பிரெஞ்சில் ழ இல்லை

உலக மொழிகளிலே ழ என்னும் எழுத்தினைக் கொண்ட ஒரே மொழி தமிழேயாம் என்று பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம்.

அப்புறம் இந்த ழான் ழாக் ரூசோ, ழான் பால் சார்த்தர், ழாக் ப்ரெவர், ழாக் லக்கான், ழாக் தெரிதா முதலான ழாக்குகளும் ழான்களும் எங்கிருந்து வந்தார்கள்?

பிரெஞ்சு மொழியில் அரிச்சுவடி கோர்ஸ் படித்தவர்களுக்குக் கூட (என்னைப் போல) பிரெஞ்சின் J/G ஒலிக்கும் ழ-வுக்கும் தொடர்பில்லை என்று தெரிந்திருக்கும். TV5Asie அலைவரிசையில் கொஞ்சம் பிரெஞ்சைக் கேட்டாலே கூடப் போதும். இது ஷ-வும் ஜ-வும் கலந்த ஒலி. ஆனால் ழ அல்ல. எழுபதுகளிலோ எண்பதுகளிலோ யாரோ செய்த சதியால் இந்த ஒலி  மாற்றப்பட்டிருக்கிறது.

பெயர்கள் ழ-வில் தொடங்கும் அபத்தம் உறுத்தத்தான் செய்கிறது. ஆப்பிரிக்கப் பெயர்கள் சில ‘ங்’-இல் தொடங்குவது எனக்கு உறுத்தவில்லை. அவை அப்படித்தான் தொடங்க வேண்டும். அவர்கள் பெயர் அவை. ஆனால் ழாக் லக்கானின் பெயர் ழாக் அல்ல. ஏனென்றால் ழாக் என்பது போங்கு.

Jean, Jacques என்ற பெயர்கள் முறையே John, Jack/Jacob ஆகியவற்றின் பிரெஞ்சு வடிவங்கள் என்பதும் யாரும் அறியாத தகவல் அல்ல.

Jean-ஐ ஜான் என்றோ ஷான் என்றோ சொன்னால் பிரெஞ்சின் ஜா/ஷா ஒலிக்கு அருகில் வரும். ‘ஷா’ குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் (Sean Connery). என்னைக் கேட்டால் இந்த ஒலியை ‘ஜா’ என்று துணிந்து எழுதலாம்.

ஆகையினாலே  தமிழ்கூறு நல்லுலகோர் புராதனமானதும் பிழையானதுமான இவ்வொலிபெயர்ப்பு மரபைக் கழற்றிவிட வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

9 thoughts on “பிரெஞ்சில் ழ இல்லை

 1. முதலில் ழான் என்று படித்த போது வேடிக்கையாகத்தான் இருந்தது. அது போலவே, பல வலைப்பதிவு சங்கதிகளும் (பின்னூட்டம், தரவிறக்கம், மட்டுறுத்தல், இத்யாதி இத்யாதி)…… எப்படியோ, பேய்க்கு வாழ்க்கைப் பட்டாச்சு, இனி முருங்க மரம் ஏறித்தானே ஆகணும்ன்னு நானும் இதையெல்லாம் பயன்படுத்தத் தொடங்கிட்டேன் :)

  ‘ழ’ வை ஆங்கிலப்படுத்துறதுலயும் ஒரு குளறுபடி. எனக்குத் தெரிஞ்சு எழிலன்ங்கிற அழகான பெயரை ஒருத்தர் Ezhilanன்னு எழதப்போய் அது வேற்று மொழிக்காரர்களால் எஸ்ஹிலன் அப்படின்னு உச்சரிக்கப்பட்டு வந்தது. இதே விதியை உல்டா பண்ணி நம்மாளுங்க சிலர் Azharuddinஐ அழருத்தீன் ஆக்கிய கொடுமையை எல்லாம் இந்தக் காண்ணால பர்த்துருக்கேன். வாழ்க்கை என்பது ரொம்ப கடினமான ஓன்று :(

 2. ஸ்பானிஷில் j- ஐ h போல சொல்வார்கள் அல்லவா? Rojo என்பதை ரோஹோ (ஹ கொஞ்சம் அடக்கி வாசித்து?) … அது போல்தான் இந்த ப்ரென்ச் இருக்குமோ என்று நெனச்சேன்.

  அது சரி…

  ஜான் என்று எழுதினால் இலக்கியம் தெரியாத பட்டிக்காடு என்னும் அடையாளமும் தமிழிலக்கியர்களிடமிருந்து கொள்ளப்படலாம் 😉

 3. இப்படி ழ போட்டு பிரெஞ்சுப் பெயர்களை எழுதக்கூடாது என்று ஒரு சிறுபத்திரிகை நண்பரிடம் சொன்னேன். அவர் எனக்கு மெச்சூரிட்டி பற்றாது என்றார். அதன் பிறகும் தொடர்ந்து விவாதித்தேன். அவருடைய விவாதம் இதோ: அதாவது ஜா போட்டு எழுதினால் ஓரிஜினல் ஜா உச்சரிப்பு எந்த இடத்தில் வருகிறது; இந்த ஜா உச்சரிப்பு எந்த இடத்தில் வருகிறது என்று தெரியாதாம். அதனால் ழ போடுகிறோம் என்றார் அவர். ழவை இவர்கள் அடையாளத்திற்காகத்தான் போடுவதாக வைத்துக்கொண்டால், படிக்கும்போது J/G என்று தானே படிக்க வேண்டும்? மாறாக, ழ என்றே படித்து உயிரை வாங்குகிறார்கள். சிறுபத்திரிகைகாரர்களிடம் சிக்கி தமிழும் பிரெஞ்சும் படாதபாடு படுகின்றன. இந்த ழவை தமிழில் துவக்கி வைத்தவர் யார் என்று எனக்குத் தெரியும்.

 4. Voice on Wings: இந்தி கிரிக்கெட் நேரடி வர்ணனையாளர்கள் அஸ்ஹருத்தீன் என்கிறார்கள். ஆனால் இந்த பிரெஞ்சு ழ விஷயத்தின் நான் கொஞ்சம் பிடிவாதமாகவே இருக்கிறேன். அடைப்புக் குறியில் எப்படியும் ஆங்கிலத்தில் போடத்தானே போகிறோம்.

  ரவிசங்கர்: அந்த இணைப்புக்குப் போய் பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.

  பாலா: ஐரிஷ் loch-ஐத்தானே சொல்கிறீர்கள்? :-) ஜெர்மனில் கூட அந்த ஒலி இருக்கும் போலிருக்கிறது. Brecht-இல் வரும் ch-ஐ அப்படித்தான் உச்சரிக்கிறார்கள். பட்டிக்காடு பட்டத்திற்கெல்லாம் பயப்பட முடியுமா? அதுவும் இலக்கிய ஆசாமிகளிடமிருந்து வரும்போது!

  கட்டியக்காரன்: உங்கள் சிறுபத்திரிகை நண்பர் சொல்வது நல்ல காமெடி. George-ஐ ஜோர்ஜ் என்று எழுதாமல் ழோர்ழ் என்று எழுதுவாராமா? ழ-வின் தந்தை யாரென்று எனக்கும் தெரியும்! :-)

 5. இணைப்புக்கு நன்றி. ழ தமிழிலும் மலையாளத்திலும் இருப்பது போல் இன்னும் பல மொழிகளிலும் இருக்கலாம். ழ பயன்பாடு பற்றி நாகார்ஜுனன் மொழியியல் ரீதியாக விளக்கினாலும் எனக்கு அதி்ல் உடன்பாடு இல்லை. நமக்குத் தெரிந்த ழ-வை அப்படியே பயன்படுத்த முடியாது. ழான், ழாக், ழோர்ழ் (!) என்பதையெல்லாம் எப்படிப் படிப்பீர்கள்? கொஞ்சம் பிரெஞ்சும் கொஞ்சம் மொழியியலும்/ஒலியியலும் தெரிந்துகொண்ட பின் அவற்றை நாகார்ஜுனன் சொல்வது போல் உச்சரிக்க வேண்டுமா? இதெல்லாம் வேலைக்கு ஆகுமா?

 6. முன்னெப்போதோ குமுதத்தில் ‘ழாந்தார்க்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதை படித்த ஞாபகம். ஆனாலும் இப்போக்கு பெரிய பத்திரிக்கைகளில் வளர்ந்ததாகத் தெரியவில்லை.

  சென்னை வந்திறங்கி அமித் acquaintanceகளுக்கு ‘ழ’ வை புரிய வைக்க. Jacques இல் உள்ள ja-னாவை எப்படிச் சொல்வாய், என்று தான் சொல்கிறேன். ஒரு மாதிரி சுமாரா பக்கத்துல வருது.

 7. Pleasureல sக்கு இருக்கிற சத்தம்தான் பிரெஞ்சுல j/gக்கு இருக்குன்னு டீச்சருங்க சொல்றாங்க. Georgeஐ ழோர்ழ்னு எழுதுறதெல்லாம் கொடுமை.

Comments are closed.