மொழி அதிர்ச்சிகள்

மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் “மொழி அதிர்ச்சி” என்ற சிறுகதை 300 வார்த்தைகள்தான் இருக்கும். பெரிய மாஸ்டர்பீஸ் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட வலைப்பதிவில் வரும் அனுபவப் பகிர்வின் தரம்தான் இருக்கும். ஆனால் அது இப்போதும் சிலருக்கு நினைவிருக்கக் காரணம், மொழி விஷயத்தில் மாந்தர் காட்டும் துணிகரத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அன்றாடம் எதிர்கொள்வதுதான்.

கதையின் சுருக்கம்: கதைசொல்லி ஓர் உள சிகிச்சையாளன். ஆலோசனைக்கு வரும் ஒருவர் தனது உறவினரின் தீவிர மனப் பிரச்சினையை விரிவாக விளக்குகிறார். ரிலாக்சேஷன் என்ற வார்த்தையை தாராளமாகத் தூவிப் பயன்படுத்துகிறார். ‘திடீர்னு ரிலாக்செசன் ஆயி…’ – இப்படி ஒவ்வொரு முறை ஒவ்வொரு அர்த்தத்தில் பயன்படுத்துவதாக ஞாபகம்.

கதைசொல்லி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, ‘நீங்க அடிக்கடி ஒரு வார்த்தைய பயன்படுத்துறீங்க. நான் அத வேற மாதிரி உச்சரிப்புல வேற அர்த்தத்துலதான் கேட்டிருக்கேன்’ என்பது போல கண்டனத் தொனியில் கேட்கிறான். வந்தவர் அதற்கு ‘இங்கிலீஷ்ல இதுக்கெல்லாம் என்னங்க பெரிய அர்த்தம் இருக்கப் போவுது’ என்கிறார். கதைசொல்லி அதிர்ந்து போகிறான். கதை முடிகிறது. இது ‘முன்றில்’ என்ற பத்திரிகையில் பத்து வருடங்களுக்கு முன்பு வந்தது என்று நினைக்கிறேன்.

*

என் கல்லூரி நண்பன் ஒருவனுக்கு ‘சிக்சர் சித்து’ போல ஆங்கில ஈடுபாடு அதிகம். அவன் இங்கிலீஷில் ஏதாவது படித்துக்கொண்டிருந்தாலே எங்களுக்கெல்லாம் உதறும். அவன் படித்ததில் படு மந்தமான ஒரு நகைச்சுவை இருந்தால் ரொம்ப ‘இம்ப்ரெஸ்’ ஆகி எங்களுக்கெல்லாம் காட்டி இம்சிப்பான்.

அவ்வப்போது ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தை அவனுக்குக் காதலி ஆகிவிடும். உதாரணமாக, flamboyance என்பதைக் கற்றுக்கொண்டுவிட்டான். அதற்குப் பிறகு ஒரு மாதம் எதற்கெடுத்தாலும் ஃப்ளாம்பாயன்ஸ்தான் (“அந்த மூவில ஒரு ஃப்ளாம்பாயன்ஸ் இருக்குடா…”). சரியான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோமா என்ற கவலையெல்லாம் அவனுக்கு இல்லை. அதெல்லாம் எங்களுக்குத்தான். இப்போது “‘sup dood?” என்று திரிந்துகொண்டிருக்கிறான். ஒரு மொழிபெயர்ப்பாளனாகும் தகுதி அவனுக்கு இருக்கிறது.

*

தமிழ் மீடியப் படிப்பை முடித்துவிட்டு ஆங்கிலத்திலும் மெதுவாகப் படிக்க ஆரம்பித்தபோது ஆங்கிலத்தில் சின்னச் சின்ன, படு சாதாரணமான அம்சங்கள் கூட என்னைப் புல்லரிக்க வைத்தன. கல்லூரி நூலகப் புத்தகம் ஒன்றில் beleaguered என்ற வார்த்தையைப் பார்த்துவிட்டு, அது league என்பதிலிருந்து வந்தது என்று புரிந்துகொண்டு அசந்து போய், பக்கத்தின் ஓரத்தில் “beautifully coined word!” என்று எழுதியதை இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது.

*

ஆங்கிலத்தில் பிழையில்லாமல் ஒரு வரி கூட எழுத முடியாத, ஒரு வாக்கியம் கூடப் பேச முடியாத ஆட்கள் கார்ப்பரேட் ஏணியில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் கதை, கவிதை எழுதும்போது வயிற்றெரிச்சலாக இருக்கிறது.

*

மொழி அதிர்ச்சிகளுக்கு முடிவில்லை. ஆகவே இப்பதிவு தொடரும்.

அமெரிக்காவைப் பார்!

அந்தக் காலத்து எழுத்தாளர் சோம.லெ. இலக்குமணச் செட்டியாரின் ‘அமெரிக்காவைப் பார்!’ என்ற புத்தகம் (வெளியீடு: இன்ப நிலையம், சென்னை-4, பிப்ரவரி 1950) பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. சுவாரஸ்யமான நடையும் கருப்பு-வெள்ளைப் படங்களும் நிறைந்த புத்தகம் இது. சும்மா மேய்ந்தபோது தென்பட்ட ஒரு பகுதி பின்வருமாறு:

பெண்கள்

ஒரு நாட்டில் மக்கள் வாழும் வகையை யறிவதற்குக் குடும்பங்களைப் பற்றிய விவரங்களையும், குடும்பத்தின் சிறந்த உறுப்பினராகிய பெண்களின் நிலையையும் ஆராய்ந்தறிவது இன்றியமையாதது.

இந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய மாறுதல் இருபாலருக்கும் இடையேயுள்ள உறவைப் பற்றியதே. இப்போது அமெரிக்க ஆடவரும் பெண்டிரும் ஒருவரோடொருவர் எளிதாகவும் மனவேறுபாடின்றியும் பழகி வருகின்றனர். பஸ் அல்லது ரயிலில், முன் பின் அறியாத ஒரு பெண்ணும் ஓர் ஆணும் அடுத்தடுத்து இருந்து பிரயாணம் செய்ய நேரும்போது, அவர்கள் இருவரும் இனிமையாய்ப் பேசிக்கொள்வது இயல்பு; ஆனால், இது போன்ற நிகழ்ச்சிகளால் மேலும் உறவு கொண்டாட ஒருவர் விரும்புவதாக மற்றவர் கருதுவதில்லை.

உடல் வலிமை

அமெரிக்க ஆடவரைப் போலவே பெண்டிரும் கலங்காத நாட்டுப்பற்றும், அசைக்க முடியாத ஆண்மையும் அருளும், பொது நன்மைக்குப் பாடுபட வேண்டுமென்ற உறுதிப்பாடான உள்ளமும், அதற்குரிய உடல் வலிமையும் உடையவர்களா யிருக்கின்றனர். ஆடவரைப் போலப் பெண்டிரும் விளையாட்டுக்களில் மிக்க விருப்பமுடையவர்கள். இருபாலரும் தமது முக்கிய அலுவல்களில் விளையாட்டையும் ஒன்றாகக் கருதுகின்றனர். எல்லா விதமான விளையாட்டுகளிலும் பெண்களும் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான அமெரிக்கப் பெண்கள் மோட்டார் கார்களை ஓட்டுகின்றனர்; அமெரிக்காவில் ஆடவர் மோட்டார் கார்கள் ஓட்டும்போதுதான் பெரும்பாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றனவாம்! ஆகாய விமானம் ஓட்டும் வல்லமையுள்ள ஏழாயிரம் அமெரிக்கப் பெண்டிர் இருப்பதும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. விளையாட்டுக்கு அடுத்த படியாக, அமெரிக்கப் பெண்கள் தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வமுடையவரா யிருக்கின்றனர்.

சராசரியில் அமெரிக்க ஆடவர் 64 வயதளவும் பெண்டிர் 69 வயதளவும் வாழ்கின்றனர்; ஆடவர் 5 அடி 9 அங்குல உயரமும் பெண்டிர் 5 அடி 4 அங்குல உயரமும் இருக்கின்றனர்; ஆடவர் 159 பவுண்டு நிறையும் பெண்டிர் 132 பவுண்டு நிறையும் உள்ளவர்கள்.

மணம்

அமெரிக்காவில், மணம் செய்துகொண்டே ஆகவேண்டும் என்ற வழக்கமிலை. இதனால், ஆடவரிலும் சரி, பெண்களிலும் சரி, வயது வந்தும் மணமாகாதவர் பல்லாயிரவர் உளர். தத்தம் உரிமைகளை மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுக்கவும், குடும்பப் பொறுப்பை ஏற்கவும் இவர்கள் விரும்பாததே இந்நிலைக்குக் காரணம்.

கல்லூரிப் படிப்பு முடிந்ததும், குடும்பப் பொறுப்பேற்கக் கணவனைத் தேடும் வழக்கம் அமெரிக்காவில் கிடையாது. இடையே, சில காலம் ஏதாவதொரு வேலையில் பெண்களும் அமருவது முறையாகிவிட்டது. சராசரி 23 வயதில் ஒரு பெண், 25 வயதுள்ள ஓர் இளைஞனைத் திருமணம் செய்துகொள்ளுதலே இங்குள்ள வழக்கம்.

அமெரிக்காவில் காதல் முறையில் மணம் நடைபெறுகிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு விருப்பமுள்ள ஆண்மகனோடு பல மாதங்கள் – சிலர் பல ஆண்டுகள் – வரை எல்லாத் துறைகளிலும் கூடிப்பழகி, ஒருவர் மற்றவரின் பழக்கவழக்கம், விருப்பு வெறுப்பு, குற்றங்குறை ஆகியவற்றைத் தெரிந்து சம்மதித்துத்தான் திருமணம் முடித்துக் கொள்ளுகின்றனர். எனவே, மனம் ஒத்தாலன்றிச் செல்வம் அல்லது பதவிக்காகத் திருமணங்கள் அமெரிக்காவில் நடைபெறுவதில்லை. சாதிமத வேறுபாடுகளால் திருமணங்கள் தடைப்படுவதில்லை. காதலித்துத் தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பெண், தன் தாய் தந்தையருக்குத் தெரிவித்தால்தான், அவர்கள் (அன்பளிப்புக்களுடன்) மண வைபவத்துக்கு வருவது வழக்கம்.

மனம் ஒன்றுபடாவிடில், விவாக ரத்து (Divorce) செய்துகொள்ள இருதிறத்தாருக்கும் உரிமையுண்டு. விவாகரத்து செய்து கொள்ளுபவர்கள் எட்டுப்பேரில் ஒருவர்தான். இவ்வாறு பிரியும்போது, அவர்களில் யாராவது ஒருவர் குழந்தைகளைத் தம்முடன் அழைத்துச் செல்லுவர். குழந்தைகளைத் தாயார் அழைத்துச் செல்லவேண்டுமென்றும், குழந்தைகளைப் பேணும் செலவுக்காக ஒரு தொகையைத் தந்தை சில ஆண்டுகளுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தார் கட்டளை யிடுவதுமுண்டு.

கணவன் இறந்துவிடின் மனைவி மறுமணம் செய்து கொள்ளுவாள். பெரும்பாலும் கணவனை இழந்த பெண்களிடம் பெருஞ் செல்வம் சிக்குவதால், அவர்கள்மீது மற்றப் பெண்கள் பொறாமைப்படுவதும் உண்டு.

கர்ட் வானகட் மரணம்

kurt_vonnegut.jpg

அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானகட் (Kurt Vonnegut) இறந்துவிட்டார். அவருக்கு வயது 84.

Cat’s Cradle, The Sirens of Titan, Slaughterhouse-Five, Breakfast of the Champions உள்படப் பல நாவல்கள், Hocus Pocus, Welcome to the Monkey House உள்பட சிறுகதைத் தொகுப்புகள் வந்திருக்கின்றன.

மரபுகளைக் கடாசிவிட்டு எழுதும் பெரிய எழுத்தாளர்கள் பலர். ஆனால் கர்ட் வானகட் போல வேறு யாரும் எழுத முடியும் என்று தோன்றவில்லை. அறிவியல் புனைவு வடிவத்தில் – அதுவும் அந்த வடிவத்தைக் கிண்டல் செய்து – கனமான நகைச்சுவையுடன் எழுதினார் வானகட். இது அவரே உருவாக்கிய புதிய இலக்கிய வடிவம்.

அறிவியல் புனைவுகள் எதிர்காலத்தைப் பற்றி எச்சரித்தாலும் அவை பொதுவாக மனித இனத்தின் சாதனைகளைக் கொண்டாடுவதால், தனது ஆழமான அவநம்பிக்கையை வெளிப்படுத்தவே அவர் அந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தாரோ என்று தோன்றுகிறது.

‘பிரெக்ஃபாஸ்ட் ஆஃப் த சாம்பியன்ஸ்’ நாவலில் பக்கத்திற்குப் பக்கம் அவரே தடித்த கோட்டோவியங்கள் வரைந்திருப்பார் (கார்ட்டூன்கள் என்றும் சொல்லலாம்). இந்த நாவலில் ஒரு அத்தியாயத்தைப் படித்துப் பார்த்தால் அவரது நகைச்சுவையும் மிகக் காட்டமான விமர்சன பாணியும் தெரியும். முதல் அத்தியாயம் இங்கே. வானகட்டைப் படிக்காதவர்களுக்கு ரெகமண்டட்.

அஞ்சலிகள்: New York Times, Los Angeles Times

புது உலகு படைப்பதில் எனது பங்கு

1. தமிழின் இரண்டாவது க்யூபிச நாவலான எனது ‘திசை காட்டிப் பறவை‘யில் 17ஆம், 18ஆம் அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

2. தவிர்க்கவியலாத காரணங்களால் இவ்வலைப்பதிவில் இனி பின்னூட்டங்கள் வடிகட்டப்படும்.