அமெரிக்காவைப் பார்!

அந்தக் காலத்து எழுத்தாளர் சோம.லெ. இலக்குமணச் செட்டியாரின் ‘அமெரிக்காவைப் பார்!’ என்ற புத்தகம் (வெளியீடு: இன்ப நிலையம், சென்னை-4, பிப்ரவரி 1950) பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. சுவாரஸ்யமான நடையும் கருப்பு-வெள்ளைப் படங்களும் நிறைந்த புத்தகம் இது. சும்மா மேய்ந்தபோது தென்பட்ட ஒரு பகுதி பின்வருமாறு:

பெண்கள்

ஒரு நாட்டில் மக்கள் வாழும் வகையை யறிவதற்குக் குடும்பங்களைப் பற்றிய விவரங்களையும், குடும்பத்தின் சிறந்த உறுப்பினராகிய பெண்களின் நிலையையும் ஆராய்ந்தறிவது இன்றியமையாதது.

இந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாறுதல் இருபாலருக்கும் இடையேயுள்ள உறவைப் பற்றியதே. இப்போது அமெரிக்க ஆடவரும் பெண்டிரும் ஒருவரோடொருவர் எளிதாகவும் மனவேறுபாடின்றியும் பழகி வருகின்றனர். பஸ் அல்லது ரயிலில், முன் பின் அறியாத ஒரு பெண்ணும் ஓர் ஆணும் அடுத்தடுத்து இருந்து பிரயாணம் செய்ய நேரும்போது, அவர்கள் இருவரும் இனிமையாய்ப் பேசிக்கொள்வது இயல்பு; ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளால் மேலும் உறவு கொண்டாட ஒருவர் விரும்புவதாக மற்றவர் கருதுவதில்லை.

உடல் வலிமை

அமெரிக்க ஆடவரைப் போலவே பெண்டிரும் கலங்காத நாட்டுப்பற்றும், அசைக்க முடியாத ஆண்மையும் அருளும், பொது நன்மைக்குப் பாடுபட வேண்டுமென்ற உறுதிப்பாடான உள்ளமும், அதற்குரிய உடல் வலிமையும் உடையவர்களா யிருக்கின்றனர். ஆடவரைப் போலப் பெண்டிரும் விளையாட்டுக்களில் மிக்க விருப்பமுடையவர்கள். இருபாலரும் தமது முக்கிய அலுவல்களில் விளையாட்டையும் ஒன்றாகக் கருதுகின்றனர். எல்லா விதமான விளையாட்டுகளிலும் பெண்களும் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்கள் மோட்டார் கார்களை ஓட்டுகின்றனர்; அமெரிக்காவில் ஆடவர் மோட்டார் கார்கள் ஓட்டும்போதுதான் பெரும்பாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றனவாம்! ஆகாய விமானம் ஓட்டும் வல்லமையுள்ள ஏழாயிரம் அமெரிக்கப் பெண்டிர் இருப்பதும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. விளையாட்டுக்கு அடுத்த படியாக, அமெரிக்கப் பெண்கள் தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வமுடையவரா யிருக்கின்றனர்.

சராசரியில் அமெரிக்க ஆடவர் 64 வயதளவும் பெண்டிர் 69 வயதளவும் வாழ்கின்றனர்; ஆடவர் 5 அடி 9 அங்குல உயரமும் பெண்டிர் 5 அடி 4 அங்குல உயரமும் இருக்கின்றனர்; ஆடவர் 159 பவுண்டு நிறையும் பெண்டிர் 132 பவுண்டு நிறையும் உள்ளவர்கள்.

மணம்

அமெரிக்காவில், மணம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்ற வழக்கமிலை. இதனால், ஆடவரிலும் சரி, பெண்களிலும் சரி, வயது வந்தும் மணமாகாதவர் பல்லாயிரவர் உளர். தத்தம் உரிமைகளை மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுக்கவும், குடும்பப் பொறுப்பை ஏற்கவும் இவர்கள் விரும்பாததே இந்நிலைக்குக் காரணம்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், குடும்பப் பொறுப்பேற்கக் கணவனைத் தேடும் வழக்கம் அமெரிக்காவில் கிடையாது. இடையே, சில காலம் ஏதாவதொரு வேலையில் பெண்களும் அமருவது முறையாகிவிட்டது. சராசரி 23 வயதில் ஒரு பெண், 25 வயதுள்ள ஓர் இளைஞனைத் திருமணம் செய்துகொள்ளுதலே இங்குள்ள வழக்கம்.

அமெரிக்காவில் காதல் முறையில் மணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு விருப்பமுள்ள ஆண்மகனோடு பல மாதங்கள் – சிலர் பல ஆண்டுகள் – வரை எல்லாத் துறைகளிலும் கூடிப்பழகி, ஒருவர் மற்றவரின் பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு, குற்றங்குறை ஆகியவற்றைத் தெரிந்து சம்மதித்துத்தான் திருமணம் முடித்துக் கொள்ளுகின்றனர். எனவே, மனம் ஒத்தாலன்றிச் செல்வம் அல்லது பதவிக்காகத் திருமணங்கள் அமெரிக்காவில் நடைபெறுவதில்லை. சாதிமத வேறுபாடுகளால் திருமணங்கள் தடைப்படுவதில்லை. காதலித்துத் தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண், தன் தாய் தந்தையருக்குத் தெரிவித்தால்தான், அவர்கள் (அன்பளிப்புக்களுடன்) மண வைபவத்துக்கு வருவது வழக்கம்.

மனம் ஒன்றுபடாவிடில், விவாக ரத்து (Divorce) செய்துகொள்ள இருதிறத்தாருக்கும் உரிமையுண்டு. விவாகரத்து செய்து கொள்ளுபவர்கள் எட்டுப்பேரில் ஒருவர்தான். இவ்வாறு பிரியும்போது, அவர்களில் யாராவது ஒருவர் குழந்தைகளைத் தம்முடன் அழைத்துச் செல்லுவர். குழந்தைகளைத் தாயார் அழைத்துச் செல்லவேண்டுமென்றும், குழந்தைகளைப் பேணும் செலவுக்காக ஒரு தொகையைத் தந்தை சில ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தார் கட்டளை யிடுவதுமுண்டு.

கணவன் இறந்துவிடின் மனைவி மறுமணம் செய்து கொள்ளுவாள். பெரும்பாலும் கணவனை இழந்த பெண்களிடம் பெருஞ் செல்வம் சிக்குவதால், அவர்கள்மீது மற்றப் பெண்கள் பொறாமைப்படுவதும் உண்டு.