பொறுப்பில்லாத எழுத்து

ஒரு விமர்சகர் மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைப் பற்றி எழுதும்போது எவ்வளவு பொறுப்பாக எழுத வேண்டும். ஒரு மூத்த கலை விமர்சகரே தன் எழுத்தில் தகவல் பிழைகளை அடுக்கியிருக்கிறார்.

கலை பற்றி ‘வான்கா’ உட்படப் பல புத்தகங்களை எழுதியிருக்கும் தேனுகாவின் சமீபத்திய புத்தகம் பியத் மோந்திரியான் என்ற ஓவியரைப் பற்றியது. புத்தகத்தின் தலைப்பும் அதுவே (வெளியீடு சந்தியா பதிப்பகம், விலை ரூ. 100).

பிழைகளில்தான் தொடங்குகிறது இந்தப் புத்தகம். தாதா என்ற சமூக, கலை, பண்பாட்டு இயக்கத்தைப் பற்றி தேனுகா எழுதுகிறார்…

பிரான்சில் தோன்றிய டாடாயிஸ்டுகள் (Dadaists) இவ்வாறு கலையை அழிப்பதற்கென்றே உருவெடுத்திருப்பதாகத் தங்களைப் பிரகடனம் செய்து கொண்டனர். ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்திய இவர்கள், ஒவ்வொரு ஓவியத்தின் மீதும் சுத்தியல் கொண்டு உடைத்து நொறுக்கும்படி பார்வையாளர்களை வேண்டினர். ஒரு தினசரியிலிருந்து சில வரிகளைப் படித்துக்காட்டி நாங்கள் இப்போது கவிதைப் படித்ததாகக் கூறினர். ஓவியக் கண்காட்சியைக் காணவந்தோரை பொதுக் கழிவறை ஒன்றின் வழியாக வரவேற்றனர் இவர்கள். இவ்வாறெல்லாம் கலையை மிக மூர்க்கமாக அழிக்கத் திட்டமிட்ட டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை. டாடாயிஸம் அதன் உதய காலங்களிலேயே சிசு மரணமிட்டது.

கதையெல்லாம் சொல்லி தேனுகா அழிவு கொள்ளை தீமை கழகம் ரேஞ்சுக்கு உயர்த்தியிருக்கும் ‘டாடாயிஸ்டு’களின் இயக்கம்
அவர் சொல்வது போல் கலையை அழிப்பதற்காக உருவான பயங்கரவாத கேங் அல்ல.

முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமைக்கப்பட்ட தாதா என்ற இந்த இயக்கம் போர் எதிர்ப்பு, கலையிலும் இலக்கியத்திலும் இருந்து வந்த மரபுகளை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சமூக அமைப்பில் முழுவதும் நம்பிக்கை இழந்துவிட்டிருந்த இளம் படைப்பாளிகளின் அமைப்பு அது. அவர்களில் சிலருக்கு - உதாரணமாக ஓவியர் ஜார்ஜ் கிராஸ் - இடதுசாரி சார்பு இருந்தது.

தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் பயன்படுத்திய உத்திகளில் முக்கியமான ஒன்று, மக்களைப் பதற வைப்பது. அந்தக் காலத்து மனிதர்களுக்கு அவர்களுடைய ஸ்டைல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கலையை அழிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிய தீவிரவாத கும்பல் ஒன்று குழந்தைத்தனமாக ஒரு டைப்ரைட்டருக்கும் தையல் மெஷினுக்கும் பந்தயம் நடத்தினால் எப்படி இருக்கும்? (இது நடந்தது!)
இன்னொன்று, தாதா இயக்கம் உருவானது பிரான்சில் அல்ல, ஸ்விட்சர்லாந்தில்.

“டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை” என்று ஒரு மூத்த கலை விமர்சகர் கிறுக்கியிருப்பதுதான் வயிற்றெரிச்சல்.

மார்செல் த்யுஷாம், ஜார்ஜ் கிராஸ், மேக்ஸ் எர்ன்ஸ்ட், மேன் ரே, ஹான்ஸ் ஆர்ப் என்று போன நூற்றாண்டில் கலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்கள் ‘தாதாயிஸ்டுகள்’தான். தாதாவின் வாரிசாக வந்த சர்ரியலிச இயக்கம், ‘தானாக எழுதும்’ உத்தி (automatic writing) போன்ற ஐடியாக்களை தாதாவிடமிருந்துதான் எடுத்துக்கொண்டது. தாதா அல்பாயுசில் போனது மட்டும்தான் அவர் சொல்வதில் நிஜம்.

தேனுகா விக்கிபீடியாவைக் கொஞ்சம் பழக்கப்படுத்திக்கொண்டால் நன்றாயிருக்கும். அதே போல ‘மரணமிட்டது’ என்றெல்லாம் பாசாங்கான, அபத்தமான தமிழில் எழுதுவதை நிறுத்தினால் புண்ணியமாய்ப் போகும்.

பின்னிணைப்பு: எனது ‘பிறழ்வு‘ பதிவில் இரண்டு தாதா கலைஞர்களின் படைப்புகள்: ரெடிமேட் கலை, பேராசையின் முகங்கள்.

பி.கு.: புத்தகத்தை நான் மேற்கொண்டு படிக்கவில்லை.

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள் (கதை)

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும் வாழ்முறைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஒரு பெருநிகழ்வு பிரெஞ்சுப் புரட்சியாகும். பொதுவாக ஒரு வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்து சில நூற்றாண்டுகள் ஆன பின்னர் அது குறித்துப் பல விதக் கேள்விகளை வரலாற்றாய்வாளர்கள் எழுப்புவதுண்டு. உண்மையில் நடந்தது என்னவென்ற தேட்டையில் வரலாற்றறிஞர்கள் ஈடுபடத் தொடங்குவதுண்டு. அது போலவே பிரெஞ்சுப் புரட்சி குறித்தும் பல கருதுகோள்கள் உண்டு ஆகும். பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை எனவும் அது பர்மாவில் நிகழ்ந்தது எனவும் ஒரு சாராரும், பிரெஞ்சுப் புரட்சியானது பிரான்சில் நிகழவில்லை எனவும் அது பின்லாந்தில் நிகழ்ந்தது எனவும் இன்னொரு சாராரும், இவ்விருபெரும் புரட்சிகளுமே கட்டுக்கதைகள்தாம் என வேறொரு சாராரும் கூறிவருகின்றனர். எனது இப்பதிவானது இம்மாறுபடும் கருத்துகளால் விளைந்துள்ள குழப்பங்களைக் களைவதுடன் பிரெஞ்சுப் புரட்சி நடந்தது பிரான்சில்தான் என்பதான உண்மையை நிறுவ முயல்கின்றது.

பிரெஞ்சுப் புரட்சி நிகழ்ந்த ஆண்டான 1789இன்போது நான் பிரான்சில், குறிப்பாக பாரீஸ் நகரில் இருந்தேன். அக்காலத்தில் சென்னையிலிருந்து வியன்னாவிற்கு நேரடிப் பேருந்து கிடையாது. கல்கத்தா சென்று அங்கிருந்து சுமார் 750 மணிநேரம் ரயிலில் பயணித்துப் பாரீஸில் இறங்கி வியன்னா செல்லும் பேருந்தைப் பிடிக்கவேண்டும். பாரீஸிலிருந்து வியன்னாவிற்குப் பயணம் 16 மணி நேரம்தான். நான் வியன்னாவிற்குச் சென்ற காரணம், ஜெர்மானிய மகாகவி கதேயின் நூற்றாண்டு விழாவில் கட்டுரை வாசிக்க என்னை அழைத்திருந்தனர். 02-12-1789 அன்று நான் பாரீஸில் கால் பதித்தபோது வசந்தகாலம். பாரீஸின் வசந்தகாலம் உலகப் பிரசித்தி பெற்றது. நூற்றாண்டு விழா நடைபெற இன்னும் இரு நாட்கள் இருந்ததால் அங்கு தங்கத் தீர்மானித்தேன்.

நான் இருந்த விடுதியான ‘பலெ த்ராத்வார் த பாரி’ (Palais Trottoir de Paris) மூந்நூறு வருடப் பழமைவாய்ந்ததாகும். பல பிரெஞ்சு அறிவுஜீவிகளின் சரணாலயமாகவும் விவாதத் தலமாகவும் அது இருந்தது. புரட்சி நடந்த அன்று அதைச் சிறிதும் எதிர்பார்த்திராத பலரில் நானும் ஒருவர். எனக்குப் பிரெஞ்சு மொழி தெரிந்திருந்தால் அந்நாட்டு நாளேடுகளைப் படித்து புரட்சியை எதிர்நோக்கியிருப்பேன். அது எனது முதல் பாரீஸ் விஜயமாதலால் நகரின் பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் புறப்பட்டேன். ஆர்க் த திரியோம்ப், முலான் ரௌஜ் போன்ற இடங்களில் நல்ல காபி கிடைக்கும் என நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தேன்.

புரட்சி நடந்த அன்று காலை சுமார் 11 மணியளவில் ‘பிஸ்த்ரோ’ (Bistro) ஒன்றில் தேனீர் அருந்தியபடி தெருக் காட்சிகளை ரசித்துக்கொண்டிருந்தேன் (’பிஸ்த்ரோக்கள்’ என்பவை திறந்தவெளி உணவு விடுதிகளாகும். இங்குச் சிற்றுண்டி மட்டுமே கிடைக்கும்; சாப்பாடு கிடையாது. இவ்விடுதிகளில் மக்கள் பிரெஞ்சு நாளேடுகளைப் புரட்டியபடி பானங்கள் அருந்துவதும் அன்றாடக் காட்சி). அப்போது திடீரென ஒரு பேரோசை எழுந்தது. சுமார் இருபது பிரெஞ்சுக்காரர்கள் திபுதிபுவென ஓடிவந்தனர். ஒரு சிலர் விடுதியில் நுழைந்து ‘லா ரெவல்யூசியோன்! லா ரெவல்யூசியோன்!!’ எனக் கத்தினர். எனக்கு அம்மொழி தெரியாது எனினும் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்குக் கடத்தப்பட்ட 20,000 சொற்களில் ஒரு நூறாவது எனக்குத் தெரிந்திருந்தன. அதில் புரட்சி எனும் பொருள் கொண்ட ‘ரெவல்யூஷன்’ என்பதும் ஒன்று. ரெவல்யூசியோன் என்பதன் பொருளை அதன் மூலமாகப் புரிந்துகொண்டேன். உலகைச் சுனாமியாய்ப் புரட்டிப் போட்ட பிரெஞ்சுப் புரட்சி வந்துவிட்டதென்பதும் அது தற்போது அந்த பிஸ்த்ரோ இருந்த தெருவின்வழியே வருகிறது என்பதும் எனக்குப் புரிந்தது.

எனது வாழ்நாள்க் காலத்தில் ஒரு தெருச் சண்டையைக் கூடப் பார்த்தறியாதவன் நான். ஆகவே புரட்சிக்கு எவ்வாறு உடனடி எதிர்வினையாற்றுவது என்றறியாமல் நான் குழம்பி நிற்கையில், சுமார் ஆயிரம் பிரெஞ்சுப் பொதுமக்கள் ‘வீவ் லா பிரான்ஸ்! வீவ் லா பிரான்ஸ்!! (பிரான்ஸ் வாழ்க!) எனக் கோஷமிட்டபடி அத்தெருவில் விரைந்துவந்தனர். கிட்டத்தட்ட ஒவ்வொருவரதும் கைகளில் கொடிகளிருந்தன. சிறிது தொலைவிலிருந்து துப்பாக்கி குண்டுச் சத்தங்கள் எழும்பின. நான் பிரெஞ்சுப் புரட்சியை உயரத்திலிருந்து பார்க்கலாமென மாடிக்கு ஓடினேன். அங்கு சுமார் இருநூறு பேர் பழைய புத்தகங்களையும் நாளேடுகளையும் பத்திரிகைகளையும் துண்டுதுண்டாகக் கிழித்துக்கொண்டிருந்தனர். அது ஜனத் திரளின் மீது தூவுவதற்காக எனப் பின்னரே எனக்குத் தெரியவந்தது. மாடியில் இடமின்றி நான் உடனடியாக முதல் தளத்திற்குச் சென்றேன்.

முதல் தளத்தில் கம்பளி நூல் கொண்டு உடை பின்னிக்கொண்டிருந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் புரட்சி வெடித்ததற்கான காரணியை எனக்கு எடுத்துரைத்தார். மன்னர் பதினாறாம் லூயியின் மோசமான ஆட்சியினால் நாட்டில் வறுமையும் சீர்திருத்தமின்மையும் பலவாறான சமூகச் சீர்கேடுகளும் தலைவிரித்தாடத் தொடங்கியிருந்தன. பிரபுக்களும் பிறவகைப்பட்ட செல்வந்தர்களும் செழிப்பில் திளைத்துக்கொண்டிருந்தனர். வால்டேர், ரூஸோ, திதரோ போன்ற சிந்தனையாளர்களும் மக்கள்நலப் பணியாளர்களும் மேற்கொண்ட அனைத்துப் போராட்டங்களும் திட்டமிடப்படாத சிறைநிரப்புப் போராட்டங்களாயின. ‘ரொட்டி இல்லை என்றால் என்ன, கேக் சாப்பிடவும்’ என்ற ராணியாரிணி மேரி அந்த்வானெத்தினது பேச்சு, மக்களது குமுறலுக்கு எரிபொருளூட்டவே செய்திருந்தது.

ஆயுதமேந்திக் கோஷமிட்டவாறு தெருக்களில் பெருந்திரளாய்ச் சுற்றியலைந்து புரட்சிக்குக் கூட்டம் சேர்த்தபடி அரண்மனை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தவர்களுடைய - புரட்சியாளர்களுடைய - வாழ்க்கையினது அவலங்களையும் போராட்ட வழிமுறைகளையும் அந்த அம்மாள் எனக்கு விளக்கினார். ஒன்றிற்கு மேற்பட்டோரின்றிப் புரட்சி என்றைக்கும் சாத்தியமானதில்லை என்று ஜெர்மானிய எழுத்தாளர் எலியாஸ் கானட்டி எழுதியிருப்பது எனது நினைவில் தோன்றி மறைந்தது.

நானிருந்த தெருவைக் கடந்திருந்த ஐம்பதினாயிரம் பேரே தொடர்ந்து வந்துகொண்டிருப்பதான உணர்வு எனக்கேற்படும் வகையில் மக்கள் வெள்ளம் புழங்கியபடி இருந்தது. மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லும் பாதை முழுவதிலும் புரட்சியாளர்களும் அவர்களது மனைவியரும் குழந்தைகளும் நிரம்பியிருந்தனர். மன்னரும் அரசியும் சிரச்சேதம் செய்யப்பட்டுவிட்டனர் எனவும் அவர்களைக் கொல்லுவதற்காகவென்றே அவசரமாகக் கண்டுபிடிக்கப்பட்ட ‘கில்லட்டின்’ கருவி அதற்குப் பயன்படுத்தப்பட்டது என்றும் மூட்டை முடிச்சுக்களுடன் காணப்பட்ட பிரிட்டிஷ் நாட்டவர் ஒருவர் சொன்னார். அரண்மனையிலிருந்து திரும்பிவந்தபடி இருந்த ஒரு புரட்சியாளர் கூட்டமானது கழுத்தில் நகைகள் மற்றும் கைகளில் பெரிய விலையுயர்ந்த ஜாடிகளுடன் காட்சியளித்தது. மாலைச் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவரிடம் புரட்சி எப்போது முடியும் என ஆங்கிலத்தில் வினவினேன். குறைந்தபட்சம் அதிகாலை மூன்று மணி ஆகலாம் என்று அவர் பிரெஞ்சு மொழியில் அளித்த பதிலின் பொருள் எனக்குச் சென்னை வந்த பிறகே தெரிந்தது.

புரட்சி என்று வந்துவிட்டால் புரட்சிக்காரர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று வர்ணிக்கும் நுட்பமான பாடல் ஒன்று ஸ்வப்னவாசவதத்தையில் உண்டு. ஸ்ரீரங்கம் கீதாசாரியார் உரையைக் கேளுங்கள் -

வத்திக் குச்சி பத்திக்காதுடா - யாரும் வந்து ஒரசுற வரையிலே
வம்பு தும்பு வச்சுக்காதுடா - யாரும் வந்து மெரட்டுற வரையிலே
(வத்திக்குச்சி)

வத்திக்குச்சி (தீக்குச்சி) தானாகப் பற்றிக்கொள்ளாது. அதை யாராவது வந்து ஒரச வேண்டும். வருவது மிக முக்கியம். ஒரசுதல் என்றால் உரசுதல். வத்திக்குச்சி வம்பு தும்பு (வம்பு தும்பு) வைத்துக்கொள்ளாது. அதாவது யாராவது வந்து ‘மெரட்டுற’ (மிரட்டும்) வரையில். ஒரு புரட்சியாளனின் மனமும் ஒரு தீக்குச்சியைப் போலத்தான்.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி வால்டேர் சொல்வதைக் கேளுங்கள்:

“புரட்சிக்கான தேவை பற்றி எழுத்தாளன், தத்துவ ஞானி என்ற முறையில் நிறைய பேசியாயிற்று. இனி நீங்கள் ஆச்சு, ராணி மேரி ஆச்சு என்று விட்டுவிட்டேன். இனி ரொம்ப காலத்துக்கு எந்தப் பத்திரிகைக்கும் பத்தி எழுதப்போவதில்லை என்று தீர்மானித்து நிறுத்திவிட்டேன். பிரெஞ்சுக்காரர்களுக்கு என் பத்தியை எதிலும் படிக்கவில்லை என்றால் உருளைக் கிழங்கு செரிக்காது.”

வால்டேரின் சமகாலச் சிந்தனையாளரான ரூஸோவின் கருத்தும் கிட்டத்தட்ட வால்டேரின் கருத்துடன் ஒத்துப் போகிறது:

“I am liking the French revaloosan. It is good for all public people. All public people needing money. Queen is telling why not eat bun butter jam? That lady is fooling, you understand? Public is very angry. Yes, really very very angry. If public is angry, you French kingdom people better pack up. You are no use.”

இத்தனைக் களேபரத்திலிருந்து தப்பித்து வந்து மாம்பலம் பாசஞ்சர் ரயிலைப் பிடிக்கும்போது காலை 5 மணி ஆகியிருந்தது. டிக்கெட்டை வாங்கிக்கொண்டு வந்து ஒரு பெஞ்சில் உட்கார்ந்தேன். உலகின் இன்னொரு மூலையில் புரட்சி நடப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. ஒரு இளைஞன் ஆவலுடன் என்னிடம் வந்து “சுக்குக் காபி வேண்டுமா சார்” என்றான். ஒன்று வாங்கிக் குடித்தேன். வால்டேரும் ரூஸோவும் தெரியாத அவனுக்கு நிச்சயம் அன்று உருளைக் கிழங்கு செரித்திருக்கும்.

கலைக்கும் கண்காட்சி தேவை

பிரிட்டிஷ் வலையகமான கார்டியனில் படித்த கட்டுரையில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். ரெனுவார் (Pierre Auguste Renoir) என்ற மாபெரும் பிரெஞ்சு ஓவியரைப் பற்றிய கட்டுரை அது.

தகவல்: பிரான்சில் அரசின் ஏற்பாட்டில் Salon என்ற வருடாந்தர கலைக் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்தக் கண்காட்சி சுமார் ஒன்றரை நூற்றாண்டு பெரிய அளவில் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சில வாரங்கள் நடக்கும் சலோன் கண்காட்சியில் அரசு அங்கீகாரம் பெற்ற கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைப்பார்கள். (‘மேலதிக’ விவரம்)

அதில் ஆயிரம் அரசியல் இருந்தது. ஆனால் நம்மூரில் புத்தகக் கண்காட்சி நடத்துவது போலவே இப்படியொரு கலைக் கண்காட்சியையும் நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இங்கே கலைத் துறை பணக்காரர்கள் அனுபவிக்கும் ஒரு சொகுசு சமாச்சாரம். படைப்புகளின் விலை நம் வாங்கும் திறனை மீறியதாக இருக்கிறது. தங்களை பாதித்த கலைஞர்களின் படைப்புகளுக்கும் அந்த பாதிப்பில் உருவான தங்கள் சொந்தப் படைப்புகளுக்கும் வருடக்கணக்கில் ஜெராக்ஸ் காப்பிகளை வரைந்து தள்ளி கேலரியில் வைத்துப் பணமும் புகழும் பெறும் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

நம்மூரில் வருடாந்தரக் கலைக் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டால் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பெயின்ட் வாங்கக் கூடக் காசில்லாத ஓவியர்கள் பிழைப்பார்கள். புத்தகம் வாங்க வரும் கூட்டம் நிச்சயம் கலைக் கண்காட்சிக்கும் அலைமோதும்.

புத்தகங்களுக்கு இல்லாத ஒரு சாதகமான அம்சம் கலைப் படைப்புகளுக்கு இருக்கிறது. வாங்கி வீட்டுச் சுவரில் மாட்டி அழகு பார்க்கலாம். ரொம்பச் சின்ன வீடாக இருந்தாலும் சிநேகா/ஐஸ்வர்யா ராய் காலண்டரை உள் அறையில் மாட்டிவிட்டு அந்த இடத்தில் நாம் கண்காட்சியில் மலிவு விலையில் வாங்கிய ஓவியத்தை மாட்டி வைக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

காதல் கவிதை

பார்வை விட்டு
போன பின்னும்
என்னில் சிறகடிக்கும்
உனக்கான எண்ணங்கள்

பெய்த பிற்பாடும்
மழைக்கின்ற
மரம் கணக்காய்.

« Previous Page