உரத்த சிந்தனை: the மொழிபெயர்ப்பு

ட்விட்டரில் பாஸ்டன் பாலா ‘the’வை எப்படி மொழிபெயர்ப்பது என்று ஒரு கேள்வி போட்டிருந்தார். Theவை மொழிபெயர்ப்பதில் சிரமம் இல்லை என்றாலும் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட விதமாக அதை மொழிபெயர்ப்பது ஏன் என்று விளக்கத் தொடங்கினால் ‘கேராக’ இருக்கிறது. எனவே இந்தப் பதிவைப் பாதி விளக்கமும் பாதி ரோசனையும் பாதி மறைமுகக் கேள்விகளுமாகத் தருகிறேன்.

article என்கிற விஷயம் தமிழில் இல்லை. A, an, the ஆகியவை தம்மை அடுத்து வரும் சொற்களில் சேர்க்கும் பொருள், எண்ணிக்கை போன்ற விஷயங்கள் தமிழில் -ஐ, -கள் போன்ற பின்னொட்டுகள் அல்லது சில சமயங்களில் அவற்றின் இன்மையால், சுட்டுச் சொற்கள் மூலம் புரியவைக்கப்படுகின்றன. இந்த விநோதமான ஸ்டேட்மென்ட் பின்வரும் உதாரணங்களைப் பார்த்தால் தெளிவாகும் என்று நம்புகிறேன்.

Theவை இப்படியெல்லாம் மொழிபெயர்க்கலாம்:

1. ஐ: இரண்டாம் வேற்றுமை உருபைப் பயன்படுத்தலாம்

There was a knock on the door. He switched on the light and peered out the window.

மொ.பெ.: யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவன் விளக்கைப் போட்டு ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்.

(கதவு, விளக்கு, ஜன்னல் ஆகிய மூன்றுமே வாசகர் முன்னனுமானம் செய்யக்கூடிய விஷயங்கள்தான். விளக்கைப் போடுவது என்ற சாதாரண காரியத்தை செய்வதற்கு பதில் மேஜை டிராயரிலிருந்து துப்பாக்கி எடுத்தால் ‘ஒரு துப்பாக்கியை’ எடுத்ததாக எழுத வேண்டியிருக்கலாம்)

2. அந்த/இந்த: சுட்டுச் சொற்களைப் பயன்படுத்தலாம்

The boy was no more than six.

மொ.பெ.: அந்தப் பையனுக்கு ஆறு வயது மேல் இருக்காது.

(இங்கே ‘அந்த’ என்று எழுதுவது நடையொழுங்கிற்காகத்தான் என்று தோன்றுகிறது. வெறுமனே ‘பையனுக்கு ஆறு வயது’ என்று எழுதினால் படிக்க நன்றாக இருக்காது. இதில் ‘அந்த’ என்பது ‘நான் ஒரு முட்டாள்’ என்பதில் உள்ள ‘ஒரு’வைப் போல அடுத்து வரும் வார்த்தைக்கு ஒரு ஸ்டாண்டு போல் பயன்படுகிறது.)

You will be given a form to complete. Please handover the form to the receptionist once you complete it.

மொ.பெ.: உங்களுக்கு ஒரு படிவத்தைக் கொடுப்பார்கள். அதை/அந்தப் படிவத்தை நிரப்பியதும் ரிசப்ஷனிஸ்டிடம் சமர்ப்பித்துவிடுங்கள்.

(படிவம் முதலில் a form என்று அறிமுகப்படுத்தப்படுகிறது. பிறகு வெறுமனே form என்று குறிப்பிடப்படுகிறது. அதற்கு முன் handover என்ற வினைச்சொல் வருவதால் மொழிபெயர்க்கும்போது handover the form என்பது ‘படிவத்தை சமர்ப்பி’ ஆகிறது. ரிசப்ஷனிஸ்ட்டும் மேலே பார்த்த கதவு, விளக்கு, ஜன்னல் மாதிரிதான்.)

3. சில சமயங்களில் சும்மா விட்டுத்தான் ஆக வேண்டும்.

…the only person capable of it.

மொ.பெ.: அதைச் செய்யக்கூடிய ஒரே ஆள்…

(இதில் theவை மொழிபெயர்க்க முயன்றால் விபரீதமாக இருக்கும். அதனால்தான் யாரும் அப்படிச் செய்வதில்லை.)

The Spy Who Loved Me = என்னைக் காதலித்த உளவாளி

Conan the Barbarian = காட்டுமிராண்டி கானன்

Harry Potter and the Prisoner of Azkaban = ஹாரி பாட்டரும் அஸ்கபான் கைதியும்

a, an: சில சமயங்களில் ‘ஒரு’; சில சமயங்களில் மொழிபெயர்க்கக் கூடாது.

தமிழில் a/anஐ ‘ஒரு’ என்று பலர் மொழிபெயர்க்கிறார்கள். அது பேச்சிலும் புகுந்துவிட்டது. மேலே சொன்னது போல, ‘ஒரு’ என்ற வார்த்தை நடை ரீதியாக ஒரு ஸ்டாண்டு போல் பயன்படுகிறது. ‘நான் ஒரு முட்டாள்’ என்பதில் ‘ஒரு’வை எடுத்துவிட்டால் சுய அறிமுகம் போல் ஆகிவிடும். சிலருக்கு அந்த அறிமுகம் தேவைப்படாமல் போகலாம். வேறு சூழலில் ‘ஒரு’வைத் தவிர்ப்பது பிரச்சினையாக இருக்காது:

சூழல் அ: ‘நான்  முட்டாள், நீ முட்டாள், இன்னும் வேறு யாரெல்லாம் முட்டாள்?’ – இது பட்டியல் வடிவத்தில் இருக்கிறது.  ‘முட்டாள்’ என்ற சொல்லில் ‘கள்’ என்ற பன்மைப் பின்னொட்டு இல்லாததாலேயே அது ஒருமை என்று தெரிகிறது. இதற்கு எந்த முட்டுக்கொடுத்தலும் தேவையில்லை.

சூழல் ஆ: ‘நானும் முட்டாள், நீயும் முட்டாள்.’ – இங்கே உம்மைத்தொகை ‘முட்டாள்’ என்ற வார்த்தைக்கு சப்போர்ட்டாக இருக்கிறது. இங்கேயும் ‘ஒரு’ தேவையில்லை.

கமிங் டு த பாயின்ட்…

Do you have a pen? (vs: Do you have the pen that you stole from my desk?)

மொ.பெ.: உங்களிடம் பேனா இருக்கிறதா? (vs: என் மேஜையிலிருந்து திருடிய பேனா இருக்கிறதா? / என் மேஜையிலிருந்து திருடினீர்களே, அந்த பேனா இருக்கிறதா?)

It’s called a bowler hat.

மொ.பெ.: அதற்கு பவுலர் தொப்பி என்று பெயர்.

(இங்கே a என்பது எண்ணிக்கையைக் குறிக்கவில்லை, பவுலர் தொப்பியை அறிமுகப்படுத்துகிறது. அதனால் ‘ஒரு’ தேவையில்லை)

If you are a man (you have a dick, blah blah)

மொ.பெ.: நீங்கள் ஆண் என்றால்…

(மொட்டையாக man என்றால் இலக்கணப் பிழை. என்ன man என்று கேட்கலாம். the man என்றால் ‘வேறு யாரும் இல்லை, குறிப்பாக நீங்கள்தான்’ என்று பொருள்படும். இங்கு a எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. )

He picked up a carrot from the basket and started eating it.

மொ.பெ.: அவன் ஒரு காரட்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினான்.

(கூடையில் பல காரட்டுகள் இருக்கலாம், காரட்டுகளோடு இன்னும் பல வகைக் காய்கறிகள் இருக்கலாம், ஆனால் அவன் எடுத்தது ஒரே ஒரு காரட்டைத்தான்.)

நிற்க.

Theவை மொழிபெயர்க்க இன்னும் சில வழிகள்/உத்திகள் இருக்கலாம். அவை தட்டுப்படும்போது இந்தப் பதிவில் சேர்க்கிறேன். இலக்கணம் படித்தவர்களால் இதை இன்னும் தெளிவாக விளக்க முடியும்.

பி.கு.: ‘ஒரு’விற்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் (புதிய பதிப்பு) தரப்பட்டுள்ள ஒரு பொருள்:

‘இன்னது இப்படி’ அல்லது ‘இவர் இப்படி’ என்ற திட்டவட்டமான எண்ணத்தை வெளியிடப் பயன்படுத்தும் ஒரு சொல்; word used to mean that s.o. or sth. mentioned is a reference. இதுவும் ஒரு அழகுதான்./ இது ஒரு வீடா?/ இது ஒரு படமா?

பி.பி.கு.: உதாரண ஆங்கில வாக்கியங்கள் நானாக யோசித்துருவாக்கியவை. அசிங்கமாக இருந்தால் மன்னித்தருள்வீர். தமிழ் உதாரணங்களிலும் எடுத்துக்காட்டுவதற்காகக் கொஞ்சம் வளர்த்தி எழுதியிருக்கிறேன்.

8 thoughts on “உரத்த சிந்தனை: the மொழிபெயர்ப்பு

 1. விளக்கம் நன்றாக இருக்கிறது. புரிந்துகொள்வதற்காக மேலும் சில விஷயங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது.

  பொதுவாக articles தமிழில் இல்லை என்றாலும் ஆங்கிலத்தில் articles செய்கிற அதே வேலையை தமிழில் எவை செய்கின்றன என்பதைப் பார்க்கவேண்டும்.

  நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல a/an க்கு உரிய இடங்களில் ஒரு/ஓர் எனப் பயன்படுத்துகிறோம். சில இடங்களில் அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியம். சில இடங்களில் மொட்டையாக விட்டுவிடலாம்.

  அதைப் போலவே the க்கு சில இடங்களில் மட்டும் அந்த, இந்த.. என்றச் சொற்களைப் பயன்படுத்தலாம். மற்ற இடங்களில் அது தேவையில்லை.

  a, an, the போன்ற articles இலக்கண ரீதியிலான பங்கை வகிக்கின்றன. அவை நேரடியான அகராதி பொருள்களில் புரிந்துகொள்ளப்படுவதில்லை. அவற்றின் பயன்பாட்டைப் புரிந்துகொள்ளும் போது, பின்வரும் இரண்டு அம்சங்களைப் புரிந்துகொள்வது நலம்:

  1. மரபு வழக்காறு
  2. உரைச்சூழல் வழக்காறு

  உதாரணமாக, the President என்று தான் எழுத வேண்டும் என்கிறார்கள். இது மரபு வழக்காறு. தமிழில் மொழிபெயர்க்கும் போது இத்தகைய இடங்களில் the மொழிபெயர்ப்புக்குட்படாது. the Sun என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது, ஓரே ஒரு சூரியன்தான் உலகத்துக்கெல்லாம் என்கிற புரிதலில் சொல்லப்படுகிறது. இது போன்ற இடங்களிலும் the தமிழில் மொழிபெயர்ப்பாகாது.

  உரைச்சூழல் வழக்காறு என்பதை பின்வருமாறு விளக்கலாம்: ஒரு உரை அல்லது பேச்சு அல்லது விவரணையின் போது, அந்த சூழலில், ஒரு குறிப்பிட்டப் பொருள் அல்லது அம்சமானது பேசுபவர், கேட்பவர் இருவருக்கும் முன்பே தெரிந்த நிலையில் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து articles பயன்படுத்தப்படலாம்.

  I saw a tiger in this morning என்ற வாக்கியத்தில் a என்பது இந்த வாக்கியத்தைச் சொல்பவர் முதன் முதலாக புலியைப் பற்றி பேச்சு எடுக்கிறார் என்று தெரிகிறது. அவர் புலியைப் பார்த்த சமாச்சாரமே கேட்பவருக்குத் தெரியாது. இது முன்குறிக்கா நிலைச் சுட்டல் (indefinite).

  The tiger is very big in size என்று அடுத்த அவர் தொடர்ந்து பேசும் போது, முதலில் சுட்டிக்காட்டியப் புலியைப் பற்றித்தான் இப்போது அவர் குறிப்பிடுகிறார் என்று தெரிந்துவிடுகிறது. இது முன்குறித்த நிலைச் சுட்டல் (definite).

  இந்த இடங்களில் articles மொழிபெயர்ப்பாகும். இங்கே உரைச்சூழல் தெளிவாக இருவித சுட்டல்களை ஒன்றுக்கொன்று தொடர்ச்சியாக வெளிப்படுத்துகிறது. அதாவது, முன்குறி்க்காத நிலையைத் தொடர்ந்து, முன்குறித்த நிலை வருகிறது. இங்கே the என்ற சொல்லுக்கு நிகராக தமிழில் வேறு ஏதும் சொல்ல முடியாவிட்டாலும், அதற்கு இணையாக ‘அந்த’ என்று சுட்டுச்சொல்லைப் பயன்படுத்துகிறோம். the க்கு நேரடி மொழிபெயர்ப்பு’அந்த’ அல்ல. மாறாக the க்கு பதிலாக ‘அந்த’ என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். அவ்வளவே.

  ஆனால், வேறு ஒரு சூழலை எடுத்துக்கொள்ளுங்கள்.

  நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில், I want to meet the manager என்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரிடம் பேசுகிறீர்கள் என்றால் நீங்கள் எந்த நிர்வாகியைக் குறிக்கிறீர்கள் என்று அவருக்கு தெரிந்திருக்கும் நிலையில் பேசுகிறீர்கள் என்று ஆகிறது. அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் நீங்களும் அந்த உதவியாளரும் அந்த நிர்வாகியும் முன்பே ஒருவருக்கொருவர் தெரிந்த நிலையில், the manager என்று குறிப்பிட்டால் யார் அவர் என்பது கேட்பவருக்கும் சொல்பவருக்கும் தெரியும் என்று அர்த்தமாகிறது.

  ஆங்கிலத்தில் இது போன்ற சூழலிலும் the வரும். தமிழிலோ இது போன்ற உட்கிடைச் சூழலில், the மொழிபெயர்ப்பாகாது.

  வெளிப்படையாக, முன்குறிக்காத நிலையைத் தொடர்ந்து முன்குறித்த நிலை பேச்சுச் சூழலில் தோன்றும் போது மட்டுமே, the தமிழில் அந்த என்றச் சொல்லாக மாறும்.

  வழக்காறு சார்ந்த விதிவிலக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். மற்றபடி வேறு இடங்களில் the மொழிபெயர்ப்பாகாது.

  மற்றபடி cat க்கு ‘பூனை’ போல, the க்கு ‘அந்த’ நேரடி மொழிபெயர்ப்பல்ல.

 2. சூப்பர் பதிவு, சூப்பர் பின்னூட்டம். இந்த Theஐ வைத்து இன்னொரு குழப்பம். ஆங்கிலத்தில் வாசிக்கும்போது, எந்த இடத்தில் “தி” என்று வாசிக்க வேண்டும், எந்த இடத்தில் “த” என்று வாசிக்க வேண்டும்?

 3. சிம்பிள் சூத்திரம்: உயிரோசைக்கு முன்னால் வரும் போது, தி. எடுத்துக்காட்டு- தி எர்த்; மெய்யொசைக்கு முன்னால் வரும்போது த. எடுத்துக்காட்டு – த ஸ்கை

  மேலும் சில எடுத்துக்காட்டுகள்: தி ஆப்பிள், தி ஐஸ் கிரீம், த கார், த கம்ப்யூட்டர்…

 4. செந்தில், அருமையான, தெளிவான விளக்கம். இப்படி நான் எழுதியிருக்கலாமே என்று நினைக்கவைக்கிறது. :-) Definite, indefinite artcielsக்கான தமிழ் இணைச் சொற்கள் அருமை. உங்கள் சொல்லாக்கமா?

 5. நம்ம சொல்லாக்கம்தான். ஆனால் அதை விட சிறப்பான சொல்லாக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

 6. நன்றி கட்டியக்காரன். அவ்வப்போது உசுப்பிவிட்டால் நிறைய படித்து எழுதி பகிர்ந்துகொள்ளலாம்;-)

Comments are closed.