காதுக்கே கமகம!

“காதை கமகமக்க வைக்கும் ஹீரோயிஸம் இல்லை…” – இது ஆனந்த விகடனின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ விமர்சனத்தில் (பக்கம் 154) வரும் ஒரு வாக்கியம்.

கலக்கல் எக்ஸ்பிரஸ், காமெடி பாப்கார்ன், படா அப்ளாஸ், ஜாலி எக்ஸிபிஷன் – இதெல்லாம் புரிகிறது. ஆனால் காதை கமகமக்க வைப்பது என்றால் என்ன?

‘கமகம’வை வாசனை சம்பந்தப்பட்ட இரட்டைக்கிளவியாகத்தான் கேட்டிருப்போம். விகடன்காரர்கள் புதுமையோ புரட்சியோ பண்ணுகிறார்கள். எதுவென அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பு

இன்று வெளிநாட்டு இலக்கியப் படைப்புகளில் பலதும் ஆங்கிலம்வழித் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றன. காப்ரியல் கார்சியா மார்க்கஸ், இட்டாலோ கால்வினோ, ஆல்பேர் காம்யு, எல்லோரையும் வாழவைக்கும் காஃப்கா என்று பலர் தமிழாக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் புண்ணியத்தில்.

இதன் பக்கவிளைவு: மார்க்கஸையோ காஃப்காவையோ தமிழில் படித்தால் ஆங்கிலச் சொற்கள், வழக்குகள், சொற்றொடர்கள் என்று ஆங்கில watermark தெரிகிறது. என்னைப் போன்ற சிலருக்கு (அல்லது பலருக்கு) தமிழ் மொழிபெயர்ப்பில் பிற மொழிப் படைப்புகளைப் படிப்பதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்த அவநம்பிக்கைக்குக் காரணம், வெளிநாட்டு மொழிபெயர்ப்பாளர்கள் நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கிறார்கள். நம்மவர்கள் சம்பந்தப்பட்ட மொழி தெரியாமல் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டுத் தங்களுக்குப் புரிந்த வரை மொழிபெயர்த்து வைக்கிறார்கள்.*

இந்த second hand மொழிபெயர்ப்பில் என்ன ஆபத்தென்றால், ஒன்று: நம்மாட்கள் மூல மொழியிலிருந்து பெயர்க்காமல் வேறொன்றிலிருந்து பெயர்த்தெடுக்கிறார்கள், இரண்டு: அவர்களுக்குப் போதுமான ஆங்கில அறிவு இல்லை.

உதாரணமாக, தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை ஆங்கிலத்திற்குப் பலர் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. வார்த்தைகள் மாறி, சமயத்தில் பொருளும் தொனியும் மாறுகின்றன. அங்கீகாரம், விமர்சனங்கள், மதிப்புரைகள் ஆகியவற்றை வைத்துத்தான் எந்த மொழிபெயர்ப்பு துல்லியமானது, தரமானது என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

நேரடியாக மூலத்திலிருந்து ஆங்கிலத்திற்கு வரும் படைப்புகளுக்கே இந்த கதி என்றால் சிறுபத்திரிகைகளையும் மற்ற சுமாரான மொழிபெயர்ப்புகளையும் மட்டுமே படித்துவிட்டு ஐரோப்பியப் பெயர்களை எடுத்து வீசும் நம்மவர்கள் அவற்றை மூலத்திலிருந்து அல்லாமல் ஆங்கிலத்திலிருந்தே மொழிபெயர்க்கிறார்கள். ஏமாறுபவர்கள் வாசகர்கள்தான்.

சமீப காலத்தில் எந்தச் சிறுபத்திரிகையில் வந்த எந்த மொழிபெயர்ப்பை எடுத்துப் பார்த்தாலும் அதில் ஆங்கிலம்தான் தலைவிரித்தாடுகிறது. பத்திரிகையின் ஆசிரியர் குழு என்னத்தைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறது என்ற கேள்வியே நம் முன் எழுகிறது. பலர் அடிப்படை ஆங்கில இலக்கணமும் மிக சாதாரணமாகப் புழக்கத்தில் இருக்கும் ஆங்கில வழக்குகளும் சொற்றொடர்களும் கூடத் தெரியாமல் வாடுகிறார்கள் (தாங்கள் வாடுவது அவர்களுக்குத் தெரியவில்லை).

மொழிபெயர்க்கும் அளவிற்குப் போதுமான ஆங்கிலம் தெரியாவிட்டால் பிரச்சினையில்லை. ஆனால் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பது என்று தீர்மானித்த பின் அந்த அறிவை வளர்த்துக்கொள்வது மொழிபெயர்ப்பாளருக்குள்ள பொறுப்பு. நமக்குத் தெரிந்தது தாராளமாகப் போதும், அதான் எல்லாம் டிக்‍ஷ்னரியில் இருக்கிறதே என்ற இவர்களது பொறுப்பில்லாத்தனத்தால் நஷ்டப்படுவது இலக்கியமும் மொழியும்தான்.

மிகக் கடுமையான, மிக அன்னியமான தமிழ் நடையில் இருக்கும் நாராசத்தை, உலக இலக்கியத்தைப் படித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தால் வாசகர்கள் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

உலக இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளைத் தமிழில் கொண்டுவர வேண்டும் என்ற நிஜமான ஆர்வம் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ன செய்வார்? தான் மொழிபெயர்க்க விரும்பும் படைப்பு எந்த மொழியில் இருக்கிறதோ அந்த மொழி தனக்குத் தெரியவில்லை என்றால் அதைக் கற்றுக்கொள்வான் – அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி, ருஷ்ய மொழியாக இருந்தாலும் சரி.

நானும் லத்தீன் அமெரிக்க இலக்கியமெல்லாம் படிக்கிறவன்தான், நானும் இலக்கியத்தில் கொம்பன்தான் என்று காட்டிக்கொள்ள விரும்புபவர்கள்தான் தமிழ் மொழிபெயர்ப்பில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

* * *

பாப்லோ நெரூடாவின் கவிதைகளை மொழிபெயர்த்து ‘துயர்மிகு வரிகளை இன்றிரவு நான் எழுதலாம்’ என்ற தொகுப்பைக் கொண்டுவந்த ஆ.இரா. வேங்கடாசலபதி, முன்னுரையின் கடைசிப் பகுதியில் இப்படி எழுதுகிறார்:

ஸ்பானிய மொழியைக் கற்று நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கும் பொற்காலம் ஒரு நாள் வரலாம். அதுவரை ஆங்கிலவழி நிகழும் என் மொழிபெயர்ப்புகள் போன்ற அரைகுறைகளைத் தமிழ் வாசகர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பெரிய மொழிபெயர்ப்பாளரின் தமிழாக்கம் ஒன்றில் இந்த மாதிரி ஒரு வாக்கியம்: “அவன் சென்ற மாதம்தான் தன் மாமாவை இழந்திருந்தான்.” Had lost என்பது போன்ற ஒரு சொற்றொடர் “இழந்திருந்தான்” என்று மூல மொழியின் வாடையோடு வந்திருக்கிறது. அவர் ஆங்கிலத்திலிருந்து பெயர்க்கவில்லை, ஆங்கிலம் போன்ற வாக்கிய அமைப்பு கொண்ட இன்னொரு மொழியிலிருந்துதான் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது தமிழாக்கத்தில் இப்படிப் பல பகுதிகள் இயல்பான தமிழில் வரவில்லை.

அவரளவுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தால் கூடப் பரவாயில்லை என்பதே நம் நிலைமை. இந்த மாதிரி வேலையை ஆங்கில மொழிபெயர்ப்பாளர் யாராவது செய்திருந்தால் ஒருத்தர் விடாமல் எல்லோரும் உரித்தெடுத்துவிடுவார்கள்.

நம் சூழலுக்கு, ஆங்கிலமல்லாத ஒரு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்ய அந்த மொழியைக் கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றால் பல படைப்புகள் மொழிபெயர்க்கப்படாமலே போக வாய்ப்பிருக்கிறது. நேரடியாக மூல மொழியிலிருந்து தமிழாக்கும் “பொற்காலம்” வரும் வரை நம்மவர்கள் குறைந்தது ஆங்கிலத்தையாவது கற்றுக்கொள்ள வேண்டும்.

* நானும் சில வருடங்களுக்கு முன்பு காஃப்கா கதைகளையும் பெர்ட்டோல்ட் பிரெக்த்தின் கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறேன். இப்போதும் மொழிபெயர்க்க மனசாட்சி தடுக்கிறது.

பொருமல் தொடர்கிறது

ரீடிஃப்-இல் புதிய புளூடூத் தொழில்நுட்பம் ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

புளூடூத் உள்ள ஒரு மொபைல் ஃபோனை வைத்திருக்கும் ஒருவர் Hug Shirt என்ற ஒரு ஹைடெக் சட்டையை அணிந்துகொண்டிருந்தால், சட்டைக்காரரின் நண்பர் அவரை மொபைல் மூலமாகக் கட்டிப்பிடிக்கலாம். இந்தக் கட்டிப்பிடிப்பு சமிக்ஞை மொபைலுக்கு அனுப்பப்பட்டு அதிலிருந்து சட்டைக்குப் போக, அணிந்திருப்பவர் உடல் அதை உணர்கிறது.

நான் இதைப் பதிவது புளூடூத் தொழில்நுட்பத்தை வியந்து பாராட்ட அல்ல. ரீடிஃப்காரர்களின் மொழி அரசியலைச் சுட்டிக்காட்ட.

கட்டுரைக்கு அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பு: Now hug your girl via Bluetooth. அவர்கள் கொடுக்கும் இணைப்பில் போய்ப் பார்த்தால் சட்டை தயாரிப்பாளர்களே அதை ஒரு பெண் அணிந்திருப்பது போன்ற ஒரு படத்தைத்தான் போட்டிருக்கிறார்கள். இதழியல் இங்கிதங்களைக் கரைத்துக் குடித்த ரீடிஃப் போன்ற பெரிய கைகளே இப்படி வெளிப்படையாக ஒரு பாலினத்தவரை மட்டும் விளித்து எழுதுகிறார்களே என்று ஆச்சரியப்பட ஆசையாக இருந்தாலும் உண்மையில் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இவர்களுக்குப் பெண் வாசகர்களிடமிருந்தும் ஹிட்ஸ் வேண்டும். அவர்களுக்காகத் தனி பகுதி கூட – பெயருக்காகவாவது – வைத்திருக்கிறார்கள். ஆனால் மேற்சொன்ன கட்டுரைக்குத் தலைப்பு வைத்தது மாதிரி அவ்வப்போது அவர்கள் தங்கள் இதழியல் பார்வையை அம்பலப்படுத்திக்கொள்கிறார்கள்.

இதைப் பார்த்தபோது பல வருடங்களுக்கு முன்பு மேதகு ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கவர்ஸ்டோரியின் தலைப்புதான் நினைவுக்கு வருகிறது. அது ‘கிராமத்து ஸ்பெஷல்’. தலைப்பு: ‘கிராமத்துக்குப் போகலாம் வாரீங்களா!’ (நினைவிலிருந்து எழுதுகிறேன். லேசான வித்தியாசம் இருக்கலாம்) இவர்கள் பத்திரிகையை யாருக்காக நடத்துகிறார்கள் என்பது இந்தத் தலைப்பே காட்டிக்கொடுக்கவில்லை?

எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் இந்த மாதிரி முத்துக்கள் நிறைய கிடைக்கும். இவர்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக அரைலூசுகள்  என்று அழைக்கலாம், ஆனால் நிஜ அரைலூசுகள் கோபித்துக்கொள்ளக் கூடும்.

உசாத் துணை:

Now hug your girl via Bluetooth
CuteCircuit