ஆ*** மேலாண்மை

ஹெச்.பி.ஓ., ஸ்டார் மூவீஸ், சோனி பிக்ஸ், ஜீ கஃபே ஆகிய ஆங்கிலத் திரைப்பட சானல்கள் படங்களுக்கு சப்டைட்டில் போடத் தொடங்கியதும் வீட்டில் ஆங்கிலப் படம் பார்ப்பது அதிகரித்துவிட்டது (சூப்பர் சிங்கர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, டோராவின் பயணங்கள், சூப்பர் சுஜி உட்பட்டவை போக மிஞ்சிய நேரத்தில்).

இந்த சானல்களில் வன்முறையை விலாவரியாகக் காட்டிவிட்டு கெட்ட வார்த்தைகளை சென்சார் செய்கிறார்கள். அவை வரும்போது அவற்றை நறுக்கிவிடுகிறார்கள். பிரபல நாலெழுத்து வார்த்தையை வெட்டுகிறார்கள். ஷிட், ஆஸ் போன்ற வார்த்தைகளை வெட்டுவது போல் தெரியவில்லை. ஆனால் இந்த சென்சார் வேலை சப்டைட்டில் போடும்போது பெரிய தொல்லையாக இருக்கும் போல.

எல்லா சானல்களும் ஒரே மாதிரியான வடிகட்டி மென்பொருளைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது. அதனால் எல்லோரும் ஒரே மாதிரி சொதப்புகிறார்கள். ஷிட்-ஐ crap என்ற சொல்லால் மாற்றீடு செய்கிறார்கள். ஃபக், ஆஸ், செக்ஸ், ப்ராஸ்டிட்யூட் உள்ளிட்ட பல சொற்கள் சப்டைட்டிலில் வருவதே இல்லை. வசனத்தில் அந்தச் சொற்கள் வரும் இடத்தைக் காலியாக விட்டுவிடுகிறார்கள். விளைவு வேடிக்கையாகவும் சமயத்தில் எரிச்சலாகவும் இருக்கிறது.

சென்சார் செய்வது என்று வந்துவிட்ட பின் மாற்றீடு செய்வது நல்ல உத்திதான். ஆனால் சப்டைட்டிலை அரைகுறையாக்குவது முட்டாள்தனம். இத்தனைக்கும் ஹெச்.பி.ஓ. ‘செக்ஸ் அண்ட் த சிட்டி’ தொடரை வேறு ஒளிபரப்பிக்கொண்டிருந்தது.

இந்த சானல்கள் திரையிடுவதற்கான படங்களை வசனத்தில் வரும் கெட்ட வார்த்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தாலும் ஆச்சரியமில்லை. அந்த மாதிரி வடிகட்டினால் தேறாத நல்ல படங்களில் சில: Casino, Goodfellas, Pulp Fiction, True Romance…

பல்வேறுபட்ட கெட்ட வார்த்தைகள் மானாவாரியாகப் பேசப்படும் Good Will Huntingஐயும் The Departedஐயும் சமீபத்தில் சில சானல்களில் அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். நானும் பார்த்தேன். சப்டைட்டிலைப் படிப்பது இடையிடையே இம்சையாக இருந்தது.

சென்சார் செய்து தொலைத்தே ஆக வேண்டும் என்றால் குறைந்தது மாற்றீட்டையாவது ஒழுங்காகச் செய்யலாமல்லவா?

தொடர்பான மேட்டர்கள்:

2 thoughts on “ஆ*** மேலாண்மை

  1. சூப்பர். பேமிலி கய் கேள்விப்பட்டிருக்கேன். இப்பத்தான் பாக்குறேன். இலேரியசு!

Comments are closed.