குமாரின் கதை

கி.பி. 2010-இல் வெளிவரப் போகும் எனது நாவலின் முதல் அத்தியாயத்தை இங்கு தருகிறேன். ‘விளக்கில் தொங்கும் வெளிச்சம்’ என்ற தற்காலிகத் தலைப்பைக் கொண்ட இந்நாவலை Faber & Faber பதிப்பிக்கும். இந்த நாவல் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏதாவது ஒரு முன்னணி பிலிம் மேக்கரால் திரைப்படமாகவும் வரும். சாகித்திய அகாதமி விருது கமிட்டி, please excuse.

* * *

அத்தியாயம் 1 – குமாரின் கதை

முன்னொரு காலத்தில் சென்னையில் சேல்ஸ் பிரிவில் குமார் என்பவன் வேலை பார்த்து வந்தான். குமார் தன் பெயருக்கேற்ப தங்கமானவனாக இருந்தான். இந்தக் கதை ஆரம்பித்தபோது குமாருக்கு 31 வயது. நடுவில் இரண்டு வருடம் நான் கதை எழுதுவதை நிறுத்தியிருந்தேன். கடன் தொல்லை. தங்கைகள் திருமணம். அப்பா, அம்மா பிக்கல் பிடுங்கல். கதை எழுதும் ஆர்வமே போய்விட்டது. முதல் தங்கையை ஒரு முன்வழுக்கைக்காரனுக்குக் கட்டிக் கொடுத்ததில் மனப்பாரம் தீர்ந்தது. அந்த சந்தோஷத்தில் நான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன்.

எனக்கே தெரியாமல் குமாருக்கு 33 வயதாகிவிட்டிருந்தது. குமார் நாலு பேர் மதிக்கும்படியான சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாலும் அவன் தன் பார்வையில்லாத தங்கைக்குத் திருமணம் செய்து வைக்கவும் தன் விதவைத் தாயை மேற்கொண்டு படிக்க வைக்கவும் அந்தச் சம்பளம் போதவில்லை.

இந்த சமயத்தில்தான் தெய்வாதீனமாக அவனுக்குத் தன் அப்பாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவனது அப்பாவுக்கு குமாரின் தங்கமான குணம் பிடித்துப் போனது. அப்போது முதலாம் உலகப் போர் நடந்து முடிந்திருந்தது. ஹிட்லர் மெல்ல மெல்லப் பெரிய ஆளாகிக்கொண்டிருந்தான். கிழக்கு ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவிக்கொண்டிருந்தது. ஹிட்லர் தனது கட்சிக்காரர்களுடன் கொலோனில் பேரணி போகும் அதே நேரம் நான் அண்ணா சாலையில் தற்செயலாக சந்தித்த என் அலுவலக சகா சுப்பிரமணியத்திடம் ஒரு மரியாதைக்காக “சட்டை புதுசா?” என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

1920 வாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ஒரே நாடாக இருந்தது. அதனால் லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் அப்போது இந்தியாவில்தான் இருந்தார்கள். குமாரின் அப்பாவும் அவர்களில் ஒருவர். நல்ல செல்வந்தர், ஆனால் பாகிஸ்தானியர். அவருக்குப் பிடித்த ஒரே இந்து என்றால் அது குமார்தான்.

* * *

அதோடு எக்ஸ்டிராக்டு முடிந்தது. மொத்தம் 16 அத்தியாயங்கள் எழுதியிருக்கிறேன். எம்.எஸ். வேர்டில் 11 பக்கம் வருகிறது. நாவல் என்று சொல்லுமளவுக்கு நீளமாக எழுத வராவிட்டால் குறுநாவல் என்று டிக்ளேர் செய்துவிடுவேன்.

6 thoughts on “குமாரின் கதை

 1. // ஹிட்லர் தனது கட்சிக்காரர்களுடன் கொலோனில் பேரணி போகும் அதே நேரம் நான் ***அண்ணா சாலையில்*** //

  ???

 2. இதற்கே மூன்று கேள்விக் குறி போட்டால் மொத்த நாவலுக்கும் நூற்றுக்கணக்கில் கேள்விக் குறி போட வேண்டியிருக்கும்.

 3. சேச்சே, இது ஒரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களாக்கும்!

 4. :)
  ரசிக்கும்படி இருந்தது சில வரிகள்…

  குறிப்பாக, அம்மாவைப் படிக்க வைக்க சம்பளம் போதாத நிலை…


  இதே ரீதியிலே இன்னும் 11 பக்கங்களா…அய்யா சாமி…ஆளை விடுங்க…

Comments are closed.