இருபது ரூபாய்க்கு டீ

கைக்கு அடங்காத விலையில் அற்புதமான புத்தகங்கள் விற்கப்படும் சென்னை லேண்ட்மார்க் கடையில் புத்தகங்களை வேடிக்கை பார்க்க நானும் என் நண்பர் ஒருவரும் போன வாரம் போயிருந்தோம். கடை ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டரில் இருக்கிறது.

சுமார் இரண்டு மணிநேரம் ஐம்பத்தி சொச்சம் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, போஸ்டரைப் பார்த்து ‘சீன்’ இல்லாத படத்திற்குப் போய் வந்த அதிருப்தியுடன் வெளியேறினோம், நேரமின்மையால்.

நின்று களைத்துப் போயிருந்ததால் கொஞ்ச நேரம் அந்த ஏ.சி.யிலேயே எங்கேயாவது உட்கார்ந்து சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று தீர்மானித்தோம். தரைத் தளத்தில் ‘கஃபே’ என்று முடியும் பீட்டர் சாப்பாட்டுக் கடை ஒன்று இருந்தது. மெனுவில் எங்களுக்குப் புரிந்த ஒரு பானம் தேநீர். இருபது ரூபாய் என்றாலும் என்றைக்காவது ஒரு முறை செலவு செய்தால் குறைந்து போய்விடாது என்று டீ வாங்கினோம்.

சாசரில் தேநீர்த் தூள் பை நாசூக்காக ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் டீ எப்படி இருக்கும் என்று புரிந்துவிட்டது. அவர்கள் கொடுத்த ஸ்ட்ரா-கம்-கலக்கியை வைத்துப் பையை டீ கப்பின் உட்சுவர் மீது அழுத்தி நசுக்கோ நசுக்கென்று நசுக்கி டீயின் கலரை டீக்கடை சரக்கின் நிறத்திற்கு மாற்ற முயற்சித்தேன். ரொம்ப நேரம்.

ஒரு வழியாகக் கொஞ்சம் கலங்கலாக ஏதோ வந்ததும் குடித்துப் பார்த்தால் -நோயாளி- சர்க்கரையே போடவில்லை. இருவரும் எழுந்து போய் சில சர்க்கரைத் தூள் பைகளை வாங்கி வந்து கிழித்து கப்பில் கொட்டினோம். இரண்டு பாக்கெட் சர்க்கரையிலும் இனிப்பு போதவில்லை. நண்பர் இன்னும் இரண்டு கொண்டு வந்தார். அதுவும் உதவவில்லை.

நண்பர் கூலாக கவுன்டரில் இருந்த ஒரு பிளாஸ்டிக் தட்டையே தூக்கிக் கொண்டு வந்தார். ஏழெட்டு பாக்கெட்களை ஒவ்வொன்றாகப் பிரித்து ஊற்றிக்கொண்டிருக்கும்போது நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், “ரெண்டார்ருவா குடுத்தா சக்கரை போட்டு ஆத்தித் தருவான்.”

‘சிங்காரவேலன்’ படத்தில் கவுண்டமணி ஜோக் ஒன்று வரும். அவரும் கமல், வடிவேலு, மனோ ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குப் போவார்கள். காபி ஆர்டர் செய்ததும் பால், காபி டிகா(க்)ஷன், சர்க்கரை எல்லாம் தனித்தனியாகக் கொண்டுவந்து தருவார்கள்.  கவுண்டமணி  கடுப்பாகி,  சாப்பாடு கேட்டால்  அரிசி, தண்ணி, அடுப்பு எல்லாம் கொண்டு வந்து தருவீங்களோ என்கிற ரீதியில் கேட்பார். மேன்மக்கள் எளிமையான பல விஷயங்களைச் சிக்கலாக்கிவிடுகிறார்கள்.

3 thoughts on “இருபது ரூபாய்க்கு டீ

 1. —எளிமையான பல விஷயங்களைச் சிக்கலாக்கிவிடுகிறார்கள்.—

  வேலை கறந்து விடுகிறார்கள்? 😉

  அமெரிக்காவில் ப்ரீமியம் ஸ்டர்பக்ஸில் டிகாசன் மட்டுமே கிடைக்கும். தேவையான பால், க்ரீம், அஸ்கா, சாக்லேட் மணம் எல்லாம் நம்ம வசம்.

  கொஞ்சம் எளியவர்களுக்கான டன்கின் டோனட்ஸில் எல்லாம் கலந்து சூடாக (டிகாசன் நரசூஸ் காபி மாதிரி இருக்காது என்னும் அங்கலாய்ப்புடன்) தரப்படும்.

  ஒன் – பை – டூ கிடைக்க மாட்டேங்குது.

 2. 1.50 ரூபாய்க்கு அழகாக ஆத்தி கையில கொடுப்பாங்க.

  ஐந்து வருடம் முன்னாடி தோழிப் பெண்ணுடன் லேண்ட்மார்க் எதிரில் உள்ள காப்பி கடைக்கு போய் கொஞ்சம் பப்ஸூம் , காபியும் சாப்பிட்டு 200 ரூபாய் பில் கட்டினப்ப சுரீர்னுச்சு.

 3. பாலா: ஒன் பை டூ மாதிரி சிறப்பம்சங்களுக்கு நம்மூர் 2.50 டீக்கடைக்கு வர வேண்டும். டோனட் என்று சர்க்கரை வடையைத்தானே சொல்கிறீர்கள்? அதையும் பீட்டரில் வைத்திருந்தார்கள்.

  நிர்மல்: இந்த மாதிரிப் பாடங்கள் தேவைதான்.

Comments are closed.