டைமண்டு கவிதை 2

இதுவும் அதே காலகட்டத்தில் எழுதிய வைரமுத்துப் பகடி. செய்தித் தாளில் வெளிவரும் எந்தக் கெட்ட நிகழ்வையும் பற்றிக் கவிதை எழுதிவிடுவார்கள். ஊடகம் அமுக்கி வைக்கும் பல அவலங்களை எழுத மாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பு பற்றி வைரமுத்தார் இந்தியா டுடேயில் அருளிய ஒரு கவிதையின் ரீமேக் இங்கே.

அயோத்தி ராமன் முறைக்கிறான்

மனைவியின் அடி உதை
முடிந்திட வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மச்சினி கோபம்
துடைக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மாமியார் கொழுப்பை
அடக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மகனை ஸ்கூலில்
சேர்க்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

ட்யூஷன் டீச்சரை
மடக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மெட்ரோ வாட்டர்
பிடிக்க வேண்டும்
கரசேவகரே வருவீரா?

மாட்டீர்கள் சேவகரே
மாட்டீர்கள்!

படமெடுக்கும் பாம்பு
கலைப் படமா எடுக்கும்?

வெடிக்கும் மதப் போர்
தீயிடை வைக்கோல் போர்.

சுதந்திர இந்தியா
இன்பத்தின் அந்தியா?

மதமென்னும் வேதாளம்
பண்பாட்டின் பாதாளம்.

எப்படிக் குறைதீர்ப்பீர்
இந்தியத் தலைவர்காள்?

மாட்டீர்கள் தலைவர்காள்
மாட்டீர்கள்!

கூவத்தை நோக்கி
நடைபோடும் எருமை
அதைத் தூர்வாறவா போகிறது?

அந்தக் கூவத்தில்தானே
நீங்கள்
லட்சியப் படகுகளை விடுகிறீர்கள்.

நீங்கள் அள்ளிப் பூசிக்கொள்ளவே
செய்வீர்கள்
இங்கே சீமை சென்ட்டு
கிடைக்கும் வரை.

நீங்கள் மிளகாய் அரைக்கவே
செய்வீர்கள்
இங்கே வழுக்கையர் கூட்டம்
குனியும் வரை.

இங்கே வறுமைக் கோட்டின்
கீழ் நான்கு கோடி மக்கள்
என்ற நாடாளுமன்றமே!

அட்சக் கோட்டின்
கீழ் எண்பது கோடி!
அதை ஏன் அறிவிக்கவில்லை?

மதம் ஒரு பேமானி
மதம் ஒரு சோமாறி
சோமாறியோடு என்ன பாட்டில் யுத்தம்?

எப்போது அந்தக் கட்டிடத்தின் மீதும்
பண்பாட்டின் மீதும்
ஆசிட் பல்பு விழுந்ததோ

அன்று முதல்
கூவ நதி
கசப்பாக ஓடுகிறது!

அன்று மண்ணுருண்டை
அடித்துவிட்டு கூனியை முறைத்த பின்பு
ராமன் இப்போதுதான் இரண்டாம் முறையாக
முறைக்கிறான்.

மாண்புமிகு மதவாதிகளே!
சிறு கேள்வி கேட்கிறேன்
செவி தருவீரா?

அஞ்சாதீர்கள் தலைவர்களே,
திருப்பிக் கொடுத்துவிடுவேன்.

மனிதர்களிடம் வாங்கிய காற்றை
மரங்கள் திருப்பிக் கொடுக்கவில்லையா?

மீனவர்களிடம் வாங்கிய உப்பை
கடல் திருப்பிக் கொடுக்கவில்லையா?

அயோத்தி ராமன் அவதாரமெனில்
அவன் பிறப்புமற்றவன் இறப்புமற்றவன்.

ராமனின் பிறப்புச் சான்றிதழ்
உம்மிடமுண்டா?
இறப்புச் சான்றிதழாவது உம்மிடம்
உண்டா?

பிறக்காதவனுக்கு ஏன்
பிறந்த நாள் கொண்டாடுகிறீர்?

இறக்காதவனுக்கு ஏன்
கருமாதி செய்கிறீர்?

2 thoughts on “டைமண்டு கவிதை 2

  1. ஒரிஜினலையும் சேர்த்துப் போட்டால், ரசிக்க வசதியா இருக்குமே………..

  2. ஒரிஜினல் இல்லீங்ணா. :-( இவை ஒரிஜினல்கள் வெளிவந்த சமயத்தில் எழுதியவை. அதற்காகத்தான் இவற்றைப் படித்து மூலத்தை ஊகித்துக்கொள்ளும்படி வேண்டினேன்.

Comments are closed.