ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு

இன்று வெளிநாட்டு இலக்கியப் படைப்புகளில் பலதும் ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றன. காப்ரியல் கார்சியா மார்க்கஸ், இட்டாலோ கால்வினோ, ஆல்பேர் காம்யு, எல்லோரையும் வாழவைக்கும் காஃப்கா என்று பலர் தமிழாக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் புண்ணியத்தில்.

இதன் பக்கவிளைவு: மார்க்கஸையோ காஃப்காவையோ தமிழில் படித்தால் ஆங்கிலச் சொற்கள், வழக்குகள், சொற்றொடர்கள் என்று ஆங்கில watermark தெரிகிறது. என்னைப் போன்ற சிலருக்கு (அல்லது பலருக்கு) தமிழ் மொழிபெயர்ப்பில் பிற மொழிப் படைப்புகளைப் படிப்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்த அவநம்பிக்கைக்குக் காரணம், வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். நம்மவர்கள் சம்பந்தப்பட்ட மொழி தெரியாமல் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத் தங்களுக்குப் புரிந்த வரை மொழிபெயர்த்து வைக்கிறார்கள்.*

இந்த second hand மொழிபெயர்ப்பில் என்ன ஆபத்தென்றால், ஒன்று: நம்மாட்கள் மூல மொழியிலிருந்து பெயர்க்காமல் வேறொன்றிலிருந்து பெயர்த்தெடுக்கிறார்கள், இரண்டு: அவர்களுக்குப் போதுமான ஆங்கில அறிவு இல்லை.

உதாரணமாக, தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை ஆங்கிலத்திற்குப் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. வார்த்தைகள் மாறி, சமயத்தில் பொருளும் தொனியும் மாறுகின்றன. அங்கீகாரம், விமர்சனங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை வைத்துத்தான் எந்த மொழிபெயர்ப்பு துல்லியமானது, தரமானது என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு வரும் படைப்புகளுக்கே இந்த கதி என்றால் சிறுபத்திரிகைகளையும் மற்ற சுமாரான மொழிபெயர்ப்புகளையும் மட்டுமே படித்துவிட்டு ஐரோப்பியப் பெயர்களை எடுத்து வீசும் நம்மவர்கள் அவற்றை மூலத்திலிருந்து அல்லாமல் ஆங்கிலத்திலிருந்தே மொழிபெயர்க்கிறார்கள். ஏமாறுபவர்கள் வாசகர்கள்தான்.

சமீப காலத்தில் எந்தச் சிறுபத்திரிகையில் வந்த எந்த மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஆங்கிலம்தான் தலைவிரித்தாடுகிறது. பத்திரிகையின் ஆசிரியர் குழு என்னத்தைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியே நம் முன் எழுகிறது. பலர் அடிப்படை ஆங்கில இலக்கணமும் மிக சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில வழக்குகளும் சொற்றொடர்களும் கூடத் தெரியாமல் வாடுகிறார்கள் (தாங்கள் வாடுவது அவர்களுக்குத் தெரியவில்லை).

மொழிபெயர்க்கும் அளவிற்குப் போதுமான ஆங்கிலம் தெரியாவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது என்று தீர்மானித்த பின் அந்த அறிவை வளர்த்துக்கொள்வது மொழிபெயர்ப்பாளருக்குள்ள பொறுப்பு. நமக்குத் தெரிந்தது தாராளமாகப் போதும், அதான் எல்லாம் டிக்‍ஷ்னரியில் இருக்கிறதே என்ற இவர்களது பொறுப்பில்லாத்தனத்தால் நஷ்டப்படுவது இலக்கியமும் மொழியும்தான்.

மிகக் கடுமையான, மிக அன்னியமான தமிழ் நடையில் இருக்கும் நாராசத்தை, உலக இலக்கியத்தைப் படித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் வாசகர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற நிஜமான ஆர்வம் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ன செய்வார்? தான் மொழிபெயர்க்க விரும்பும் படைப்பு எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழி தனக்குத் தெரியவில்லை என்றால் அதைக் கற்றுக்கொள்வான் – அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, ருஷ்ய மொழியாக இருந்தாலும் சரி.

நானும் லத்தீன் அமெரிக்க இலக்கியமெல்லாம் படிக்கிறவன்தான், நானும் இலக்கியத்தில் கொம்பன்தான் என்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்தான் தமிழ் மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

* * *

பாப்லோ நெரூடாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ‘துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்’ என்ற தொகுப்பைக் கொண்டுவந்த ஆ.இரா. வேங்கடாசலபதி, முன்னுரையின் கடைசிப் பகுதியில் இப்படி எழுதுகிறார்:

ஸ்பானிய மொழியைக் கற்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கும் பொற்காலம் ஒரு நாள் வரலாம். அதுவரை ஆங்கிலவழி நிகழும் என் மொழிபெயர்ப்புகள் போன்ற அரைகுறைகளைத் தமிழ் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய மொழிபெயர்ப்பாளரின் தமிழாக்கம் ஒன்றில் இந்த மாதிரி ஒரு வாக்கியம்: “அவன் சென்ற மாதம்தான் தன் மாமாவை இழந்திருந்தான்.” Had lost என்பது போன்ற ஒரு சொற்றொடர் “இழந்திருந்தான்” என்று மூல மொழியின் வாடையோடு வந்திருக்கிறது. அவர் ஆங்கிலத்திலிருந்து பெயர்க்கவில்லை, ஆங்கிலம் போன்ற வாக்கிய அமைப்பு கொண்ட இன்னொரு மொழியிலிருந்துதான் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது தமிழாக்கத்தில் இப்படிப் பல பகுதிகள் இயல்பான தமிழில் வரவில்லை.

அவரளவுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தால் கூடப் பரவாயில்லை என்பதே நம் நிலைமை. இந்த மாதிரி வேலையை ஆங்கில மொழிபெயர்ப்பாளர் யாராவது செய்திருந்தால் ஒருத்தர் விடாமல் எல்லோரும் உரித்தெடுத்துவிடுவார்கள்.

நம் சூழலுக்கு, ஆங்கிலமல்லாத ஒரு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்ய அந்த மொழியைக் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றால் பல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாமலே போக வாய்ப்பிருக்கிறது. நேரடியாக மூல மொழியிலிருந்து தமிழாக்கும் “பொற்காலம்” வரும் வரை நம்மவர்கள் குறைந்தது ஆங்கிலத்தையாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

* நானும் சில வருடங்களுக்கு முன்பு காஃப்கா கதைகளையும் பெர்ட்டோல்ட் பிரெக்த்தின் கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறேன். இப்போதும் மொழிபெயர்க்க மனசாட்சி தடுக்கிறது.

20 thoughts on “ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு

 1. Pingback: கில்லி - Gilli » Literature & Translation

 2. “நானும் லத்தீன் அமெரிக்க இலக்கியமெல்லாம் படிக்கிறவன்தான், நானும் இலக்கியத்தில் கொம்பன்தான் என்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்தான் தமிழ் மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது”
  – சத்தியமா வார்த்தைகள். இவர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டால்கூட பரவாயில்லை. அதை பதிப்பிக்கவும் செய்கிறார்கள். அதுதான் பயங்கரம். எனக்கும் சாத்தனுக்கும் பரிச்சயமான பெண்மணி Ground Nut Production Unit என்பதை நிலக்கடலை உற்பத்தித் தொழிற்சாலை என்று தன்னம்பிக்கையுடன் மொழிபெயர்த்திருந்தார். அவர் கையில் லத்தீன் அமெரிக்கப் படைப்புகள் கிடைத்தால் என்ன ஆகும் என்ற எண்ணமே தற்கொலைக்குத் தூண்டுகிறது.

 3. ஐயோ! கட்டியக்காரரே, விளையாட்டுக்குக் கூட இது போன்ற மீஅதீதக் கற்பனைகள் வேண்டாம்!

 4. சாத்தான் அவர்களே உங்கள் பார்வை வரவேற்கத்தக்கது. ஆனால் மூல மொழியை கற்று மொழி பெயர்ப்பில் ஈடுபடுவதற்குள் கால தேவனின் கயிறு நம் கழுத்தை இறுக்கும் நேரம் வந்து விடும். ஆனால் நீங்கள் கூறுவது போல் அந்தந்த நாட்டின் பண்பாடு, வரலாறு ஓரளவிற்கு தெரிவது மொழிபெயர்ப்பிற்கு அவசியம், இன்றைய மொழி பெயர்ப்பாளர்கள் பண்பாடு, வரலாறு தெரியாமல் அதனுடன் மொழி அறியாமையும் உடையவர்கள் என்பது நெருடலான விஷயம். பீக்காக் என்பதை குருவி என்று மொழியாக்கம் செய்தவர்களை நான் அறிவேன். ஆங்கிலம் தெரிந்தவர்களே கூட சில வேளைகளில் அபத்தமாக மொழி பெயர்ப்பு காரியம் செய்கின்றனர். அல்லது மொழி பெயர்ப்பிற்கு காரியம் செய்கின்றனர். கல் குதிரை கொண்டு வந்த மார்க்கெஸ்° சிறப்ப்தழில் நாகார்ஜுனன் °ஸ்னேக் ரிங் என்ற வார்த்தையை மோதிரப்பாம்பு என்று மொழியாக்கம் செய்ததன் அபத்தத்தை என்னவென்று கூறுவது. இன்னொரு மொழிபெயர்ப்பாளர் அதே தொகுதியில், அவர் தற்போது கொலம்பியா பல்கலையில் மாரியாத்தா பற்றி ஆராய்ச்சி செய்துவரும் பெருந்தேவி என்ற அம்மையார். இவருடைய மொழிபெயர்ப்பை படிப்பது, அரைகிலோ சரளைக் கற்களை வாயில் போட்டு மெல்ல முயல்வதற்கு சமானம். இவர்களுக்கு ஆங்கிலம் தெரியமலா இருக்கிறது? தமிழை வளப்படுத்துகிறார்களாம். ஓங்கொக்க மக்கா…
  இதற்கிடையே டவுன்லோடு ஆசாமிகள் புத்தகமாக போட்டு தள்ளுகிறார்கள். பா.ராகவன் நட்சத்திர டவுன்லோடு ரைட்டர் ஆகிவிட்டார். பழைய காலம் போல் இருந்தால் இவர்களுக்கெல்லாம் அரசாங்க அலுவலகத்தில் வேலை கொடுத்திருப்பார்கள். இப்போது அது சாத்தியமல்ல என்பதால் இவர்கள் நேரடியாக மொழி பெயர்க்க சிறு பத்திரிக்கைக்கு வந்து விடுகிறார்கள். பள்ளிக்கூட கால கட்டத்தில் விளையாட்டு பீரியடின் போது நாம் ஒரு மாணவனை கிளாசில் காவலுக்கு வைத்து விட்டுச் செல்வது வழக்கம். அது எவ்வளவு பெரிய தவறு!!! அவர்கள் எல்லாம் இன்று மொழி பெயர்ப்பு செய்கிறேன் என்று பேனாவில் இங்கை ஊத்திக் கொண்டு அலைகிறார்கள். இன்னும் சிலர் நாவலையோ சிறுகதையையோ படிக்காமல், நேரடியாக முதல் வரியிலிருந்து மொழி பெயர்க்க துவங்குகிறார்கள். ஒருவர் இது போன்று இடாலோ கால்வினோ நாவலையே மொழிபெயர்த்திருக்கிறார் என்றால் என்ன துணிச்சல்? காரணம் ஒருவரும் எதனையும் கறாராக விமர்சனம் செய்யவிரும்பவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் விமர்சனம் செய்பவன் மூலத்தை படித்து விடுவதால் இதன் தாக்கத்தை அவன் உணராமல் போகிறான். தமிழில் இந்த மொழிபெயர்ப்பை அசம்பாவிதமாக படிக்க நேரிடும் ஒரு சிலரும் முகத்தை சுளித்து ஓரம் கட்டி விடுகிறார்கள் இதனால் அவர்கள் காட்டில் மழை. பதிப்பகத்தார் காட்டில் மழை. எல்லாம் விற்கிறது. இதுவும் விற்றுவிட்டுப் போகட்டும். ஏமாளி வாசகர்கள் ஒரு நாள் தெருவில் இறங்கி போராட மாட்டார்கள் என்பது சர்வ நிச்சயம்.

 5. “ஏமாளி வாசகர்கள் ஒரு நாளும் தெருவில் இறங்கி போராட மாட்டார்கள் என்பது சர்வ நிச்சயம்.” என்றல்லவா கடைசி வரி வரவேண்டும் (இப்படி குறைகூறி பெயர் வாங்கும் புலவர்களும் உண்டு)?
  மற்றபடி, முத்துக்குமார் சொல்வதில் எனக்கு முழு உடன்பாடு!

 6. கரைட்டுதான். ஜுனூன் தமிழ் போல மொழிபெயர்ப்புத் தமிழ் என்று ஒரு விநோதப் பிராணி கூட இருக்கிறது. மொழிபெயர்ப்புத் தமிழ் தெரியாதவர்கள் பல தமிழாக்கங்களைப் படித்துப் புரிந்துகொள்ளவே முடியாது.

  முத்துக்குமார், நீங்கள் சொல்லும் கால்வினோ தமிழாக்கத்தை நானும் கொஞ்சம் படித்து காண்டு ஆகியிருக்கிறேன். அதன் நகைச்சுவையை நீக்கிவிட்டு அரசு ஆவணம் போன்ற தொனியைக் கொண்டுவந்திருப்பார் “மொ-ர்”.

 7. இது ஒரு புறம் இருக்கட்டும், ஒரு சில அறிஞர்கள் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார்கள், அவர்கள் ஒரு போதும் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு சீரிய இலக்கியங்களை கொண்டு வரும் முயற்சிகள் எடுப்பதில்லை என்பது விசித்திரமானது. மவுனியின் கதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பில் வந்திருக்கிறது. இதனையும் ஆங்கிலம் தமிழ் இரண்டுமே நன்றாக தெரிந்த மொழிபெயர்ப்பு ஞானமும் உள்ள ஒருவர்தான் தர மதிப்பீடு செய்யவேண்டும் அத்தகு வேலையும் நடைபெறுவதாய் தெரியவில்லை.

 8. பொதுவாகத் தமிழாக்கங்களுக்கு வரும் மதிப்புரைகளைப் பார்க்கிறேன். மதிப்புரையாளர்கள் மொழிபெயர்ப்பைப் பற்றி எழுதுவது குறைவுதான். படைப்பிலுள்ள கதையை அல்லது கவிதை சமாசாரத்தைப் பற்றி மட்டும் எழுதி மூல ஆசிரியரின் மகிமைகளைப் போற்றுகிறார்கள். யாரும் ஒப்பிட்டு எழுதுவதில்லை.

  உதாரணமாக, நீங்கள் சொல்லும் இடாலோ கால்வினோ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்தவர்கள் (இத்தாலிய மொழியில் இங்கே யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை) தமிழாக்கத்தைப் படித்தாலே தெரியும், அதன் தொனியே எப்படி அடியோடு மாற்றப்பட்டிருக்கிறது என்று. திட்டமிட்ட அலட்சிய நடைதான் அந்த நாவலின் பலமே. அது lost in translation.

 9. you are right. when i translated a passage from Eco’s Foucoult’s Pendulam Novel for a riview. I translated it as a free style tamil for e.g like sujatha or other pocket novel writer’s tamil. But that is the way Eco’s language suits. But i was critisised for that kind of free style tamil. They thought Eco or Calvino are not of that type. They ignore the fact that these post modern stylists always in mix lot of languages, dialects, slangs into their corpus. They are not purists. It is the strange mind of tamil translators that they think Dosteyevsky and not at all resembling, never ever resembling Eco or Calvino or Marcuse or whom so ever it may be, all the same. Tamil translators thought the strange tamil they are using in littile magazine is all used by those writers in ther own language. And there by collapsing all kind of reading i mean any meanigful reading. They must read Walter Benjamin”s article on Translation.

 10. இலக்கியத்திற்குப் பொட்டு வைத்து மாலை போட்டு ஊதுவத்தி கொளுத்தி வைத்திருப்பதால்தான் உற்சாகமான, தெனாவட்டான மொழிநடையைப் பலர் ஏற்க மறுக்கிறார்கள்.

  வார்த்தைகளை வளைத்து வளைத்து பாசாங்கான மொழிசார் மேனரிசங்களுடன் (எ.கா.: தளம் கொண்டு இயங்குவது, புள்ளியிலிருந்து கிளம்புவது…) எழுதினால்தான் தரம், ஆழம் எல்லாம் இருப்பதாக நம்புகிறார்கள்.

  தரமான எழுத்தாளர் என்று பேர் வாங்கிய யாராவது ஒருவர் மெட்ராஸ் பாஷையில் ஒரு கதையை எழுதினாலே ஆடிப் போய்விடுவார்கள் (வேறு வட்டார மொழிகளில் எழுதினால் பரவாயில்லை).

 11. முத்துக்குமார் அவர்களே, இப்படித் திடீரென ஆங்கிலத்திற்குத் தாவினால் என்ன அர்த்தம்? எம்மைப் போன்றவர்களைம் சற்று நினைத்துப் பாரும்மையா!

 12. இலக்கியம் என்ற வார்த்தையையே தகர்ப்பு விமர்சகர்கள் அடைப்புக் குறிக்குள் இட்டு பயன் படுத்துகிறார்கள. பொதுவாக எழுத்து, Text என்று குறிப்பிடுகிறார்கள. ஏனெனில் இலக்கியம் என்ற வார்த்தையே மனித நேயவாத உட் குறிப்புகள் கொண்டதால் அவர்கள் தவிர்க்க முயல்கின்றனர. அதற்காக தரம் பற்றிய அக்கறை இல்லாதவர்கள் என்று அர்த்தம் அல்ல. இலக்கியவாதிகள் கூறும் தரம் அவர்களுக்கு பிரச்சன. தரம் என்ற அளவு கோல் அந்தந்த வாசகர்களின் சமூகவியல், மொழியியல, அர்த்தவியல் சார்ந் து மாறிவருவதே. இதனால்தான் தர வாதிகள் பொதுமையான தரங்களை மதிப்பீடுகள் வாயிலாக வைக்கினறனர. மதிப்புகள் அளவில் மோசமான எழுத்து இலக்கிய அளவு கோல் படி உயர்ந்த எழுத்தாக பார்க்கப்பட முடியும் சாத்தியம் இவர்களுக்கு புரியாத ஓன்று. மதிப்பு சார் விமர்சனங்கள் உருவாக்கியவைதான் தரம் என்பதே. பிரான்ஸ் காப்காவின் எழுத்துக்களை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காமிக்ஸ் வகை எழுத்தாக வாசிக்கிறார்களாம. நம்மவர்களுக்கு காமிக்ஸ் ஒன்று மிக மோசமானது அல்லது அதுவே சிறந் த கிரியா ஊக்கி. காமிக்ஸ் உந்நதம் பேசுபவர்களும் காமிக்ஸ் அந் த எல்லையை தாண்டி வந் து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள. இங்கு ஜெய மோகனையோ அல்லது சுந் தர ராமசாமியின் கதைகளையோ காமிக்ஸ் வடிவத்தில் கேரிகேச்சர் செய்ய முடியுமா?

 13. காஃப்கா காமிக்ஸ் வகையாகவா?! ஆச்சரியம்தான். நாஜிகளின் யூதர் படுகொலை என்கிற பயங்கரமான விஷயத்தைக் கூட Maus என்ற அற்புதமான காமிக்ஸ் புத்தகமாக / கிராஃபிக்ஸ் நாவலாக ஆக்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரே உதாரணம் இது. இன்னும் பல புத்தகங்களும் இருக்கலாம்.

  இங்கே காமிக்ஸ் போன்ற ஒரு மீடியமில் சீரியஸ் ரைட்டிங் எனப்படும் படைப்புகளைக் கொண்டுவர முடியாது. இங்கே எல்லாமே புனிதம்தானே.

 14. சின்ன வயசில் சில ருசிய – தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்க முயன்று, உறுத்தலான அன்னிய நடை காரணமாக விட்டு விட்டேன்..

  ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தவர் குழந்தைகள் ஜெர்மன், பிரெஞ்சு போன்ற உள்ளூர் மொழி, தமிழ் இரண்டிலும் தேர்ச்சி பெறும்போது வருங்காலத்தில் சில தரமான நேரடி மொழிபெயர்ப்புகள் கிடைக்கும் என்ற நம்புவதுண்டு

 15. நானும் அந்த மொழிபெயர்ப்புகளைச் சின்ன வயசில்தான் படித்தேன். ஆனால் அந்த அலாதியான தமிழ் நடை என்னை அப்போது ஈர்த்தது. நீங்கள் சொல்வது போல் ஆங்கில, ஆங்கிலமல்லாத வெளிநாட்டு மொழிகளிலிருந்து இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்க்கும் திறன் இலங்கைத் தமிழர்களுக்குத்தான் இருக்கிறது. ஆங்கிலத்தையும் பிற மொழிகளையும் முறையாகப் படிக்கும் வாய்ப்பு அவர்களுக்குத்தான் கிடைக்கிறது. தங்கள் தமிழை மட்டும் அவர்கள் இற்றைப்படுத்திக்கொண்டால்…

 16. இதுவரை நான் கோடிக்கணக்கான எழுத்துக்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். (ம்ஹூம்..). ஆனால் இலக்கியம் பக்கம் போனதில்லை. யான் பெற்ற துன்பம் பெறக்கூடாது இவ்வையகம் என்ற சமூக நோக்கின் காரணமாகத்தான்.

  மற்றபடி ஒரு வாசகன் என்ற முறையில் இதைப்பற்றிப் பேசவேண்டும்.

  முதலில் ஒரு ஃபார்முலா. இதை நான் பல இடங்களில் சொல்லி பலருடைய மண்டையைக் குழப்பி இருக்கிறேன்: “தமிழ் என்பது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட மொழி அல்ல” என்பதே அந்த சூத்திரம் . இலக்கிய மொழிபெயர்ப்பாயினும், மென்பொருள் மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரி, விளம்பர மொழிபெயர்ப்பாக இருந்தாலும் சரி, பொதுவான வேறு எந்த மொழிபெயர்ப்பாயினும் சரி, நீங்கள் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட தகவலையும் அதனோடு பிணைந்துள்ள தொடர்புப்பாட்டு அம்சங்களையும்தான் மொழிபெயர்க்கிறீர்கள். சொல், பொருள், உட்பொருள், அதில் அடங்கியுள் அழகியல், அரசியல் என நானாவிதமாக அந்த அம்சங்கள் இருக்கலாம். அவை ஆங்கிலத்தில் வெளிப்படும் விதம் ஆங்கில மொழியின் புறத் தோற்றத்திலும் தமிழில் வெளிப்படும் விதம் தமிழ் மொழியின் புறத்தோற்றத்திலும் அமைகிறது.

  ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்கு ரொம்ப காலம் மெனக்கெட வேண்டும். பல மொழிப்பெயர்ப்பாளர்கள் முதலில் சொல்லுக்குச் சொல் மொழிபெயர்க்கிறார்கள். பிறகு தொடருக்குத் தொடர் மொழிபெயர்க்கிறார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் மொழிபெயர்க்கிறார்கள் (இதில் பெரிய பிரச்னை என்னவென்றால், ஆங்கிலத்திருந்து தமிழுக்கு என்று வருகையில் complex sentences ஐ சுலபமாக மொழிபெயர்க்கலாம், ஆனால் compound sentences ஐ அப்படியே மொழிபெயர்ப்பது கஷ்டம். பரிதாபம் என்னவென்றால், நவீன ஆங்கிலத்தில் single sentences பயன்பாடே மிகவும் குறைந்துவிட்டது. பெரும்பாலும் compound sentences தான்).

  மூல ஆசிரியர் திட்டமிட்டு ஒரு மொழி உத்தியைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர், வாக்கியத்துக்கு வாக்கியம் மொழிபெயர்க்கக் கூடாது. மொழிபெயர்ப்பில் மூல ஆசிரியருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் இந்த தவறுகள் நடக்கின்றன. ஆனால், நாம் பரவலாக பார்க்கும் தவறுகள் அந்த விதியை மீறிய தவறுகள். அதாவது அவர்கள் மூல ஆசிரியருக்கு விசுவாசமாக இருக்கவில்லை என்பதே உண்மை. இருந்தால் அபத்தங்கள் நேராது.

  எளிமையான மொழிபெயர்ப்பு, கஷ்டமான மொழிபெயர்ப்பு என்பது சற்றே ஒப்பீட்டளவிலான முடிவுதான். ருஷ்ய மொழிபெயர்ப்புகள் பற்றி ரவிசங்கர் சொல்லியிருக்கிறார். ருஷ்யனிலிருந்து ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நூல்களின் நடை உறுத்தலாக இருக்கிறது என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றை நான் படித்திருக்கிறேன். மார்க்ஸ், லெனின் தொகுப்புநூல்கள், ஷோலகோவ், கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றவர்களின் நாவல்கள், பிறகு எண்ணற்ற சிறுவர் கதைகள் என்று என் பள்ளிப்பிராயமே ருஷ்யமயமானதாகத்தான் இருந்தது. ஒருவேளை நான் மொழிபெயர்ப்புத்துறைக்கு வந்ததற்கும் அதுவே காரணாக இருக்கலாம்.

  இந்த நூல்களில் நடை பிரச்னை இருந்தாலும் கூட, இந்த மொழிபெயர்ப்புகளில் ஒரு ரஷ்ய வாடை வீசும் பாருங்கள், அதற்கு நான் அடிமை. இப்போதைய லத்தீன் அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்புகளில் லத்தீன் அமெரிக்க வாடை வீசவில்லை.

  உண்மையில் ஒரு இலக்கிய மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாகத்தான் தோன்றவேண்டும். அதை தமிழ்ப்படுத்திவிடக்கூடாது. ஆனால், அந்த மொழிபெயர்ப்பாகத் தோன்றும் விதம் ஒட்டுமொத்த text இல் இழையோட வேண்டுமே ஒழிய, முன்பே சொன்னது போல சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர், வாக்கியத்துக்கு வாக்கியம் என இருக்கவே கூடாது.

  ஆங்கிலப் புலமை, தமிழ்ப் புலமை இரண்டும் இருந்தால் மட்டுமே போதாது. மொழிபெயர்ப்பு அடிப்படையில் ஒரு மொழியியல் செயல்பாடு. இதைப் புரிந்துகொள்வதற்கு தடையாக இருப்பது மொழியைப் பற்றிய பல தப்பபிப்பிரயாங்கள் நமக்குள் நிலவுவதுதான். இன்றைய நவீன் மொழிபெயர்ப்பாளர்கள் பலருக்கும் இந்த பிரச்னை இருக்கிறது. இவர்கள் மொழியைக் கண்டு மிரள்கிறார்கள். மூல மொழியில் கைவைக்க பயப்படுகிறார்கள். இலக்கு மொழியி்ன் வளமும் அவர்களில் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை.

  இலக்கிய அல்லது தத்துவார்த்த விஷயங்களை – அதுவும் மாஸ்டர்களை எழுதியதை- மொழிபெயர்க்கும் போது முழு ஒரிஜினாலிட்டியைக் காப்பாற்றமுடியாது. ஆனால் நிச்சயமாக சமமான தமிழ் மொழிபெயர்ப்பைக் கொண்டுவரலாம். அப்படித்தான் உலக இலக்கியங்கள் ஆங்கிலம் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன.

  நான் சீன மொழியைக் கற்று வருகிறேன். அதன் ஒரு பகுதியாக Art of War, Dao De Jing போன்ற சீன அமர இலக்கியங்களை நேரடியாக தமிழில் மொழிபெயர்க்க முயன்று வருகிறேன். அந்த இலக்கியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆங்கிலத்தில் இருபது, முப்பது மொழிபெயர்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு ஆங்கில மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாகவே இருந்தன. யாருமே சீன ஆங்கிலத்தில் எழுதவில்லை. பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் தான் எழுதியிருக்கிறார்கள். எதுவுமே சோடை போகவில்லை. ஆனால், ஆங்கிலம் மூலம் தமிழ்ப்படுத்தப்பட்டிருக்கிற அந்த இரு நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளைப் படிக்கும் போது, ஆங்கிலத்தோடு எந்த அளவுக்கு நமது ஆட்கள் உறவாடுகிறார்கள் என்பது தெரிய வந்தது. உண்மையில், அவற்றை நேரடியாக மொழிபெயர்க்கும் போது நமது திருக்குறள், சங்க இலக்கிய நடையில் அவை தமிழில் வெளிப்படுவதுபோல எனது அனுபவம் ஏற்பட்டது.

  பிரச்னை மொழியைப் பற்றிய பார்வைதான். ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம். ஆங்கிலத்தமிழை விட ‘கையில் கம்பன் கவியுண்டு’ என்று உமர் கையாமை தேசிக வினாயகம் பிள்ளை (அவர்தானே?) தமிழ்ப்படுத்தியிருப்பது எவ்வளவோ பரவாயில்லை.

  நவீன ஆங்கிலத்தமிழர்களின் மொழிபெயர்ப்புக் கொலையோடு ஒப்பிட்டுப்பார்க்கையில், தமிழ் லோகலைசேஷன் பிதாமகரான கம்பனுக்கு கோயில் கட்டிக் கும்பிடவேண்டும்.

  மீண்டும் மீண்டும் இதைத்தான் சொல்லவேண்டியிருக்கிறது. ஆங்கிலமும் தெரியாத, தமிழும் தெரியாத ஒரு தலைமுறையின் அபத்த நாடகக்காட்சிகளைத்தான் இன்று தமிழின் சிறு, நடு்த்தர இதழ்களிலும் பெரும்பத்திரிகைகளிலும் பார்க்கிறோம்.

  இதனால் இலக்கியம் பக்கம் போக எனக்கு பயமாக இருக்கிறது!

 17. இற்றைப்படுத்திக்கொள்ளுதல் – updating க்கான சொல்லா? ம்ம்..சமீபத்தில் இதன் புழக்கத்தைப் பார்க்க முடிகிறது. பரவலாக்கலாம் என்று தோன்றுகிறது.

  இப்போது மேலும் ஒரு விஷயம். மொழிபெயர்ப்பி்ல் மூல மொழியைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காதீர்கள் என்று சொல்லும் அதே நேரம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட மொழியிலிருந்து அதிக மொழிபெயர்ப்புகள் செய்யப்படும் போது, இலக்கு மொழி மூலமொழியின் பல சொல், தொடர், வாக்கிய, பொருள் பண்புகளையுமே சேர்த்தே இறக்குமதி செய்துகொள்ள நேரிடும். இதைத் தடுக்கவே கூடாது. இன்றையத் தமிழில் ஆங்கிலத்தின் பல அம்சங்கள் (அதிகமான அளவுக்கு நாம் இப்போது செயப்பாட்டு வினையைப் பயன்படுத்துகிறோமே, அது உள்பட) கலந்தாயிற்று. இது மொழியை இற்றைப்படுத்தும் செயல்தான். இந்த மாற்றம் காலத்தின் கையில் இருப்பது. இதை நாம் ஏற்கவேண்டும்.

  பாரம்பரிய ஆங்கில – தமிழ் மொழிபெயர்ப்பாளர்களும் செந்தமிழ் ஆர்வலர்களும் ஒரே காலத்தில் செயல்பட்ட 50 – 70 கள் தான் தமிழ் மொழிபெயர்ப்பின் பொற்காலம். தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மொழிவளர்ச்சிக்கு நன்றாக உரம் போட்டிருக்கிறார்கள்.

  சந்தேகம் இருந்தால், சார்பியல் தத்துவம் என்பது என்ன? (சோவியத் வெளியீடு), பிரபஞ்சமும் டாக்டர் ஐன்ஸ்டீனும் (அமெரிக்க வெளியீடு) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களை ஏதாவது பழைய நூலகம் ஒன்றில் தேடிப்படித்துவிட்டு, கூடவே நம்மூர் பேராசிரியர்களின் எழுதிய சார்பியல் கோட்பாடு, அண்டவியல், வானியல் தொடர்பான பாடநூல்களையும் படித்துவிட்டு, பிறகு சில ஆண்டுகளுக்கு முன் தமிழில் வெளிவந்த, ஸ்டீபன் ஹாகிங்கின் ‘Time – A Brief History’ என்ற நூலின் படுபயங்கரமான மொழிபெயர்ப்பையும் படியுங்கள். 50-70 களில் நடை பழசாக இருக்கும், ஆனால் படிக்கமுடியும். ஏகப்பட்ட சொல்லாக்கங்களை சந்தடி சாக்கில்லாமல் செய்துவிட்டுப்போயிருப்பார்கள். இப்போதைய பல நூல்களில் நடை உங்களைக் கொல்லும். தமிழாக்கங்கள் துருத்திக்கொண்டு நிற்கும். காரணம்? அதேதான். மொழியைப் பற்றிய பயம் அல்லது அலட்சியம்!

 18. நானும் ருஷ்ய வாடைப் பிரியன்தான். சேக்கவ், தல்ஸ்தோய், துர்கேனிவ் மூவரையும் முதலில் தமிழில் படித்துத்தான் ருஷ்ய இலக்கியப் பித்தன் ஆனேன். ஆனால் துர்கேனிவின் ‘மூன்று காதல் கதைக’ளை சமீபத்தில் புரட்டிப் பார்த்தேன். சில இடங்கள் பயங்கர காமெடியாக இருந்தன. அதைத் தேடி எடுத்துப் பதிவாகப் போடப் போகிறேன்.

  “தமிழ் என்பது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட மொழி அல்ல” என்கிற கன் பாயின்ட்டைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் பெயர்ப்பாளர்களுக்கு விவஸ்தை இல்லை. ஒரு வாக்கியத்தை மொழிபெயர்த்த பின் அது படிக்கத் தமிழ் மாதிரி இருக்கிறதா என்று பார்த்தாலே பாதிப் பிரச்சினை தீர்ந்தது. அதீதத் தன்னம்பிக்கையும் ஒரு காரணம். பயம் அல்ல, அலட்சியம்தான். பயம் இருந்தால் உருப்பட்டுவிடலாமே.

  செயப்பாட்டு வினை பற்றியும் சொல்ல வேண்டும். போன வருடம் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போயிருந்தேன். அது ஆங்கிலத்திலிருந்து பெயர்த்த புத்தகம். அதன் பெயர்ப்பாளர் பேசும்போது, ஆங்கிலத்தில் செயப்பாட்டு வினையைத் தமிழில் செய்வினையாக மாற்றும் உத்தியை யாரிடமோ தெரிந்துகொண்டது பற்றிப் புல்லரிப்புடன் விவரித்தார். மொழிபெயர்ப்பின் மிக அடிப்படையான விஷயங்கள் உலக மகா கண்டுபிடிப்புகளாக நமது பெயர்ப்பாளர்களுக்குத் தோன்றும்போது தரமும் சுமாராகவும் நம்ப முடியாததாகவும்தானே இருக்கும்.

Comments are closed.