கலைக்கும் கண்காட்சி தேவை

பிரிட்டிஷ் வலையகமான கார்டியனில் படித்த கட்டுரையில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். ரெனுவார் (Pierre Auguste Renoir) என்ற மாபெரும் பிரெஞ்சு ஓவியரைப் பற்றிய கட்டுரை அது.

தகவல்: பிரான்சில் அரசின் ஏற்பாட்டில் Salon என்ற வருடாந்தர கலைக் கண்காட்சி நடத்தப்பட்டிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் தொடங்கிய இந்தக் கண்காட்சி சுமார் ஒன்றரை நூற்றாண்டு பெரிய அளவில் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சில வாரங்கள் நடக்கும் சலோன் கண்காட்சியில் அரசு அங்கீகாரம் பெற்ற கலைஞர்களின் படைப்புகளைக் காட்சிக்கு வைப்பார்கள். (‘மேலதிக’ விவரம்)

அதில் ஆயிரம் அரசியல் இருந்தது. ஆனால் நம்மூரில் புத்தகக் கண்காட்சி நடத்துவது போலவே இப்படியொரு கலைக் கண்காட்சியையும் நடத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

இங்கே கலைத் துறை பணக்காரர்கள் அனுபவிக்கும் ஒரு சொகுசு சமாச்சாரம். படைப்புகளின் விலை நம் வாங்கும் திறனை மீறியதாக இருக்கிறது. தங்களை பாதித்த கலைஞர்களின் படைப்புகளுக்கும் அந்த பாதிப்பில் உருவான தங்கள் சொந்தப் படைப்புகளுக்கும் வருடக்கணக்கில் ஜெராக்ஸ் காப்பிகளை வரைந்து தள்ளி கேலரியில் வைத்துப் பணமும் புகழும் பெறும் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

நம்மூரில் வருடாந்தரக் கலைக் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டால் பல புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பெயின்ட் வாங்கக் கூடக் காசில்லாத ஓவியர்கள் பிழைப்பார்கள். புத்தகம் வாங்க வரும் கூட்டம் நிச்சயம் கலைக் கண்காட்சிக்கும் அலைமோதும்.

புத்தகங்களுக்கு இல்லாத ஒரு சாதகமான அம்சம் கலைப் படைப்புகளுக்கு இருக்கிறது. வாங்கி வீட்டுச் சுவரில் மாட்டி அழகு பார்க்கலாம். ரொம்பச் சின்ன வீடாக இருந்தாலும் சிநேகா/ஐஸ்வர்யா ராய் காலண்டரை உள் அறையில் மாட்டிவிட்டு அந்த இடத்தில் நாம் கண்காட்சியில் மலிவு விலையில் வாங்கிய ஓவியத்தை மாட்டி வைக்கலாம்.

சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

3 thoughts on “கலைக்கும் கண்காட்சி தேவை

  1. நீங்கள் சொல்வதைக் கேட்கவே பரவசமாக இருக்கிறது. இந்தக் கண்காட்சியை நடத்த ஆஸி (Artists and Artsellers assosiation of south India) என்றொரு அமைப்பைக்கூட ஏற்படுத்தலாம்.

  2. ஆமாம். அஞ்சலி இலா மேனன் சதீஷ் குஜ்ரால் வகையறாக்களிடமிருந்தும் நம்மூர் கிளிப்பிள்ளைகளிடமிருந்தும் விடுதலை கிடைக்கும். திறமையான ஓவியர்களுக்குப் புதிய patrons கிடைப்பார்கள். தமிழ்ப் பதிப்பகங்கள் பண்டைய வெளிநாட்டு ஓவியர்களின் ஓவியங்களைப் புத்தக அட்டைக்காகத் திருடாமல் இங்கத்திய கலைஞர்களின் படைப்புகளைக் காசு கொடுத்து வாங்கிப் போடுவார்கள்.

Comments are closed.