ஃபயர்வால் ஒழிக

க்யூபிக்கிள் கலாச்சாரத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் க்யூபிக்கிள்வாசிகளுக்கு இணைய வசதியை முடக்கிவைப்பது. பல நிறுவனங்கள் அலுவலகத்தில் சில வலையகங்களைத் தடுக்கின்றன. குறிப்பாக மின்னஞ்சல் சேவை வழங்கும் வலையகங்களையும் வலைப்பதிவுகளையும்.

சில வலையகங்களை நேரடியாகவும் சிலவற்றை வார்த்தைகளை வைத்தும் (எ.கா.: சைட் முகவரியில் *blog*, download, cricket போன்ற சொற்கள் வந்தால்) தடுக்கிறார்கள். ஆனால் நிரல் தேடித் திருடுவதற்குப் பயன்படுவதாலோ என்னவோ கூகிளை விட்டுவைக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் செய்தி வலையகங்களை அலவ் பண்ணுகின்றன.

அலுவலகத்தில் cricinfo, youtube, metacafe, meebo என்று மானாவாரியாகப் பயன்படுத்திக் குவிக்கும் முதிர்ச்சியற்ற கிராக்கிகள் தணிக்கை செய்வதை ஊக்குவிக்கிறார்கள். அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நல்லவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் அலுவலகத்தின் உலோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருக்கும் அலுவலகக் கோப்புகளை எடுத்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வலைப்பதிவுகளையும் செய்தியோடை வசதியுள்ள வலையகங்களையும் அலுவலகத்தில் பார்க்க இரண்டு எளிய வழிகள்:

பார்க்க விரும்பும் வலைப்பதிவின் பெயரை கூகிளில் போட்டுத் தேடலாம். முடிவுகள் பக்கத்தில் வரும் அந்த வலைப்பதிவின் முகவரியை நேரடியாக க்ளிக் செய்தால் நிறுவன அகழி (ஃபயர்வால்தான்) தடுக்கும். Cached என்ற இணைப்பைப் பார்த்தால் அந்த வலைப்பதிவை அல்லது வலையகத்தைப் பார்க்கலாம். இதில் எப்போதுமே புதிய பக்கங்களைப் பார்க்க முடியாது.

அதை விட நல்ல உத்தி, வேண்டியதை மின்னஞ்சலில் வரவழைப்பது. நாம் பார்க்க விரும்பும் வலையகத்திற்கு RSS வசதி இருந்தால் அதை மின்னஞ்சலில் பெற மிகச் சுலபமான ஒரு வழி rssfwd. கூகிள் காஷில் எடுத்த பக்கத்தில் RSS/Atom முகவரியை நகலெடுத்துக்கொண்டு, rssfwd-இல் கொடுத்து நமது மின்னஞ்சல் முகவரியையும் தந்துவிட்டால் முடிந்தது வேலை. அப்புறம் Alt+Tab திருவிழாதான்.

(மின்னஞ்சல் முகவரி என்றால் கம்பெனியார் நம்மபெயர்.அப்பாபெயர்@நிறுவனம்.காம் என்கிற ரீதியில் ஒதுக்கித் தரும் ‘ஆபீஸ் ஐ.டி.’ சில கம்பெனிகள் ஆபீஸ் ஐ.டி.க்கு பணிசாரா மின்னஞ்சல் வருவதை விரும்புவதில்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் மின்னஞ்சலைப் பயன்படுத்த, ஜிமெயிலின் RSS-ஐ கூகிள் ரீடரில் சேர்த்துப் பார்க்கலாம். கூகிள் ரீடரை அவ்வளவாக யாரும் தடை செய்வதில்லை. Disclaimer: இதை நான் முயற்சி செய்து பார்த்ததில்லை.)

2 thoughts on “ஃபயர்வால் ஒழிக

  1. ஆக்ச்சுவலி, ஆபீஸ் வேலை நடக்கும் விண்டோவுக்கும் பிரவுசருக்கும் தாவத்தான் ஆல்ட் – டாபு.

Comments are closed.