பொறுப்பில்லாத எழுத்து

ஒரு விமர்சகர் மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைப் பற்றி எழுதும்போது எவ்வளவு பொறுப்பாக எழுத வேண்டும். ஒரு மூத்த கலை விமர்சகரே தன் எழுத்தில் தகவல் பிழைகளை அடுக்கியிருக்கிறார்.

கலை பற்றி ‘வான்கா’ உட்படப் பல புத்தகங்களை எழுதியிருக்கும் தேனுகாவின் சமீபத்திய புத்தகம் பியத் மோந்திரியான் என்ற ஓவியரைப் பற்றியது. புத்தகத்தின் தலைப்பும் அதுவே (வெளியீடு சந்தியா பதிப்பகம், விலை ரூ. 100).

பிழைகளில்தான் தொடங்குகிறது இந்தப் புத்தகம். தாதா என்ற சமூக, கலை, பண்பாட்டு இயக்கத்தைப் பற்றி தேனுகா எழுதுகிறார்…

பிரான்சில் தோன்றிய டாடாயிஸ்டுகள் (Dadaists) இவ்வாறு கலையை அழிப்பதற்கென்றே உருவெடுத்திருப்பதாகத் தங்களைப் பிரகடனம் செய்து கொண்டனர். ஓவியக் கண்காட்சி ஒன்றை நடத்திய இவர்கள், ஒவ்வொரு ஓவியத்தின் மீதும் சுத்தியல் கொண்டு உடைத்து நொறுக்கும்படி பார்வையாளர்களை வேண்டினர். ஒரு தினசரியிலிருந்து சில வரிகளைப் படித்துக்காட்டி நாங்கள் இப்போது கவிதைப் படித்ததாகக் கூறினர். ஓவியக் கண்காட்சியைக் காணவந்தோரை பொதுக் கழிவறை ஒன்றின் வழியாக வரவேற்றனர் இவர்கள். இவ்வாறெல்லாம் கலையை மிக மூர்க்கமாக அழிக்கத் திட்டமிட்ட டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை. டாடாயிஸம் அதன் உதய காலங்களிலேயே சிசு மரணமிட்டது.

கதையெல்லாம் சொல்லி தேனுகா அழிவு கொள்ளை தீமை கழகம் ரேஞ்சுக்கு உயர்த்தியிருக்கும் ‘டாடாயிஸ்டு’களின் இயக்கம்
அவர் சொல்வது போல் கலையை அழிப்பதற்காக உருவான பயங்கரவாத கேங் அல்ல.

முதலாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அமைக்கப்பட்ட தாதா என்ற இந்த இயக்கம் போர் எதிர்ப்பு, கலையிலும் இலக்கியத்திலும் இருந்து வந்த மரபுகளை உடைத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. சமூக அமைப்பில் முழுவதும் நம்பிக்கை இழந்துவிட்டிருந்த இளம் படைப்பாளிகளின் அமைப்பு அது. அவர்களில் சிலருக்கு – உதாரணமாக ஓவியர் ஜார்ஜ் கிராஸ் – இடதுசாரி சார்பு இருந்தது.

தங்கள் எதிர்ப்பைக் காட்ட அவர்கள் பயன்படுத்திய உத்திகளில் முக்கியமான ஒன்று, மக்களைப் பதற வைப்பது. அந்தக் காலத்து மனிதர்களுக்கு அவர்களுடைய ஸ்டைல் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கலையை அழிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பிய தீவிரவாத கும்பல் ஒன்று குழந்தைத்தனமாக ஒரு டைப்ரைட்டருக்கும் தையல் மெஷினுக்கும் பந்தயம் நடத்தினால் எப்படி இருக்கும்? (இது நடந்தது!)
இன்னொன்று, தாதா இயக்கம் உருவானது பிரான்சில் அல்ல, ஸ்விட்சர்லாந்தில்.

“டாடாயிஸ்டுகள் கலா பூர்வமாகச் சாதனைகள் எதனையும் செய்யவில்லை” என்று ஒரு மூத்த கலை விமர்சகர் கிறுக்கியிருப்பதுதான் வயிற்றெரிச்சல்.

மார்செல் த்யுஷாம், ஜார்ஜ் கிராஸ், மேக்ஸ் எர்ன்ஸ்ட், மேன் ரே, ஹான்ஸ் ஆர்ப் என்று போன நூற்றாண்டில் கலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞர்கள் ‘தாதாயிஸ்டுகள்’தான். தாதாவின் வாரிசாக வந்த சர்ரியலிச இயக்கம், ‘தானாக எழுதும்’ உத்தி (automatic writing) போன்ற ஐடியாக்களை தாதாவிடமிருந்துதான் எடுத்துக்கொண்டது. தாதா அல்பாயுசில் போனது மட்டும்தான் அவர் சொல்வதில் நிஜம்.

தேனுகா விக்கிபீடியாவைக் கொஞ்சம் பழக்கப்படுத்திக்கொண்டால் நன்றாயிருக்கும். அதே போல ‘மரணமிட்டது’ என்றெல்லாம் பாசாங்கான, அபத்தமான தமிழில் எழுதுவதை நிறுத்தினால் புண்ணியமாய்ப் போகும்.

பின்னிணைப்பு: எனது ‘பிறழ்வு‘ பதிவில் இரண்டு தாதா கலைஞர்களின் படைப்புகள்: ரெடிமேட் கலை, பேராசையின் முகங்கள்.

பி.கு.: புத்தகத்தை நான் மேற்கொண்டு படிக்கவில்லை.

2 thoughts on “பொறுப்பில்லாத எழுத்து

  1. நீங்கள் இந்தப் புத்தகம் குறித்து ஒரு பத்திரிகையில் விமர்சனம் எழுதினால், அது பலரது கண்களைத் திறக்கும். ஒவியங்கள் குறித்து தவறான தகவல்களைக் கொண்ட புத்தகங்கள் வெளியாகிக்கொண்டேயிருக்கின்றன. தட்டிக் கேட்க யாருமில்லை என்ற தைரியம்தான் இதற்குக் காரணம்.

  2. என்னை வம்பில் சிக்க வைப்பதுதான் உங்கள் நோக்கமா? விமர்சனம் எழுதலாம், ஆனால் பொதுவாக ஒரு எழுத்தாளர் விமர்சிக்கப்பட்டால் அவரது அனுதாபிகள் விமர்சகர் மேல் பாய்வார்கள். தூங்குபவர்கள் தூங்கட்டும்.

Comments are closed.