ராபர்ட் ஸ்கோபிளை அழைக்கிறேன்

பாஸ்டன் பாலாவின் இழுப்புக்குட்பட்டு என்னைப் பற்றிய விநோதமானவையும் மற்றவையுமான ஐந்து விடயங்களைப் பட்டியலிடுகிறேன்.

1. த சிண்ட்ரோம் ஆஃப் த மூணு மாசம்

திடீரென்று ஒரு விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டு அதில் எக்கச்சக்க கவனம், நேரம, கொஞ்சம் போல் பணம் செலவழிப்பது – சுமார் மூன்று மாதங்களுக்கு. இது வரை வந்த இப்படியான காய்ச்சல்கள்: கலை, hacking பற்றிப் படிப்பது, லினக்ஸ், இரண்டாம் உலகப் போர், பழைய புத்தகங்கள் சேகரிப்பது, மொபைல் தொழில்நுட்பம் …

இந்தத் தற்காலிக உணர்ச்சிப் போக்குகளில் என்ன பயன் என்றால் ஒவ்வொன்றைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்துகொள்ள முடிந்தது. இவற்றில் தொழில்நுட்ப சமாச்சாரங்கள் தவிர மற்றவை அடிக்கடி வந்து போகும் விஷயங்கள். அந்த மாதிரி சமயங்களில் கட்டியக்காரன்தான் என்னிடம் வகையாக மாட்டுவார்.

ஆகையினாலே, என்னிடம் யாராவது ஒரு பெண் வந்து ‘நான் மூணு மாசம்’ என்று சொன்னால் என் மூணு மாச சிண்ட்ரோம்தான் பெண் வடிவம் எடுத்து வந்திருப்பதாக நான் புரிந்துகொள்வேன்.

2. கோணலிசம்ஸ்

தொழில் ரீதியாக எழுதும்போது தவிர மற்ற சமயங்களில் பெரும்பாலும் எதையும் நேராக எழுதாமல் வலிந்து திருகியே எழுதும் பழக்கம். உதாரணமாக இந்தப் பதிவின் முதல் வாக்கியத்தில் வரும் ‘இழுப்புக்குட்பட்டு’ என்ற வார்த்தை. ‘பாலா சொல்லி’ என்று டீசன்ட்டாகவே எழுதியிருக்கலாம். முடியவில்லை.

3. மோசமான ரசனை

மூன்றாந்தரமான குங்ஃபூ படங்கள், ஹாலிவுட் B-படங்கள், டீனேஜ் ரொமான்ஸ்களைக் கூட மெனக்கெட்டு முழுசாகப் பார்ப்பது (நேரம் கிடைக்கும்போது; குங்ஃபூ என்றால் ஜாக்கி சான், ஜெட் லி, சாமோ ஹுங் யாராவது இருந்தால் மட்டும்).

4. அ-ரொமான்ஸ்

காதல் என்பது டெம்பிரவரியான விஷயம் என்று நம்பிக்கொண்டே Love in the Time of Cholera போன்ற மகா ரொமான்சான காதல் கதைகளை விரும்பும், இலக்கியத்திலும் ரொமான்ஸ் நாடும் போக்கு.

5. பிரசுரம் காணல்

என் கதைகள் என்றைக்காவது தொகுப்பாக வெளிவந்து கவனிக்கப்படும் என்று நம்புவது.

*

வலைப்பதிவுலகில் எனக்கு யாருமே பழக்கமில்லாத வெட்கக்கேட்டினால் என் சிந்தனைக்கெட்டிய ஐந்து பேரை அழைக்கிறேன்:

1. ஸ்கோபிளைசர்
2. உடி ஆலன்
3. டேவ் பேரி
4. அலிசா மிலானோ
5. வில்லியம் கிப்சன்

இது எவ்வாறு உள்ளது?!

One thought on “ராபர்ட் ஸ்கோபிளை அழைக்கிறேன்

  1. டூ மச் அய்யா :)

    இருங்க… நாளைக்கு வந்து பாக்கிய பயிரிடறேன் 😉

Comments are closed.