1.2.3.4.5.6.7.8.
ஐகாரஸ் பிரகாஷ் என்பார் தாம் தொடங்கிவைத்த ஆட்டத்திலே என்னையும் பங்கேற்றிட அழைத்துள்ளார். அவர் கூறுகின்ற ஒருவர் தமது பெருமைகளாகத் தாம் கருதுவனவற்றுள் எட்டினைப் பட்டியலிட வேண்டுமெனவும், அப்பட்டியலினடியில் அவ்வாட்டத்திலே பங்கேற்கவென மேலும் எட்டுப் பேரினைப் பட்டியலிட்டழைத்திட வேண்டுமெனவும் அப்பெயர்ப் பட்டியலினடியில் ஆட்ட விதிகளைக் குறிப்பிட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இவ்வழைப்பை முன்னிட்டு நான் வெளியிடும் பட்டியல் பின்வந்திடுமாறு:
1. இரண்டு முறை ரேடியோவில் குரல் ரீதியாகத் தோன்றியிருக்கிறேன். ஏழாவது/எட்டாவது படிக்கும்போது சென்னை வானொலியின் ‘சிறுவர் சோலை’ நிகழ்ச்சியில் ‘சிறுவர் நாடக விழா’வுக்காக ‘காணாமல் போன கண்மணிகள்’ என்ற நாடகத்தில் வீட்டை விட்டு ஓடிப்போகும் நான்கு சிறுவர்களில் ஒருவனாக நடிப்பு. இயக்கியவர் அன்றைய வானொலி அண்ணா கூத்தபிரான். இன்னொரு நிகழ்ச்சியில் பாடியும் இருக்கிறேன் (சுற்றுச்சூழல் விழிப்புணர்ச்சிப் பாடல்).
2. 2001 வாக்கில் தளையறு மென்பொருள்காரர் ரிச்சர்ட் ஸ்டால்மனுடன் மின்னஞ்சல் மூலம் ஒரு குட்டிக் கலந்துரையாடல் நடத்தினேன். Thread பாதியில் அறுந்துபோனது. Free software என்பதற்கு இணையான தமிழ்ச் சொற்றொடரை அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். ‘இலவச மென்பொருள்’ என்றுதான் சொன்னேன். ஆனால் எனக்கே அதில் திருப்தி இல்லை. ‘தளையறு மென்பொருள்’ என்றும் சொன்னேன் (அதற்கு முன் அந்தச் சொல்லாக்கத்தை நான் கேள்விப்பட்டதில்லை. அது அப்போதே இருந்ததா என்றும் தெரியவில்லை). இதற்குத் தீர்வு கிடைக்கவில்லை. திடீரென்று பார்த்தால் என் இன்பாக்ஸில் ரிச்சர்ட் ஸ்டால்மன். அவருக்குத் தளையறு மென்பொருள் பிடித்தது. அதுதான் சரியான மொழிபெயர்ப்பு. ஆனால் free என்ற வார்த்தை ஆங்கிலத்தில் சகஜமாக இருப்பது போல் ‘தளையறு’ என்பது தமிழில் இல்லை. எனவே அது முற்றிலும் தகுந்த மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. இது இழுபறியாகப் போய்க்கொண்டிருந்ததால் அவர் ‘இந்த முக்கு வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்’ என்று சொல்லாத குறையாக மறைந்துவிட்டார்.
3. மொழிபெயர்ப்பில் நான் advanced beginner என்று நம்புகிறேன். நிபுணர்களாக அறியப்படும் சிலரது மொழிபெயர்ப்புகளில் பெரிய தவறுகளைக் கண்டுபிடித்தால் நிபுணர் இல்லையென்றாலும் advanced beginnerதானே?
4. இணையவழி காதலைக் கருவாக வைத்துக் கதை எழுதிய முதல் ஆள் நான்தான் என்று நினைக்கிறேன். 14 கதைகள் எழுதினேன். எல்லாமே பிரசுரிக்கப்பட்டன. கொஞ்சம் பேர் படித்தார்கள். அதே மாதிரி முதல் சைபர் க்ரைம் கதையும். ஐட்டம் 5ஐ இதோடு நிறுத்திக்கொள்கிறேன்!
5. அரிய புத்தகங்களைச் சேகரிக்கும் பொழுதுபோக்கு முன்பு எனக்கு இருந்தது. 1870களில் வெளிவந்த ஒரு திருக்குறள் பதிப்பு, 1906இல் வந்த ‘திருத்தணிகைச் சந்நிதி முறை’, 1936இல் வந்த புகழேந்திப் புலவர் வாழ்க்கை வரலாறு, 1930களில் வந்த ஒரு தலகாணி சைஸ் வைணவப் பத்திரிகைத் தொகுப்பு, ‘50களில் வந்த ஒன்றிரண்டு நாவல்கள் என்று சில பழைய தமிழ்ப் புத்தகங்களை வைத்திருக்கிறேன். என்னுடைய பிரதான பொழுதுபோக்கு, இரண்டாம் உலகப் போர் பற்றிய புத்தகங்களைச் சேகரிப்பது. இந்த வகையறாவில் மிக அரிய புத்தகங்கள் சில என்னிடம் இருக்கின்றன. எ.கா.: க்வாய் ஆற்றுப் பாலம் கட்டிய போர்க் கைதிகளில் ஒருவர் தன் அனுபவத்தை எழுதிய புத்தகம், அவர் கையெழுத்துடன்; முதலாம் உலகப் போரின்போது மக்களின் பாலியல் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் (2ஆம் உ.போ.க்கு முன்பு வெளிவந்தது); 2ஆம் உ.போ. காலகட்டத்தில் வந்த நேச நாட்டுப் பிரச்சாரச் சிறுபுத்தகங்கள் (booklets); நாஜி காலத்து ஜெர்மன் அஞ்சல் தலைகள்; முதல் உலகப் போரை அடுத்து ஜெர்மனியை ஆட்டிவைத்த பணவீக்கத்தின்போது அச்சிடப்பட்ட நாட்கெல்டு நோட்டுகள் (சில மில்லியன்கள் இருக்கும்); பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிருந்த பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கான Victory என்ற பத்திரிகை. பிறகு சத்திய சோதனையின் முதல் ஆங்கிலப் பதிப்பு, 1927இல் வெளிவந்தது (அந்த வருடம் எடுக்கப்பட்ட காந்தி போட்டாவுடன், அட்டை இல்லாத நிலையில்). Pears Cyclopedia 1936, 1938 ஆண்டுப் பதிப்புகள். இன்னும் கூட சொல்லலாம்! தமிழ்ப் புத்தகங்களை ரோஜா முத்தையா நூலகத்திற்கு அனுப்பத் திட்டம்.
6. நீங்கள் வைத்திருக்கும் நோக்கியா ஃபோனில் தமிழ் இடைமுகம் இருக்கிறதா? ஆம் எனில் அதில் கணிசமான ஒரு பகுதி என் மொழிபெயர்ப்பாக இருக்கலாம். நான் சில ஆயிரம் string-களைத் தமிழாக்கியிருக்கிறேன். அது ஒரு பயங்கர அனுபவம்…
7. நான் எழுதிய இரண்டு கட்டுரைகள் ஒரு தேசிய நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒன்று கவர் ஸ்டோரி.
8. என் பாணியில் வேறு யாரும் எழுதுவதில்லை.
8அ. எனக்கு Time பத்திரிகை பிடிக்காது என்றாலும் அவர்கள் 2006இன் Person of the Year-ஆக என்னை அறிவித்தார்கள்.
விளையாட்டின் விதிகளாவன:
1. ஆடுபவர் தன்னைப் பற்றி 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுத வேண்டும்.
2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தர வேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும் விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.
மூன்றாம் விதிப்படி நான் அழைக்கும் எண்மர்:
1. கட்டியக்காரன் - வடக்கு மாசி வீதி
2. செ.ச. செந்தில்நாதன் - அறம் பொருள் இன்பம்
3. பாஸ்டன் பாலா - எண்ணிலடங்கா வலைப்பதிவுகள்
பின்வருவனவற்றை ஸ்லாஷ்டாட்டின் Cowboy Neal!-ஆகப் பாவியுங்கள்:
4. ராபர்ட் ஸ்கோபிள் - ஸ்கோபிளைஸர்
5. டேவ் பேரி - டேவ் பேரீஸ் பிளாக்
7. ஸ்காட் ஆடம்ஸ் - த டில்பர்ட் பிளாக்
8. உடி ஆலன் (Woody Allen)
வலைப்பதிவு எழுதுவதை எப்போதுமே ஒரு performance-ஆகக் கருதுகிறேன். நாம் ஒரு பெரிய மேடையில் இருக்கிறோம் என்ற உணர்வோடு பலரும் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. இந்த மீம் அதை வெளிப்படையாகச் செய்யவைத்திருக்கிறது.
பெயர்வீச்சு (டீலக்ஸ் பதிப்பு)
இடாலோ கால்வினோ (Italo Calvino)
ரோலான் பார்த் (Roland Barthes)
டொனால்டு பார்த்தெல்மே (Donald Barthelme)
உம்பர்ட்டோ ஈக்கோ (Umberto Eco)
மிலன் குந்தேரா (Milan Kundera)
ரிச்சர்ட் ரைட் (Richard Wright)
காஃப்கா (Kafka)
ழான் பால் சார்த்தர் (Jean-Paul Sartre)
சாமுவேல் ஜான்சன் (Samuel Johnson)
ஜேம்ஸ் பாஸ்வெல் (James Boswell)
வில்லியம் ஜேம்ஸ் (William James)
ஹென்றி ஜேம்ஸ் (Henry James)
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தாஸ்தாயேவ்ஸ்கி (Dostoevsky)
புஷ்கின் (Pushkin)
சோல்ஜனிட்சின் (Solzhenitsyn)
லெர்மோன்டோவ் (Lermontov)
எமிலி டிக்கின்சன் (Emily Dickinson)
ஜான் பெர்ஜர் (John Berger)
ரால்ஃப் எல்லிசன் (Ralph Ellison)
எலீ வீசல் (Elie Wiesel)
ஆல்பர்ட் காம்யு (Albert Camus)
லூயிஸ் கேரல் (Lewis Carroll)
டெகார்ட்டே (Déscartes)
இம்மானுவல் கான்ட் (Immanuel Kant)
ஹெகல் (Hegel)
வி.எஸ். நைபால் (V.S. Naipaul)
விக்ரம் சேட் (Vikram Seth)
ஜூலியா க்றிஸ்தேவா (Julia Kristeva)
குந்தர் கிராஸ் (Guenter Grass)
ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)
எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway)
சோஃபாக்ளிஸ் (Sophocles)
லியோனிட் ஆண்ட்ரியேவ் (Leonid Andreyev)
காயத்ரி ஸ்பிவாக் (Gayatri Spivak)
எரிக் ஆம்ப்ளர் (Eric Ambler)
ஜூடித் பட்லர் (Judith Butler)
அருந்ததி ராய் (Arundati Roy)
அனிதா தேசாய் (Anita Desai)
மார்க் டல்லி (Mark Tully)
ப்ரூஸ்ட் (Proust)
ஓரான் பாமுக் (Orhan Pamuk)
அமிதவ் கோஷ் (Amitav Ghosh)
ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Richard Dawkins)
ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen Hawking)
சிக்மண்ட் ஃப்ராய்ட் (Sigmund Freud)
ழாக் லக்கான் (Jacques Lacan)
ழாக் டெரிடா (Jacques Derrida)
ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce)
பாப்சி சித்வா (Bapsi Sidhwa)
டாக்டர் ஸாய்ஸ் (Dr. Seuss)
சால்வடார் டாலி (Salvador Dali)
வில்லியம் டால்ரிம்பிள் (William Dalrymple)
ழாக் ப்ரெவர் (Jacques Prévert)
லெவி ஸ்ட்ராஸ் (Lévi-Strauss)
மிஷெல் ஃபூக்கோ (Michel Foucault)
சல்மான் ருஷ்டி (Salman Rushdie)
ராமச்சந்திர குஹா (Ramachandra Guha)
சசூர் (Saussure)
அல்தூஸர் (Althousser)
கிரஹாம் கிரீன் (Graham Greene)
ஆந்தனி பர்ஜஸ் (Anthony Burgess)
ஷேக்ஸ்பியர் (-)
சார்லஸ் போதலேர் (Charles Baudelaire)
பாப்லோ நெருடா (Pablo Neruda)
பௌலோ கொய்லோ (Paulo Coelho)
பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon)
ஜான் மில்டன் (John Milton)
கிறிஸ்டபர் மார்லோ (Christopher Marlowe)
வில்லியம் வைச்சர்லி (William Wycherley)
சில்வியா ப்ளாத் (Sylvia Plath)
… இப்போதைக்கு இவ்வளவுதான்.
ஆப்பிள் சஃபாரி vs விண்டோஸ்
தீவிர ஃபயர்ஃபாக்ஸ் பயனாளியாக இருந்தாலும் ஆப்பிளின் சஃபாரி உலாவி விண்டோஸுக்கு வருகிறது என்று கேள்விப்பட்டதும் உடனடியாக டவுன்லோட் செய்து நிறுவினேன். பெரும் ஏமாற்றம்.
ஆப்பிள் சைட்டில் சஃபாரி பீட்டா 3 எதிலெல்லாம் மற்ற உலாவிகளைத் தூக்கிச் சாப்பிடுகிறது என்று பார் சார்ட் எல்லாம் போட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் பக்கங்கள் உலாவிக்கு வருவதற்குள் பொறுமை போய்விடுகிறது. சேவை மறுப்பு (Denial of Service) உட்பட பல பிரச்சினைகள் இருப்பதாகப் பலரும் அதற்குள் எழுதிவிட்டார்கள். அதன் புக்மார்க் வசதியைத் தொட்டாலே க்ராஷ் ஆகிறதாம். பீட்டா என்ற பெயரில் சஃபாரிக்குக் குழந்தைத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள்.
விண்டோஸ் சஃபாரி பிரச்சினைகள் தற்காலிகமாகவே இருக்கும். ஐட்யூன்ஸ் விண்டோஸில் நன்றாக இயங்கும்போது சஃபாரியும் தவறுகளைத் திருத்திக்கொள்ள ரொம்ப நாள் ஆகாது. அது ஃபயர்ஃபாக்ஸுக்கோ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கோ கடும் போட்டியாக உருவெடுக்குமா என்பது வேறு விஷயம்.
ஆனால் பெரியண்ணன் மைக்ரோசாஃப்ட் தவிர எல்லோரும் செய்யும் தப்பை ஆப்பிளும் செய்திருக்கிறது. விண்டோஸ் சஃபாரிக்கு யூனிகோடு சுத்தமாகப் புரியவில்லை. மெக்கின்டாஷில் எப்படியோ. தமிழை அது பிய்த்துப் போடுவதைப் பார்க்க சகிக்கவில்லை. டைப் செய்தாலும் அதே கதைதான். ஃபயர்ஃபாக்ஸ் கூட justify செய்தால்தான் பிய்த்துப் போடுகிறது. சஃபாரியில் முழுசாகவே தகராறுதான்.
எல்லா பெரிய வசதிகளும் ஃபயர்ஃபாக்ஸில் இருக்கும்போது விண்டோஸ் சஃபாரியை இப்போதைக்கு யாரும் பயன்படுத்துவார்கள் என்று தோன்றவில்லை. ஒரு பக்கம் பரபரப்பாக டவுன்லோடு செய்துகொண்டிருப்பார்கள், இன்னொரு பக்கம் அதே பரபரப்போடு அனின்ஸ்டால் செய்துகொண்டிருப்பார்கள். ஒரு மென்பொருளை பீட்டா டெஸ்ட்டிங் செய்வதற்கு முன்பே உலகிற்கு ஈவது என்ன அணுகுமுறை?

