுக்கும் சுட்டி டி.வி. திரைப்படப் பாடல்களை மிக அதிகமாகப் பயன்படுத்துகிறது. ஸ்பைடர் மேன் தொடரின் டைட்டிலுக்கு மூலத்தில் பின்னணி இசை/பாடல் போடாமலா விட்டிருப்பார்கள்? ‘பந்தலேரோ’, ‘டோராவின் பயணங்கள்’ போன்ற தொடர்களுக்குச் செய்தது போல் பாட்டையும் டப்பிங் செய்வதுதானே (ஆனால் பந்தலேரோ பாட்டு படுமோசம்)?

இதற்கு காரணம்:

1. சுட்டி டி.வி.காரர்களிடம் சரக்கு இல்லாமை.
2. சினிமாவையும் அரசியலையும் (கிரிக்கெட்டையும்) விட்டால் ஒரு மண்ணும் தெரியாமை, நம் பத்திரிகைகள் போல.

4.

கதாபாத்திரங்களின் பெயர்கள் நம் சூழலுக்குப் பொருந்தாமல்/உச்சரிக்கக் கடினமாக இருப்பதால் பிரபு, மணி, புஜ்ஜி என்றெல்லாம் ஒரேயடியாக உள்ளூர்ப்படுத்தும் அபத்தம் சப்பை மேட்டர் என்றாலும் உறுத்தத்தான் செய்கிறது. Beat, Notta, Molly, Wazza போன்ற பெயர்கள் வேலைக்கு ஆகாது என்பதற்காக மேற்கத்தியக் கதாபாத்திரங்களுக்கு உள்ளூர்ப் பெயர் வைப்பதும் கற்பனைப் பஞ்சம்தானே. அதற்கு பதிலாக Nottaவை மேரி என்றும் Wazzaவை ரிச்சர்ட் என்றும் மாற்றிக்கொள்ளலாமே.

5.

‘சூப்பர் 5’ என்ற பெயரில் ஒரிஜினல் (கவுண்டமணியின் பொய்க்கு செந்தில் சிரித்துக்கொள்வது போல் சிரித்துக்கொள்க) தொடர் ஒன்று வருகிறது. பின்னிவிட்டார்கள். கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, இசை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எலலாம் பயங்கரம். குழந்தைகளை சாப்பிட வைக்க சில தாய்மார்கள் ‘சூப்பர் 5 போடுவேன்’ என்று சொல்லி மிரட்டிப் பணியவைப்பதாகக் கேள்வி.

நானும் சிறு வயதில் நான்கு மூலைகளிலும் நால்வேறு வண்ணங்கள் பூசப்பட்ட திரையைக் கொண்ட டயனோரா டி.வி.யில் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன். அப்போது எங்கே குழந்தைகளுக்கு தனி சானல். பேபி ஷாலினியும் ‘ஒரு விரல்’ கிருஷ்ணாராவும் நடித்த ‘அம்லு’ என்று ஒரு தொடரையும் ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘ஏக் தோ தீன் சார்’ என்று ஒரு இந்தித் தொடரையும் பார்த்திருக்கிறேன். அம்லு ETஐப் பார்த்து அடித்தது. ‘ஏக் தோ தீன் சார்’ ஹார்டி பாய்ஸ், பேமஸ் பைவ் வகையறாக்களைப் பார்த்து அடித்தது. பின்னதின் பழைய ஃபார்முலாவை எடுத்துக்கொண்டு அபத்தமான மாயாஜால அம்சங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட மரணக் கடியே ‘சூப்பர் 5’. பாவம் நடித்த குழந்தைகள்.

6.

‘லக்கி லூக்’ தொடர் குழந்தைகளிடையே எவ்வளவு வரவேற்பு பெற்றிருக்கிறது என்று தெரியவில்லை. டோரா, பென்10 போன்ற சில கதாபாத்திரங்கள் பிரபலமாகிவிட்டதால் அவற்றின் படம் போட்ட கைக்குட்டை, ஸ்டிக்கர், புத்தகப் பை, மதிய உணவு டப்பா போன்றவை அமோகமாக விற்பனையாகின்றன. லக்கி லூக்கிற்கு அந்த அந்தஸ்து கிடைக்குமா? ஆனால் லக்கி லூக் எப்போது குழந்தைகளுக்கான கதையாக இருந்திருக்கிறது.

4 thoughts on “சுட்டி டி.வி.யானது…

  1. எனக்கும் குளோரியாவின் வீடு மிகவும் பிடிக்கும்! ஆனால், சுட்டி டீவியில் இப்போதெல்லாம் போடுவதில்லை போல்! இப்போது வருவதில் பெஞ்சமின் – தி எலிஃபென்ட் என் மகளை கவர்ந்துள்ளது!

  2. குளோரியாவின் வீடு ஒரு முறை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் மீண்டும் வரும் என எதிர்பார்க்கலாம். என் மகனுக்கு சுட்டி டி.வி. போரடித்துப் போய் கார்ட்டூன் நெட்வொர்க்கில் டாம் அண்ட் ஜெர்ரியும் பென்10உம் பார்த்துக்கொண்டிருக்கிறான். எனக்குக் கூட சுட்டி டி.வி.யில் முன்பிருந்த அளவு ஆர்வமில்லை. போராகிவிட்டது.

  3. எனக்கும் சுட்டி தொலைக்காட்சித் தமிழ் பிடிக்கும். பெரியவர்கள் கூட பேச மறந்த / மறுக்கும் நல்ல சொற்களை குழுந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறது.

    பாத்திரங்களின் பெயர்களைத் தமிழ்ப் படுத்துவது பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை.

    Discovery தமிழ் ஒளிபரப்பு பார்த்தீர்களா? அதன் தமிழாக்கமும் மிக அருமை.

  4. பெயர்களைத் தமிழ்ப்படுத்துவது பிரச்சினை இல்லையா? நிகழ்ச்சியைப் பாருங்கள், பண்பாட்டு ரீதியில் எவ்வளவு முரணாக இருக்கிறது என்று தெரியும். நாம் சிறுவயதில் படித்த ருஷ்ய சிறுவர் நூல்களில் பெயரெல்லாம் கோல்யா, அலெக்சி, மாஷா போன்றில்லாமல் முருகன், ரமேஷ், செல்வி என்று இருந்தால் அந்தப் புத்தகங்களில் இருந்த பண்பாட்டு சமாச்சாரங்களுக்கும் சூழலுக்கும் சிறிதும் பொருத்தமில்லாமல் இருக்கும்.

Comments are closed.