கார்ப்பரேட் மொழிபெயர்ப்பு – 1

பெரிய சைஸ் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடும்போது ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்:

1. ஒரு வாக்கியத்தை மொழிபெயர்த்த பின் அது மீண்டும் வரும் இடங்களிலெல்லாம் திரும்ப மொழிபெயர்ப்பது/தட்டச்சு செய்வது. இது எரிச்சலான, நேரத்தை வீணடிக்கும் வேலை மட்டுமில்லை, கொஞ்சம் உஷாராக இல்லை என்றால் அந்த வாக்கியத்தை வேறு மாதிரி மொழிபெயர்த்துவிட வாய்ப்பிருக்கிறது. தப்பில்லைதான், ஆனால் ஒரு ஆங்கிலப் பதத்திற்கு முதல் முறை அழகாக மொழிபெயர்த்துவிட்டு இரண்டாம் முறை ஞாபகமில்லாமல் சுமாரான இணைச் சொல்லைப் போட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

2. பதங்களை மொழிபெயர்ப்பதில் முரண்பாடு ஏற்படலாம். இரண்டாம் பக்கத்தில் (தொழில்நுட்ப) support என்பதை ‘உதவி’ என்று மொழிபெயர்த்த பின் பதினாறாம் பக்கத்தில் ‘ஆதரவு’ என்று வேறு வார்த்தை போட்டுவிடலாம். அந்த வேலையைப் பல பேர் சேர்ந்து செய்யும்போது இந்தப் பிரச்சினை ரொம்ப சாதாரணமாக ஏற்படுகிறது.

என் freelance அனுபவத்தில் இந்த இரண்டு தவறுகளையும் தவிர்ப்பதே பெரிய வேலை. மொழிபெயர்ப்புப் பணியில் கணிசமான வேலையையும் நேரத்தையும் குறைக்கும் மொழிபெயர்ப்பு நினைவக (translation memory) மென்பொருட்கள் ஃப்ரீலான்சர்களுக்குக் கிடைப்பதில்லை.

குறைந்த வசதிகளுடன் இலவசமாகக் கிடைக்கும் Wordfast-க்குத் தமிழ் யூனிகோடு என்றாலே ஆகாது. மற்ற இலவசங்களில் நம்பிக்கை ஏற்படுவதில்லை.

சமீபத்தில் Trados என்ற மொழிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தத் தொடங்கியபோது இந்தப் பற்றாக்குறையை இன்னும் தீவிரமாக உணர்ந்தேன். ட்ரடோஸ் மிகப் பிரபலமான, படு காஸ்ட்லியான, ஏராளமான வசதிகளைக் கொண்ட மிகச் சிக்கலான ஒரு மென்பொருள். பெரிய நிறுவனங்கள் பல பெரிய சைஸ் மொழியாக்கப் பணிகளுக்கு ட்ரடோஸைத்தான் பயன்படுத்துகின்றன.

இதைக் காசு கொடுத்து வாங்கும் ஃப்ரீலான்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள் பெரும் பணக்காரராகளாக இருப்பார்கள். நான் அலுவலகப் பணிக்கு மட்டும் பயன்படுத்துகிறேன். நான் பண்ணும் ஃப்ரீலான்ஸிங் முழுக்க முழுக்க மனித உழைப்பினால் உருவாவது.

சுமார் 3000 வார்த்தைகள் கொண்ட ஒரு பணியில் 30 சதவீதத்தை ட்ரடோஸ் குறைத்தது. மொழிபெயர்ப்பு நினைவகக் கருவிகள் பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஒரு சின்ன உதாரணம்:

ஐந்து வசதிகள் கொண்ட ஒரு நிரலுக்கான ஒரு உதவிக் கோப்பை மொழிபெயர்க்கிறீர்கள். அதில் ஒவ்வொரு வசதிக்கும் தனித்தனியாக உதவிக் குறிப்புகளை எழுத வேண்டும் என்றால் –

To enable this option, go to Start > Programs > SmartDisk > SmartDisk Settings, and then select the Prompt for Administrator password checkbox.

என்று ஒரு வாக்கியம் வந்தால், இட்டாலிக்ஸில் இருக்கும் பகுதி மிச்ச நான்கு வசதிகளுக்கும் ஒவ்வொரு முறையோ அதற்கு மேலோ வரும். ஒவ்வொரு வாக்கியமும் ஒரு பகுதி (segment). ஒரு பகுதியை மொழிபெயர்த்துவிட்டு அதை மூடியதும் அது மொழிபெயர்ப்பு நினைவகத்தில் சேர்கிறது. இது ஒரு வகை தரவுத்தளம். மூல மொழிச் சரங்களும் (strings) அவற்றுக்கு இணையான இலக்கு மொழிச் சரங்களும் இதில் வைக்கப்பட்டு, வேலை நடக்கும்போது புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும். இந்த வேலையை வேர்டில் லட்டு மாதிரி செய்யலாம்.

ட்ரடோஸ் போன்ற கருவிகள் இப்படி முக்கால்வாசி அல்லது 100% பொருததம் வரும்போது பொருந்தும் வாக்கியத்தைத் தாமாகவே நாம் தட்டச்சு செய்ய வேண்டிய இடத்தில் நிரப்புகின்றன. ஒட்டப்பட்ட வாக்கியத்தைத் தேவைகேற்ப திருத்திக்கொள்ளலாம், அல்லது 100% மேட்ச் என்றால் அதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம். (கூகிள் இமேஜஸ் உடந்தையுடன் சட்ட விரோதமாக சுட்ட ட்ரடோஸ் திரைக்காட்சி கீழே. க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள்.)

tw.gif

(ட்ரடோஸ், வேர்ட்ஃபாஸ்ட் மற்றும் பிற மொழிபெயர்ப்புக் கருவிகள் ஆங்கிலமல்லாத மொழிகளுக்கு யூனிகோடைத்தான் எடுத்துக்கொள்கின்றன. TTF எழுத்துருக்கள் எடுபடாது.)

கணினி உதவியிலான மொழிபெயர்ப்பு வளர்ந்துகொண்டிருக்கும்போது can பெரியண்ணன் be far behind? மைக்ரோசாஃப்ட் ஹீலியம் என்ற கருவி அந்த நிறுவனத்தின் ‘உள்ளூர்மயமாக்க’ வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது (மென்பொருள் உள்ளூர்மயமாக்கப் பணிகளுக்காகத் தப்புகளைப் பல விதமாகத் தேடிக் கண்டுபிடித்து ஸ்கிரீன்ஷாட்களில் முன்னோட்டம் பார்க்கவெல்லாம் குட்டிக் கருவிகள் வைத்திருக்கிறார்கள்).

ஃப்ரீலான்ஸ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு செய்கிற தப்பை ஒரே மாதிரி செய்யக் கூட ஒரு நல்ல கருவி இல்லை.

பி.கு. 1: Lingotek என்ற ஆன்லைன் மொழிபெயர்ப்பு நினைவகச் சேவை ஒன்று இருக்கிறது. அதை இனிமேல்தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

பி.கு. 2: இந்தக் கருவிகள் இலக்கியத்தை மொழிபெயர்க்க அதிகம் உதவாது.