மூன்று விஷயங்கள்

1

அவுட்லுக்கின் புதிய இதழில் வட இந்தியாவைத் தென்னிந்தியா ஓவர்டேக் செய்துவருவது பற்றி ஒரு சிறப்புப் பகுதி போட்டிருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் நிறைய பிரதிகள் விற்றிருக்கும்). வட இந்தியர்கள் (ஊடகங்களையும் சேர்த்து) தென்னிந்தியர்களைப் பழம் பஞ்சாங்கங்களாக நினைப்பதையும் சித்தரிப்பதையும் சதானந்த் மேனன் தன் கட்டுரையில் லேசாகத் தொட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இந்த மாதிரி ஸ்டீரியோடைப்பிங் வேலையைச் செய்யும் இதழியலாளர்களில் அவுட்லுக் விதிவிலக்கல்ல.

ஆனந்த விகடன் சென்னைவாழ் நடுத்தர வர்க்கத்தினரை மனதில் கொண்டு பத்திரிகை நடத்தி கிராமத்து ஸ்பெஷல் (“கிராமத்துக்குப் போலாமா?”) வெளியிட்ட கதை மாதிரிதான் இதுவும். வழக்கமான ஆங்கிலப் பத்திரிகை பாணியில் தனித்தனி பாக்ஸ் ஐட்டங்களை ஒட்டித் தயாரித்த ‘ஸ்டோரி’களைத் தந்திருக்கும் அவுட்லுக், தான் அடிப்படையில் தென்னிந்திய விரோத மனோபாவத்தைக் கொண்ட பத்திரிகைதான் என்பதை நிரூபித்து வருகிறது.

இந்தியில் சகஜமாகப் புழங்கும் வார்த்தைகள் தென்னிந்தியர்களுக்குப் புரிந்தாக வேண்டும்; புரியாவிட்டால் கற்றுக்கொள்ளட்டும் என்று நினைக்கும் போக்கு வட இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு உண்டு. தெற்கை ‘விதந்தோதி’யிருக்கும் அவுட்லுக், தனது மற்ற கட்டுரைகளில் அதே அலட்சிய மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

பைரோன் சிங் ஷெகாவத் பற்றிய கட்டுரையில் ‘ஹவேலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கட்டுரையாசிரியர் நீலப் மிஷ்ரா. அதன் பொருள் எனக்குத் தெரியாது. வசிப்பிடம் என்று அரைகுறையாகத் தெரியும். ஆனால் வாசகருக்கு எதுவும் எளிதில் புரிய வேண்டும் என்பது இதழியலில் மிக அடிப்படையான ஒரு விதி. ஆனால் நாமெல்லாம் அவர்களுக்குக் கணக்கில்லை. இந்தி தெரியாதவன்/ள் ஏன் ஆங்கிலப் பத்திரிகை படிக்க வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருக்கலாம்.

வட, மேற்கு இந்திய அரசியல்வாதிகள் இந்தியில் பேசும் விஷயங்களை அடைப்புக் குறியில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் போடாமல் அப்படியே ஒலிபெயர்த்துப் போடுகின்றன. கூசாமல். எல்லாப் பத்திரிகைகளும் எல்லா சமயங்களிலும் இந்தக் காரியத்தைச் செய்வதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அதைச் செய்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு முடிவே இல்லை போலிருக்கிறது.

அப்புறம் இன்னொரு விஷயம்: கோவில் கோபுரம்தான் தமிழ்நாட்டின் அடையாளமா? இந்த சிறப்புப் பகுதிக்கான லோகோவாக கோபுரத்தைப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்காரர்கள் என்று விபூதிப் பட்டையும் குடுமியுமாக ஒரு ஆண் முகத்தைப் போடுவதற்கும் இதற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை.

2

கட்டாந்தரை மீனவர்கள் பட்டையைக் கிளப்பும் தமிழ் மொழிபெயர்ப்பு உலகில் தரமான மொழிபெயர்ப்பைப் பார்க்க முடிகிற ஓர் இடம்… லயன் காமிக்ஸ்! இந்த மாதம் பெரிய சைஸில் 386 பக்கங்களுடன் 100 ரூபாய் விலையில் வந்திருக்கும் கௌபாய் ஸ்பெஷலே இதற்கோர் ஆதாரம்.

‘தலைக்கு ஒரு விலை’ என்ற லக்கி லூக் வண்ணப் படக்கதையும் அதற்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் ‘பனிக் கடல் படலம்’ என்ற டெக்ஸ் வில்லர் கதையும் அட்டகாசமான மொழிபெயர்ப்புகள் (இரண்டையும் ஒரே நபர் மொழிபெயர்த்திருப்பது போல் தெரிகிறது). ‘தலைக்கு ஒரு விலை’ அதிரடியான நகைச்சுவைக் கதை. அதன் வெற்றிக்குக் காரணம், ஆங்கிலத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு நல்ல சொல்லறிவையும் அசாதாரணமான நகைச்சுவை உணர்வையும் கொண்டு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேச்சின் வேடிக்கையான அம்சங்களை முழு வீச்சுடன் பயன்படுத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். இதை உதாரணம் காட்டி விளக்குவதை விட படித்தால்தான் புரியும்.

டெக்ஸ் வில்லர் கதையில் கூட நடையில் சில பிரச்சினைகளைச் சொல்லலாம். லக்கி லூக் மொழிபெயர்ப்பில் வெளிப்படுவது ஜீனியஸ் என்று சொன்னால் தப்பில்லை. சினிமா பாரடைசோ, லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றெல்லாம் ஜல்லியடிப்பவர்கள் வெகுஜன இலக்கியத்திலிருந்து இது போன்ற சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

(பி.கு.: லயன் காமிக்ஸ் விரைவில் ‘ஏஜண்ட் XIII‘ என்ற கதையைக் கொண்டுவரப் போகிறது. 18 பகுதிகளை ஒரே புத்தகத்தில் போடப் போகிறார்கள். 800 பக்கங்கள், விலை ரூ. 200. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும்தான் பிரதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

3

இலக்கிய உலகப் பெரியவர்கள் – தங்களைப் பெரியவர்களாக நினைத்துக்கொள்ளும் இளம் எழுத்தாளர்களைச் சொல்லவில்லை; வயதில் பெரியவர்களைச் சொல்கிறேன் – எல்லோரும் இப்போது புதியதோர் பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் Hi5, Orkut, Minglebox, Tagged போன்ற டேட்டிங் மற்றும் பிரெண்ட்ஷிப் வலையகங்களில் உறுப்பினர்களாகிறார்கள். தங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் சரமாரியாக மின்னஞ்சல் அழைப்புகளை ஏவுகிறார்கள். சான்றோர், பண்புளோர் என்றெல்லாம் மதிக்கப்படுபவர்கள் இப்படி இறங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.

10 thoughts on “மூன்று விஷயங்கள்

 1. —தங்களைப் பெரியவர்களாக நினைத்துக்கொள்ளும் இளம் எழுத்தாளர்களைச் சொல்லவில்லை;—

  good one 😀

 2. தென்னிந்தியச் சிறப்பிதழ் போட்டு தன் வடஇந்தியப் பாசத்தைக் காட்டியிருக்கும் அவுட்லுக்கைத் தோலுரித்திருப்பது அட்டகாசம். இவர்கள் எல்லாம் தில்லியிலிருந்து செயல்படுவது இதற்கு முக்கியமான காரணம். அங்கேயிருக்கும் தமிழர்களும் ஒரு தென்னிந்திய விரோதத்தோடுதான் இருக்கிறார்கள். பல பெண் பத்திரிகையாளர்கள் தங்கள் அபத்தக் கட்டுரைகளை ‘இன் கன்சர்வேட்டிவ் சென்னை‘ என்றுதான் துவங்குகிறார்கள், ஏதோ உலகமெல்லாம் சுற்றியதைப் போல.
  கோவில் கோபுரத்தை அந்தப் பகுதியின் சின்னமாகப் போட்டது குறித்த உங்கள் எதிர்ப்பு சரியில்லை. கோவிலை இந்து வெறியர்களின் கூடாரமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டிடக் கலையின் சான்றாகப் பார்ப்பதே சாலப் பொருந்தும். தென்னிந்தியக் கோவில்களைப் போலவே அங்கு வசிக்கும் மக்களின் மனதும் பெரிது என்பதைக் குறிக்கும் விதமாகவும் அவுட்லுட் அந்த கோபுர சின்னத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். இவ்வளவு ஏன், வடக்கு மாசி வீதி என்ற புகழ்பெற்ற வலைபதிவாளரேகூட தன் பேனரில் கோபுரங்களைத்தானே பயன்படுத்திவருகிறார்?

 3. சீக்கிரம்… சீக்கிரம்

 4. பாலா: சில பையன்கள் எழுதுவதைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கிறது.

  கட்டியக்காரன்: சாரி, காப்டன் டைகர் கதை விறுவிறுப்பாக நிறைய திருப்பங்களுடன் போய்க்கொண்டிருந்ததால் அதில் மூழ்கிவிட்டேன்.

  “அங்கேயிருக்கும் தமிழர்களும் ஒரு தென்னிந்திய விரோதத்தோடுதான் இருக்கிறார்கள்.”

  அப்படியா? வித்தியாசமாக இருக்கிறதே!

  கோபுர லோகோ குறித்த உங்கள் உணர்வு எனக்குப் புரிகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்று கூடச் சொல்லலாம். ‘பூசாரியைத் தாக்கினேன், கோவில் கூடாது என்பதற்காக அல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாகிவிடக் கூடாதே என்பதற்காக’ என்பதே நான் சொல்ல வந்தது. மற்றபடி நான் இந்து மதச் சங்கதிகளை எல்லாவற்றையுமே இந்துத்துவாவுடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. அவுட்லுக் செய்தது ஸ்டீரியோடைப்பிங் மாதிரிதான் எனக்குப் படுகிறது. கோபுரத்தை விட ஐயனார் சிலை தமிழ்நாட்டுக்கு நல்ல லோகோ.

  வடக்கு மாசி வீதியின் விஷயம் வேறு. மதுரை தொடர்பான வலைப்பதிவுக்கு அழகிரி போட்டாவையா லோகோவாகப் போட முடியும்?

 5. Pingback: மதிகெட்ட மார்க்கெட்டிங் « மைய நீரோட்டம்

 6. இன்னொரு விசயம், தமிழ்நாட்டு இதழ்கள், எழுத்தாளர்கள் சகட்டு மேனிக்கு ஆங்கில உரையாடல்களைத் தமிழ் எழுத்துக்களில் எழுதுவது..இதுவும் கண்டிக்கப்பட வேண்டியதே.

 7. ரவிசங்கர்: ஐயோ! குமுதம் விகடனை விட ‘cool’ என்று காட்டிக்கொள்ளக் கொஞ்ச காலம் கிட்டத்தட்ட ஆங்கிலப் பத்திரிகையே நடத்திக்கொண்டிருந்தது. ‘மதிகெட்ட மார்க்கெட்டிங்’ பதிவுக்கான பின்னூட்டத்தில் செந்தில்நாதன் சொல்வது போல இவர்களும் நகர்மையவாதிகள்தான். எவ்வளவு தூரம் ஆங்கிலத்தை நெருங்குகிறார்களா அந்த அளவிற்கு இவர்கள் cool. ஆனால் அடிப்படையில் அவர்கள் ஒண்ணாம் நம்பர் பிற்போக்குகள் என்பதுதான் வேடிக்கை.

 8. //ஆனால் அடிப்படையில் அவர்கள் ஒண்ணாம் நம்பர் பிற்போக்குகள் என்பதுதான் வேடிக்கை.//

  உண்மை !

 9. எங்கள் குடும்ப patriarch பெரியப்பா கூட desktop datingங்கிலிருந்து அழைப்பு விடுத்தார். குடும்பமானம் கருதி கம்ப்யூட்டர் கைநாட்டாக இருந்தால்தான் என்னவாம்.

 10. இப்ப எல்லாரும் ஃபேஸ்புக்குக்கு வந்துட்டாங்க. சில பேரு சில்லியா கமென்ட் போடுறாங்க, வழியிறாங்க, எட்சற்றா.

Comments are closed.