சுய நேர்மை
பாடாவதி வங்கி ஒன்றில் வைத்திருக்கும் கணக்கிலிருந்து பணம் எடுக்க ஏ.டி.எம். போனேன் நேற்று.
எனக்கு முன்பு ஒருவர் உள்ளே போய் கார்டைப் போட்டுப் போட்டு விளையாடிக்கொண்டிருந்ததால் கொஞ்ச நேரம் காத்திருந்தேன். அப்போது சிம்புட் பறவை என்று வர்ணிக்கத் தக்க தும்பி சைஸ் பூச்சி ஒன்று சுற்றிச் சுற்றி வந்தது. அதன் தொந்தரவிலிருந்து தப்பிப்பதெங்ஙனம் என்று யோசித்தவாறு நான் நின்றிருக்கையில் அந்த மனிதர் ஒரு வித நிம்மதியுடன் வெளியே வந்தார்.
நான் உள்ளே போய்க் கொஞ்ச நேரம் கழித்துத்தான் கவனித்தேன். பூச்சியும் உள்ளே வந்துவிட்டிருந்தது. வேலை முடிந்து வெளியே போன பின் திரும்பிப் பார்த்தால் பூச்சி இன்னும் ஏ.டி.எம். பூத்திலேயே இருந்தது.
நான் மட்டும் சமூகப் பொறுப்போ சக மனிதர்களின்பால் இரக்கமோ இல்லாமலிருந்தால் இந்த அனுபவத்தைக் கவிதையாக்கியிருப்பேன்.
இருபது ரூபாய்க்கு டீ
கைக்கு அடங்காத விலையில் அற்புதமான புத்தகங்கள் விற்கப்படும் சென்னை லேண்ட்மார்க் கடையில் புத்தகங்களை வேடிக்கை பார்க்க நானும் என் நண்பர் ஒருவரும் போன வாரம் போயிருந்தோம். கடை ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டரில் இருக்கிறது.
சுமார் இரண்டு மணிநேரம் ஐம்பத்தி சொச்சம் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு, போஸ்டரைப் பார்த்து ‘சீன்’ இல்லாத படத்திற்குப் போய் வந்த அதிருப்தியுடன் வெளியேறினோம், நேரமின்மையால்.
நின்று களைத்துப் போயிருந்ததால் கொஞ்ச நேரம் அந்த ஏ.சி.யிலேயே எங்கேயாவது உட்கார்ந்து சூடாக ஏதாவது குடிக்கலாம் என்று தீர்மானித்தோம். தரைத் தளத்தில் ‘கஃபே’ என்று முடியும் பீட்டர் சாப்பாட்டுக் கடை ஒன்று இருந்தது. மெனுவில் எங்களுக்குப் புரிந்த ஒரு பானம் தேநீர். இருபது ரூபாய் என்றாலும் என்றைக்காவது ஒரு முறை செலவு செய்தால் குறைந்து போய்விடாது என்று டீ வாங்கினோம்.
சாசரில் தேநீர்த் தூள் பை நாசூக்காக ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும் டீ எப்படி இருக்கும் என்று புரிந்துவிட்டது. அவர்கள் கொடுத்த ஸ்ட்ரா-கம்-கலக்கியை வைத்துப் பையை டீ கப்பின் உட்சுவர் மீது அழுத்தி நசுக்கோ நசுக்கென்று நசுக்கி டீயின் கலரை டீக்கடை சரக்கின் நிறத்திற்கு மாற்ற முயற்சித்தேன். ரொம்ப நேரம்.
ஒரு வழியாகக் கொஞ்சம் கலங்கலாக ஏதோ வந்ததும் குடித்துப் பார்த்தால் -நோயாளி- சர்க்கரையே போடவில்லை. இருவரும் எழுந்து போய் சில சர்க்கரைத் தூள் பைகளை வாங்கி வந்து கிழித்து கப்பில் கொட்டினோம். இரண்டு பாக்கெட் சர்க்கரையிலும் இனிப்பு போதவில்லை. நண்பர் இன்னும் இரண்டு கொண்டு வந்தார். அதுவும் உதவவில்லை.
நண்பர் கூலாக கவுன்டரில் இருந்த ஒரு பிளாஸ்டிக் தட்டையே தூக்கிக் கொண்டு வந்தார். ஏழெட்டு பாக்கெட்களை ஒவ்வொன்றாகப் பிரித்து ஊற்றிக்கொண்டிருக்கும்போது நண்பர் சிரித்துக்கொண்டே சொன்னார், “ரெண்டார்ருவா குடுத்தா சக்கரை போட்டு ஆத்தித் தருவான்.”
‘சிங்காரவேலன்’ படத்தில் கவுண்டமணி ஜோக் ஒன்று வரும். அவரும் கமல், வடிவேலு, மனோ ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குப் போவார்கள். காபி ஆர்டர் செய்ததும் பால், காபி டிகா(க்)ஷன், சர்க்கரை எல்லாம் தனித்தனியாகக் கொண்டுவந்து தருவார்கள். கவுண்டமணி கடுப்பாகி, சாப்பாடு கேட்டால் அரிசி, தண்ணி, அடுப்பு எல்லாம் கொண்டு வந்து தருவீங்களோ என்கிற ரீதியில் கேட்பார். மேன்மக்கள் எளிமையான பல விஷயங்களைச் சிக்கலாக்கிவிடுகிறார்கள்.
ஏ.சி. ரூம் இதழியல்
இந்த வார அவுட்லுக்கில் ஒரு கட்டுரை. அதன் தொடக்கத்தில் டி.ஹெச். லாரன்ஸ் கவிதை வரிகள். கட்டுரை முடியும்போதும் அவரது சில வரிகள்.
கட்டுரை எந்த இலக்கிய இழவெடுப்பையும் பற்றியதல்ல. டெங்கு, சிக்குன்குனியா பாதிப்புகள் பற்றியது. கவிஞர் கொசு பற்றி எழுதிவிட்டார், அது இவர்களுக்கு வசதியாய்ப் போய்விட்டது.
கட்டுரையில் இருக்கும் புள்ளிவிவரங்களின்படியே இந்த நோய்களால் அவனவன் செத்துக்கொண்டிருக்கிறான். இவர்களுக்கு அந்த பயங்கர பாதிப்புகளைப் பற்றிக் கட்டுரை எழுதும்போது மேற்கொள் கொடுக்க மருத்துவர்கள் மட்டுமில்லாமல் கவிஞர்களும் தேவைப்படுகிறார்கள்.
ஏ.சி. ரூமில் என்கிற கிணற்றில் இருப்பவர்களுக்கு சுரணை அல்லது sensitivity கொஞ்சமும் இருக்காது போலிருக்கிறது. குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாதபோது அதெல்லாம் எங்கே இருக்கப் போகிறது.
இலிங்கு: The Aedes of September (தலைப்புக்கே அகராதி தேவை)
வாழ்க்கையின் அர்த்தம்… (கதை)
நான் எழுதிப் பிரசுரமான முதல் கதை.
வாழ்க்கையின் அர்த்தம் சார்ந்த ஒரு புரிதலை நோக்கி…
‘டிக் டிக் டிக்’ என்று ஓடாத கடிகாரங்கள் சப்திக்காத இரவு. மழை கொட்டுகிறது. வானத்திலிருந்து பூமியின் மீது மழை கொட்டுகிறது - பூமியிலிருந்து வானத்தின் மீது பெய்தால் மழை நீர் தேங்க வானத்தில் மண் இல்லை என்று. மழை எதன் மீது பெய்தால் என்ன? எருமை மாட்டின் மீது பெய்வது போலத்தானே? நனைந்துவிடுவோம் என்று பூமி அஞ்சி நகர்ந்து பக்கத்து கிரகத்தின் மீது இடித்துக்கொள்ளவா போகிறது? அல்லது வானம்தான் தன் மீது மழை பெய்யும் பட்சத்தில் நகர்ந்துகொள்ளுமா?
இன்னொரு விஷயம், பூமியால் நகர முடியாது; உருண்டு போகத்தான் முடியும். அதுவும் யாராவது உருட்டி விட்டால்தான் முடியும். பூமியிலிருந்து வானத்தின் மீது மழை பெய்தால் அது ஒரு சாதனைதான். ஆனால் அது தானாக நடப்பது (நடந்தால்). அதற்காக யாரையும் வாழ்த்திப் பாராட்டு விழா நடத்த முடியாது. ஆனால் பூமியை உருட்டுவது உங்கள் தலையை நீங்களே கடித்துச் சாப்பிடும் அளவுக்கு சுலபம். அவ்வாறு உருட்டும்போது கடல், ஆறு, ஏரி, குட்டைகள், வாழைப்பழத் தோல்கள் இல்லாத இடமாகப் பார்த்து கையை வைத்து உருட்டினால்தான் வழுக்காது. கை வைக்கும் இடத்தில் முட்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஜாதிக் கலவரம், மதக் கலவரம் எதுவும் சமீபத்தில் நடந்திராத இடமாகக் கை வைக்கவேண்டும். இல்லையென்றால் சோடா பாட்டில் துண்டுகள் கையைக் குத்திக் கிழித்துவிடும். கை வைக்கும் இடத்தில் அணையாத சிகரெட் துண்டுகள், மின்சாரக் கம்பிகள் இருக்கக் கூடாது. ஒரு முக்கியமான விஷயம். நீங்கள் பூமியை உருட்ட முயற்சிக்கும்போது பெரிய விண்கல் ஏதாவது உங்கள் முதுகைக் குறி வைத்து சீறிப் பாய்ந்து வந்தால் பயந்து நகர்ந்துகொள்ளாதீர்கள். நீங்கள் நகர்ந்தால் அது பூமியின் மீது விழுந்து பெருத்த உயிர்ச் சேதம், பொருட்சேதம் விளையும். விண்கல் பட்டு நீங்கள் செத்தால் பரவாயில்லை. விண்கல் பட்டு சாகும் பெருமை எத்தனை பேருக்குக் கிடைக்கிறது? அதுவும் பூமிக்காக உயிர்த் தியாகம் செய்யும் பாக்கியம்தான் எத்தனை பேருக்கு வாய்க்கிறது? அப்படி ஒன்று நடக்கவிருந்து நீங்கள் உயிர்த் தியாகம் செய்துவிட்டால் உங்களுக்கு அந்தரத்தில் சிலை எழுப்ப நான் ஏற்பாடு செய்கிறேன். ஆனால் இத்தனையும் பூமி மழைக்கு பயந்தால்தானே?
பூமி உருவாகி பில்லியன் வருடங்களில் பூமி மழைக்கு பயந்து நகர்ந்ததாக வரலாறு உண்டா? நியூட்டன் வந்தார், எயின்ஸ்டீன் வந்தார், ஹாக்கிங் வந்தார். எவனுமே பூமி நகர்ந்ததாகச் சொல்லவில்லையே? அதனால் பூமி நகராது என்றே நம்புவோம். பூமி நகருமென்று நிரூபிக்கிறேன் பேர்வழி என்று எவனாவது வந்தால் அவனைக் கொன்று புதைத்துவிட்டுத் தலைகுளிப்போம். பூமி இது வரை நகராததால் இனிமேலும் நகராது என்று நம்பிக்கை வைப்போம். நம்பிக்கையில்தானே உலகமே இயங்குகிறது? ஆபீசுக்குப் போகும்போதே பஸ் சக்கரத்துக்கு அடியில் தலை மாட்டிக்கொண்டு நசுங்கி மண்டையைப் போட மாட்டோம் என்ற நம்பிக்கையில்தானே தக்காளி சாதம் டிஃபன் கட்டிக்கொண்டு போகிறீர்கள்? உங்கள் கர்ப்ப மனைவியின் வயிற்றில் ஒரு பழைய காலத்து மர அலமாரி பிறக்காது என்ற நம்பிக்கையில்தானே சீமந்தம் கொண்டாடுகிறீர்கள்? அப்படி எல்லாம் நடக்காது என்றா சொல்கிறீர்கள்? இது வரை அப்படி நடந்ததில்லை என்றால் இனிமேல் அப்படி நடக்கவே நடக்காது என்று அர்த்தமா? பிறந்து சில மாதங்கள் வரை நடக்காமலிருந்து, பிறகு நீங்கள் நடை பழகியதில்லையா?
வயதான காலத்தில் நடமாட முடியாமல் நன்றாக அவதிப்படப் போகிறீர்கள். உங்கள் மகன், மருமகள் ஆபீசுக்குப் போய்விடுவார்கள். மகள் கல்யாணமாகிப் போய்விடுவாள். பேரக் குழந்தைகள் ஸ்கூல் விட்டதும் கிரிக்கெட் ஆடப் போய்விடுவார்கள். மனைவியை இழந்து நீங்கள் தனிமையில் வாடி இரவு வராதா, கட்டையை சாய்க்க மாட்டோமா என்று ஏங்குவீர்கள். பொழுது போக்க பேப்பர் படிக்கலாமென்றால் கூட உங்களுக்குக் கண் சரிவரத் தெரியாது. தெரிந்தாலும் பேப்பரில் வெட்டு, குத்து, கொலை, தந்தையே மகளைக் கற்பழித்த செய்திகள்தான் படிப்பீர்கள்.
ஒரு நாள் விடிகாலையில் பால் வாங்கப் போகும்போது மரணத்தைப் பற்றி யோசிப்பீர்கள். பார்த்துக்கொண்டே இருங்கள், உங்கள் வாழ்க்கையின் கடைசி காலத்தில் உங்கள் சாவுதான் ஹீரோ. நீங்கள்தான் ஹீரோயின். ஹீரோவை வெறுக்கும், கண்டு நடுங்கும் ஹீரோயின். ஆனால் உங்கள் ரெண்டு பேருக்கும் கடைசியில் கல்யாணம் நிச்சயம் உண்டு. முகூர்த்தத் தேதி தெரியாததால் அழைப்பிதழ் அச்சடிக்க முடியாது, அவ்வளவுதான். உங்களுக்குக் கொள்ளி வைத்த பிறகு மகன்கள் ஆகப் போகிற செலவைப் பற்றிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிப்பார்கள். ஏழாவது நாள் சமையல் சரியில்லை என்று சமையல்காரன் காதில் விழாதபடி மனைவியிடம் முணுமுணுப்பார்கள்.
ஆனால் இதெல்லாம் பூமி நகராது போனால்தான். தவறு, பூமி நகராது. உருளத்தான் செய்யும். அதுவும் யாராவது உருட்டிவிட்டால்தான். பூமியை உருட்டும் அளவு தெம்பு யாருக்கும் இங்கே இல்லை. வேறு எங்கேயும் கூட இல்லை. உண்மை என்னவென்றால், பூமியை உருட்டிக்கொண்டு போக முடியாது. மழை பூமியிலிருந்து வானத்தின் மீது பெய்யாது. அதனால்தானோ என்னவோ, நீர்க்குமிழிக்குள் சிறைபட்ட புகையின் உலகம் கடித்துப் போட்ட வடைகளால் ஆனது. ஜாக்கிரதை - இங்கே எலித் தொல்லை அதிகம்.
