விளம்பரத் தமிழ்

மோசமான மொழிபெயர்ப்பின் குணாதிசயங்களில் ஒன்று, மொழிபெயர்ப்பைப் பார்த்து மூலத்தை ஊகிக்க முடிவது. ஓர் உதாரணம், சில மாதங்களுக்கு முன் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பார்த்த விளம்பர டைட்டில் –

“அழகாக நோக்குங்கள்”

அதாவது “Look beautiful”. நம்ப முடியவில்லையா? தமிழ் விளம்பரங்களைப் பெரும்பாலும் படிக்காதவர்களுக்கு ஒரு தகவல்: இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

விளம்பர வாசகங்களை உருவாக்குபவர்கள் ஆங்கிலத்திற்கு மட்டுமே பொருந்துகிற மாதிரி ஒரு ‘காப்பி’யைத் தயார் செய்துவிட்டு எல்லா இந்திய மொழிகளிலும் (“vernacular”) அதே மாதிரி வர வேண்டும் என்று தங்கள் வசமுள்ள மொழிபெயர்ப்பாளர்களிடமோ வெளியே ஒரு மொழிபெயர்ப்பு ஏஜன்சியிடமோ கொடுப்பார்கள். இது பற்றி எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் தமிழில் மொழிபெயர்க்கப்படும் விளம்பரங்களின் தரத்தை வைத்துப் பார்த்தால் அவர்கள் தங்கள் நிறுவனத்தில் இருக்கும் அமெச்சூர்களை வைத்தே வேலையை முடித்துக்கொள்வார்கள் போல் தெரிகிறது.

இன்னொரு உதாரணம் போன வாரக் குமுதத்திலிருந்து:

“கவனிக்கப் பெறுங்கள்.” (Get noticed.)

மேலே பார்த்த காமெடிக்கு இது எவ்வளவோ மேல் என்றாலும் ‘கவனத்தைக் கவருங்கள்’ என்பது போல
எளிமையாக சிந்தித்து மொழிபெயர்ப்பது கடினமான விஷயமாக இருக்கிறது. இது தலைப்புதான். அதற்குக் கீழே வரும் விளக்கத்தைப் படியுங்கள். இட்டாலிக்ஸ் மட்டும் நான் கொடுத்தது.

ஒலினா க்ரீம் ப்ளீச் உங்களைப் பளபளப்பாக்க மூன்று வழிகளில் செயல்படுகிறது. அது தேவையற்ற முடிகளை மென்மையான நிறமாக்கி சருமத்தின் நிறத்திற்கேற்ப மாற்றுகிறது. அதன் மாய்சரைசிங் இமோலியன்ட்ஸ், பேபி ஆயில் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. கூடுதலாக, அதன் மைக்ரோ ஆக்‍ஷன் ஃபார்முலா சருமத்தை மென்மையாகவும் மற்றும் இளமையாக வைத்து இளமையாக்குகிறது. அது ஆக்டிவ் ஆக்சிஜனை வெளியிட்டு சருமத்தை அழகாகவும், புதுப்பொலிவுடனும் வைக்கிறது. பொதுவான மற்றும் ப்ரூட் ஆக்டிவ் வேரியன்ட்களில் இருந்து தேர்ந்தெடுக்கவும் மற்றும் இரண்டாவது பார்வைக்காகப் பார்த்திருக்கவும்.

இதில் எவ்வளவு ஒருமை-பன்மைக் குழப்பங்கள், வாக்கிய அமைப்புக் குழப்பம், ஆங்கில வாக்கிய அமைப்பு போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன!

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல விதமாக எதிர்மொழிபெயர்ப்பு (back translation) செய்து பார்த்தும் “இரண்டாவது பார்வைக்காகப் பார்த்திருப்பதன்” பொருளை ஊகிக்க முடியவில்லை! இரண்டாவது பார்வை second look/glance என்று தெரிகிறது. அதற்கு மேல் ‘இறந்த முனை’தான்.

தமிழைப் படு முரட்டுத்தனமாகக் கையாள்பவர்களிடம் ‘மற்றும்’ என்ற வார்த்தை அடிபட்டு சாகிறது. மேற்கண்ட உதாரணத்தில் ‘மற்றும்’ என்ற சொல்லை மூன்று இடங்களிலும் தவிர்த்திருக்க முடியும். ஆனால் இம்மாதிரி ஆட்கள் ‘மற்றும்’-ஐ வைத்துத்தான் வண்டியோட்டுகிறார்கள். இவர்கள் ‘ஆகியவை’ என்ற சொல்லைக் கோனார் நோட்ஸில் படித்ததோடு சரி.

பொதுவாக விளம்பரங்களின் மொழியே ஓவர் பேத்தலாகவும் ஃபார்முலா, ஆக்சிஜன், ஹேலோஜன் என்று ஓவர் பீட்டராகவும் இருக்கும் (என் பர்சனல் ஃபேவரைட் “GermiCheck ஃபார்முலா”). ஆங்கிலமும் தமிழும் ஓரளவாவது தெரிந்திருந்தால்தான் இந்தக் குப்பையைக் கையாள முடியும். தமிழே தகராறு என்றால் கஷ்டம்தான்.

நான் என் செல்ஃபோன் கம்பெனியின் வாடிக்கையாளர் உதவிப் பிரிவுக்கு ஃபோன் போடும்போதெல்லாம் தமிழில் பேசுவேன். ஆனால் ஏ.டி.எம். போன்ற சென்சிட்டிவான சமாச்சாரங்களுக்கு எனது டீஃபால்ட் மொழி ஆங்கிலம்தான். இவர்களது தமிழ் மொழிபெயர்ப்பை விட ஆங்கிலம் யாருக்குமே எளிதாகப் புரியும்.

6 thoughts on “விளம்பரத் தமிழ்

 1. மாபெரும்! நன்றாக செய்யப்பட்டுள்ளது. தயுவு செய்து எழுதுங்கள் மற்றும் விமர்சியுங்கள் மேலும்.

 2. வாழ்க தமிழ்
  வளர்க தமிழ்

  இவ்வளவு காலமும் தமிழ் வாழ்ந்து தானே வந்திருக்கு

  தமிழ் மொழி ஒரு தொன்மையான மொழி

  இப்படி சொல்லி சொல்லியே தமிழை சாகடிக்கிறாங்கள்.

 3. செந்தில்: மன்னிக்கவும், சற்று அதிகம்!
  CAPitalZ: நீங்கள் யாரைத் திட்டுறீங்கள் எண்டு தெரியேல்லை!

 4. நன்றாகக் கூறியுள்ளீர் ஐயா! தமிழினை வளர்ப்பது ஒருபுறமிருக்க, நீர் கூறுவது போன்று அதனை அழிக்காமலாவது இருக்க தொடர்புபட்டோர் ஆவன செய்தால் நன்றாக இருக்கும்.

  http://thakaval.wordpress.com

 5. முரட்டு மொழிபெயர்ப்பு இப்போது யாரையும் உறுத்துவதில்லை. ஒரு மாதிரி அர்த்தம் புரிந்தால் சரி என்பது போல இருக்கிறார்கள். நம் சுற்றம் மற்றும் நட்பு வட்டத்தில் இந்த அபத்தக்களஞ்சியத்தை போட்டு உடைத்துக்கொண்டே இருக்கவேண்டியது நம் தமிழ்க்கடமை.

  டாக்டர் சொல்றாரு: ‘குழந்தைகள் வளர்வாங்க நல்லா’ அப்படிங்கறது par for the course ங்கற மாதிரி எடுத்துக்கறாங்க.

  சரி, ஹிந்தி விளம்பர உதட்டசைவுக்குத் தோதா இருக்கவேண்டிய கட்டாயம் தான் காரணம்னு நினைச்சா, அதுவும் இல்லை. ஃப்ரேம்ல மனுஷங்களே இல்லாத போதும் அதே உளறல் மொழி. காம்ப்ளான் டப்பா காமிச்சிக்கிட்டே: “உங்க குழந்தைங்க ஆவாங்க பலசாலியா மற்றும் புத்திசாலியா”.

 6. ஆமாம். ஆங்கில, இந்தி வாக்கிய அமைப்பை அப்படியே எடுத்துப் பயன்படுத்துறாங்க. ஜுனூன் தமிழ் வாழ்கிறது!

Comments are closed.