டைமண்டு கவிதை 1

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கவியரசு வைரமுத்துவை யாரோ இலக்கியவாதி பிரபல பத்திரிகை ஒன்றில் தாக்கியிருந்தார். யார் என்று நினைவில்லை. ஆனால் கவியரசு எழுதுவது கவிதை இல்லை என்று அவர் சொல்லியிருந்தார்.

சும்மா இருப்பாரா டைமண்டு? “என் பிரிய எதிரிகளே!” என்ற தலைப்பில் ஒன்று எழுதினார். அதற்காகவே காத்திருந்த பத்திரிகை ஒன்று அதை வெளியிட்டது. அதைப் பகடி செய்து நான் எழுதியது கீழே. பகடியைப் பார்த்து ஒரிஜினலை ஊகித்துக்கொள்ளலாம்!

அடைத்தாலும் தப்புவேன்!

என் வறிய எதிரிகளே!

மழைக்கால வெயிலில் உங்களை
நினைத்தால்
உடல் கொஞ்சம் விறைக்கிறது.

உங்கள் முகவரியை
நீங்கள் ஏன் என்
நிமிராத வாலில்
எழுதிவிட்டுப் போகிறீர்கள்?

எருக்கம் பூவையும்
மல்லிகைப் பூவையும்
எப்படி உங்களால்
ஒரே நாறில்
ஒரே நேரத்தில்
கோர்க்க முடிகிறது?

இப்போதெல்லாம்
உங்கள் பேனா
எழுத்துக்களையும் எண்களையும் தவிர
வேறெதையும்
எழுதுவதில்லையே!

நீங்கள் தூவிய
பூக்கள் என் காலைத் தடுக்கியது.

நீங்கள்
தட்டிக் கொடுத்தபோது
என் சட்டையில் தையல் விட்டது.

வறிய எதிரிகளே!

பீடியால் சுட்டு – என்
வெள்ளத்தை வற்றச் செய்யத் திட்டமா?

என்ன செய்வீர்கள் என்னை?
பணமும் புகழும் சோறும்
இல்லாத தேசத்திற்கா
என்னை நாடு கடத்திவிட முடியும்?

பூண்டி நீர்த் தேக்கத்தில்
எனக்கான நீரைக்
களவாடிவிடவா முடியும்?

தமிழகப் பெட்டிக் கடைகளில்
எனக்கான பீடிகளை
அமுக்கிவிடவா முடியும்?

எழுதிக்கொள்ளுங்கள்
எதிரிகளே!

என்னைச் சிறையிலடைத்தாலும்
நான் கம்பியிடம் கவிதை பாடி
வெளியே வந்துவிடுவேன்.

என் வறிய எதிரிகளே!

நீங்கள் என் மேல் எறிந்த
தீப்பந்தங்களைக்
கொண்டு நான் முதுகு
சொறிந்துகொள்கிறேன்.

என் மீது வீசும் காகித
அம்புகளால் நான் காது
குடைந்துகொள்கிறேன்.

என் மானம் அறிவு தொட முடியாத
தூரத்தில் இருக்கிறது.
சமூகத்தின் சம்மதத்தோடு
நான் சாகாமல் இருக்கிறேன்.

என் பென்சிலுக்கு ரப்பர் இல்லை.

என் பாஷையை
கழுதைகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுச் சாவேன்.

என் கவிதைகளை
பல்லிகளுக்கு சொல்லிக்
கொடுத்துவிட்டுப் போவேன்.

என் எழுத்து
படிக்கும் மக்களின் தலையெழுத்து!

என் வறிய எதிரிகளே
என் இதயத்தைச் சொறியாதீர்கள்.

பேண்ட்டைக் கிழித்து
பெர்முடாஸ் ஆக்கிவிடலாம் என்று
பிழை செய்யாதீர்கள்.

சில நூற்றாண்டுகளுக்குத்
தேவையான தாட்களை – என்
சின்ன வீட்டில் நான்
சேமித்து வைத்திருக்கிறேன்.

4 thoughts on “டைமண்டு கவிதை 1

  1. Pingback: கில்லி - Gilli » பகடி

Comments are closed.