காதலுக்கு அவமரியாதை

(ஐலவ்யூ வைரஸ் ஆறாம் ஆண்டு நிறைவுக் கவிதை)

ஃபிலிப்பைன்ஸ் நாட்டு கணிப்பொறியியல் மாணவர் ஒருவர் எழுதிய ‘ஐலவ்யூ’ வைரஸால் உலகெங்கும் நிறுவனங்களுக்குப் பல கோடி டாலர் நஷ்டம். – செய்தி

காதல் கடிதம் எழுதிய தென்கிழக்காசியனே!
(உன் திருப்பெயர் என் தமிழ் வாயில் நுழைய மறுக்கிறது)
உன்னால் உலகப் பொருளாதாரம்
பெருந்தொகை இழந்து தவிக்கிறது.

நீ உன் தலையைச் சொறிந்த கையால் கீபோர்டைத் தட்டியதில்
இங்கே டிஜிட்டல் டேட்டாக்கள் ரீசைக்கிள் ஆகிவிட்டன.

பிலிப்பைன்சு நண்பா, நீ கணினியை மட்டுமா கெடுத்தாய்?

அம்பிகாபதியும் அமராவதியும் கண்ணீரிட்டு வளர்த்த காதலை
ரோமியோவும் ஜூலியட்டும் முத்தமிட்டு வளர்த்த காதலை
சுரேஷும் சுசீலாவும் சுண்டலிட்டு வளர்த்த காதலை
அல்லவா கெடுத்துவிட்டாய்?

விபிஸ்க்ரிப்ட் மொழி தெரிந்த
உன் மரத்துப் போன மண்டைக்கு
காதல் மொழி தெரியாதா சப்பைமூக்கு நண்பா?

காதல் கடிதத்தில் முத்தங்களை அனுப்புவதுண்டு
சில சத்தங்களை அனுப்புவதுண்டு
நீயோ கிருமியை அனுப்பி
சித்தங்களை சிதறடித்துவிட்டாய்.

காதலின் source code தெரியாதவனே
உன் மனசாட்சியை சற்றே ரைட்க்ளிக் செய்து properties-ஐப் பார்
நீயும் ஒரு நாள்
தேவதாஸின் தாடியைத் தடவிப் பார்த்தவன் போல்
பேசும் நாள் வரும்.
அப்போதும் தெரியும் உனக்கு
காதலின் configuration.

2 thoughts on “காதலுக்கு அவமரியாதை

Comments are closed.