ஃபயர்வால் ஒழிக

க்யூபிக்கிள் கலாச்சாரத்தின் இன்றியமையாத ஒரு அம்சம் க்யூபிக்கிள்வாசிகளுக்கு இணைய வசதியை முடக்கிவைப்பது. பல நிறுவனங்கள் அலுவலகத்தில் சில வலையகங்களைத் தடுக்கின்றன. குறிப்பாக மின்னஞ்சல் சேவை வழங்கும் வலையகங்களையும் வலைப்பதிவுகளையும்.

சில வலையகங்களை நேரடியாகவும் சிலவற்றை வார்த்தைகளை வைத்தும் (எ.கா.: சைட் முகவரியில் *blog*, download, cricket போன்ற சொற்கள் வந்தால்) தடுக்கிறார்கள். ஆனால் நிரல் தேடித் திருடுவதற்குப் பயன்படுவதாலோ என்னவோ கூகிளை விட்டுவைக்கிறார்கள். சில ஊடக நிறுவனங்கள் செய்தி வலையகங்களை அலவ் பண்ணுகின்றன.

அலுவலகத்தில் cricinfo, youtube, metacafe, meebo என்று மானாவாரியாகப் பயன்படுத்திக் குவிக்கும் முதிர்ச்சியற்ற கிராக்கிகள் தணிக்கை செய்வதை ஊக்குவிக்கிறார்கள். அறிவை வளர்த்துக்கொள்ள மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தும் நம்மைப் போன்ற நல்லவர்கள் இதனால் பாதிக்கப்படுவதால் அலுவலகத்தின் உலோக்கல் ஏரியா நெட்வொர்க்கில் உள்ள கம்ப்யூட்டர்களில் இருக்கும் அலுவலகக் கோப்புகளை எடுத்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வலைப்பதிவுகளையும் செய்தியோடை வசதியுள்ள வலையகங்களையும் அலுவலகத்தில் பார்க்க இரண்டு எளிய வழிகள்:

பார்க்க விரும்பும் வலைப்பதிவின் பெயரை கூகிளில் போட்டுத் தேடலாம். முடிவுகள் பக்கத்தில் வரும் அந்த வலைப்பதிவின் முகவரியை நேரடியாக க்ளிக் செய்தால் நிறுவன அகழி (ஃபயர்வால்தான்) தடுக்கும். Cached என்ற இணைப்பைப் பார்த்தால் அந்த வலைப்பதிவை அல்லது வலையகத்தைப் பார்க்கலாம். இதில் எப்போதுமே புதிய பக்கங்களைப் பார்க்க முடியாது.

அதை விட நல்ல உத்தி, வேண்டியதை மின்னஞ்சலில் வரவழைப்பது. நாம் பார்க்க விரும்பும் வலையகத்திற்கு RSS வசதி இருந்தால் அதை மின்னஞ்சலில் பெற மிகச் சுலபமான ஒரு வழி rssfwd. கூகிள் காஷில் எடுத்த பக்கத்தில் RSS/Atom முகவரியை நகலெடுத்துக்கொண்டு, rssfwd-இல் கொடுத்து நமது மின்னஞ்சல் முகவரியையும் தந்துவிட்டால் முடிந்தது வேலை. அப்புறம் Alt+Tab திருவிழாதான்.

(மின்னஞ்சல் முகவரி என்றால் கம்பெனியார் நம்மபெயர்.அப்பாபெயர்@நிறுவனம்.காம் என்கிற ரீதியில் ஒதுக்கித் தரும் ‘ஆபீஸ் ஐ.டி.’ சில கம்பெனிகள் ஆபீஸ் ஐ.டி.க்கு பணிசாரா மின்னஞ்சல் வருவதை விரும்புவதில்லை. இந்த மாதிரி சூழ்நிலையில் மின்னஞ்சலைப் பயன்படுத்த, ஜிமெயிலின் RSS-ஐ கூகிள் ரீடரில் சேர்த்துப் பார்க்கலாம். கூகிள் ரீடரை அவ்வளவாக யாரும் தடை செய்வதில்லை. Disclaimer: இதை நான் முயற்சி செய்து பார்த்ததில்லை.)

கூகிளின் ஆளில்லாத் தமிழ்ச் சேவை

தேடுவதற்கான புலத்தில் ஒரு எழுத்தைத் தட்டினால் அந்த எழுத்தில் தொடங்கும் சொற்களைக் காட்டி உதவும் Google Suggest வசதி தமிழிலும் கிடைப்பது சந்தோசமே. ஆனால் அது குரங்கின் கைப் பூமாலையாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. நினைத்தும் விட்டேன். கண்ணை மூடிக்கொண்டு க்ளிக் செய்க. தமிழ் தெரியாத ஆட்கள் பண்ணும் கூத்தை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.

திருட்டு மொழிபெயர்ப்பு…

700 பக்கங்களுக்கு மேல் கனக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை மொழிபெயர்க்க எவ்வளவு காலம் ஆகும்? நேர்மையாக உழைத்தால் ஒரு வருடம் ஆகலாம்.

லேட்டஸ்ட் ஹாரி பாட்டர் தலகாணியை மொழிபெயர்க்க ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மூன்றே நாட்கள்தான் தேவைப்பட்டிருக்கின்றன. புத்தகம் வெளிவந்த நான்காவது நாள் ஸ்பானிஷ் மொழியில் PDF வடிவில் வந்துவிட்டன.

இந்த மொழிபெயர்ப்பை ஒரு குழுவாகச் செய்திருக்கிறார்கள் என்றாலும் மூன்று நாட்கள் என்றால் நம்ப முடியவில்லை (குழுவில் எத்தனை பேரோ). மொழிபெயர்ப்பின் தரம், பலர் செய்வதால் ஏற்படும் ஒழுங்குப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் தெரியவில்லை.

நிற்க. பார் புகழும் தமிழ்ச் சூழலைப் பொறுத்த வரை புத்தகத்தைப் பற்றிக் கேள்விப்படச் சில வாரங்கள் ஆகும். காசு கொடுத்து வாங்குவதற்கு மனசு வர அல்லது இரவல்/திருட்டுக் கொடுக்கும் ஆளைக் கண்டுபிடிக்கச் சில நாட்கள் அல்லது வாரங்கள் ஆகும். அதற்குப் பின் மொழிபெயர்ப்பில் (குழுவாக) இறங்கினால் சில மாதங்கள் ஓடும். கடைசியில் அந்தக் கலாச்சாரம் பற்றிய குறைந்தபட்சப் புரிதல் கூட இல்லாமல் ஒரு மொழிபெயர்ப்பு ஒப்பேற்றப்பட்டிருக்கும். ஆனால் நம்மூர்க் குழந்தைகள் இது வரை அதிர்ஷ்டசாலிகள்தான்.

லைவ் ரைட்டர் டெஸ்ட் பதிவு

வலைப்பூத்தலுக்கான (blogging) மென்பொருட்களில் w.bloggar, Zoundry Blog Writer, Performancing, Qumana மற்றும் பிறவற்றைக் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் எதுவும் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு எனக்குத் திருப்தியளித்ததில்லை. மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகளில் விண்டோஸையும் ஆபீஸையும் வேறு வழியில்லாமல் பயன்படுத்தும் பலரில் ஒருவன் நான். அதனால் வேறு எந்த மைக்ரோசாஃப்ட் தயாரிப்பையும் பயன்படுத்தியதில்லை.

padam 1 பிக் பிரதர் முழுக்க முழுக்க வலைப்பதிதலுக்காகவே உருவாக்கிய ஒரு மென்பொருளில் என்ன இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் விண்டோஸ் லைவ் ரைட்டரை நிறுவினேன். இதை நிறுவிப் பயன்படுத்தத் தொடங்கிய சிறிது நேரத்தில் இதன் எளிமையும் தோற்றமும் என்னைக் கவர்ந்தன (படம் 1). எனது அனுபவம் குறித்து மேலும் சில வரிகள் பின்வருமாறு…

லைவ் ரைட்டர் கோப்பின் சைஸ் 3.58 எம்.பி.தான். புள்ளிவலை சட்டகப்பணி (.NET Framework) உமது கணினியில் இல்லையென்றால் 23 எம்.பி. கோப்பை இறக்கிக்கொள்ள வேண்டும். பிரச்சினை இல்லாமல் இன்ஸ்டால் ஆகிவிடுகிறது.

பிறகு லைவ் ரைட்டர் சுருக்குவழி மேல் இரட்டைச் சொடுக்கிட்டால் (double click) என் ஃபயர்வால் உடனே அபாய அறிவிப்பு செய்கிறது. வழக்கமான மைக்ரோசாஃப்ட் உளவு வேலைதான். லைவ் ரைட்டர் என்னைக் கேட்காமல் மைக்ரோசாஃப்ட்டின் சர்வர் ஒன்றுடன் இணைக்கப் பார்த்தது. அதைத் தடுத்த பின் லைவ் ரைட்டர் சட்டென்று தொடங்குகிறது.

எம்.எஸ். ஆபீஸ் 2003ஐ உரித்து வைத்தாற்போன்ற தோற்றம். வேர்ட்பேடின் எளிமை. மிகச் சுலபமாக வலைப்பதிவுக் கணக்கு விவரங்களைப் பதிய முடிகிறது. நம் வலைப்பதிவில் என்ன தீம் பயன்படுத்துகிறோமோ அதன் லேஅவுட்டை நினைவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இதன் பதிவெழுதும் திரை (எழுதி, compose screen…). அதாவது நம் வலைப்பதிவில் நேரடியாக எழுதும் ஃபீலிங்கைக் கொண்டுவருகிறார்களாம் (படம் 2).

வேர்ட்பிரஸிலும் பிளாகரிலும் எழுதியின் அகலம் கச்சிதமாக இருக்கும். லைவ் ரைட்டரின் எழுதி அதை விட அகலமாக இருப்பது திரையரங்கில் முதல் வரிசையில் உட்கார்ந்து 70 MM படம் பார்ப்பது போல் அசௌகரியமாக இருக்கிறது. ஆனால் பெரிய தலைவலி என்று சொல்ல முடியாது. போல்டு, இட்டாலிக்ஸ், படம் செருகுதல், குறிச்சொல் சேர்த்தல் என்று வேண்டியதெல்லாம் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன.

பதிவை எழுதும்போதே அதன் வரைவை நம் வலைப்பதிவில் சேமித்துக்கொள்ளலாம். HTML பார்த்து மாற்றலாம். முன்னோட்டம் பார்க்கும் வசதி அட்டகாசம். பதிவைப் போட்டதும் நம் வலைப்பதிவில் அது எப்படித் தெரியுமோ அப்படிக் காட்டுகிறது (படம் 3). படத்தை ஒட்டியதும் படத்தின் சைஸ், எஃபெக்டுகள் போன்ற வசதிகள் வலப்பக்கம் தெரிகின்றன. சும்மா சில நகாசுகளைச் சேர்த்திருக்கிறார்கள். ஒரு வலைப்பதிவுக்கு இது போதும். தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் Xanga-வில் வலைப்பதிவு வைத்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கருவிப் பட்டையின் வலப்பக்கம் வேர்ட்பிரஸ் குறிச்சொற்களின் (Categories) தொங்கு பட்டியலைப் பார்க்கலாம் (படம் 4). எழுதும் பகுதிக்குக் கீழே, ஸ்டேட்டஸ் பாருக்கு மேலே, பதிவின் விவரங்கள், பின்தொடர் சுட்டி ஆகிய விஷயங்களை சேர்த்துக்கொள்ளலாம்.

Tools > Preferences என்ற மெனுப் பாதையில் போனால் ping சர்வர்களில் தமிழ் பிங் சர்வர்களை சேர்க்கலாம் (எனக்குத் தேன்கூடு வேலை செய்கிறது).

இது பீட்டா பதிப்பு. ஒரே விஷயத்திற்கு அங்கங்கே பட்டன்கள் இருக்கின்றன. உதாரணமாக, பின்தொடர் சுட்டி கொடுக்க இரண்டு இடங்களில் க்ளிக் செய்யலாம் – எழுதும் பகுதிக்குக் கீழே, பிறகு கருவிப் பட்டையில் கடைசி பட்டன் மேலே. பிறகு முன்னோட்டத்தைப் பார்க்க View மெனுவில் போயும் க்ளிக் செய்யலாம், கருவிப் பட்டைக்கு மேலுள்ள சாதா பட்டையில் ஒரு பட்டனையும் தட்டலாம்.

பதிவைத் தட்டிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு வார்த்தை கட்டம் கட்டமாக வருகிறது. Format > Font என்ற பாதையில் போய் லதா எழுத்துருவுக்கு மாற்றினால் சரியாகிவிடுகிறது. முதல் பதிப்பில் இந்தக் கோளாறைச் சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். அதே போல இந்த மென்பொருள் அனேகமாக junk code நிறைய சேர்க்கும் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் பார்க்க வேண்டும். மற்றபடி லைவ் ரைட்டர் நல்ல வலைப்பதிவு மென்பொருள் . சொடுக்குக!

பி.கு.: இந்தப் பதிவு என் வலைப்பதிவில் சரியாக ஏறாவிட்டால் பரிந்துரையை வாபஸ் வாங்கிக்கொள்வேன். வரிகள் கண்ட இடத்தில் உடைகின்றன. வேர்ட்பிரஸ் எழுதியிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது.

அப்டேட்: ஃபயர்வாலை வைத்துத் தடுத்தால் பதிவு நம் வலைப்பதிவில் ஏறாது.