திருட்டு மொழிபெயர்ப்பு…

700 பக்கங்களுக்கு மேல் கனக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை மொழிபெயர்க்க எவ்வளவு காலம் ஆகும்? நேர்மையாக உழைத்தால் ஒரு வருடம் ஆகலாம்.

லேட்டஸ்ட் ஹாரி பாட்டர் தலகாணியை மொழிபெயர்க்க ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூன்றே நாட்கள்தான் தேவைப்பட்டிருக்கின்றன. புத்தகம் வெளிவந்த நான்காவது நாள் ஸ்பானிஷ் மொழியில் PDF வடிவில் வந்துவிட்டன.

இந்த மொழிபெயர்ப்பை ஒரு குழுவாகச் செய்திருக்கிறார்கள் என்றாலும் மூன்று நாட்கள் என்றால் நம்ப முடியவில்லை (குழுவில் எத்தனை பேரோ). மொழிபெயர்ப்பின் தரம், பலர் செய்வதால் ஏற்படும் ஒழுங்குப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் தெரியவில்லை.

நிற்க. பார் புகழும் தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரை புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்படச் சில வாரங்கள் ஆகும். காசு கொடுத்து வாங்குவதற்கு மனசு வர அல்லது இரவல்/திருட்டுக் கொடுக்கும் ஆளைக் கண்டுபிடிக்கச் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும். அதற்குப் பின் மொழிபெயர்ப்பில் (குழுவாக) இறங்கினால் சில மாதங்கள் ஓடும். கடைசியில் அந்தக் கலாச்சாரம் பற்றிய குறைந்தபட்சப் புரிதல் கூட இல்லாமல் ஒரு மொழிபெயர்ப்பு ஒப்பேற்றப்பட்டிருக்கும். ஆனால் நம்மூர்க் குழந்தைகள் இது வரை அதிர்ஷ்டசாலிகள்தான்.