1½ மாசத்துக்கு அப்பால…

1. சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் புண்ணியத்தில் பல்வேறு மெகா நிறுவனங்களின் உள்ளூர்மயமாக்க (வேறு வார்த்தை கிடைக்கும் வரை இதுதான் localisation) முயற்சிகளைப் பார்க்க நேர்ந்தது.

Unknown error uploading file to the server என்பதை “அறியாத பிழை ஒன்று கோப்பை சர்வருக்கு பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறது” என்பது போல் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் தரத்திலான தமிழாக்கங்கள் புதிதல்லதான். ஆனால் இந்த மாதிரி வேலையைப் பல்வேறு துறைகளில் எக்கச்சக்கமான மொழிபெயர்ப்பாளர்கள் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இவர்கள் படுபிஸி!

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, மோட்டரோலா, யாஹு, கூகிள், சில மருந்து நிறுவனங்கள் உட்படப் பல பெரிய நிறுவனங்கள் தங்கள் மென்பொருட்களை இந்திய மொழிகளுக்குப் பெயர்த்துக்கொண்டிருக்கின்றன. இந்த மொழிபெயர்ப்புகளில் குறைந்தது பாதிக்கு மேல் கண்ணில் ஒற்றிக்கொள்கிற வகைதான்.

என்னுடைய சில வருட அனுபவத்தில் பார்த்த வரை எந்த நிறுவனத்திற்கும் தரத்தைப் பற்றிக் கவலை இருப்பது போல் தெரியவில்லை. நிறைய செலவு செய்து சிக்கலான மொழிபெயர்ப்புக் கருவிகளையெல்லாம் பயன்படுத்தி இவை உற்பத்தி செய்வது பெரும்பாலும் பயன்படுத்த முடியாத சரக்கை. இந்திய மார்க்கெட் பக்கம் வருவதற்கு முன்பே இந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு ஐரோப்பிய, அரபு, தென்கிழக்காசிய மொழிகளில் பயனர் கையேடுகளைத் தயாரித்திருக்கின்றன. எங்கள் சரக்கு இந்த மொழியிலும் கிடைக்கும் என்ற அளவில்தான் அவற்றின் இந்திய மொழி முயற்சிகளும் இருக்கின்றன. இது ‘web presence’ மாதிரி ஒப்புக்கு செய்கிற விஷயம்.

இப்போதைக்கு எந்தப் பயனரும் தமிழில் விண்டோஸையோ நோக்கியாவையோ பயன்படுத்துவார்களா என்று தெரியவில்லை. ஒரு ஆசைக்காகத் தமிழ் வடிவத்தைப் போட்டுப் பார்ப்பவர்கள் பூர்ணம் விஸ்வநாதன் பாணியில் ‘அய்யிய்யோ என்னதிது’ என்று அருவருப்படைவது திண்ணம் (சைடு: எனக்குத் தெரிந்த ஒரு இளம் தமிழ் எம்.ஏ. ‘Favorites’ என்பதை ‘அருவெறுப்புகள்’ என்று மொழிபெயர்த்தார்).

Digital divide என்கிறார்களே, அந்தப் பிளவைக் குறைப்பதில் இந்த நிறுவனங்களுக்கு எந்தப் பங்கும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் புரியும்படியான மொழியில் எழுத இவர்களுக்கு ஆள் இல்லை. 200 டாலர் கணினி போன்ற முயற்சிகளுக்குக் கூடத் தமிழும் தெரியாமல் ஆங்கிலமும் தெரியாமல் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகுமா?

இரண்டாவது பத்தி உதாரணத்தில் இருப்பது போல் மொழிபெயர்ப்பவர்கள் ஒரு வகை; ‘பலுக்கல்’, ‘புகுபதிகை’, ‘மணற்பெட்டி’ என்று தமிழார்வத்தை மட்டும் தகுதியாக வைத்துக்கொண்டு தமிழ் இணைய, மென்பொருள் பயனர்களுக்குப் பயன்படாத நடையில் மொழிபெயர்ப்பவர்கள் ஒரு வகை; Zoom in என்பதை ‘கிட்டே பார்‘ என்று தமிழாக்கும் செல்ஃப் கன்ஃபெஸ்டு தமிழறிஞர்கள் ஒரு பக்கம்; சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் தமிழ் வார்த்தைகளுக்குக் கூட ஸ்பெல்லிங்கும் பொருளும் தெரியாத ஆட்களை மொழி நிபுணர்களாக வைத்துக்கொண்டு மொழிபெயர்ப்புப் பணிகளை மேற்பார்வை செய்யும் மென்பொருள் எம்.என்.சி.கள் ஒரு பக்கம்; இப்படி எல்லோரும் மானாவாரியாகத் தமிழ்ச் சேவை செய்தால் தமிழ் என்னத்துக்கு ஆகும்?

2. NSFW! மருத்துவ மேட்டர் ஒன்றை மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்போது தமிழ் இணையப் பல்கலைக்கழக வலையகத்தின் மருத்துவ அகராதியைக் கொஞ்சம் பார்க்க வேண்டியிருந்தது. அதில் vagina என்ற வார்த்தைக்குக் கொடுக்கப்பட்டிருந்த இணைச் சொற்கள் என்னைத் ‘துணுக்குற’ச் செய்தன. அவை: புணர்புழை, பு * டை.

முதல் வார்த்தை பயங்கர செக்ஸிஸ்டாகத் தெரிகிறது. இரண்டாவது வார்த்தை அந்தக் காலத்தில் எப்படியோ, இப்போது பக்கா கெட்ட வார்த்தையாகப் பயன்படுத்தப்படுவது தெரிந்த விஷயம். ஒரு பல்கலைக்கழகம் எப்படி இதை அனுமதிக்கிறது?

3. நம்மூர் மொழிபெயர்ப்பாளர்களிடம் ஒரு பெரிய பிரச்சினை, அவர்கள் படிக்கும் தமிழுக்கும் எழுதும் தமிழுக்கும் இடையிலுள்ள மாபெரும் இடைவெளி. ஆங்கிலத்தைப் பொறுத்த வரை அதைப் படிக்காததுதான் பிரச்சினை. ஆங்கில நாளேடுகள், பத்திரிகைகள், புத்தகங்கள் என்று எதையும் தொடாமல் கிடந்தால் கஷ்டம்தான். அதனால்தான் மிக அடிப்படையான phrasal verbகள் எல்லாம் தெரியாமல் போகிறது. சாம்பிள் மொழிபெயர்ப்பு: Get to the File menu –> கோப்பு மெனுவை பெறவும்.

இந்த மாதத்திற்கு இவ்வளவுதான்.

8 thoughts on “1½ மாசத்துக்கு அப்பால…

 1. //பலுக்கல்’, ‘புகுபதிகை’, ‘மணற்பெட்டி’ என்று தமிழார்வத்தை மட்டும் தகுதியாக வைத்துக்கொண்டு தமிழ் இணைய, மென்பொருள் பயனர்களுக்குப் பயன்படாத நடையில் மொழிபெயர்ப்பவர்கள் ஒரு வகை//

  தமிழ் விக்கி திட்டங்கள் மீது இத்தகைய விமர்சனத்தைத் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இயன்ற அளவு இலகுவான நடைக்கு மாற்ற முயல்வோம்.

  நிறுவனங்கள் காசு கொடுத்து வேலைக்கு வைக்கும் அரை குறை மொழிபெயர்ப்பாளர்களைக் காட்டிலும் திறந்த அடிப்படையில் திறமூல மென்பொருட்களுக்கு செய்யும் தமிழாக்கங்களில் இன்னும் கூடிய தரத்தை எட்ட முடியும் என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம், ஒரு மொழிபெயர்ப்பு படு கேவலமாக இருந்தால் அதைத் திருத்தும், அது குறித்து உரையாடும் வாய்ப்பாவது உண்டு.

 2. புகுபதிகை என்பதை மைக்ரோசாஃப்டின் மொழிப்பெயர்ப்பில் உள்நுழை என்றுள்ளது (Browse – மேய் Browsing – மேய்தல், Browser- மேய்வான்; நல்லா இருக்கு இல்ல ? ). தமிழ் விண்டோஸ் XPஐயும் தமிழ் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ்’ஐயும் தமிழ் CAT ஆண்டிவைரஸ்’ஐயும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பயன்படுத்தி வருவதால், அதில் ஓரளவுக்கு நல்ல மொழிப்பெயர்ப்புகளே கையாளப்பட்டுள்ளன என்பதை நிச்சயமாக கூற முடியும். சில சொற்கள் மட்டுமே நேரடியான காமடியான மொழிப்பெயர்ப்புகள்(அவற்றை மன்னித்து விடலாம். :– ஏதோ ஆர்வக்கோளாரில் மொழிப்பெயர்த்ததாக இருக்கும்). தமிழ் நோக்கியா மொபைல் மென்பொருள் பற்றி அறியேன. என்னிடம் நோக்கியா மொபைல் ஃபோன் இல்லை :-( . எனவே இவற்றை வைத்து ‘அய்யிய்யோ என்னதிது’ என்ற கமண்ட் அடிப்பது கொஞ்சம் ஓவர். ஒன்றும் இல்லாததுக்கு ஏதோ உள்ளது எவ்வளவோ மேல்

 3. உங்களின் இந்த இடுகை குறித்த தமிழ் விக்கிபீடியா உரையாடலைக் காணலாம்.

  wordpress தமிழாக்கம் போது நான் உணர்ந்த ஒன்று – என்ன தான் திறமாகத் தமிழாக்கம் செய்தாலும் பிற மொழி சொல் அமைப்புகள், syntaxகளுக்கு கட்டுப்பட்டு ஓரளவு தான் தமிழாக்கம் செய்ய முடிகிறது. on, by போன்ற சொற்களை மட்டும் தமிழாக்கச் சொல்லி, அந்தச் சொற்களைப் பல சூழல்களிலும் பயன்படுத்தும் போது தமிழாக்கம் வேடிக்கையாகப் போய் விடுகிறது. இயல்பான தமிழ் நடை வரவேண்டுமென்றால் வேற்று மொழியில் இருந்து தமிழாக்காமல் தமிழையே முதல் மொழியாகக் கொண்டு நிரல் அறிவிப்புகள், கையேடுகள் எழுதினால் மட்டுமே சாத்தியமாகும்.

 4. நீங்க subscribe to comments நீட்சி போட்டா நல்லா இருக்கும். நீங்க என்னென்ன நீட்சிகள் பயன்படுத்துறீங்கங்கிறதையும் ஒரு பட்டியலா தந்தா நல்லா இருக்கும். உங்க பதிவை IEல் இருந்து பார்த்தா firefox இல்லாயான்னு கேட்கும் நீட்சி எங்க கிடைக்கும்?

 5. விக்கிபீடியா தமிழாக்கத்திற்கு எதுவும் பங்களிக்காத பட்சத்தில் விமர்சிப்பதில் பயனில்லை என்று நினைத்துவந்ததால்தான் விமர்சிக்காமல் இருந்தேன். ஆனால் சமீபத்தில் வேறு சில சந்தர்ப்பங்களில் கிடைத்த கசப்பான மொழி அனுபவங்களால் மனதில் அடக்கி வைத்திருந்ததையெல்லாம் கொட்டி மண்ணை வாரியடித்து சாபம் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் மணல்பெட்டியை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது!

  விக்கிபீடியா உரையாடலைப் பார்த்தேன். நான் பேச்சு மொழிக்கு நெருக்கமான எழுத்து நடையில் நம்பிக்கை கொண்டிருப்பதால் சில சமயங்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறேன். ‘கார்ப்பரேட் மொழிபெயர்ப்பு’ என்பதில் உள்ள கிண்டல் அதைத் தமிழில் எழுதினால் வராது என்று நினைக்கிறேன். ‘செல்ப் கன்பெஸ்டு’ போன்ற பிரயோகங்களும் அப்படித்தான். எந்த மொழியிலும் எந்த மொழியையும் கலந்து எழுதக் கூடாது என்று நான் நினைக்கவில்லை. அது அபத்தமாக இல்லாதிருந்தால் சரி.

  இன்னொன்று தெரியுமா, POEdit-இல் வேர்ட்பிரஸ் தமிழாக்கம் செய்யத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில், இது நடக்கிற காரியம் இல்லை என்று உணர்ந்து நிறுத்திவிட்டேன். தமிழாக்கம் முடிந்த பின் அதை இந்த வலைப்பதிவிலேயே விநியோகிக்கலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்தேன். ஆனால் ‘இடைமுக’த்தை ஆங்கிலத்தில் எழுதியவர்கள் அதை மொழிபெயர்ப்பிற்கு இடம் கொடுக்காத வகையில் எழுதியிருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் “translatability” ரொம்ப முக்கியம் என்பார். அதுவும் ஒரு பிரச்சினை. மாறிகளின் இடத்தை மாற்றினால் தகராறு என்கிறபோதே மொழிபெயர்ப்பின் தரம் அடிபடுகிறது. வேற்றுமை உருபுகளும் இன்ன பிறவும் தனிச் சொற்களாக வரும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுதப்படும் ‘இடைமுக’ சமாச்சாரங்களைத் தமிழ் போன்ற ஒரு மொழியில் கொண்டுவருவது ரொம்பச் சிக்கல்.

 6. கருத்துச் சந்தா விரிவாக்கம்தானே? :-)) போ்ட்டுவிடுகிறேன். ஆனால் இங்கே அபூர்வமாகத்தான் பின்னூட்டங்கள் இடப்படுகின்றன. அதற்காக ஏன் மெனக்கெட வேண்டும் என்று பார்த்தேன்! ப்ளக் இன் பட்டியலையும் போடுகிறேன்.

  *** ரவி, இன்ரநெற் எக்ஸ்புளோரர் பயனர்களைக் கடிந்துகொள்ளும் நீட்சி கிடைக்குமிடம்: http://www.red-root.com/wordpress/wp-plugin-get-firefox-banner/

  மிக அடிப்படையான சில நீட்சிகளைத்தான் பயன்படுத்துகிறேன். அவையாவன:

  ‘Get Firefox’ Banner
  Admin Theme Preview
  Dashboard Editor
  FeedBurner FeedSmith
  MiniPosts 2
  OneClick Installer
  Terong Related Links
  WordPress.com Stats
  Youtube Brackets
  Smart Archives (இதை இனிமேல்தான் இயக்க வேண்டும்)

 7. வணக்கம் வினோத் ராஜன், “ஒன்றும் இல்லாததுக்கு ஏதோ உள்ளது எவ்வளவோ மேல்” என்பதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லாததால்தான் இவ்வளவு பேசுகிறேன். மைக்ரோசாஃப்ட், நோக்கியா மாதிரி நிறுவனங்களின் தயாரிப்புகளுடைய மொழிபெயர்ப்பில் நானும் கொஞ்சம் சம்பந்தப்பட்டிருக்கிறேன். அதனால் வயிற்றெரிச்சல் இன்னும் அதிகமாக இருக்கும்.

Comments are closed.