ஊரான் வீட்டு நெய்…

இலவச மின்னூல்கள் தரும் வலையகமான manybooks.netஐ மேய்ந்துகொண்டிருந்தபோது பழைய புத்தகங்களை நூற்றுக்கணக்கில் பார்க்க நேர்ந்தது. மீன்பிடிப்பது, சமையல், வரலாறு, மதம், துப்பறியும் கதைகள், பயண நூல்கள் என்று பல வகைப் புத்தகங்கள். ஆனால் அவற்றில் என்னைக் கவர்ந்தது அட்டை வடிவமைப்பு.

நான் பார்த்த 200 சொச்சம் பக்கங்களில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலான ஆண்டுகளில் வந்திருந்த அந்தப் புத்தகங்களின் அட்டை வடிவமைப்பில் தெரிந்த புதுமைகளையும் நேர்த்தியையும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

புத்தக வடிவமைப்பு என்பது கடந்த 30-40 ஆண்டுகளாக இருந்துவரும் விஷயம் என்று நானாக நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் இந்தப் புத்தகங்களை வடிவமைத்தவர்கள் பக்கா தொழில்முறை நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள். ஒரே காலகட்டத்தில் வந்த புத்தகங்களில் கூட அட்டை வடிவமைப்பில் தெரியும் range பிரமிப்பூட்டுகிறது. காம்பொசிஷன் பற்றிய அறிவும்தான்.

கூகிள் இமேஜஸில் தேடி எடுத்தவை, காசு கொடுத்து வாங்கிய ஸ்டாக் புகைப்படங்கள், ‘வான்கா’, டாலி, ரோசெட்டி போன்ற பிரபல ஓவியர்களின் படைப்புகள், பனித் துளி, நீர்த் துளி, பட்டாம்பூச்சி, க்ளோசப்பில் கண்கள் அல்லது புற்கள், ரோஜாப் பூ, கடற்கரை, சிறுவர்கள் என்று சப்ஜெக்ட்டுக்கு ஏற்ற cliché வடிவமைப்பைச் செய்து ஒப்பேற்றும் தமிழ்ப் பதிப்பாளர்களும் அவர்களது புத்தக வடிவமைப்பாளர்களும் இவற்றிலிருந்து தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது.

இந்தப் பகுதியிலிருந்து கணிசமான எண்ணிக்கையில் சுட்ட அட்டைகளை இங்கே தருகிறேன்.

வெறும் எழுத்துகளையும் அலங்காரத்தையும் வைத்து லேஅவுட்டின் பலத்தில் கவரும் அட்டைகள் சில; அட்டை வடிவமைப்பில் சித்திரங்கள் ஆற்றும் பங்கிற்கு சிறந்த உதாரணங்களாக சில (‘சி.ஐ.டி. சிறுவர்கள்’ புத்தகம் எவ்வளவு பளிச்சென்று இருக்கிறது பாருங்கள்); சிலவற்றில் வெறும் கோடுகளே எளிமையான அழகைத் தருகின்றன.

சில அட்டைகள் பெரிதும் ஓவியங்களை நம்பியிருந்தாலும் புத்தகத்தின் தலைப்பு, ஆசிரியர் பெயர் போன்ற விவரங்கள் உறுத்தாத இடங்களில் வைக்கப்பட்டிருப்பதால் அழகாக இருக்கின்றன. ஓரிரு வடிவமைப்புகள் இப்போதும் புரட்சிகரமாகத் தெரிகின்றன (எவற்றைச் சொல்கிறேன் என்பது பெரிதாக்கிப் பார்த்தால் தெரியும்).

நம்முடைய அட்டையின் material, எழுத்துரு, படங்களின் காம்பொசிஷன் என்று பல விஷயங்கள் வடிவமைப்பை முடிவுசெய்கின்றன. இருந்தாலும் வடிவமைப்பாளர்கள் தங்கள் தொழிலுக்குரிய நல்லறிவைப் பயன்படுத்தி இது போன்ற அட்டைகளை உருவாக்கலாம். ஓவர் டு…