புதுப் பஞ்சாங்கம்

Progress Publishers என்ற முன்னேற்றப் பதிப்பகம், ராதுகா பதிப்பகம், மீர் பதிப்பகம் உள்ளிட்ட சோவியத் பதிப்பகங்களின் புத்தகங்களை சோவியத் காலத்தில் தமிழகத்தில் விற்றுவந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் தற்போது தன் கையிருப்பில் உள்ள ருஷ்யப் புத்தகங்களைத் தொடர்ந்து விற்றும் தாறுமாறாகப் பதிப்பித்தும் வருவது தெரிந்த விஷயம்.

முன்னேற்றப் பதிப்பகத்தின் ‘ருஷ்யப் புரட்சி 1917’ என்ற படக்கதையின் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மறுபதிப்பை  ‘சித்திரக்கதை‘யில் பார்த்தேன். உள்ளே ஒரு பக்கத்தில் மொண்ணை செவ்வகத்திற்குள் நியூ செஞ்சுரிக்காரர்கள் போட்டிருக்கும் விவரங்களைப் பார்த்தபோது மகா எரிச்சல் ஏற்பட்டது.

Progress Publishersஇன் புத்தகப் பிரதிகளை குறைந்தது இருபதாண்டு காலம் லட்சக்கணக்கில் விற்றவர்கள், முதல் பதிப்பை வெளியிட்டோர் Progressive Publishers என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பெயரை சரியாக எழுதக் கூடவா துப்பில்லை? அந்தப் புத்தகத்தின் காப்பிரைட் தங்களுக்கே உரியது என்ற பொருளில் ‘Copy Right’க்கு நேராக Publisher என்று போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ‘வேதியியலைப் பற்றி 107 கதைக‘ளுக்கும் இந்த கதிதான் ஏற்பட்டிருக்கும். அதை வெளியிட்ட மீர் பதிப்பகம் பிராக்ரஸ், ராதுகா போலில்லாமல் இப்போதும் இருக்கிறது.

முன்னேற்றப் பதிப்பகத்திற்கு வந்த நிலைமையைப் பாருங்கள்! தரமான உருவாக்கத்தில், பல சமயங்களில் நல்ல மொழிபெயர்ப்பில் வந்த அற்புதமான சிறுவர் நூல்களையும் புஷ்கின், சேகவ், துர்கேனிவ், தல்ஸ்தோய் போன்றோரின் படைப்புகளையும் படித்தவர்களால்/பார்த்தவர்களால் அவற்றை மறக்க முடியுமா?

ஒரு நல்ல விஷயத்தை நம்மவர்கள் கையில் சிக்கினால் என்ன ஆகும் என்பதை நியூ செஞ்சுரி புக்ஸ் நிரூபித்துவிட்டது. NCBHக்குத் தொழில் அறிவு துளியாவது இருந்திருந்தால் பெரும்பாலான புத்தகங்களைக் கையிருப்பில் வைத்திருந்து ஏதாவதொரு விதத்தில், கொஞ்சம் கூடுதல் விலையிலான மறுபதிப்புகளாகவாவது கிடைக்கச் செய்திருக்கும். ஆனால் உருப்படியான காரியங்களைச் செய்வதை விட நம்முடைய முத்திரையைப் பதிப்பது அதிமுக்கியமாகிவிடுகிறது.

NCBH கையில் இருந்தது மாபெரும் சொத்து. அதை நாசமாக விட்டதே பெரிய துப்புகெட்டத்தனம். கரையான்களும் இன்ன பிறவும் தின்றது போக மிஞ்சியதை இப்படி ஒப்பேற்றுவது அசிங்கம். இதற்கு பதிலாக ஈசாப், தெனாலி ராமன், பீர்பால் கதைகள் என்று ஓட்டுவது எவ்வளவோ மேல்.

4 thoughts on “புதுப் பஞ்சாங்கம்

  1. இந்தப் பதிப்பகத்திற்கு இதே வேலை. தொ.பரமசிவன் எழுதிய அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும் புத்தகங்களை இணைத்து ஒரே புத்தகமாக்கி காலச்சுவடு பதிப்பகம் பண்பாட்டு அசைவுகள் என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து சந்தையில் கிடைக்கும்படியும் வைத்திருக்கிறது. இதற்கிடையில் தெய்வங்களும் சமூக மரபுகளும் புத்தகத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது என்சிபிஎச்(http://www.newbooklands.com/new/product1.php?catid=16&&panum=3752). ஆசிரியரிடம் கேட்டால் தனக்குத் தெரியாது என்கிறாராம். காப்பிரைட் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள் போலிருக்கிறது.

  2. பேசாமல் புடினிடம் போட்டுக்கொடுத்துவிடலாம்.

  3. புடினுக்கெல்லாம் பயப்பட மாட்டார்கள். ஸ்டாலிஸ்டான ஜெயலலிதா சொன்னால்தான் கேட்பார்கள். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து குமுறுகுமுறு என்று குமுறுய சிபிஐயின் தா. பாண்டியன் ஜெயலலிதாவிடம் பம்முவதைப் பாருங்களேன்.

  4. நியூச் செஞ்சுரிப் புக் ஹவுஸ் அவருடைய பொறுப்பில்தான் இருக்கிறதா? (இழிவுபடுத்தவும் ஒற்று பயன்படுத்தலாம்)

Comments are closed.