பிரெஞ்சில் ழ இல்லை

உலக மொழிகளிலே ழ என்னும் எழுத்தினைக் கொண்ட ஒரே மொழி தமிழேயாம் என்று பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம்.

அப்புறம் இந்த ழான் ழாக் ரூசோ, ழான் பால் சார்த்தர், ழாக் ப்ரெவர், ழாக் லக்கான், ழாக் தெரிதா முதலான ழாக்குகளும் ழான்களும் எங்கிருந்து வந்தார்கள்?

பிரெஞ்சு மொழியில் அரிச்சுவடி கோர்ஸ் படித்தவர்களுக்குக் கூட (என்னைப் போல) பிரெஞ்சின் J/G ஒலிக்கும் ழ-வுக்கும் தொடர்பில்லை என்று தெரிந்திருக்கும். TV5Asie அலைவரிசையில் கொஞ்சம் பிரெஞ்சைக் கேட்டாலே கூடப் போதும். இது ஷ-வும் ஜ-வும் கலந்த ஒலி. ஆனால் ழ அல்ல. எழுபதுகளிலோ எண்பதுகளிலோ யாரோ செய்த சதியால் இந்த ஒலி  மாற்றப்பட்டிருக்கிறது.

பெயர்கள் ழ-வில் தொடங்கும் அபத்தம் உறுத்தத்தான் செய்கிறது. ஆப்பிரிக்கப் பெயர்கள் சில ‘ங்’-இல் தொடங்குவது எனக்கு உறுத்தவில்லை. அவை அப்படித்தான் தொடங்க வேண்டும். அவர்கள் பெயர் அவை. ஆனால் ழாக் லக்கானின் பெயர் ழாக் அல்ல. ஏனென்றால் ழாக் என்பது போங்கு.

Jean, Jacques என்ற பெயர்கள் முறையே John, Jack/Jacob ஆகியவற்றின் பிரெஞ்சு வடிவங்கள் என்பதும் யாரும் அறியாத தகவல் அல்ல.

Jean-ஐ ஜான் என்றோ ஷான் என்றோ சொன்னால் பிரெஞ்சின் ஜா/ஷா ஒலிக்கு அருகில் வரும். ‘ஷா’ குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் (Sean Connery). என்னைக் கேட்டால் இந்த ஒலியை ‘ஜா’ என்று துணிந்து எழுதலாம்.

ஆகையினாலே  தமிழ்கூறு நல்லுலகோர் புராதனமானதும் பிழையானதுமான இவ்வொலிபெயர்ப்பு மரபைக் கழற்றிவிட வேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

மதிகெட்ட மார்க்கெட்டிங்

தமிழ் பேசுபவர்களின் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் போதாது. கொஞ்சம் அறிவு, குறைந்தபட்ச மொழிசார் விழிப்புணர்வு, மார்க்கெட் என்பது மனிதர்களின் தொகுதி என்ற அறிவு – இதெல்லாம் தேவை.

தங்களிடம் இதில் எதுவும் இல்லை என்பதை மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களே நிரூபித்திருக்கின்றன. ‘தமிழ் மேட்ரிமோனி’ போன்ற துக்கடா நிறுவனங்களைக் கேட்கவா வேண்டும்? இது ஜிமெயிலில் தெரியும் செய்தியோடையின் திரைப்பதிவு (முழுசாகப் பார்க்க க்ளிக் செய்யுங்கள்) –

tmatrimony.jpg

தமிழ் என்ற சொல்லில் புள்ளி வைப்பதும் அதில் புள்ளி காணாமல் போவதைக் கண்டுபிடிப்பதும் அவ்வளவு கடினமா என்ன? Grooms For திருமணமாம்! இந்த நிறுவனத்தின் ‘பெற்ற’ நிறுவனமான பாரத் மேட்ரிமனியைத் தொடங்கியவர் தமிழ்நாட்டுக்காரர். வெட்கக்கேடு.

இதைத் தூக்கி சாப்பிடுவது ஒரு ஷோப்பிங் விளம்பரம்…

onlinay.jpg

அதாவது ஆன்லைன் ஷாப்பிங் கம்மி விலையில். இந்த கோர விபத்து எப்படி நடந்தது? ஒலிபெயர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்தி online என்று அடித்திருக்கிறார்கள். முரசு அஞ்சலின் ஒலிபெயர்ப்புத் தட்டச்சு முறையைப் பயன்படுத்தினால் இப்படி வராது. அஞ்சலைப் பயன்படுத்தியிருந்தால் oNlinE என்று அடித்திருக்க வேண்டும். இந்த வேலையைச் செய்தவர்கள் அந்த அளவிற்குக் கூறுகெட்டவர்களாக இருப்பார்களா என்று தெரியவில்லை.

இது இந்தியிலிருந்து ஒலிபெயர்க்கும் மென்பொருளை வைத்துச் செய்யப்பட்ட காரியம் என்று ஒரு நண்பர் சொன்னார். அவர் சொன்னது முற்றிலும் சரியாகத்தான் இருக்க வேண்டும். துப்பு: ‘விலையில்’ என்பது ‘விளாயில்’ ஆகியிருக்கிறது. இந்திக்காரர்களுக்கு ‘ஐ’ பிடிப்பதில்லை. லைன் -> லாஇன், ஃபைல் -> ஃபாஇல் என்கிற ரீதியில்தான் இவர்கள் எழுதுகிறார்கள். இந்தியில் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். இந்திக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்? இந்தியிலிருந்து தமிழுக்கு ஒலிபெயர்க்கும் யோசனை மடத்தனம், பொறுப்பின்மை, அலட்சியம், இந்தி மைய சிந்தனை நான்கின் கலவையாகவும் இருக்கும்.

சில நாட்களுக்கு முன் இந்தப் பதிவில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: இந்தித் திணிப்பு பல வடிவங்களில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

மூன்று விஷயங்கள்

1

அவுட்லுக்கின் புதிய இதழில் வட இந்தியாவைத் தென்னிந்தியா ஓவர்டேக் செய்துவருவது பற்றி ஒரு சிறப்புப் பகுதி போட்டிருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் நிறைய பிரதிகள் விற்றிருக்கும்). வட இந்தியர்கள் (ஊடகங்களையும் சேர்த்து) தென்னிந்தியர்களைப் பழம் பஞ்சாங்கங்களாக நினைப்பதையும் சித்தரிப்பதையும் சதானந்த் மேனன் தன் கட்டுரையில் லேசாகத் தொட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் இந்த மாதிரி ஸ்டீரியோடைப்பிங் வேலையைச் செய்யும் இதழியலாளர்களில் அவுட்லுக் விதிவிலக்கல்ல.

ஆனந்த விகடன் சென்னைவாழ் நடுத்தர வர்க்கத்தினரை மனதில் கொண்டு பத்திரிகை நடத்தி கிராமத்து ஸ்பெஷல் (“கிராமத்துக்குப் போலாமா?”) வெளியிட்ட கதை மாதிரிதான் இதுவும். வழக்கமான ஆங்கிலப் பத்திரிகை பாணியில் தனித்தனி பாக்ஸ் ஐட்டங்களை ஒட்டித் தயாரித்த ‘ஸ்டோரி’களைத் தந்திருக்கும் அவுட்லுக், தான் அடிப்படையில் தென்னிந்திய விரோத மனோபாவத்தைக் கொண்ட பத்திரிகைதான் என்பதை நிரூபித்து வருகிறது.

இந்தியில் சகஜமாகப் புழங்கும் வார்த்தைகள் தென்னிந்தியர்களுக்குப் புரிந்தாக வேண்டும்; புரியாவிட்டால் கற்றுக்கொள்ளட்டும் என்று நினைக்கும் போக்கு வட இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு உண்டு. தெற்கை ‘விதந்தோதி’யிருக்கும் அவுட்லுக், தனது மற்ற கட்டுரைகளில் அதே அலட்சிய மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

பைரோன் சிங் ஷெகாவத் பற்றிய கட்டுரையில் ‘ஹவேலி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார் கட்டுரையாசிரியர் நீலப் மிஷ்ரா. அதன் பொருள் எனக்குத் தெரியாது. வசிப்பிடம் என்று அரைகுறையாகத் தெரியும். ஆனால் வாசகருக்கு எதுவும் எளிதில் புரிய வேண்டும் என்பது இதழியலில் மிக அடிப்படையான ஒரு விதி. ஆனால் நாமெல்லாம் அவர்களுக்குக் கணக்கில்லை. இந்தி தெரியாதவன்/ள் ஏன் ஆங்கிலப் பத்திரிகை படிக்க வேண்டும் என்பது அவர்கள் வாதமாக இருக்கலாம்.

வட, மேற்கு இந்திய அரசியல்வாதிகள் இந்தியில் பேசும் விஷயங்களை அடைப்புக் குறியில் ஆங்கில மொழிபெயர்ப்பைப் போடாமல் அப்படியே ஒலிபெயர்த்துப் போடுகின்றன. கூசாமல். எல்லாப் பத்திரிகைகளும் எல்லா சமயங்களிலும் இந்தக் காரியத்தைச் செய்வதில்லை. ஆனால் பெரும்பாலான சமயங்களில் அதைச் செய்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு முடிவே இல்லை போலிருக்கிறது.

அப்புறம் இன்னொரு விஷயம்: கோவில் கோபுரம்தான் தமிழ்நாட்டின் அடையாளமா? இந்த சிறப்புப் பகுதிக்கான லோகோவாக கோபுரத்தைப் போட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்காரர்கள் என்று விபூதிப் பட்டையும் குடுமியுமாக ஒரு ஆண் முகத்தைப் போடுவதற்கும் இதற்கும் எனக்கு அதிக வித்தியாசம் தெரியவில்லை.

2

கட்டாந்தரை மீனவர்கள் பட்டையைக் கிளப்பும் தமிழ் மொழிபெயர்ப்பு உலகில் தரமான மொழிபெயர்ப்பைப் பார்க்க முடிகிற ஓர் இடம்… லயன் காமிக்ஸ்! இந்த மாதம் பெரிய சைஸில் 386 பக்கங்களுடன் 100 ரூபாய் விலையில் வந்திருக்கும் கௌபாய் ஸ்பெஷலே இதற்கோர் ஆதாரம்.

‘தலைக்கு ஒரு விலை’ என்ற லக்கி லூக் வண்ணப் படக்கதையும் அதற்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் ‘பனிக் கடல் படலம்’ என்ற டெக்ஸ் வில்லர் கதையும் அட்டகாசமான மொழிபெயர்ப்புகள் (இரண்டையும் ஒரே நபர் மொழிபெயர்த்திருப்பது போல் தெரிகிறது). ‘தலைக்கு ஒரு விலை’ அதிரடியான நகைச்சுவைக் கதை. அதன் வெற்றிக்குக் காரணம், ஆங்கிலத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொண்டு நல்ல சொல்லறிவையும் அசாதாரணமான நகைச்சுவை உணர்வையும் கொண்டு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு.

தமிழ்நாட்டுத் தமிழ்ப் பேச்சின் வேடிக்கையான அம்சங்களை முழு வீச்சுடன் பயன்படுத்தியிருக்கிறார் மொழிபெயர்ப்பாளர். இதை உதாரணம் காட்டி விளக்குவதை விட படித்தால்தான் புரியும்.

டெக்ஸ் வில்லர் கதையில் கூட நடையில் சில பிரச்சினைகளைச் சொல்லலாம். லக்கி லூக் மொழிபெயர்ப்பில் வெளிப்படுவது ஜீனியஸ் என்று சொன்னால் தப்பில்லை. சினிமா பாரடைசோ, லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்றெல்லாம் ஜல்லியடிப்பவர்கள் வெகுஜன இலக்கியத்திலிருந்து இது போன்ற சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

(பி.கு.: லயன் காமிக்ஸ் விரைவில் ‘ஏஜண்ட் XIII‘ என்ற கதையைக் கொண்டுவரப் போகிறது. 18 பகுதிகளை ஒரே புத்தகத்தில் போடப் போகிறார்கள். 800 பக்கங்கள், விலை ரூ. 200. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும்தான் பிரதி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

3

இலக்கிய உலகப் பெரியவர்கள் – தங்களைப் பெரியவர்களாக நினைத்துக்கொள்ளும் இளம் எழுத்தாளர்களைச் சொல்லவில்லை; வயதில் பெரியவர்களைச் சொல்கிறேன் – எல்லோரும் இப்போது புதியதோர் பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் Hi5, Orkut, Minglebox, Tagged போன்ற டேட்டிங் மற்றும் பிரெண்ட்ஷிப் வலையகங்களில் உறுப்பினர்களாகிறார்கள். தங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் சரமாரியாக மின்னஞ்சல் அழைப்புகளை ஏவுகிறார்கள். சான்றோர், பண்புளோர் என்றெல்லாம் மதிக்கப்படுபவர்கள் இப்படி இறங்கியிருப்பது வருத்தமளிக்கிறது.