மதிகெட்ட மார்க்கெட்டிங்

தமிழ் பேசுபவர்களின் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் போதாது. கொஞ்சம் அறிவு, குறைந்தபட்ச மொழிசார் விழிப்புணர்வு, மார்க்கெட் என்பது மனிதர்களின் தொகுதி என்ற அறிவு – இதெல்லாம் தேவை.

தங்களிடம் இதில் எதுவும் இல்லை என்பதை மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களே நிரூபித்திருக்கின்றன. ‘தமிழ் மேட்ரிமோனி’ போன்ற துக்கடா நிறுவனங்களைக் கேட்கவா வேண்டும்? இது ஜிமெயிலில் தெரியும் செய்தியோடையின் திரைப்பதிவு (முழுசாகப் பார்க்க க்ளிக் செய்யுங்கள்) –

tmatrimony.jpg

தமிழ் என்ற சொல்லில் புள்ளி வைப்பதும் அதில் புள்ளி காணாமல் போவதைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கடினமா என்ன? Grooms For திருமணமாம்! இந்த நிறுவனத்தின் ‘பெற்ற’ நிறுவனமான பாரத் மேட்ரிமனியைத் தொடங்கியவர் தமிழ்நாட்டுக்காரர். வெட்கக்கேடு.

இதைத் தூக்கி சாப்பிடுவது ஒரு ஷோப்பிங் விளம்பரம்…

onlinay.jpg

அதாவது ஆன்லைன் ஷாப்பிங் கம்மி விலையில். இந்த கோர விபத்து எப்படி நடந்தது? ஒலிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி online என்று அடித்திருக்கிறார்கள். முரசு அஞ்சலின் ஒலிபெயர்ப்புத் தட்டச்சு முறையைப் பயன்படுத்தினால் இப்படி வராது. அஞ்சலைப் பயன்படுத்தியிருந்தால் oNlinE என்று அடித்திருக்க வேண்டும். இந்த வேலையைச் செய்தவர்கள் அந்த அளவிற்குக் கூறுகெட்டவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

இது இந்தியிலிருந்து ஒலிபெயர்க்கும் மென்பொருளை வைத்துச் செய்யப்பட்ட காரியம் என்று ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது முற்றிலும் சரியாகத்தான் இருக்க வேண்டும். துப்பு: ‘விலையில்’ என்பது ‘விளாயில்’ ஆகியிருக்கிறது. இந்திக்காரர்களுக்கு ‘ஐ’ பிடிப்பதில்லை. லைன் -> லாஇன், ஃபைல் -> ஃபாஇல் என்கிற ரீதியில்தான் இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியில் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்திக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்தியிலிருந்து தமிழுக்கு ஒலிபெயர்க்கும் யோசனை மடத்தனம், பொறுப்பின்மை, அலட்சியம், இந்தி மைய சிந்தனை நான்கின் கலவையாகவும் இருக்கும்.

சில நாட்களுக்கு முன் இந்தப் பதிவில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: இந்தித் திணிப்பு பல வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

7 thoughts on “மதிகெட்ட மார்க்கெட்டிங்

 1. முக்கியமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறீர்கள். இதுபோல பல கூத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. முதலில் இந்த மாதிரியான மொழிக்கொலைகள் மும்பை விளம்பரக்காரர்களிடமும் ஜூனூன்காரர்களிடம் இருந்தது. பிறகு இப்போது இந்திய மொழிகளுக்கான மென்பொருள் உருவாக்குநர்களிடம் நிறைய பரவி இருக்கிறது. இந்த இந்தித் திணிப்புக்கும் அரைகுறை உள்ளூர்மயமாக்கத்துக்கும் பின்னணியில் இருப்பது நம்மவர்களின் ஆங்கில மாயை. வேண்டா வெறுப்போடு செய்யப்படும் மொழி மாற்றம். நகர்மைய வாதம். இந்திய மொழிகளை இன்னமும் வெள்ளைக்காரனின் காலனிய வார்த்தையான vernacular என்ற சொல்லிலேயே அழைக்கும் மேட்டிமைத்தனம் நிறைந்த மீடியா. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

  நீங்கள் மதிகெட்ட மார்க்கெட்டிங் என்கிறீர்கள். முற்றிலும் உண்மை. இன்னமும் சொல்லப்போனால், தாய்மொழிக்காரர்களை ஒரு சந்தையாகவே இந்திய நிறுவனங்கள் என்றும் மதித்ததில்லை. உண்மையில், மைக்ரோசாஃப்ட், நோகியா, கூகிள் போன்ற நிறுவனங்கள் இந்திய மொழிகளுக்காக மெனக்கெடும் அளவுக்குக் கூட இந்திய நிறுவனங்கள் இந்திய மொழிகளுக்காக உழைத்ததில்லை. மார்க்கெட் சக்திகளை விட மேட்டிமை மனோபாவம் வலியது.

  தமிழில் பேசினால் அடிக்கக்கூடிய பள்ளியில் என் பையனைச் சேர்த்திருக்கிறேன் என்று பெருமைப்படும் தமிழர்களின் உலகம் இது. முதல் மொழி ஆங்கிலம், இரண்டாம் மொழி இந்தி, மூன்றாம் மொழி சமஸ்கிருதம், நான்காம் மொழி பிரெஞ்சு, ஐந்தாம் மொழி ஸ்வாஹிலி, ஆறாம் மொழி வால்பிரி என்று திட்டமிட்டே தமிழைத் தவிர்க்கும் ஒரு கலாச்சாரம் தமிழ்நாட்டில் உண்டு. இதைப் போலவே பிற மாநிலங்களிலும் உண்டு. சில சமயம் இந்த மதிகெட்ட சமூகங்களுக்கு மொழிபெயர்ப்பும் உள்ளூர்மய செயல்பாடும் யூனிகோடும் தேவையா என்று கூட தோன்றும். (இந்த வரியை எனது வாடிக்கையாளர்கள் படிக்காதிருப்பார்களாக!)

  இதுவரை நான் சென்னையில் பல்வேறு இடங்களில் பல்வேறு இணைய உலாவகங்களில் அவசரத் தேவைக்காக மேய்ந்ததுண்டு. ஒரு இடத்திலும் விண்டோஸில் தானாகவே வரும் லதா எழுத்துருவைக்ககூட பார்த்ததில்லை.

  சந்தையும் சரி, சந்தைப்படுத்துபவர்களும் சரி இவற்றையெல்லாம் கண்டு பொங்கி எழப்போவதில்லை. நமது புலம்பல் நம்மோடு.

  செ.ச.செந்தில்நாதன்

 2. இப்ப புரியுது இந்த எழுத்துப்பிழைகள் எப்படி வந்ததுன்னு !!! எவ்வளவு தான் படிக்காதவனா இருந்தாலும் ஒரு தமிழ் தெரிந்தவனால் இந்த எழுத்துப் பிழைகளை விட்டிருக்க முடியாது.

 3. செந்திலும் சாத்தானும் சேர்ந்து இந்தப் போடு போட்டபிறகு இனி சொல்ல என்ன இருக்கிறது? “ஃபர்ஸ்ட் லாங்குவேஜா சான்ஸ்க்ரிட் படி. அதுதான் நம்ம லாங்குவேஜ்” என்று சொல்லுபவர்கள் சென்னையில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

 4. செந்தில், மிக விவரமான பின்னூட்டத்திற்கு நன்றி! நகர்மையவாதம்+மேட்டிமை காம்பினேஷன் ஒரு மாபெரும் தீமைதான். நகர்மையமாகச் சிந்தித்தாலே தாய்மொழி என்கிற விஷயம் அடிபட்டுவிடுகிறது. நம்மவர்களின் மொழி அறிவின்மை, தாழ்வு மனப்பான்மை, ஆங்கில மோகம், மோகம் இல்லாதவர்கள் கூட அதைக் கும்பிடும் போக்கு, இதெல்லாம் நமக்கு எதிராகவே செயல்படுகின்றன. ரவிசங்கள், இந்த மொழிப் பிழைகளை நம்மவர்களும் செய்ய முடியும் என்றுதான் தோன்றுகிறது.

  கட்டியக்காரன்: இந்த மாதிரிப் பெற்றோர்களிடமிருந்து இந்தக் கண்ணோட்டம் குழந்தைகளுக்கு மிக சுலபமாகப் பரவுவதுதான் ஆபத்து. இதற்கு முடிவே இல்லாமல் போய்விடும்.

 5. விளாயில் என்று எந்தத் தமிழனும் எழுதுவான் என்று தோன்றவில்லை. விழையில், விளையில் என்று வேண்டுமானால் எழுதலாம். இடுகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மிச்ச பிழைகளை விட வாய்புண்டு.

 6. Pingback: ஒண்லினே ஷோப்பிங் கம்மி விளாயில் « கில்லி - Gilli

Comments are closed.