மொழி அதிர்ச்சிகள்

மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் “மொழி அதிர்ச்சி” என்ற சிறுகதை 300 வார்த்தைகள்தான் இருக்கும். பெரிய மாஸ்டர்பீஸ் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட வலைப்பதிவில் வரும் அனுபவப் பகிர்வின் தரம்தான் இருக்கும். ஆனால் அது இப்போதும் சிலருக்கு நினைவிருக்கக் காரணம், மொழி விஷயத்தில் மாந்தர் காட்டும் துணிகரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அன்றாடம் எதிர்கொள்வதுதான்.

கதையின் சுருக்கம்: கதைசொல்லி ஓர் உள சிகிச்சையாளன். ஆலோசனைக்கு வரும் ஒருவர் தனது உறவினரின் தீவிர மனப் பிரச்சினையை விரிவாக விளக்குகிறார். ரிலாக்சேஷன் என்ற வார்த்தையை தாராளமாகத் தூவிப் பயன்படுத்துகிறார். ‘திடீர்னு ரிலாக்செசன் ஆயி…’ – இப்படி ஒவ்வொரு முறை ஒவ்வொரு அர்த்தத்தில் பயன்படுத்துவதாக ஞாபகம்.

கதைசொல்லி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ‘நீங்க அடிக்கடி ஒரு வார்த்தைய பயன்படுத்துறீங்க. நான் அத வேற மாதிரி உச்சரிப்புல வேற அர்த்தத்துலதான் கேட்டிருக்கேன்’ என்பது போல கண்டனத் தொனியில் கேட்கிறான். வந்தவர் அதற்கு ‘இங்கிலீஷ்ல இதுக்கெல்லாம் என்னங்க பெரிய அர்த்தம் இருக்கப் போவுது’ என்கிறார். கதைசொல்லி அதிர்ந்து போகிறான். கதை முடிகிறது. இது ‘முன்றில்’ என்ற பத்திரிகையில் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தது என்று நினைக்கிறேன்.

*

என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு ‘சிக்சர் சித்து’ போல ஆங்கில ஈடுபாடு அதிகம். அவன் இங்கிலீஷில் ஏதாவது படித்துக்கொண்டிருந்தாலே எங்களுக்கெல்லாம் உதறும். அவன் படித்ததில் படு மந்தமான ஒரு நகைச்சுவை இருந்தால் ரொம்ப ‘இம்ப்ரெஸ்’ ஆகி எங்களுக்கெல்லாம் காட்டி இம்சிப்பான்.

அவ்வப்போது ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தை அவனுக்குக் காதலி ஆகிவிடும். உதாரணமாக, flamboyance என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டான். அதற்குப் பிறகு ஒரு மாதம் எதற்கெடுத்தாலும் ஃப்ளாம்பாயன்ஸ்தான் (“அந்த மூவில ஒரு ஃப்ளாம்பாயன்ஸ் இருக்குடா…”). சரியான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோமா என்ற கவலையெல்லாம் அவனுக்கு இல்லை. அதெல்லாம் எங்களுக்குத்தான். இப்போது “‘sup dood?” என்று திரிந்துகொண்டிருக்கிறான். ஒரு மொழிபெயர்ப்பாளனாகும் தகுதி அவனுக்கு இருக்கிறது.

*

தமிழ் மீடியப் படிப்பை முடித்துவிட்டு ஆங்கிலத்திலும் மெதுவாகப் படிக்க ஆரம்பித்தபோது ஆங்கிலத்தில் சின்னச் சின்ன, படு சாதாரணமான அம்சங்கள் கூட என்னைப் புல்லரிக்க வைத்தன. கல்லூரி நூலகப் புத்தகம் ஒன்றில் beleaguered என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டு, அது league என்பதிலிருந்து வந்தது என்று புரிந்துகொண்டு அசந்து போய், பக்கத்தின் ஓரத்தில் “beautifully coined word!” என்று எழுதியதை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

*

ஆங்கிலத்தில் பிழையில்லாமல் ஒரு வரி கூட எழுத முடியாத, ஒரு வாக்கியம் கூடப் பேச முடியாத ஆட்கள் கார்ப்பரேட் ஏணியில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் கதை, கவிதை எழுதும்போது வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

*

மொழி அதிர்ச்சிகளுக்கு முடிவில்லை. ஆகவே இப்பதிவு தொடரும்.

6 thoughts on “மொழி அதிர்ச்சிகள்

 1. எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். “நான் ஒன் ஆஃப் த மைண்டுடா’ என்று அடிக்கடி சொல்லுவான். அதற்கு அர்த்தத்தை பலமுறை கேட்டுவிட்டோம். சொல்ல மறுக்கிறான். சில சமயங்களில் நீயே கண்டுபிடி என்கிறான். நிறைய சினிக்கூத்து இதழ்களை வேறு சேர்த்து வைத்திருக்கிறான். ஆனால், மீனாட்சியம்மன் கோவில் தேரை தவறாமல் இழுக்கிறான். அவனுக்கு பெரிய ஸ்டேக்ஸ் ஏதும் இல்லை என்பதுதான் இதற்கெல்லாம் காரணம்.

 2. IMHO…..

  //ஆங்கிலத்தில் பிழையில்லாமல் ஒரு வரி கூட எழுத முடியாத, ஒரு வாக்கியம் கூடப் பேச முடியாத ஆட்கள் கார்ப்பரேட் ஏணியில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. //

  கார்ப்பரேட் ஏணியிலே ஏறுவதற்கும் ஆங்கிலத்தில் பேசுவதற்கும் என்ன தொடர்பு?

  //அவர்கள் கதை, கவிதை எழுதும்போது வயிற்றெரிச்சலாக இருக்கிறது//

  இதை ஒத்துக்கறேன்.

 3. முதல் மேட்டர்: நான் திறமை பற்றிப் பேசவில்லை என்பதைக் குறிப்பிடத் தவறிவிட்டேன். என் அனுபவத்தில் ஆங்கிலம் தெரியாதவர்கள்தான் ஆங்கிலத்தில் அதிகம் சவுண்டு விடுகிறார்கள். அரைகுறை ஆங்கிலம் அவர்களது திறமையின்மையை மறைக்கப் பயன்படுகிறது. இந்தப் பயன்பாட்டின் பயனாக அவர்கள் மேலே போகிறார்கள், கொஞ்சம்தான் என்றாலும் கூட.

  இரண்டாவது: அவர்கள் மொழிபெயர்ப்பிலும் பிஸி!

Comments are closed.